29 செப்., 2008

என் கவிதை-4: "விழித்தெழுவாய்!"

நீ உறங்கினால்
என் வாழ்க்கை
இருண்டுவிடும்.
உன் உதவியின்றி
முயற்சியுமில்லை,
முன்னேற்றமுமில்லை.
உறங்கியது போதும்,
விழித்தெழுவாய்,
ஆக்கினையே!
இது என்
ஆக்கினை!!

26 செப்., 2008

கேள்வியும் பதிலும்-15:

உங்களிடம் அமுதசுரபி கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
அதிலிருந்து முதலில் ஒரு கிள்ளட்டினும், உன்னதமான தலைவனும் வரவேண்டுமென்று வேண்டிகொள்வேன். இரண்டும் கிடைத்துவிட்டால், அந்தத் தலைவனின் ஒரு கையில் கிள்ளட்டினையும், மறுகையில் அமுதசுரபியையும் கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொள்வேன்; ஆட்டோமாட்டிக்காக இந்தியா உருப்பட்டுவிடும்.

நன்றி: "இளசிடம் ஒரு கேள்வி", தமிழன் எக்ஸ்பிரஸ், மே 1, 2002.

இன்றைய சிந்தனைக்கு-20:

ஞானி எதையும் தனக்குள்ளே தேடுகிறார். பைத்தியக்காரர் எல்லாவற்றையும் பிறரிடமிருந்து எதிர்பார்க்கிறார். - லியோ டால்ஸ்டாய்

நலக்குறிப்புகள்-11: "மூட்டுவலிக்கு..."

நாற்பது வயதைக் கடந்தாலேயே மூட்டுவலி படுத்தத் தொடங்கிவிடும். எளிய கை வைத்தியம் இதோ! பாகற்காய் விதைகளைக் காயவைத்து, மையாக அரைத்து, முழங்காலில் பற்றுப்போட்டல் வலி வெகுவாகக் குறையும்.

நன்றி: பி.சந்திரிகா, வேலூர், குமுதம் சிநேகிதி, அக்டோபர் 2002.

25 செப்., 2008

நாலடியார்-3: "கல்லார், கள்ளுண்ணார்..."

கல்லார், கள்ளுண்ணார், கடிவ கடின்தொரீஇ,
எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார் - தள்ளியும்
வாயிற் பொய்கூறார், வடுவறு காட்சியார்
சாயிர் பரிவ திலர்.

பெரியோர் திருட்டுத்தனம் செய்யார்; மது அருந்தார்; தீய செயல்களை விலக்கி வாழவர்; யாரையும் துச்சமாகப் பேசி அவமரியாதை செய்யார். மறந்தும் பொய் பேசமாட்டார்கள். செல்வச் சிறப்பழிந்து வறுமைக்குத் தள்ளப்பட்டாலும் அதற்காக வருந்தார்.

இன்றைய சிந்தனைக்கு-19:

நல்ல லட்சியத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த லட்சியத்தையே உங்கள் வாழ்க்கை மயமாக்குங்கள். அதைப் பின்பற்றியே வாழ்க்கை நடத்துங்கள். மூளை, தசைகள், நரம்புகள் மற்றும் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த லட்சியமே நிறைந்திருக்கட்டும். வெற்றிக்கு இதுதான் வழி. - சுவாமி விவேகானந்தர்

24 செப்., 2008

தேவாரம்-1: "காதலாகிக் கசிந்து..."

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேத நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.

திருவருட்பா-2: "அப்பா, நான் வேண்டுதல்..."

அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தை நினதருட் புகழை இயம்பிடல் வேண்டும்
செப்பாத மேல்நிலைமேல் சுத்த சிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவா நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே.

திருமந்திரம்-5: "காற்றைப் பிடிக்கும் கணக்கு"

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே.

நாலடியார்-2: "கல்லாரே ஆயினும்..."

கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாலுந் தலைப்படுவர் - தொல்சிறப்பின்
ஒன்னிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு.

படிக்காதவர் ஆயினும் படித்த பெரியோர்களுடன் சேர்ந்து பழகினால், நல்லறிவு வாய்க்கப்பெறும். அழகும், மணமும் நிறைந்த பாதிரிப்பூ வைத்திருந்த பாண்டத்தில் உள்ள தண்ணீருக்கும் பூவின் மணம் கிடைப்பதைப்போல.

புதுமைப்பித்தன் கவிதைகள்-1: " இணையற்ற இந்தியா!"

இந்தியா தேசம் - அது
இணையற்ற தேசம்! - என்று
யாங்களும் அறிவோம் - வெள்ளை
ஆங்கிலர் அறிவார் - பிள்ளைத்
துருக்கனும் அறிவான் - அறிவால்
சூழ்ந்தது தொல்லை.

