18 பிப்., 2008

கேள்வியும் பதிலும்-7: "எது கவிதை? - கண்ணதாசன்"

எது கவிதை? - கண்ணதாசன்

"கவிதை என்பது உணர்ச்சியின் பிரவாகம்". கட்டவிழ்ந்து துள்ளிவரும் சிந்தனைகள், சொற்கோலமாக விழுவதே கவிதை. உரைநடைக்கும், கவிதைக்கும் உள்ள வேறுபாடு, உரைநடை ஆற்று நடையாகவும், கவிதை அருவி நடையாகவும் வருவதுதான். கவிதையின் தனிச் சிறப்பு, தாளமும், சந்தமும் நிறைந்திருப்பதுதான்.

கவிஞர் வைரமுத்துவின் "வைகறை மேகங்களுக்கு" கண்ணதாசனின் அணிந்துரையிலிருந்து

16 பிப்., 2008

எனக்குப் பிடித்த கவிதை-22: "நாம் மனிதர்கள்!"

எனக்குப் பிடித்த கவிதை-22

கை அசைத்தாலே
காற்றில் பறந்துவிட
நாம்
'பயந்தாங்கொள்ளி' காகம் அல்ல..

ஆபத்தை அறிந்தாலே
மணலுக்குள் தலையை
மறைத்துக்கொள்ள
'முட்டாள்' நெருப்புக் கோழியுமல்ல..

தொட்டாலே
சுருண்டு கொள்ள
'பரிதாப' மரவட்டையும் அல்ல...

வருவது எதுவாயினும்
எதிர்கொள்ள வேண்டும்..
உறுதியோடு நின்று
மகுடம் சூடவேண்டும்!

ஏனெனில்,
நாம்..
மனிதர்கள்!

நன்றி :- அவள் விகடன், ஆகஸ்ட் 4, 2006

13 பிப்., 2008

எனக்குப் பிடித்த கவிதை-22 - "புலம் பெயர்தல் "

எனக்குப் பிடித்த கவிதை-21

புலம் பெயர்தல்

கையில் பெட்டியுடனும்
அம்மாவின் கண்ணீருடனும்
அப்பாவின் அறிவுரையுடனும்
கிராமத்தை விட்டு வெளியேறி
ஏழெட்டு வருடமாகிறது.

கல்லூரிப் படிப்பிற்காக
நகரம் வந்தது,
நண்பர்க்ளோடு 'பேச்சிலர்' வாழ்க்கையும்
படிப்பிற்கேற்ற வேலையும்
நகரத்தில் கிடைத்துவிட
விழித்துக் கொண்ட பின்னும்
ஞாபகத்திலிருக்கும்
கனவாகவே ஆகிப்போனது
கிராமம்.

அம்மாவின் அன்போ
அப்பாவின் வசவோ
கல்லூரியில் கடிதத்திலும்
பிறகு தொலைபேசியிலும்
இப்பொழுது
ஆளுக்கொன்றாய்
வாங்கிக் கொடுத்திருக்கும்
செல்போனில் மட்டும்தான்.

விளையாடித் திரிந்த
வேலிக்காடுகளையும்,
அணில்வேட்டையாடிக் கிடந்த
மஞ்சனத்தி மரங்களையும்,
அலைந்து திரிந்த
ஆற்றங்கரையையும்
எட்ட நின்று வேடிக்கைபார்ப்பதுகூட
விடுமுறைகளில் மட்டும்தான்.

நகரத்தில் பார்க்கிற
கடற்கரை பௌர்ணமியையும்
கட்டிடங்களுக்குப்
பின்னால் மறைகிற
சூரியனையும்
அப்பார்ட்மென்ட் மாடியில் பெய்கிற
மழையையும்
கிராமத்து நிமிஷங்களோடு
ஒப்பிட்டுக்கொண்டே கிடக்கிறது மனசு.

