31 ஆக., 2008

பிருந்தாவின் கவிதைகள்-2: "சுனாமி"

அன்று -
அன்பிற்கு மனிதன்
பொறுமைக்கு நிலம்
பெருமைக்குக் கடல்.
இன்று -
ஒரு பக்கம் கொலை, கொள்ளை
மனித நேயம் என்பதே இல்லை
எங்கும் பொய், புரட்டு;
மண்ணுலகெங்கும் இருட்டு.
மனிதனின் ஆசையின் எல்லை
அதற்கோ முடிவில்லை.
நிலத்தைச் சுரண்டினான்;
கடலைச் சூறையாடினான்;
நிலம் பூகம்பமாய் வெடித்தது;
கடலும் தன் பங்கிற்கு அள்ளியது;
எதற்கும் கொடுக்கும் 'விலை',
இவற்றிடம் செல்லவில்லை.

(2004 டிசம்பரில் இந்தியாவைத் தாக்கிய சுனாமிக்குப்பின் எழுதியது.)

29 ஆக., 2008

நெல்லையப்பன் கவிதைகள்-17: "நம்பிக்கை விற்பவன்"

மழையில் நனைந்தபடி வந்து,
கிளிக்கூண்டு நனையாதபடி
தன் பழைய சைக்கிளை நிறுத்திவிட்டு,
ரோட்டோர உணவகத்தின் உள்ளே,
பையத் துழாவி சில்லறைகளை
பலமுறை எண்ணிப்பார்த்துவிட்டு,
மழையால் தொழில் பாதிக்கப்பட்டதாக
மழையை கெட்டவார்த்தையில் திட்டி,
"இதெல்லாம் ஒரு பிழைப்பா?" என்று
தன்னைத்தானே நொந்துகொண்டு,
அரைச்சாப்பாடு கிடைக்குமா என்று
தயங்கியபடி கேட்டவனுக்கு,
தலைவாழை இல்லை போட்டு,
சிறப்பு சாப்பாடாக
ஒவ்வொன்றாய் பரிமாறியபடி
முதலாளி சொன்னார்:
"உன் பெருமை உனக்குப் புரியவில்லை;
அரசு செய்யமுடியாததை,
அப்பன் ஆத்தா செய்யத் தவறியதை,
கிளி ஜோதிடன், நீ செய்கின்றாய்!"
நீ நம்பிக்கை விற்கின்றாய்;
நாடிவருபவற்கு நல்லது சொல்கின்றாய்;
உருப்படாமல் போய்விடுவாய் என்று
ஒருவருக்கும் நீ சொல்வதில்லை.
இடரினி இல்லை என்றும்,
விரைவில் துன்பம் விலகும் என்றும்,
நம்பிக்கை விதைக்கும் நீ
நல்ல தொழில் செய்கின்றாய்;
உனக்கு சாப்பாடு போடுவதில்

சந்தோசம் எனக்குத்தான் ;
பணம் தரவேண்டாம் நீ,
நன்றாகச் சாப்பிடப்பா"
வயிறுமுட்டச் சாப்பிட்டபின்
கிழிக்கும் உணவு தந்துவிட்டு,
கைதொழுது சொன்னான்:
"ஐயா, பெரியவரே!
இனி எனக்கு கலக்கமில்லை,
இந்தத் தொழில் பற்றி வருத்தமில்லை,
மழையைப் பார்த்தால்ஆகாதையா!
விரைந்து நான் போக வேண்டும்,
நாலு பேருக்காவது
நம்பிக்கை கொடுக்க வேண்டும்!"

சுக வாழ்க்கைக்கு விதிகள் - பிக்ஷூ சுவாமிகள்

1. கடவுளைத் துதிப்போம். அகம்பாவத்தை ஒழிப்போம். மனக் கவலையை ஒழிப்போம். எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டுவோம். ஆசாபாசங்களை விடுவோம்.
௨. சுத்தமான காற்றில் வாசிப்போம்.
3. யோகாசனம், பிராணயாமம் முதலிய பயிற்ச்சிகள் செய்வோம்.
4. சுத்தமான தண்ணீரையே பருகுவோம். காப்பி, டீ, சோடா, மது விலக்குவோம்.
5. பசித்தே உண்போம். மாமிசம் விலக்குவோம். சைவ ஆகாரத்தையே அளவாக உண்போம். சமைக்காத பச்சைக் காய்கறி உண்பது நலம். உப்பு, காரம், புளி குறைவாகப் பயன்படுத்துவோம்.
6. அபினி, கஞ்சா, புகையிலை நீக்குவோம்.
7. சுத்தமான உடையையே குறைவாக உடுத்துவோம்.
8. சுத்தமான தண்ணீரிலேயே குளிப்போம்.
9. வாரத்தில் ஒருநாள் உபவாசம் இருப்போம். 1
10. நோய் வந்தால் நோன்பு இருப்போம். கூடிய வரையில் மருந்துகளைத் தவிர்ப்போம்.
11. பிரம்மச்சரியம் கடைப் பிடிப்போம்.
12. உலக ஆடம்பரத்திர்காகச் செலவழித்து அடிமையாகாதிருப்போம்.
13. நம்மால் இயன்றவரை உதவி செய்வோம். யாருக்கும் தீங்கு இழைக்காமல் இருப்போம்.
14. ஒருபொழுதும் சூதாடாமல் இருப்போம்.
15. மெய்ப்பொருள் ஆராய்ச்சி செய்து தன்னை அறிந்து பிரம்மானந்த மயமாக வாழ்வோம்.

நன்றி: "இயற்கை மருத்துவம், ஏன்?" - பிக்ஷூ சுவாமிகள்,

தமிழ்நாடு இயற்கை மருத்துவ சங்க வெளியீடு (மதுரை), விலை: ரூபாய் பத்து மட்டும்.

எது கவிதை? - புதுமைப்பித்தன்

கவிதையைக் கலையின் அரசி என்பார்கள். கல்லாத கலை என்பார்கள். கவிதை என்றால் என்ன? யாப்பிலக்கண விதிகளைக் கவனித்து வார்த்தைகளைக் கோர்த்து அமைத்துவிட்டால் கவியாகுமா? கவிதையின் இலட்சணங்கள் என்ன? கவிதைக்குப் பல அம்சங்கள் உண்டு. ஆனால் அவைகளின் கூட்டுறவு மட்டும் கவிதையை உண்டாக்கிவிடாது. கவிதையின் முக்கிய பாகம் அதன் ஜீவசக்தி. அது கவிஞனது உள் மனத்தின் உணர்ச்சி உத்வேகத்தைப் பொறுத்துத்தான் இருக்கிறது. - புதுமைப் பித்தன்

28 ஆக., 2008

புத்தகம் என்ன செய்யும்?