சிந்தையிலே பின்னிவைத்த சிலந்திவலைச் செல்வி
செல்வழியில் கண்ணியிட்டு செயத்தம்பம் நாட்டும்!
"இந்தியர்கள் நாடல்லோ இமையவர்கள் நாடு!
கந்தமலர் பூச்செரிவில் கடவுளர்களோடு
கன்னியர்கள் கந்தருவர் களித்துவளர் நாடு"
என்று பல சொல்லியதை சொல்லளவில் நம்பி
எவனுக்கும் மண்டியிடும் ஏந்து புய நாடு!
ஆற்றுக் கரையருகே அணிவயல்கள் உண்டு;
சோற்றுக்குத் திண்டாட்டம் சொல்லி முடியாது!
வேதம் படித்திடுவோம், வெறுங்கை முழம் போட்டிடுவோம்!
சாதத்துக்காகச் சங்கரனை விற்றிடுவோம்!
அத்தனைக்கும் மேலல்லோ அஹிம்சைக் கதை பேசி
வித்தகனாம் காந்தியினை விற்றுப் பிழைக்கின்றோம்.

இந்தியா தேசம் - அது
இணையற்ற தேசம்.

23 செப்., 2008

திருவருட்பா-1: "அன்பெனும் பிடியுள் அகப்படும்..."

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனும் வலைக்குட்படு பரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிரோளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே
அன்புருவாம் பர சிவமே!

பரசிவமே! நீ அன்பெனும் கைப்பிடிக்குள் அகப்படும் மலை! அன்பு எனும் குடிலுக்குள் புகுந்தருளும் அரசு நீ! அன்பாம் வலைக்குள் அகப்படும் பரம்பொருள் நீ! அன்பாகிய கையில் வந்தடங்கும் அமுதம் நீ! அன்புக்குடத்துள் அடங்கும் கடல் நீ! அன்பு எனும் உயிர்ஒளி வீசுகின்ற அறிவே! அன்பாகிய அணுவுள் அமைந்த பேரொளியே! நின்னை யான் வாங்குகின்றேன். அருள் புரிவாய் , ஐயனே!.

திருமந்திரம்-4: "உடம்பார் அழியில்..."

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.

நாலடியார்-1: "கல்வி கரையில..."

கல்வி கரையில; கற்பவர் நாள் சில;
மெல்ல நினைக்கின் பிணி பல; - தெள்ளிதின்
ஆராய்ந்த் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.

நாம் கற்கவேண்டிய நூல்கள் மற்றும் பெறவேண்டிய அறிவு அளவில்லாதது. ஆனால் நம் வாழ்நாளோ குறைவு. எண்ணிப்பார்த்தால் இதிலும் நோய், நொடிகள். எனவே வாழ்நாளை வீணாக்காமல், அன்னப்பறவை எப்படி நீரைப் பிரித்து பாலை மட்டும் உண்கிறதோ, அதுபோல நாம் சிறந்த நூல்களை மட்டும் கற்றுப் பயன்பெறவேண்டும்.

ஆன்மீக சிந்தனை-13:

* எதிலும் எப்போதும் கவனமாக இருங்கள்.
* உங்களுக்குள் ஒளியைத் தேடுங்கள்.
* ஒளி உங்கள் உள்ளிருந்து சுடர் விடுமாறு வாழுங்கள்.
* உங்களுக்கு நல்லது என்று தோன்றுபவைக்காக பாடுபடுங்கள்.
* நான் உங்களுக்கு பாதையைக் காட்ட மட்டுமே முடியும். ஆனால் நீங்கள்தான் அந்தப் பாதையில் எங்ஙனம் எவ்வளவு தூரம் பயணம் செல்லமுடியுமென முடிவு செய்யவேண்டும். உங்களுக்குள்ளே உறையும் ஒளியின் மூலம் நீங்களே வழி நடத்திக் கொள்ளுங்கள்.

நன்றி: மு.சம்சியபானு, 6-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, புல்லங்குடி
+ தினமலர், மதுரை, செப்டம்பர் 22, 2008 (மாணவர் மலர்)

21 செப்., 2008

உச்சிக்கு உயர்த்துங்கள்! - கி.கஸ்தூரிரங்கன்

ஒவ்வொரு தெருக்கொடியிலும் தொலைபேசி நிலையங்கள் முளைத்திருப்பதற்குக் காரணமானவர் டாக்டர் கஸ்தூரி ரங்கன். செயற்கைக்கோள் படங்களுடன், வானிலை அறிக்கைகள் வெளியாவதற்கும் இவர்தான் காரணம். 38 ஆயிரம் கி.மீ. உயரத்தில் இந்திய செயற்கைக்கோள் நிலைபெற்றதும் இவரால்தான்.

நெல்லை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் பிறந்தது கேரள மாநிலம், எர்ணாகுளத்தில். மும்பை பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுகலைப் பட்டம். விண்வெளியியல் மற்றும் விண்வெளி இயற்பியலில் பிஎச்.டி. பட்டம். பின்னர் இந்திய விண்வெளித்துறையில் சேர்ந்து, இந்திய தேசிய செயற்கைக்கோள்கள் (ஐ.ஆர்.எஸ். வகை செயற்கைக்கோள்கள்), பாஸ்கரா செயற்கைக்கோள்கள், துருவ செயற்கைக்கோள் ஏவு வாகனம் (பி எஸ் எல் வி) என இந்தியாவின் புகழை விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் பணியில் பங்கேற்பு. அடுத்து இந்திய விண்வெளித் துறைத் தலைவர் பொறுப்பு. இப்படி சாதனைமேல் சாதனை நிகழ்த்தியவர்.