ஊருக்குப் போக முடியாத
பண்டிகை நாட்களில்
உள்ளூர் நண்பனின்
வீட்டுக்குச் செல்கையில்
குடும்பத்தோடிருக்கும்
அவனைப் பார்க்கும் போது
ஏக்கம் மெதுவாய்
எட்டிப் பார்க்கும்.

தலைகீழாய் இறங்கி
தரைதொட்டு வேரூன்றி
தாய்மரத் தின் கூடவேயிருந்து
தாங்கும் விழுதாய்
வாழமுடியாமல்
பிறந்து வளர்ந்த இடத்திலிருந்து
துண்டாய் வெட்டியெடுத்து
தொலைதூரத்தில்
பதியனிட்டுக் கொண்டிருப்பதை
சுய பரிதாபம் சுட்டிக்காட்டும்.

பார்த்துக்கொண்ட வேலையும்
பழகிப்போன பிழைப்பும்
நகரத்தோடு பிணைத்துப்போட
இழந்துவிட்ட சொர்க்கமாகவே
இருக்கிறது கிராமம்.

இனியென்ன...
எல்லோரையும் போல
நகரத்தின் மையத்திலோ ஓரத்திலோ
இல்லை கொஞ்சம் தூரத்திலோ
ஒருவீ டு வாங்கி
ஆலமரத்தை
வேரோடு பெயர்த்து
வேறிடத்தில் நடுவது போல
அப்பா அம்மாவையும்
கிராமத்திலிருந்து நகரத்திற்கு
அழைத்து வரவேண்டும்.

மரமென்றால் பட்டுப்போகும்
மனிதர்கள்தானே...
பழகிப் போகும்.
என்ன,
எனக்கு வாய்த்த
வேப்பமரத்தடிப் பள்ளியும்
வெள்ளம் பெருகியோடும் ஆற்றங்கரையும்
களத்து மேட்டுக்
காவல் ராததிரிகளும்
அங்கு கேட்டுக்கிடந்த
காதல் கற்பனை, பேய்க் கதைகளும்
ஊருணிக்கரை புளியம்பழங்களும்
என் மகனுக்கோ மகளுக்கோ
என்னவென்றே தெரியாமல்போகும்.

- பொ.வெண்மணிச்செல்வன்

நன்றி : செம்மலர், பிப்ரவரி 2008

12 பிப்., 2008

எனக்குப் பிடித்த கவிதை-20: "அழகல்ல காதலனே! "

எனக்குப் பிடித்த கவிதை-20

அழகல்ல காதலனே!

கடந்து கொண்டிருக்கிறது
காலம்!
கரைந்து கொண்டிருக்கிறது
வாலிபம்!

கண்களைச்சுற்றிக்
கருப்பு வளையங்களை
மலர் வளையமாக
வைத்து மனதை
இம்சிக்கிறது
இயற்கை!

அலைபாயும் கூந்தலில்
'சிகைப்பூச்சு'க்குள்
சிக்க மறுத்து
அங்கொன்றும்,
இங்கொன்றுமாக
ஆடிப் படம்எடுக்கிறது
வெள்ளை நாகமாய்
நரைமுடி!

என்வீடு கடக்கும்
எல்லாரும்
ஏளனப் பார்வையால்
இம்சிக்கின்றனர் என்னை!

எங்கிருக்கிறாய்
எனக்கான
பிருத்திவி ராஜனே?
உன் குதிரைக்குக்
கொள்ளும்,
தண்ணீரும் கொடுத்து
சிறை எடுக்கச்
சீக்கிரம் வா!

இல்லை என்றால்
எள்ளும், தண்ணீரும்
இறைக்க வேண்டியிருக்கும்!

காதல் நோயிலிருந்து
என்னைக்
காப்பாற்றாமல் இருப்பது
உனக்கு -
அழகல்ல காதலனே!

- ஜெயகவிதா, கோவை

நன்றி : தினமலர் வாரமலர் (கவிதைச் சோலை), பிப்ரவரி 3, 2008