ராலேகான் சித்தி, மகாரஷ்ட்ரத்தின் அகமது நகர் மாவட்டத்திலுள்ள வறண்ட கிராமங்களில் ஒன்று. மொத்தக் கிராமத்திலும் ஐந்நூறு ஏக்கர் நிலம்தான் பாசன வசதியுள்ள நிலம். எஞ்சியவை வானம் பார்த்தவை. அதனால், கள்ளச்சாராயம் காய்ச்சுவதே முக்கிய தொழிலாகிவிட்டது அக்கிராமத்துக்கு. மழை பெய்யும் காலம் தவிர மீதி காலங்களில் ஆறு முதல் ஏழு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றால்தான் குடிநீர் கிடைக்கும் என்றநிலை. ஆனால் இதெல்லாம் 1975க்கு முன் இருந்த நிலைமை. இன்று சென்னைக்கு வெங்காயத்தையும், வளைகுடா நாடுகளுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள காய்கறிகளையும் ஏற்றுமதி செய்யும் கிராமமாகிவிட்டது ராலேகான் சித்தி. இந்த மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வித்திட்டவர் அண்ணா ஹசாரே. அண்ணா சாரே ஒரு முறை தில்லி ரயில் நிலையப் புத்தகக் கடையில் விவேகானந்தரின் நூலொன்றை வாங்கிப் படித்தார். மக்களுக்குச் சேவை செய்வதே பிறப்பின் கடமை என்பது விவேகானந்தரின் போதனையால் அவருக்குப் புரிந்தது.

எட்டாம் வகுப்பைக்கூட எட்டாத அண்ணா ஹசாரே நாட்டுப்புற வளர்ச்சியில் நாட்டுக்கே முன்னோடியாகத் திகழ்ந்தார். அவரை இந்தச் சேவையில் ஈடுபடுத்தியது ஒரு புத்தகம்தான் என்பதை அறியும்போதுதான் புத்தகங்களின் தாக்கம் நமக்குப் புரிகிறது.

நன்றி: தினமணி, தமிழ் நாளிதழ்.

26 ஆக., 2008

கேள்வியும் பதிலும்-13:

ஒரு மனிதனுக்கு துன்பம் எப்போது வருகிறது? - என்.ரகுபதி, கோவை

"அவன் பைக் வாங்கிட்டானே.... வீடு கட்டிட்டானே... அவனுக்கு கிளி போல பொண்டாட்டி அமைஞ்சிட்டாளே..." என எண்ணத் துவங்கும்போது பிறக்கிறது துன்பம்."

"அந்துமணி பதில்கள்", தினமலர், ஞாயிறு மலர், ஆகஸ்ட் 17, 2008.

நன்றி: அந்துமணி & தினமலர்.

எனக்குப் பிடித்த கவிதை-34: "மானுடம் - ந.இராமையா பிள்ளை"

இறையரு ளுணர்வது நிறைமொழி மானுடம்

இயற்கையில் மானுடம் இன்பம் உறையிடம்

செயற்கையில் மானுடம் சேர்ப்பதே துயராம்.

குறையறு மானுடம் தரணியி லேது?

குறைநிறை இரண்டன் கூட்டே மானுடம்.

மானுடர் மல்கிடு குறையோ ராயினர்

உயர்செயல் மானுடர் இறைகரக் கருவியே

ஆற்றுவ ராற்றிறை யாற்றே யறிக.

- ஓரடி ஆயிரம்

நன்றி: திரு ந.இராமையா பிள்ளை அவர்கள்


25 ஆக., 2008

கேள்வியும் பதிலும்-12:

எந்தச் சூழ்நிலையிலும் பெண்கள் தைரியமாகச் செயல்பட ஒரு வழி சொல்லுங்களேன்... - என்.உஷாதேவி, மதுரை.

மனவலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். உடல் வலிமை இல்லையென்றால்கூடப் பரவாயில்லை. தைரியமான பெண் எனத் தெரிந்தால், எந்த ஆணும் தவறான கண்ணோட்டத்துடன் நெருங்க மாட்டான். இன்றுள்ள சட்டங்கள் பெண்களுக்கு மிக, மிகச் சாதகமாக உள்ளன.

- அந்துமணி பதில்கள், தினமலர் வாரமலர், ஆகஸ்ட் 24, 2008.

நன்றி: அந்துமணி & தினமலர்.

என் கவிதை-3:

சேவல் கூவுது;

மீண்டும் கூவுது;

மீண்டும் மீண்டும் கூவுது.

பலனில்லை.

உள்ளே

அலாரம் ஒலிக்க,

வெளியே

ஆலைச் சங்கொலிக்க,

பொழுது புலர்ந்தது.

அவமானத்தில்

கூனிக்குறுகியது

சேவல்.

சாதனை:

நாற்பத்தாறு வயதாகும் கெல்லி பெர்க்கின்ஸ் பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். மலையேறுவதில் ஆர்வம் கொண்ட இப்பெண்மணி, இருதய மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின்னும் பல மலைகளில் ஏறிச் சாதனைகள் புரிந்துள்ளார். கலிபோர்னியாவின் மவுண்ட் விட்னி, சுவிட்சர்லாந்தின் மேட்டர்ஹான், ஜப்பானின் மவுண்ட் ப்யூஜி, தான்சானியாவின் மவுண்ட் கிளிமாஞ்சரோ மற்றும் யோஸ்மைட் தேசியப் பூங்காவிலுள்ள இரண்டாயிரம் அடி உயரமான செங்குத்தான பாறை இவற்றிலெல்லாம் ஏறிச் சாதனை புரிந்துள்ளார். மாற்று இருதயத்துடன் மலை ஏற்றச் சாதனை புரிந்த இம்முதல் பெண்மணியின் துணிச்சலும், தன்னம்பிக்கையும் போற்றத்தக்கது.

இன்று ஒரு தகவல்:

இந்தியாவில் 800க்கும் மேற்பட்ட பயங்கரவாதக் கும்பல்கள் வெளிநாடுகளின் உதவியோடு செயல்படுவதாகக் கூறியுள்ளார் இந்திய அரசின் தேசீயப் பாதுகாப்பு ஆலோசகர் திரு.நாராயணன்.

நன்றி: ஆனந்த விகடன், ஆகஸ்ட் 27, 2008.

