30 டிச., 2008

இன்றைய சிந்தனைக்கு-36:

வாழ்வில் ஒரு துறையில் தவறான முறையில் நடந்துகொள்ளும் ஒருவன், இன்னொரு துறையில் சரியானமுறையில் செயல்பட முடியாது. வாழ்க்கை என்பது பிரிக்க முடியாத ஒரு முழுப்பொருள். - மஹாத்மா காந்தி

இன்று ஒரு தகவல்-17:

அரசியல்வாதிகளின் பாதுகாப்புப் படைகளுக்காக ஆண்டுதோறும் 250 கோடி ரூபாய்க்குமேல் செலவிடப்படுகிறது.
"தமிழ் ஓசை" நாளிதழில் 'சதுரன்' கட்டுரையிலிருந்து.
நன்றி: தமிழ் ஓசை.

என்ன நடக்கிறது?-8: "பெரும்பாலான பள்ளிகளில் தலைமை ஆசிரியரே இல்லை!"

நாடு முழுவதும் பள்ளிகள் செயல்பாடு குறித்த ஆய்வு சமீபத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, அருணாச்சலப் பிரதேசம், சட்டீஸ்கார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆரம்பப் பள்ளிகளில் மூன்றில் இரண்டு பங்கு தலைமை ஆசிரியர் இல்லாமலேயே செயல்படுகின்றன. மகராஷ்ட்ரா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் 65% பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை. ஏழு மாநிலங்களில் 70% பள்ளிகளில் கழிப்பிட வசதிகள் இல்லை. பத்து மாநிலங்களில் 20% ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்கள் குடிநீர் வசதி இல்லாது அவதிப்படுகின்றனர். அருணாச்சலப் பிரதேசத்தில் 90% அதிகமான ஆரம்பப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை. 78% பள்ளிகளில் கழிப்பிட வசதிகள் இல்லை.
தினகரன் (மதுரைப் பதிப்பு), டிசம்பர் 27, 2008 இதழில் வெளியான செய்தியில் ஒரு பகுதி.
நன்றி: தினகரன்.

சாதனை-5: "மேலாண்மை பொன்னுசாமிக்கு சாகித்ய அகதமி விருது!"

பிரபல சிறுகதை எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமிக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்படவிருக்கிறது. இலக்கிய படைப்புகளுக்கான மிக உயர்ந்த இந்த விருது, அவருடைய "மின்சாரப்பூ" என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக வழங்கப்படுகிறது.

பத்து வயதில் தந்தையை இழந்து, குடும்பப் பொறுப்பை ஏற்கவேண்டியதாலும், வறுமையினாலும் ஐந்தாம் வகுப்பிற்குமேல் படிக்க முடியாமல் போனது. ஆனாலும் தன்முயற்சியால் படிப்பதை நிறுத்தவில்லை. குறிப்பாக இலக்கிய நூல்களைத் தேடிப்படித்தார். கிராமத்தில் ஒரு சிறிய மளிகைக்கடை நடத்திவரும் இவர், இதுவரை முப்பத்தாறு நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் இருபத்திஇரண்டு சிறுகதைத் தொகுப்புகள்.

காரைக்குடி புத்தகத் திருவிழாவிற்கு எமது அழைப்பை ஏற்று வந்து வாசகர்களுடன் உரையாடி, சிறப்புரையாற்றி அவரது எளிமையாலும், தெளிவான சிந்தனையாலும் அனைவரையும் கவர்ந்தார் என்பதை நினைக்கையில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தன்னம்பிக்கையாலும், தளராத ஆர்வத்தாலும், விடா முயற்சியாலும் வெற்றிகண்ட இச்சாதனையாளருக்கு நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

நலக்குறிப்புகள்-27: "சாளவாய்"

உறங்கும்போது சாளவாய் நீர் வடிவதற்குக் காரணம் உண்ட உணவு சரியாக ஜீரணமாகாததுதான். இரவில் எளிதில் ஜீரணமாகும் உணவை உண்ண வேண்டும். அடுத்து சாப்பிட்டவுடன் படுக்கக் கூடாது. உண்டபின் இரண்டு மணி நேரம் கழித்து உறங்கச் செல்வது நல்லது. குறைந்த பட்சம் ஒரு மணி நேர இடைவெளியாவது இருக்கவேண்டும்.