சாந்தி ஸ்வரூப் பட்நகர் விருது, ஸ்ரீ ஹரி ஒம் ஆஷ்ரம் டாக்டர் விக்ரம் சாராபாய் விருது, எம்.பி.பிர்லா விருது என இவர் பெற்ற விருதுகள் நட்சத்திர எண்ணிக்கையை நீள்கின்றன.

19 செப்., 2008

மாற்று மருத்துவ முறைகள்: "ஜப்பானிய நீர் சிகிச்சை"

தினமும் அதிகாலையில் துயில் எழுந்தவுடன் பல் துலக்குமுன் ஆறு குவளை (1.26 லிட்டர்) நீர் பருகுவதால், உடலின் உட்புற உறுப்புக்கள் தூய்மையாக்கப்பட்டு, கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன. வெப்பம் குறைந்து, குளிர்ச்சி பெற்று, மலச்சிக்கல் மறைகின்றது. (இதை நம் முன்னோர்கள் 'உஷை பானம்' என்றழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.)

தண்ணீரைக் குடித்தபிறகு, ஒரு மணி நேரத்திற்கு காபி, டீ போன்ற பானங்களையோ, பிஸ்கட், பழம் போன்ற தின்பண்டங்களையோ சாப்பிடக் கூடாது. இது மிக மிக அவசியமானது, முக்கியமானது. இதைக் கவனத்தில் கொண்டு நடைமுறைப் படுத்த வேண்டும்.

காலையில் தண்ணீர் குடிப்பதற்குத் தயாராகும் வகையில், முதல் நாள் இரவுச் சாப்பாட்டை முடித்த பிறகு, படுக்கைக்குச் செல்லுமுன்பு, நரம்பு மண்டலத்தைத் தூண்டக்கூடிய பானங்களையோ, பொருட்களையோ சாப்பிடக்கூடாது. இந்த நிபந்தனையும் முக்கியமானது. இரவே பல் துலக்கிக் கொள்வது நல்லது.

தண்ணீரில் கிருமிகள் கலந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் இருக்குமானால், அதை முதல் நாள் இரவே கொதிக்க வைத்து, ஆற வைத்து வடிகட்டி, பத்திரப் படுத்திக் கொள்ளலாம்.

இம்முறை ஆரம்பத்தில் ஒரு சில நாட்களுக்கு சற்று சிரமமாகத் தோன்றலாம். பின்னர் பழக்கமாகிவிடும்.

மருந்து, மாத்திரை, ஊசி, டாக்டர், பணச் செலவு ஆகிய எதுவுமே இல்லாமல், இம்முறைப்படி நீரைப் பருகுவதால், கீழ்க்கண்ட நோய்கள் குணமாகின்றன:-

* தலைவலி
* இரத்த அழுத்தம்
* சோகை

* கீல்வாதம்
* பொதுவான பக்கவாதம்
* ஊளைச்சதை
* மூட்டுவலி
* காதில் இரைச்சல்
* இருதயப் படபடப்பு
* மயக்கம்
* இருமல்
* ஆஸ்த்மா
* சளி
* க்ஷய ரோகம்
* மூளைக் காய்ச்சல்
* கல்லீரல் நோய்கள்
* சிறுநீரகக் கோளாறுகள்
* பித்தக் கோளாறுகள்
* வாயுக் கோளாறுகள்
* வயிற்றுப் பொருமல்
* இரத்தக் கடுப்பு
* மூலம்
* மலச்சிக்கல்
* உதிரப்போக்கு
* நீரழிவு
* கண் நோய்கள்
* கண் சிவப்பு
* ஒழுங்கில்லாத மாதவிடாய்
* வெள்ளை படுதல்
* கர்ப்பப்பை புற்றுநோய்
* மார்புப் புற்றுநோய்
* தொண்டை சம்பந்தமான நோய்கள்

நம்பவே முடியவில்லையே! சந்தேகம் கலந்த ஆச்சரியம் மேலிடுகிறது அல்லவா? இந்த முறை ஜப்பானில் பரவலாகக் கடைப் பிடிக்கப்படுகிறது.

சோதனைகள் மூலமாகவும், அனுபவபூர்வமாகவும் கீழ்க்கண்ட நோய்கள் குணமாக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது:-

* மலச்சிக்கல் - ஒரே நாளில்
* வயிற்றில் பித்தம் மற்றும் வாயுப் பொருமல் - இரண்டு நாட்கள்
* சர்க்கரை வியாதி - ஏழு நாட்கள்
* இரத்த அழுத்தம் - நான்கு வாரங்கள்
* புற்று நோய் - நான்கு வாரங்கள்
* க்ஷயரோகம் - மூன்று மாதங்கள்

நன்றி: தி ஹெல்த் சர்வீஸ் சொசைடி, கரூர்

ஆன்மீக சிந்தனை-12:

எங்கும் நிறைந்த இறைவனை எளிமையாக வழிபடுங்கள். சாதாரண நீரும், பூவும் கொண்டு இறைவனின் திருப்பாதங்களை பூஜியுங்கள். அவரை ஆடம்பரமாக பூஜிக்க வேண்டுமென்று அவசியமில்லை. அன்பையும், ஒழுக்கத்தையும் மட்டுமே ஆண்டவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்.