எனக்குப் பிடித்த கவிதை-33: "தனிமை"

எனக்குப் பிடித்த கவிதை: "தனிமை"

உணர்வுக்குள் ஒளிந்துவிட்ட ஒருகோடி ரகசியத்தை
எனக்குள்ளே தேடுவதில் என்காலம் கழிகிறது.
முடியாத மோனநிலை முனகிவிட்ட சொற்களையே
விடியாத வைகறையில் வெண்மேகம் உதிர்க்கிறது.
தனிமையிலே கடைசிமிச்சம் தவிப்புத்தான் என்றாலும்
நானினிமேல் தனிமையிலே விடமாட்டேன்.
மௌனக்கடலுக்குள் மனத்தோணி மிதந்திருக்க,
கனவுப் பொதிகளினால் கண்முதுகு கனக்கட்டும்.
புரியாத உணர்வுகளில் புதைந்துவிட்ட என்னுயிரைத்
தெரியாமல் தனிமையிலே தினம்தோண்டிப் பார்க்கின்றேன்.
மனக்கொடிக்கு நீர்வார்த்து மரணமலர் பூப்பதற்குள்
எனக்குள்நான் தேடுவது எதுவென்றே தேடுகின்றேன்.
ஆகா! ஒ! தனிமைகளே! ஆவிகளின் நினைவுகளே!
சாகாத நினைவுகளைத் தவிக்கவிட்ட தனிமைகளே!
இறக்காமல் இனி நீங்கள் எனக்காக வாழுங்கள்!
மறக்காமல் நானுங்கள் மடிமீது தவமிருப்பேன்.
ஒளிப்பூவின் மெத்தைகளில் உறங்குங்கள் தனிமைகளே!
குளிர்மேகச் சிறகடியில் கூடுகட்டிப் படுத்திருங்கள்.
இமைக்கோழி அடைகாக்கும் எழிலான விழிமுட்டை
அமைதியிலே தனிமைதரும் அகச் சூட்டில் பொரியட்டும்!
சோகரத்தம் சொட்டுகின்ற சுயநினைவுக் காயங்கள்
தாகமுத்தத் தனிமையிலே சந்தனம் போல் ஆறட்டும்!

(கவிஞர் வைரமுத்துவின் "தனிமைதான் தத்துவம்" என்ற கவிதையிலிருந்து எனக்கு மிகவும் பிடித்த சில வரிகள்.)
"வைகறை மேகங்கள்"
கவிஞர் வைரமுத்து
சூர்யா வெளியீடு, சென்னை.
எண்பது பக்கங்கள்.
விலை ரூபாய் முப்பது மட்டும்.

16 ஆக., 2008

பட்டுக்கோட்டை பாடல்-4

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா - இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா - இதயம்
திருந்த மருந்து சொல்லடா.

பாரதிதாசன் கவிதைகள்-5:

கூடத்திலே மனப் பாடத்திலே - விழி
கூடிக் கிடந்திடும் ஆணழகை
ஓடைக் குளிர்மலர்ப் பார்வையினால் - அவள்
உண்ணத் தலைப்படு நேரத்திலே
பாடம் படித்து நிமிர்ந்த விழி - தனிற்
பட்டுத் தெறித்தது மானின் விழி.
ஆடைதிருத்தி நின்றாள் அவள்தான் - இவன்
ஆயிரம் ஏடு திருப்புகின்றான்.

பாரதி கவிதைகள்-6:

இவ்வுலகம் இனியது;
இதிலுள்ள வான் இனிமையுடைத்து;
காற்றும் இனிது;
தீ இனிது;
நீர் இனிது;
நிலம் இனிது;
ஞாயிறு நன்று;
திங்களும் நன்று;
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன;
மழை இனிது;
மலை இனிது;
காடு இனிது;
ஆறுகள் இனியன;
உலோகமும், மரமும், செடியும், கொடியும்,
மலரும், காயும், கனியும் இனியன;
பறவைகள் இனியன;
ஊர்வனவும் நல்லன;
விலங்குகளெல்லாம் இனியவை;
நீர் வாழ்வனவும் நல்லன;
மனிதர் மிகவும் இனியர்;
ஆண் நன்று;
பெண் இனிது;
குழந்தை இன்பம்;
இளமை இனிது;
முதுமை நன்று;
உயிர் நன்று;
சாதல் இனிது.

வாசிப்புத் தாகம் - முனைவர் மீ.நோயல்

எனக்குள்ளே வாசிப்புத் தாகத்தையும், எழுத்தார்வத்தையும் வளர்த்துவிட்டவர்களில் முக்கியமானவர் பேராசிரியர் தே.லூர்து!

பாளையங்கோட்டை தூய சேவியர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கினார்! அமெரிக்காவின் போர்டு நிதிய (Ford Foundation) உதவியோடு அங்கே நாட்டார் வழக்காற்றியல் (Folklore) மையத்தை உருவாக்கினார். தமிழகத்தில் மட்டுமல்ல - தென்னிந்தியாவிலேயே இந்தத் துறை வல்லுனர்கள் அனைவருடைய மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவராக விளங்கினர். அவருடைய ஐம்பதாவது வயதுகளிளிருந்தே அவருக்குப் பார்வைக் குறைபாடு! அறுபதுகளில் கிட்டத்தட்ட வாசிக்கவே முடியாத நிலை! போதாக்குறைக்குப் பக்கவாதமும் தொற்றிக்கொண்டது! எழுதுவதும் சிரமமாகிப் போனது! கண்ணுக்கும் மருத்துவம்! பக்கவாதத்துக்கும் மருத்துவம். ஆனால் அவரது அறையெங்கும் நூல்கள். உலகெங்கும் இருந்து நன்கொடையாகவும், வாங்கியும் சேகரித்த நூல்கள். காலையிலும் மாலையிலும் அவர் சுட்டும் நூலை வாசித்துக் காட்ட மாணவர்கள் அல்லது பணியாளர்! ஒவ்வொரு நூலிலும் பக்கம் வாரியாகக் குறிப்புகள்! அவர் சொல்லச் சொல்ல கட்டுரைகள் எழுதப்பட்டன. ஆய்வுக் கட்டுரைகள்! மாணவர்களுக்கு ஆய்வுப் பட்டங்கள்! ஆய்விதழ்கள்! நூல்கள்! தமிழக, கேரளப் பல்கலைக்கழகங்களுக்குப் பயணம்! விரிவுரைகள்! இலங்கை உள்ளிட்ட இடங்களில் கருத்தரங்கக் கட்டுரைகள். ஏப்ரல் 2008-ல் தந்து 71-வது வயதில் தன் இறுதி மூச்சு விடும்வரை அதே வாசிப்புத் தாகம்! சிந்தனைத் தாகம்! வாசிக்கத் தூண்டும் தாகம்! புத்தகத்தைப் புரட்ட முடியாத கைகளில் புத்தகம்! வாசிக்க முடியாத கண்களில் அறிவுத் தேடல்!

நம்முடைய வாசிப்புத் தாகம் தணியாமல் தொடர இவருடைய வாசிப்புத் தாகம் நமக்கு வழிகாட்டட்டும்.