திருமுருக கிருபானந்த வாரியார்

நன்றி: தினமலர், மதுரை, செப்டம்பர் 9, 2008 ("ஆன்மிகம் அறிவோமா")

இன்றைய சிந்தனைக்கு-18:

இயற்கை அளிக்கும் செல்வங்களை அளவோடு ஏற்று அனுபவியுங்கள். உங்கள் ஆசைக்கும் ஒரு வரையறையை வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் இயற்கை நம் வாழ்க்கை வளர்ச்சிக்கு ஒத்துழைக்கும். வாழ்க்கையை அனுபவிப்பதில் இனிய நேய உணர்வு இருத்தல் வேண்டும். வண்டு மலரில் தேனைப் பருகுவது போல, இயற்கையை மனிதன் மென்மையான உணர்வோடு அணுக வேண்டும்.
பகவான் ஸ்ரீ சத்யா சாய்பாபா

நன்றி: தினமலர், மதுரை, செப்டம்பர் 18, 2008 ("ஆன்மிகம் அறிவோமா")

18 செப்., 2008

கேள்வியும் பதிலும்-14:

1330 திருக்குறளையும் மனப்பாடம் செய்த 22 குழந்தைகளுக்கு முதல்வர் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை அறிவித்துள்ளது பற்றி? - ஏ.முத்துலெட்சுமி, பெத்தானியாபுரம்)
காமத்துப் பாலெல்லாம் குழந்தைகளுக்கு எதற்கு? கண்மூடித்தனமாக எதையும் செய்யும்போது அது அர்த்தமிழக்கிறது. பத்து குறள் படித்தாலும் அதன்படி வாழக் கற்றுத்தருவதுதான் சிறந்த கல்வி, உருப்போட்டு ஒப்பிப்பது அல்ல! - "நீங்கள் கேட்டவை" - பதில் - தராசு, கல்கி, ஜனவரி 16, 2000.
நன்றி: கல்கி, வார இதழ்.

இன்று ஒரு தகவல்-9: "சின்னமோன் டீல் புக்ஸ்"

www.cinnamontealbooks.com

புத்தகம் வெளியிட முடியாத எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை இந்த இணைய தளத்தில் வெளியிடலாம். படிக்கும் வாசகர்களுக்கு அந்த எழுத்துக்கள் பிடித்திருந்து புத்தகம் கேட்டால், உடனடியாக அச்சடிக்கப்பட்டு நன்றாக பைண்ட் செய்யப்பட்ட பிரதி அவர்களுக்கு அனுப்பப்படும். ஒரே ஒரு புத்தக ஆர்டர் என்றாலும் கூட ஏற்றுக்கொள்ளப்படும் என்பதுதான் விஷேசம். தொகுப்புப்பனிகள், பிழை திருத்தங்கள் போன்றவற்றுக்கு தேவைப்பட்டால் குறிப்பிட்ட தொகைக்கு ஏற்பாடு செய்கிறது. 'பிரின்ட் ஆன் டிமாண்ட்' என்ற இந்த ஆன்லைன் வெளியீட்டு வடிவம், வெளிநாடுகளில் பிரபலம்!

நன்றி: `விகடன் வரவேற்பறை', ஆனந்த விகடன்', நவம்பர் 28, 2007.

இன்றைய சிந்தனைக்கு-17:

வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திரும்பக் கட்டாமல் இருப்போர் பற்றிய விவரங்களைத் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தரத் தேவையில்லை என்று தகவல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இப்படி மக்கள் நலன் தொடர்பானவற்றுக்கெல்லாம் ஒவ்வொன்றாக விளக்கு அளித்துக்கொண்டே போனால், அப்புறம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் எதற்கு?
நன்றி: "ஒ பக்கங்கள்!" - ஞாநி, ஆனந்த விகடன், நவம்பர் 28, 2007.

11 செப்., 2008

நெல்லையப்பன் கவிதைகள்-21: "மரம்"

புவியீர்ப்பை எதிர்த்து,
வான் நோக்கி வளரும்
உன் தன்னம்பிக்கை பிடிக்கும்;
காற்றுடன் கலந்து நீ
நகைப்பது பிடிக்கும்;
எனக்கும் மழையில்
நனைவது பிடிக்கும்;
உனக்குப் பிடித்த
பச்சை நிறம்,
எழுத்தில் தவிர
மற்றெல்லாவற்றிலும்,
எனக்கும் பிடிக்கும்;
பூ, காய், கனி வழங்கும்
உன் அருட்கொடை பிடிக்கும்;
பூமிக்கு நீ பிடிக்கும்
நிழற்குடை பிடிக்கும்;
வெளியே வளர,
உள்ளேயும் வளர வேண்டும் -
எனும் உன் வேர்களின் பாடம்,
வேதமாய்ப் பிடிக்கும்;
கனமான கட்டை,
நீரில் மிதக்கும்,
தத்துவம் பிடிக்கும்;
காணாமல்போன காற்றுக்கு,
ஆடாமல், அசையாமல்,
நீ மௌனமாகிவிட ,
உன் சோகம்,

என்னைப் பிடிக்கும்;
கட்டிலாகி, தொட்டிலாகி,
வீடாகி, விறகாகி, வீணையாகி,
இன்னும்,
தூணாகி, துடுப்பாகி, தோணியாகி,
மலராகி, காயாகி, கனியுமாகி,
புத்தனுக்கு ஞானம் தந்த
போதியுமாகி,
யாதுமாகி நிற்கும்
என் சக்தி நீயே!
நீருக்கான உன் தாகம்,
என் ஞானத் தேடலுக்கு வேண்டும்;
மனிதநேயம் போற்ற,
உன் மலரின் மென்மை,
என் மனதிற்கு வேண்டும்;
சிறுமைகண்டு பொங்க,
உன் வைரம்பாய்ந்த வலிமை,
என் தேகத்திற்கு வேண்டும்;
மரமே இல்லாது போனால்,
மனிதகுலம் மரித்துப் போகும்;
நட்டு வைப்போம்,
மரத்தையும், மனித நேயத்தையும் -
மண்ணிலும், மனத்திலும்!

இன்று ஒரு தகவல்-8:

நலக்குறிப்புகள்-10: எதிருயிரி மருந்துகள் (ஆன்டிபயாடிக்ஸ்)

எதிருயிரி மருந்துகளை (ஆன்டிபயாடிக்ஸ்) உட்கொள்ளும்போது, பக்கவிளைவாக வயிற்றுப்போக்கு ஏற்படுவது ஏன்?
எதிருயிரி மருந்துகளை உட்கொள்ளும்போது வயிற்றுப்போக்கு ஏற்படுவது பொதுப்படையான பக்கவிளைவுதான். நோயை உண்டாக்கும் கிருமிகளுடன், குடலில் உள்ள நன்மை தரும் கிருமிகளும் வெளியேறுவதால் இந்த உபாதை ஏற்படலாம். இந்த கிருமிகள் மீண்டும் உற்பத்தி ஆக சில காலம் பிடிப்பதால், மருந்து சாப்பிடுவதை நிறுத்திய பிறகும் வயிற்றுப்போக்கு தொடர்ந்து ஏற்பட வாய்ப்பு உண்டு.

நன்றி: தினமலர், மதுரை, செப்டம்பர் 9, 2008.

இன்றைய சிந்தனைக்கு-16:

கீழே கொட்டிய கடுகைப் பொருக்கி எடுப்பது வெகு சிரமம். அதுபோல் பல திசைகளில் ஓடும் மனதை ஒருமைப் படுத்துவது எளிதன்று. ஆனால், வைராக்கியத்தால் அதை சாதிக்க முடியும். - ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.

ஆன்மீக சிந்தனை-11:

நாம் செய்த செயல்களின் விளைவு நம்மை வந்து சேரும். நல்வினையும், தீவினையும் வயலில் விதைத்த விதைபோல, பல மடங்கு பெருகி நம்மையே வந்தடையும். - சுவாமி சிவானந்தர், தெய்வீகநெறி வாழ்க்கைச் சங்கம், ரிஷிகேஷ்

ஹைகூ-3: "வளர்ச்சி" - உ.சிவன்

உரமிடாமலேயே
நல்ல வளர்ச்சி,
விலைவாசி!

நன்றி: உ.சிவன், வாகைக்குளம், தமிழன் எக்ஸ்பிரஸ் (மற்ற தகவல்கள் கிடைக்கவில்லை.)

எனக்குப் பிடித்த கவிதை-36: "எந்த மலர்?"

வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ?
வெள்ளைநிறப் பூவுமல்ல, வேறெந்த மாமலருமல்ல,
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது!

- சுவாமி விபுலானந்தர்

10 செப்., 2008

நெல்லையப்பன் கவிதைகள்-20: "லாரி ஓட்டுனர்"

நான்கு சக்கரங்களை
ஒரு சக்கரத்தால்
ஆட்டுவிக்கும்
சக்கரவர்த்தி!

இவர் வாழ்க்கை
இவர் கையில்!
மூலக்கதையறிய
நதிமூலம், ரிஷிமூலம்
தேவையில்லை,
தொழில் மூலம் வந்ததது!

செல்லும் இடமெல்லாம்
பெண்கள் கிடைத்தாலும்
மணம் முடிக்க ஒரு பெண்
கிடைப்பதரிது!

நியாமாகப் பார்த்தால்
இன்சூரன்ஸ் பிரிமியத்தை
இவருக்காகக் கட்டவேண்டியது
ரோடு கான்ட்ராக்டர்கள்தான்!