மிகப் பெரிய சாதனையாளர்கள் பல தடைகளையும் மீறி, வாசிப்புத் தாகத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாமும் வாசிப்புத் தாகத்தை வளர்ப்போம்! வளர்வோம்.

நன்றி: முனைவர் மீ.நோயல், ஆசிரியர், அறிக அறிவியல், ஆகஸ்ட் 2008.

14 ஆக., 2008

பட்டுக்கோட்டை பாடல்-3: "காலொடிந்த ஆட்டுக்காகக் ..."

காலொடிந்த ஆட்டுக்காகக்
கண்ணீர் விட்ட புத்தரும்,
கடல்போல உள்ளங்கொண்ட
காந்தி ஏசுநாதரும்,
கழுத்தறுக்கும் கொடுமைகண்டு
திருந்தவழி சொன்னதும் உண்டு.
காதில் மட்டும் கேட்டு அதை
ரசிச்சாங்க - ஆனா
கறிக்கடையில் கணக்கைப்
பெருக்கி வந்தாங்க.

பாரதிதாசன் கவிதைகள்-4: "நீலவான் ஆடைக்குள்..."

நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து,
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக்
கோல முழுதும் காட்டிவிட்டால் காதற்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? - வானச்
சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!
சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ!
காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ!

பாரதி கவிதை-6: 'வரம் கேட்டலிலிருந்து' ஒரு பகுதி

பாரதி கவிதை: 'வரம் கேட்டலிலிருந்து' ஒரு பகுதி

தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?

எனக்குப் பிடித்த கவிதை-32: "உரக்க உணர்! - கவிஞர் ஜனநேசன்"

உன் பெருமூச்சால்
ஓர் இலை அசையலாம்!
ஓர் இலையால் ஒரு கிளை,
ஒரு கிளையால் ஒரு மரம்,
தோப்புகளும் அசையலாம்!
அசைவுகளின் உசாவலை
விசாரிக்கத் தென்றல் வரலாம்!
மாற்றத்தை முன்மொழிந்து
புயலும் எழலாம்!
ஆகவே சகோதரியே,
உன் அழுகையும், உவகையும்
உரத்தே ஒலிக்கட்டும்!
ஓர் இயக்கமாய் இயங்கட்டும்!

('புதிய ஆசிரியன்' நவம்பர் 1998 இதழிலும், 'செம்மலர்' பிப்ரவரி 1999 இதழிலும் வெளியானது.)

புத்தக வடிவில்:
"மஞ்சள் சிலுவை"
கவிஞர் ஜனநேசன்
கிருதயா பதிப்பகம்,
காரைக்குடி
விலை ரூபாய் இருபத்தைந்து மட்டும்.

12 ஆக., 2008

பாரதிதாசன் கவிதைகள்-4: "ஆற்றுநடை"

நோய் தீர்ந்தார், வறுமை தீர்ந்தார்,
நூற்றுக்கு நூறு பேரும்!
ஓய்வின்றிக் கலப்பை தூக்கி
உழவுப்பண் பாடலானார்!
சேய்களின் மகிழ்ச்சி கண்டு
சிலம்படி குலுங்க ஆற்றுத்
தாய் நடக்கின்றாள், வையம்
தழைகவே தழைக்க வென்றே!

பாரதி கவிதைகள்-5: "நெஞ்சிற் கவலை..."

நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி,
அஞ்சி உயிர்வாழ்தல் அறியாமை - தஞ்சமென்றே
வையமெலாங் காக்கும் மஹாசக்தி நல்லருளை
ஐயமறப் பற்றல் அறிவு.

பாரதிதாசன் கவிதைகள்-3: "தமிழை என்னுயிர் என்பேன்"

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனிய என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்.

பட்டுக்கோட்டை பாடல்-2: "ஆடைகட்டி வந்த நிலவோ..."

ஆடைகட்டி வந்த நிலவோ - கண்ணில்
மேடைகட்டி ஆடும் எழிலோ - குளிர்
ஓடையில் மிதக்கும் மலர்
ஜாடையில் சிரிக்கும் இவள்
காடுவிட்டு வந்த மயிலோ - நெஞ்சில்
கூடுகட்டி வாழும் குயிலோ?

இன்றைய சிந்தனைக்கு-3:

நீ சுமக்கின்ற நம்பிக்கை,நாளை நீ கீழே விழும்போது உன்னை சுமக்கும்.

- சீ.மதுவிஜய், 12ம் வகுப்பு

நன்றி: தினமலர், மாணவர் மலர், மதுரை, ஜூலை 14, 2008.

ஆன்மீக சிந்தனை-3:

அன்பு விரிவடைவதற்கு ஏற்ப உயிர் வாழ்க்கைக்கு வலிவு அதிகம் உண்டாகின்றது. பிற உயிர்களிடத்து அன்பு பாராட்டுவதற்கு ஏற்ப ஆனந்தம் தன்னிடம் ஒங்குவதை ஆத்மா சாதகன் அனுபவத்தில் காண்கின்றான். 'அன்பும் சிவமும் ஒன்று' என்பது ஆப்த வாக்கியம். 'ஆனந்தமும் பரமும் ஒன்று' என்பதும் ஆப்த வாக்கியம். ஆதலால் அன்பை வளர்க்கின்றவர்கள் எல்லோரும் பரம்பொருளைச்சாரும் பாங்குடையவர் ஆகின்றனர். - ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்

இன்று ஒரு தகவல்-3: "உன்னத சேவை"

ஜோஸ், மதுரையைச் சேர்ந்த இந்த 59 வயது இளைஞர், சத்தமில்லாமல் மிகப்பெரிய சாதனை செய்து வருகின்றார். கடந்த 37 ஆண்டுகளில் 147 முறை இரத்த தானம் செய்திருக்கிறார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தினமும் இருபது பேருக்காவது அறுவை சிகிச்சை நடக்கிறது. இவர்களுக்கு அறுபது யூனிட் வரை இரத்தம் தேவைப்படுகிறது. ஆஸ்பத்திரியில் செஞ்சிலுவைச் சங்கத்தை அதன் இணைச்செயலராக இருந்து நிர்வகித்து வருகிறார் ஜோஸ். அவருக்குக் கீழ் முன்னூறுக்கும் மேற்பட்ட கொடையாளர்கள் இருபத்து நான்கு மணி நேரமும் இரத்த தானம் செய்யத் தயாராக இருக்கின்றனர். உயிர் காக்கும் உன்னத சேவைபுரியும் இவர்கள் அனைவருக்கும் நமது பாராட்டுக்கள். (அடிப்படை: தினமலர், மதுரை, ஜூலை 27, 2008)

நலக்குறிப்புகள்-7: ஆரோக்கியமாக வாழ...

ஒரு பொருளுக்கு மூன்று பக்கங்கள் (3-D) இருப்பதைப் போல, ஆரோக்கியத்திற்கும் மூன்று பக்கங்கள். உடல், மனம், சமூகம் என்பவை அவை. உடற் குறைவு மனதைப் பாதிக்கும். மனநிலை உடலைப் பாதிக்கும். சமூகச்சூழல் இரண்டையும் பாதிக்கும். ஆகவே இம்மூன்றும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு உடையவை. ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் இதை மனதிற் கொள்ளுதல் அவசியம். - அமரர் மகரிஷி க.அருணாசலம்

எனக்குப் பிடித்த கவிதை-31: "புத்தகம்" - கவிஞர் வாலி

பிள்ளையில் படிக்கும் புத்தகம் மழலை
பள்ளியில் படிக்கும் புத்தகம் நட்பு
இளமையில் படிக்கும் புத்தகம் காதல்
வளமையில் படிக்கும் புத்தகம் வாழ்வு!

கட்டிலில் படிக்கும் புத்தகம் மனைவி
தொட்டிலில் படிக்கும் புத்தகம் மதலை
சட்டியில் படிக்கும் புத்தகம் சோறு
பெட்டியில் படிக்கும் புத்தகம் செல்வம்!

உறங்கையில் படிக்கும் புத்தகம் கனவு
கிறங்கையில் படிக்கும் புத்தகம் கள்ளு
உறவினில் படிக்கும் புத்தகம் காமம்
துறவினில் படிக்கும் புத்தகம் ஞானம்!

உவகையில் படிக்கும் புத்தகம் சிரிப்பு
உணர்ச்சியில் படிக்கும் புத்தகம் கோபம்
கவலையில் படிக்கும் புத்தகம் கண்ணீர்
கோவிலில் படிக்கும் புத்தகம் கடவுள்!

முதுமையில் படிக்கும் புத்தகம் ஏக்கம்
முடிவினில் படிக்கும் புத்தகம் தூக்கம்
பிறந்தது முதல்தான் எத்தனை படிப்பு
படித்ததை முடித்ததன் பரீட்சைதான் இறப்பு!

11 ஆக., 2008

பாரதி கவிதைகள்-3:

விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டியபடி செலும் உடல்கேட்டேன்;
நசையறு மனம் கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்;
தசையினைத் தீ சுடினும் - சிவ
சக்தியைப் பாடும் நல் அகங் கேட்டேன்;
அசைவறு மதி கேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?

(பாரதியின் "நல்லதோர் வீணையிலிருந்து" ஒரு பகுதி).

பாரதிதாசன் கவிதைகள்-2: "படைத் தமிழ்"

இருளினை, வறுமை நோயை
இடருவேன்; என்னுடல் மேல்
உருள்கின்ற பகைக்குன்றை
நான் ஒருவனே உதிர்ப்பேன்;
நீயோ கருமான்செய் படையின் வீடு;
நான் அங்கோர் மறவன்! கண்ணற்
பொருள்தரும் தமிழே!
நீ ஓர் பூக்காடு; நானோர் தும்பி!

பட்டுக்கோட்டை பாடல்-1: "சின்னஞ்சிறு கண்மலர்...."

சின்னஞ்சிறு கண்மலர்
செம்பவள வாய்மலர்
சிந்திடும் மலரே ஆராரோ!
வண்ணத்தமிழ்ச் சோலை
மாணிக்க மாலை ஆரிரோ,
அன்பே ஆராரோ!
ஏழை நம் நிலையை எண்ணி
நொந்தாயோ!
எதிர்கால வாழ்வில்
கவனம் கொண்டாயோ!
நாளை உலகம்
நல்லோரின் கையில்
நாமும் அதிலே
உய்வோம் உண்மையில்
மாடிமனை வேண்டாம்
கோடி செல்வம் வேண்டாம்
வளரும் பிறையே நீ போதும்!

இன்று ஒரு தகவல்-2: "வீடீயோ கேம் பிசினஸ் ரூபாய் இரண்டு லட்சம் கோடியைத் தாண்டியது!"

வீடீயோ கேம் பிசினஸ் அமெரிக்காவில் ஆரம்பித்து சீனா வரை கொடிகட்டிப் பறக்கிறது. மைக்ரோஸாப்த் நிறுவனத்தின் எக்ஸ்பாக்ஸ் 360, சோனியின் பிளே ஸ்டேஷன் 3, ஆகியவற்றுடன் இப்போது நின்டெண்டோவின் வீடயோ கேம் ஆகியவையும் விற்பனையாகின்றன. அடுத்த ஐந்தாண்டில் வீடீயோ கேம் வர்த்தகம் பல மடங்கு பெருகும்.

(நன்றி: தினமலர், மதுரை, ஜூலை 27, 2008)

எனக்குப் பிடித்த கவிதை-30: "துணிவுடன் உலகை வெல்லுங்கள்! "

கடலுக்கு பயந்தவன்
கரையில் நின்றான்
அதைப் படகினில் கடந்தவன்
புது உலகைக் கண்டான்.
பயந்தவன் தனக்குப் பகையானான்.
என்றும் துணிந்தவன்
உலகிற்கு ஒளியாவான்.
என்னால் முடியும் என்றுநம்புங்கள்.
துணிவுடன் உலகை வெல்லுங்கள்!

(ஆசியாவின் மிகப்பெரிய 'Spoken English' பயிற்சி நிறுவனமான 'வீட்டா" (VETA) நிறுவனத்தின் சென்னை-தி.நகர் அலுவலகம் இப்படியொரு 'டானிக்' கவிதையோடுதான் நம்மை வரவேற்கிறது. இருபது லட்சம் பேருக்கு மேல் போதித்து சாதனை படைத்த நிறுவனம்! உள்நாட்டில் 200 கிளைகள், கடல் கடந்து சிங்கப்பூரிலும் தற்போது கிளை!)

(நன்றி: 'மல்லிகை மகள்', தமிழ் மகளிர் மாத இதழ், மார்ச் 2008)

நலக்குறிப்புகள்-6: பித்தவெடிப்பிற்கு...