லோடு ஏற்றிக்கொண்டு
கிளியுடன் வலம் வருவார்;
உஷாராக இல்லையென்றால்
தெருவில் நிற்க வேண்டியதுதான்!

பின்னாலும், உள்ளேயும்
சரக்கேற்றுவார்;
தண்ணியால்
கஷ்டப்படுவார்!

டீயும், டீசலும்
உயிர்த் திரவங்கள்;
ஒரு திரவத்தில்
சம்பாதித்ததை
இன்னொரு திரவத்தில்
செலவிடுவார்.

மாமூல் வாழ்க்கை பாதிக்கும் -
ஏற்றவும், இறக்கவும்
சோதனைச்சாலை கடக்கவும்
மாமூல் வழங்காவிடில்.

எந்த ஊர் போனாலும்
ஊருக்கு வெளியேதான் உணவு;
ஹைவேயும், எச் ஐ வியும்
பிரிக்க முடியாதவை;
கண்டத்திலிருந்து தப்ப
காண்டம் வேண்டும்!

9 செப்., 2008

நலக்குறிப்புகள்-9: "வாதம்"

வாதம் என்பது சரியான உடல் உழைப்பு இல்லாமையாகும். உடல் உழைப்பே உடல் மன நோய்களைத் தீர்க்க வல்லது. மலம் சரிவரக் கழியாமையால், அதிலிருந்து ஏற்படும் அபான வாயு உள்ளே தங்கி, வாதம் ஏற்படும். வாதம் அதிகமானால் கை, கால் செயலிழப்பு ஏற்பட்டு, நடக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். ஆக வாத பித்த கபங்களைக் கட்டுப்பாட்டுடன் அளவாக வைத்துக் கொள்ளவேண்டும்.

நன்றி: "இயற்கை மருத்துவம்", தமிழ்நாடு இயற்கை மருத்துவ சங்கம், காந்தி நினைவு நிதி, மதுரை-625020.

பாரதிதாசன் கவிதைகள்-9: "தென்றலுக்கு நன்றி"

கமுகொடு நெடிய தென்னை
கமழ்கின்ற சந்தனங்கள்
சமைக்கின்ற பொதிகை அன்னை
உனைத் தந்தாள்; தமிழைத் தந்தாள்!
தமிழ் எனக் ககத்தும், தக்க
தென்றல் நீ புறத்தும் இன்பம்
அமைவுறச் செய்வதை நான்
கனவிலும் மறவேன் அன்றோ?

பட்டுக்கோட்டை பாடல்-6: "உன்னை நினைக்கையிலே.."

உன்னை நினைக்கையிலே கண்ணே
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி (உன்னை)

பொன்னை உருக்கிய வார்ப்படமே - அன்பு
பொங்கிடும் காதல் தேன்குடமே!
தனந்தனியாக நாளைக் கழிப்பது
சங்கடமன்ரோ தமிழ்ச் சுடரே!
சந்தனக் காட்டுப் புதுமலரே! (உன்னை)

வட்டக்கருவிழி மங்கையே - ஒளி
கொட்டும் நிலவுக்குத் தங்கையே!
கட்டுக்குலையாத பட்டுத் தளிர்மேனி
கண்ணில் அபத்தியம் காட்டுதே - இன்பக்
காவியத் தேனள்ளி ஊட்டுதே (உன்னை)

பாரதி கவிதைகள்-9:

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல
மாதரறிவைக் கெடுத்தார்
கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்திக்
காட்சி கெடுத்திடலாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் - வையகம்
பேதமை யற்றிடுங் காணீர்.

(பாரதியின் முரசுப் பாடலிலிருந்து ஒரு சிறு பகுதி)

நெல்லையப்பன் கவிதைகள்-19: "காத்திருக்கும் விதை நெல்"

மறுஜென்ம நம்பிக்கையுடனும்,
மண்சேரும் ஆசையுடனும்,
வயதுக்கு வந்தபின்னும்
மணமாகாக் கன்னியராய்
விதைநெல் காத்திருக்கிறது.

மண்ணும், நெல்லும்
மனிதனும், கலப்பையும்,
தயார் என்றாலும்,
நிகழவில்லை கலப்பு மணம்.

சீர் வேண்டுமாம்
நிறைய நீர் வேண்டுமாம்:
கண்களில் இருந்தென்றால்
கொடுத்து விடலாம்.

ஆனால்
கரையில் வரவேண்டுமாம்,
காவிரி
கரைஉடைக்க வேண்டுமாம்.

காவிரியில் எப்படி நீர் வரும்?
மொழி வழிமறிக்குமே!
மனம் வைக்கவேண்டுமே
மதகு திறக்க!!

கேட்பவன் மொழி ஒன்றாகவும்,
மதகு திறப்பவன் மொழி
வேறாகவும் இருக்க,
நிகழவில்லை அங்கே
புரிந்து கொள்ளுதல்.

காத்திருக்கிறது விதை நெல்;
மழை பொழிய வேண்டும்,
அல்லது
கர்நாடக மக்கள்
கருணை மழை பொழிய வேண்டும்.

எனக்குப் பிடித்த கவிதை-35: "நிலவைப் பிடித்து..."