வேப்ப எண்ணெய், மஞ்சள் சேர்த்துக் குழைத்து பித்த வெடிப்பின் மீது தடவ, விரைவில் குணமாகும். - டி.கௌரி, கம்பம்

(நன்றி: மங்கையர் மலர், ஜூன் 2008)

இன்றைய சிந்தனைக்கு

நண்பனையும் நேசி, எதிரியையும் நேசி. நண்பன் உன் வெற்றிக்குத் துணையாய் இருப்பான். எதிரி உன் வெற்றிக்குக் காரணமாய் இருப்பான். - சீ.மதுவிஜய், 12ம் வகுப்பு

(நன்றி: தினமலர், மாணவர் மலர், மதுரை, ஜூலை 14, 2008)

ஆன்மீக சிந்தனை-2:

அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. - 'திருமந்திரம்'

'கனவுச்சிப்பி'

'கனவுச்சிப்பி'

* கனவுகள் பிறக்காத இதயம் என்பது கண்கள் திறக்காத சிலையைப் போன்றது.
* கனவுகள், உற்சாகத்தின் ஊற்றுக் கண்கள். களைப்பும் சலிப்பும் அண்டவிடாமல், மனதைக் காக்கும் மந்திரத் திரைகள். "நடக்க முடியுமா"" என்று தவிக்கும் மனிதனுக்கு, "பறக்க முடியும் பார்" என்று சிறகுகளைப் பரிசளிப்பவை கனவுகள்.
* கனவுகள் வெற்றிக் கோலம் வரைவதற்காக வைக்கப்படுகிற புள்ளிகள். அவற்றை செயல் என்னும் கோடுகளால் சேர்ப்பவர்களே பெரும்புள்ளிகள். * கனவுகள் இலட்சியங்களாகலாம். இலட்சியங்கள், வெறும் கனவுகளாக விரயமாகி விடக்கூடாது.
* கனவாய் முளை விட்டு, முயற்சியில் துளிர்விட்டு, செயலாய் வேர்பிடிக்கும் விருட்சங்களே இலட்சியங்கள்.
* கனவென்னும் சிப்பிக்குள் கலையழகோடு கண் சிமிட்டுகிறது சாதனை என்னும் ஆணி முத்து. முயற்சியின் கடலுக்குள் மூழ்குங்கள், முத்தெடுங்கள்.

('மரபின் மைந்தன்' ம.முத்தையாவின் "கனவுச் சிப்பியைத் திறந்து பார்" என்ற கட்டுரையிலிருந்து தேர்ந்த ஒரு பகுதி.)

"வெற்றிச் சிறகுகள் விரியட்டும்"
'மரபின் மைந்தன்' ம.முத்தையா
விஜயா பதிப்பகம், கோவை.
128 பக்கங்கள்
விலை: ரூபாய் முப்பத்தைந்து மட்டும்

8 ஆக., 2008

கேள்வியும் பதிலும்-11: "இலக்கியம் எப்படிப் பிறக்கிறது?"

இலக்கியம் எப்படிப் பிறக்கிறது?

வெற்றிடத்தில் உயிர்கள் ஜனிப்பதில்லை. இலக்கியமும் ஒருவகை உயிரினமே. அதுவும் ஒருவகைச் சமூகச்சூழலில்தான் பிறக்கிறது. சமூகமும் தனிமனிதனும் சேர்ந்து இயங்கி வெளிப்படுத்துகிற விசித்திர ஜனனம் அது! புறமும் அகமும் பொங்கியும் முயங்கியும் படைப்புத் தொழில் நடக்கிறது. - பேராசிரியர் அருணன்

கருத்துக்கள்-1:

கருத்துக்கள்-1:

முதலாளித்துவம் பெற்றுப்போட்டுள்ள நெறி கெட்ட பிள்ளைகள் உழலும், ஊதாரித்தனமும் - பேராசிரியர் அருணன்

நலக்குறிப்புகள்-5: நோயின்றி வாழ ஐந்து வழிகள்!

நோயின்றி வாழ ஐந்து வழிகள்!

1. காலை மாலை கடவுள் வழிபாடு
2. சந்தி நேரங்களில் உடற்பயிற்சி
3. ஒரு நாளைக்கு இரு வேளை உணவு.
4. நாள் ஒன்றுக்கு எட்டு டம்ளர் தண்ணீர்.
5. மாதம் ஒரு நாள் உபவாசம்.

நன்றி: ஆடுதுறை இயற்கை நலவாழ்வு சங்கம்

இயற்கை வாழ்வு - யோகி சுத்தானந்த பாரதியார்

இயற்கை வாழ்வு - யோகி சுத்தானந்த பாரதியார்


பஞ்சபூத நிறை காத்தல் பசித்தபோது பழம் தேங்காய் கொஞ்சுங் காற்று வெய்யிலிலே கொட்ட வேர்வை வேலைசெயல் நெஞ்சு நிரம்ப மூச்சிழுத்தல் நீரில் ஆடித் தியானித்தல் நஞ்சு நீங்கப் பட்டினியால் நல்லியற்கை வாழவாமே.

நீங்கள் விரும்பினால்...

நீங்கள் விரும்பினால்...
------------------------------------
உங்கள் விருப்பத்திற்கு வாழ்க்கையை வளைக்கலாம்.
உங்கள் கனவுகளை உண்மையென ஆக்கலாம்.
உங்கள் உறுதியினால் சிரமங்களைக் கடக்கலாம்.
உங்கள் எல்லைகளை நீங்களே உடைக்கலாம்.
தடைகளைச் சீர்செய்து தடமாக மாற்றலாம்.
வீழ்ச்சிகளைத் தடுத்து வெற்றிகளை ஈட்டலாம்.
வீணாகும் நேரத்தைப் பயனுள்ளதாக்கலாம்.
வேண்டாத பழக்கங்களை வினாடிக்குள் நீக்கலாம்.
பகைவர்களை மிக நல்ல நண்பர்களாக மாற்றலாம்.
பழைய தோல்விகளின் பாரங்கள் நீங்கலாம்.
எத்தனை இழந்தாலும் இழந்த பொருள் மீட்கலாம்.
என்றைக்கு இருந்தாலும் எண்ணியதை எட்டலாம்.
கேள்விகளுக்குப் பதில்கள் உங்களிடமே கிடைக்கலாம்.
கேள்விகளுக்குப் பதில் சொல்ல சாதனைகள் படைக்கலாம்.
தேவைகள் பெருகும்போது வரவுகளும் பெருக்கலாம்.
வியர்வை செலவழித்து வெற்றிகள் குவிக்கலாம்.
மௌனத்தைப் பதிலாக்கி விமர்சனங்களை வீழ்த்தலாம்.
குழப்பங்களை இல்லாமல் செயல்திட்டம் வகுக்கலாம்.
கவனத்தைக் குவிப்பதனால் காரியத்தில் வெல்லலாம்.
வெற்றியிலே தேங்காமல் அடுத்த செயல் ஆற்றலாம்.
விவாதங்கள் ஒவ்வொன்றும் தீர்வு நோக்கிச் செல்லலாம்.
முடக்கவரும் எதிர்ப்புகளை முன்கூட்டித் தடுக்கலாம்.
மாற்றங்கள் ஏற்பதனால் ஆதாயம் காணலாம்.
ஏமாற்றம் வந்தாலும் தொட்டதைத் தொடரலாம்.