நிலவைப் பிடித்துச் - சில
கரைகள் துடைத்துக் - குறு
முறுவல் பதித்த முகம்.
நினைவைப் பதித்து - மன
அலைகள் நிறைத்துச் - சிறு
நளினம் தெளித்த விழி.
தரள மிடைந்து - ஒளி
தவழக் குடைந்து - இரு
பவளம் பதித்த இதழ்.
முகிலைப் பிடித்துச் - சிறு
நெளிவைக் கடைந்து - இரு
செவியில் திரிந்த குழல்.
அமுதம் கடைந்து - சுவை
அளவிற் கலந்து - மதன்
நுகரப் படைத்த எழில்.

நன்றி: "குறிஞ்சி மலர்", நா.பார்த்தசாரதி

கேள்வியும் பதிலும்-14: "வெற்றி பெறத் தேவையானது!"

வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவையானது முயற்சியா? திறமையா? அதிருஷ்டமா? - எஸ்.ஜெயகாந்தன், பு.புளியம்பட்டி.

இருப்பது அதிருஷ்டம். இருப்பதைக் கண்டுபிடிப்பது திறமை. எடுத்துப் பயன்படுத்துவது முயற்சி. எனவே வாழ்க்கையில் வெற்றிபெற இவை மூன்றுமே தேவைதான். - தென்கச்சி கோ.சுவாமிநாதன்

நன்றி: மஞ்சரி, தமிழ் டைஜஸ்ட், ஜனவரி ௨00௨ (("நேயர் கேள்விகள் - தென்கச்சி பதில்கள்")

சாதனை-3: "நீதிச்சாமி"

சேவைச்சாமி இந்த ராமசாமி! உதவும் கைகளே கோயில், எதிர்பார்ப்பு இல்லா இதயமே தெய்வம் என்பதற்கு ராமசாமி நடமாடும் உதாரணம். சென்னை சாலைகள் நீள அகலங்கள் இவருக்கு அத்துபடி. தினம் தினம் எந்த லாபமும் பாராமல் அவராகவே ஏதேனும் சாலையில் வந்து நின்று டிராஃபிக்கைச் சரி செய்வதால் இவருக்குப் பெயரே டிராஃபிக் ராமசாமி. பொதுநல வழக்குகள் போடுவதில் புலி. சட்ட விதிமுறைகளை மீறி சென்னையில் காட்டப்படும் கட்டடங்களை வழக்குத் தொடுத்து இடித்துக் காட்டியவர். கண்முன் என்ன தவறு நடந்தாலும் பயப்படாமல் துணிந்து நீதிமன்றம் ஏறும் இவர் வக்கீல் வைக்காமல் தானே வாதாடிக் கொள்வார். அப்படி இவர் கோர்ட் ஏறி கொண்டுவந்த வெற்றிகள் பல. எந்த சன்மானமும் வாங்காது, சமூகப் பணிகளை தொடர்ந்து வருகிற ராமசாமி, நாம் படிக்க வேண்டிய பல்கலைக்கழகம்!

நன்றி: ஆனந்த விகடன், டிசம்பர் 27, 2006, வெல்கம் 2007 சிறப்பிதழ்.

6 செப்., 2008

"ரேஷன் கார்டு" - சுஜாதா

அதன் பாட்டுக்கு சமர்த்தாக இருந்த ரேஷன் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று கார்ப்பரேஷன் அதிகாரி வந்து சொல்லிவிட்டுப் போனார். ரேஷன் கார்டு ஒரு முக்கிய ஆவணம். பாஸ்போர்ட்டுக்கு அடுத்தபடியாக உங்கள் இருப்பை நிரூபிக்கக் கூடியது.

சாய்பாபா கோயில் அருகே ஜனசந்தடியின் மத்தியில் மாடியில் இருந்தது அலுவலகம். எனக்கு அத்தனை மாடி ஏறமுடியாது என்று நாகராஜை அனுப்பி வைத்தேன். சற்று நேரத்தில் அவன் ஒரு அலுவலருடன் திரும்பி வந்தான். "பழைய கார்ட ஜெராக்ஸ் பண்ணி வெச்சுக்கங்க. இந்த பாரத்தை நிரப்புங்க. ஒரு போட்டோ ஒட்டிக் கொடுங்க" என்றார்.

நான், 'நண்பா, நன்றி' என்றேன்.
'பத்து ரூபா கொடுங்க.'
'எதுக்கப்பா?'
'பாரத்துக்கு. இதை கொடுத்து டோக்கன் வாங்கறதுக்கு தனியா சார்ஜ் பண்ணுவேன்' என்றார்.
'ஏம்பா, இந்த பாரம் ப்ரீ இல்லையா?' என்று சொல்லிவிட்டு பத்து ரூபாய் கொடுத்தேன்.
அவர் என்னை ஏற இறங்கப் பார்த்து, 'கார்ல வந்துருக்கே, பத்து ரூபாய் குடுக்கமாட்டியா?' ஏம்பா டிரைவர், இது பத்து ரூபாதானே பாத்துக்க' என்று சொல்லிவிட்டு, முகத்தை சுருக்கிக்கொண்டு சென்றார். லஞ்சம் வாங்குவது மட்டுமின்றித் திட்டிவிட்டு வாங்கும் சிப்பந்தி. அவர் கார்ப்பரேஷன் அலுவலரா என்பதே எனக்குச் சந்தேகமாக இருந்தது.