"ஒரு கப் உற்சாகம்"
'மரபின் மைந்தன்' ம.முத்தையா
விஜயா பதிப்பகம், கோவை
விலை: ரூபாய் முப்பது மட்டும்.

பாரதி கவிதைகள்-2: "மஹாசக்திக்கு விண்ணப்பம்"

பாரதி கவிதைகள்-2: "மஹாசக்திக்கு விண்ணப்பம்"

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
பண்ணிய பாவமெல்லாம்
பரிதிமுன் பனியே போல
நண்ணிய நின் முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்.

பாரதி பற்றி பாரதிதாசன்:

பாரதி பற்றி பாரதிதாசன்:
---------------------------------------
பைந்தமிழ்த் தேர்ப்பாகன் அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக்குயில்! இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு!
நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலா!
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்!
திறம்பட வந்த மறவன், புதிய
அறம்பாட வந்த அறிஞன், நாட்டிற்
படரும் சாதிப்படைக்கு மருந்து!
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்!
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்!
என்னென்று சொல்வேன், என்னென்று சொல்வேன்!
தமிழால், பாரதி தகுதி பெற்றதும்
தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்
எவ்வாறென்பதை எடுத்துரைக்கின்றேன்.

பாரதி பற்றி பட்டுக்கோட்டை (கல்யாணசுந்தரம்):

பாரதி பற்றி பட்டுக்கோட்டை (கல்யாணசுந்தரம்):
----------------------------------------------------------------
பாரதிக்கு நிகர் பாரதியே - மண்ணில்
யாரெதிர்த்தாலும் மக்கள்
சீருயர்த்தும் பணியில்...
பாரதிக்கு நிகர் பாரதியே!
பாதகம் செய்பவரைப்
பாட்டாலே உமிழ்ந்தான்.
பஞ்சைகளின் நிலையைப்
பார்த்துள்ளம் நெகிழ்ந்தான்
பேதங்கள் வளர்ப்பவரைப்
பித்தர் என்றே இகழ்ந்தான்
பெண்மையைச் சக்தியை
உண்மையைப் புகழ்ந்தான்.

தள்ளல் மன்னர்கள்! - எஸ்.சத்தியமூர்த்தி, I.A. & A.S.

தள்ளல் மன்னர்கள்! - எஸ்.சத்தியமூர்த்தி, I.A. & A.S.

திரு மணியனுக்கு (இதயம் பேசுகிறது) இன்றைய வேலையை இன்றே முடிக்க வேண்டும். பெரிய தொழிலதிபர்களுக்கு நாளைய வேலையைக்கூட இன்றே முடிக்க வேண்டும். ஆனால் பல சாமானியருக்கு இன்றைய வேலையை நாளையோ அடுத்த நாளோ செய்தால் போதும். தள்ளல் மன்னர்கள் இவர்கள். இந்தத் தள்ளல் மன்னர்களுக்கு அமெரிக்காவில் ஒரு சங்கம் 1956-ல் ஆரம்பித்திருக்கிறார்கள்..... ஐந்து லட்சம் அங்கத்தினர்கள் சேர ஆசைப் படுகிறார்களாம். ஒரு செய்தி, அதையும் தள்ளிப் போட்டுக்கொண்டு இருக்கிறார்களாம்!

1823-ஆம் ஆண்டில் சின்சினாட்டி பல்கலைக்கழக நூலகத்திலிருந்து எம்.டூட் (M.Dood) என்பவர் திரு.ஜே.கர்ரி என்பவர் எழுதிய ஒரு மருத்துவப் புத்தகத்தை வாங்கிப் போனாராம். அவரும் ஒரு தள்ளல் மன்னர். புத்தகத்தைத் திருப்பித் தரவேயில்லை! அவருடைய கொள்ளுப்பேரன் 1968-ல் அந்தப் புத்தகத்தைத் திருப்பித் தந்தாராம், ஒரு லட்ச ரூபாய் நஷ்ட ஈட்டோடு!


(திரு எஸ்.சத்தியமூர்த்தி அவர்கள் எழுதிய "தள்ளல் மன்னர்கள்' என்ற கட்டுரையிலிருந்து ஒரு பகுதி).

"கடைசிப் பக்கம்: சின்னச் சின்ன பூக்கள்",
திரு எஸ்.சத்தியமூர்த்தி, I.A. & A.S., கலைஞன் பதிப்பகம், சென்னை.விலை ரூ பதினாறு மட்டும். ('இதயம் பேசுகிறது' இதழில் கடைசிப் பக்கத்தில் வாரா வாரம் வெளிவந்த சுவையான கட்டுரைகளின் தொகுப்பு).

7 ஆக., 2008

பாரதி கவிதைகள்-1: "பராசக்தி"

பாரதி கவிதைகள்-1: "பராசக்தி"

நாட்டு மக்கள் நலமுற்று வாழவும்
நானிலத்தவர் மேனிலை எய்தவும்
பாட்டிலே தனியின்பத்தை நாட்டவும்
பண்ணிலே களிகூட்டவும் வேண்டி நான்
மூட்டும் அன்புக் கனலோடு வாணியை
முன்னுகின்ற பொழுதில் எலாம் குரல்
காட்டி அன்னை பராசக்தி ஏழையேன்
கவிதை யாவும் தனக்கெனக் கேட்கின்றாள்.

மழை பொழிந்திடும் வண்ணத்தைக் கண்டு நான்
வானிருண்டு கரும்புயல் கூடியே
இழையும் மின்னல் சரேலென்று பாயவும்
ஈர வாடை இரைந்தொலி செய்யவும்
உழைஎலாம் இடையின்றி இவ்வான நீர்
ஊற்றுஞ் செய்தி உரைத்திட வேண்டுங்கால்
"மழையும் காற்றும் பராசக்தி செய்கை காண்!
வாழ்க தாய்!" என்று பாடும் என் வாணியே.

சொல்லினுக்கு எளிதாகவும் நின்றிடாள்
சொல்லை வேறிடம் செல்ல வழிவிடாள்;
அல்லினுக்குட் பெருஞ்சுடர் காண்பவர்
அன்னை சக்தியின் மேனி நலங்கண்டார்.
கல்லினுக்குள் அறிவொளி காணுங்கால்,
கால வெள்ளத்திலே நிலை காணுங்கால்,
புல்லினில் வயிரப்படை தோன்றுங்கால்,
பூதலத்தில் பராசக்தி தோன்றுமே!

பாரதியின் "பராசக்தியிலிருந்து" ஒரு பகுதி.