ஒரு சிறிய அரசாங்க அலுவலகத்தில் உள்ள சம்பாத்திய சாத்தியங்களை யோசியுங்கள். இலவசமாகக் கொடுக்கவேண்டிய விண்ணப்பங்களை ஒரு ஆள் கவர்ந்துகொண்டு, ஒவ்வொன்றுக்கும் பத்து ரூபாய் என்று ஒரு நாளைக்கு நூறு பாரமாவது விநியோகிப்பார். இதில் நிச்சயம் சிப்பந்திகளுக்குப் பங்கு இருக்க வேண்டும். இவர்களுக்கெல்லாம் சம்பளம் கூடத் தேவையில்லை.

இந்த சதியை எதிர்த்து 'படிவம் இலவசம்தான். பணம் கொடுக்க மாட்டேன்' என்று பிடிவாதம் செய்யலாம். என்ன ஆகும்?

'உங்களுக்கு பாரம்தான வேணும்? நேரா கார்ப்பரேஷன் ஆபீஸ் போங்க. அங்க ரிப்பன் பில்டிங் பின்பக்கத்தில் காலைல பத்து மணியிலிருந்து பத்தேகால் வரைக்கும் தருவாங்க. போயி வாங்கிக்கங்க இலவசமா.'

'அதற்கு போக வர ஆட்டோ சார்ஜ் மட்டும் அம்பது ரூபா ஆகுமேப்பா?'

'பஸ்ல போங்க. 23G ல போய்டுங்க.'

அவன் சொல்லும் பஸ் திருவான்மியூரில் இறக்கிவிட்டாலும் ஆச்சரியமில்லை. நான் சொல்லவருவது இதுதான். நேர் வழிகள் அத்தனையையும் கடுமையாக்கி வைத்திருக்கிறார்கள். லஞ்சத்தை எதிர்ப்பதற்கு அசாத்தியப் பொறுமை வேண்டும்.

நன்றி: 'சுஜாதாவின் எண்ணங்கள்', தினகரன் தீபாவளி மலர் 2007.

5 செப்., 2008

பாரதி கவிதைகள்-7: "ஆத்ம ஜெயம்"

கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ? - அட,
மண்ணில் தெரியுது வானம், அது நம்
வசப்பட லாகாதோ?
எண்ணி யெண்ணிப்பல நாளு முயன்றிங்
கிறுதியிற் சோர்வோமோ? - அட,
விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்
மேவு பராசக்தியே.

என்ன வரங்கள், பெருமைகள், வெற்றிகள்,
எத்தனை மேன்மைகளோ -
தன்னை வென்றால் அவை யாவும் பெறுவது
சத்தியமாகும் என்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள்
முற்றும் உணர்ந்த பின்னும்
தன்னை வென்றாலும் திறமை பெறாது இங்குத்
தாழ்வுற்று நிற்போமோ?

பாரதிதாசன் கவிதைகள்-6: "ஒத்துண்ணல்"

இட்டதோர் தாமரைப்பூ
இதழ் விரித்திருத்தல் போலே
வட்டமாய் புறாக்கள் கூடி
இரையுண்ணும்; அவற்றின் வாழ்வில்
வெட்டில்லை; குத்துமில்லை;
வேறுவேறு இருந்து அருந்தும்
கட்டில்லை; கீழ்மேல் என்னும்
கண்மூடி வழக்கம் இல்லை!

நெல்லையப்பன் கவிதைகள்-18: "மதம்"

அரிசிக்கு கல்லு
பாலுக்கு தண்ணி
சர்க்கரைக்கு ரவை
டீக்கு இலவம் பிஞ்சு

தேனுக்கு சர்க்கரைப்பாகு
காப்பிக்கு புளியங்கொட்டை
மிளகாய்ப்பொடிக்கு செங்கல்
சாம்பார்பொடிக்கு மஞ்சள்

முடிக்கு சவுரி
உதட்டுக்கு சாயம்
புருவத்திற்கு மை
மீசைக்கு "டை"

இசைக்கு இரைச்சல்
சீரியலுக்கு அழுகை
சினிமாவிற்கு ஆபாசம்
காதலுக்கு காமம்

காரருக்கு கரும்புகை
நதிக்கு ஆலைக்கழிவு
நடிப்புக்கு இமிடேஷன்

அரசியலுக்கு வாரிசு
தேர்தலுக்கு ஜாதி
மாணவனுக்கு அரசியல்
மனிதனுக்கு மதம்.

2 செப்., 2008

"அழைப்பது யார்?"

"வாஹனம் ஓட்டும்போது மொபைலைப் பயன்படுத்த வேண்டாம். அழைப்பது யமனாகக்கூட இருக்கலாம்." - போக்குவரத்து போலீஸ் விளம்பரம்.