பாரதிதாசன் கவிதைகள்-1 : "அழகின் சிரிப்பிலிருந்து"

பாரதிதாசன் கவிதைகள்-1 :

சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;
திருவிளக்கில் சிரிக்கின்றாள்; நாரெடுத்து
நறுமலரைத் தொடுப்பாளின் விரல் வளைவில்
நாடகத்தைச் செய்கின்றாள்! அடடே, செந்தோள்
புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்
புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்
நிறத்தினிலே என்விழியை நிறுத்தினாள்; என்
நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்!

- பாரதிதாசனின் 'அழகின் சிரிப்பிலிருந்து' ஒரு பகுதி.

எனக்குப் பிடித்த கவிதை-29: கண்ணீர் வங்கி!

எனக்குப் பிடித்த கவிதை-29: கண்ணீர் வங்கி!

காடு விளைந்து வாழ்வு சிறக்கும்
என நம்பினேன் மண்ணை!
புன்னகை மட்டுமல்ல,
பொன்னகையும் போனது - அடகுக்கடையில்.
நெல்மணியுடன் பொன்மணியும்
வந்துசேரும் என பூரித்த வேளையில்,
புயலுடன் வந்த மழையில் - மூழ்கியது
பயிர்கள் மட்டுமா? - எங்கள்
வாழ்க்கையும் அன்றோ?
கந்துவட்டியின் பிடியில் எங்களிடம்
எஞ்சியிருப்பது கண்ணீர் மட்டுமே.
கண்ணீருக்கு உண்டா வங்கி?
அடமானம் வைப்பதற்குத்தான்.

- செல்வி நளினி
நன்றி: தினமலர், மதுரை, ஜூலை 27, 2008

இன்றைய சிந்தனைக்கு

இன்றைய சிந்தனைக்கு

பொழுது போகவில்லை என்பது வாழ்க்கை இல்லை.பொழுது போதவில்லை என்பதுதான் வாழ்க்கை.

நன்றி: சீ.மதுவிஜய், 12ம் வகுப்பு
தினமலர், மாணவர் மலர், மதுரை, ஜூலை 14, 2008.

நலக்குறிப்புகள்-4: "தேங்காய்"

நலக்குறிப்பு - "தேங்காய்"
----------------------------------------
தேங்காய் கொலெஸ்த்ராலை (cholestrol) அதிகரிக்கும் என்று கூறுவது தவறு. சமைத்த தேங்காய்தான் கொலெஸ்த்ராலை (cholestrol) அதிகரிக்கும். நீருள்ள தேங்காய் சிறந்த உணவு. அது எளிதில் சீரணமாகும். கழிவுப் பொருட்களை நீக்கும். தேங்காயை ஒரு வேலையாவது உணவாகக் கொள்ள வேண்டும். குழந்தைக்கு தாய்ப்பால் என்பது போல வளர்ந்த மனிதனுக்கு ஏதாவது இருக்கிறதா என்றால் அது தேங்காயும், பழங்களும்தான். இவற்றை மட்டுமே உண்டு வாழ்ந்து காட்டியவர் தியாகி ம.கி.பாண்டுரங்கனார்.

நன்றி: 'இயற்கை நாதம்', மாத இதழ், ஜூலை 2008

இன்று ஒரு தகவல்-1: "பீஜிங் ஒலிம்பிக்"

இன்று ஒரு தகவல்: "பீஜிங் ஒலிம்பிக்"
------------------------------------------------------------
உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒலிம்பிக் போட்டிகள் சீனத் தலைநகர் பீஜிங்கில் கோலாகலமாக துவங்கவிருக்கின்றன. எண் எட்டைக் (8) கண்டால் இந்தியாவில் பலருக்கு அலர்ஜி. ஆனால் இந்த ஒலிம்பிக் போட்டி துவங்கும் நாள் மற்றும் நேரம் அனைத்திலும் எட்டுதான். 2008ம் ஆண்டின் எட்டாவது மாதமான ஆகஸ்டில், எட்டாம் நாள், சீன நேரப்படி இரவு எட்டு மணி, எட்டு நிமிடம், எட்டு வினாடிக்கு நேஷனல் பேர்ட்ஸ் நெஸ்ட் (பறவைக்கூடு வடிவில் அமைந்தது) ஸ்டேடியத்தில் (National Birds' Nest Stadium) ஒலிம்பிக் போட்டிகள் துவங்குகின்றன. நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் இந்த 08-08-08-08-08-08 காம்பினேஷனில் (வருடம்-மாதம்-நாள்-மணி-நிமிடம்-வினாடி) ஒலிம்பிக் போட்டிகளை துவக்குவதில் சீன அரசும், ஒலிம்பிக் கமிட்டியினரும் பெருமை கொள்கின்றனர்.

நன்றி: தினமலர், மதுரை, (ஒலிம்பிக் ஸ்பெஷல்), ஆகஸ்ட் 1, 2008.

ஆன்மீக சிந்தனை-1:

இன்றைய ஆன்மீக சிந்தனை
------------------------------------------------------
விழிப்புணர்வு இல்லாமல் நீங்கள் தூவும் பல விதைகள்தான் விஷச் செடிகளாக உங்களைச்சுற்றி வளர்ந்து விடுகின்றன. அவற்றைக் கொண்டு வந்து கடவுள் உங்கள் தோட்டத்தில் நட்டு விட்டதாக நினைப்பதில் ஒரு அர்த்தமும் இல்லை. முழுக் கவனத்துடன் உங்கள் வாழ்க்கைப்பாதையை நீங்களே விரும்பி அமைக்கும் திறமை இருந்தும், அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பது உங்கள் தவறாகும். உங்கள் உடலின் மீது ஆளுமை கொண்டவராக நீங்கள் இருப்பீர்களானால் வாழ்க்கையின் இருபது சதவிகித விதி உங்கள் கைக்கு வந்துவிடும். மனதை ஆளப் பழகிக் கொண்டால், அறுபது சதவிகித விதியை நிர்ணயிக்க முடியும். உயிர்ச்சக்தியை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டால், விதியை இயக்குபவரே நீங்கள்தான். - சத்குரு ஜக்கி வாசுதேவ்
நன்றி : தினமலர், (ஆன்மிகம் அறிவோமா), மதுரை, ஜூன் 23, 2008.

4 ஆக., 2008

எனக்குப் பிடித்த கவிதை-28: "அழகின் சிரிப்பு"

எனக்குப் பிடித்த கவிதை-28: "அழகின் சிரிப்பு"

சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;
திருவிளக்கில் சிரிக்கின்றாள்; நாரெடுத்து
நறுமலரைத் தொடுப்பாளின் விரல் வளைவில்
நாடகத்தைச் செய்கின்றாள்! அடடே, செந்தோள்
புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்
புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்
நிலத்தினிலே என்விழியை நிறுத்தினாள்; என்
நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்!

- பாரதிதாசனின் அழகின் சிரிப்பிலிருந்து ஒரு பகுதி.