பாரதி கவிதைகள்-12:

மேன்மைப் படுவாய் மனமே! கேள்
விண்ணின் இடி முன் விழுந்தாலும்
பான்மை தவறி நடுங்காதே
பயத்தால் ஏதும் பயனில்லை;
யான் முன் உரைத்தேன் கோடிமுறை,
இன்னுங் கோடி முறை சொல்வேன்,
ஆன்மாவான கணபதியின்
அருளுண்டு அச்சம் இல்லையே.

27 டிச., 2008

கேள்வியும் பதிலும்-26: "கவிஞன் யார்?" "எது கவிதை?"

கேட்டேன் என்பவன் சமூக மருத்துவன். பலநேரங்களில் யதார்த்தம் முன் கற்பனை உலகிலேயே வாழும் கோமாளியாகவும் வாழ்ந்து மறைந்து போகிறான். பார்த்ததைப் புதிதாய்ப் பார்ப்பவன் பாவலன். பார்த்ததை மீண்டும் பார்ப்பவன் பாமரன். கவிஞன் என்பவன் தலைசிறந்த ரசிகனாகவும் இருக்கிறான். அதேபோல் கவிதையில் புதுக்கவிதை, மரபுக்கவிதை என்ற பேதமில்லை. கவிதைகளுக்கு வார்த்தைகளே தேவையில்லை. வாசிக்கும் முன்பே புரிந்துவிடக்கூடியதுதான் கவிதை. எளிமைதான் அதன் ஆகச் சிறந்த இயல்பு. இந்த இடத்தில் எனது கவிதை ஒன்றினைப் பகிர ஆசைப்படுகிறேன்:

மொழியின்முன் மண்டியிட்டு
வார்த்தை வரம் கேட்டேன்.
அரசியல்வாதிகள் வந்து
அள்ளிக்கொண்டு
போய்விட்டார்கள்.
கட்டுரையாளர்கள் சிலர்
கேட்டு வாங்கிப்போனார்கள்.
மீதமிருந்ததை பேசவும் ஏசவும்
மனைவியர் வாங்கிப்
போனார்கள்.
தாமதமாக வந்து நிற்கிறாயே,
தமிழ்க் கவிஞனே என்று
மொழி மிகவும் வருந்தியது.
வேறு வழியின்றி வெற்றுக்
காகிதத்தை மடித்து
வழியில் என் காதலியிடம் தந்தேன்.
வாங்க மறுத்த அவள்,
நீ என்ன எழுதியிருப்பாயென
எனக்குத் தெரியுமென்றாள்.
வார்த்தைகளே இல்லாத
கவிதையை
வாசிக்காமலேயே அவள்
புரிந்துகொண்ட பிறகுதான் தெரிந்தது,
கவிதைக்கு வார்த்தைகள்
அவசியமில்லையென்று.

- "ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் நேர்காணலிலிருந்து ஒரு பகுதி"
"இனிய உதயம்", மாத இதழ், நக்கீரன் வெளியீடு, டிசம்பர் 2008.

நன்றி: திரு எஸ்.இராதாகிருஷ்ணன் & "இனிய உதயம்"

22 டிச., 2008

என்ன நடக்கிறது?-7: "அரிசி ஒரு ரூபாய், சிறுநீர் கழிக்க இரண்டு ரூபாய்!"

தினமலர் வார இதழில் ஒரு வாசகர் தமது உள்ளக்குமுறலை ஒரு கடிதத்தின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார். தமிழ் நாட்டில் பல பேருந்து நிலையங்களில் சிறுநீர் கழிக்க வசூலிக்கப்படும் கட்டணம் இரண்டு ரூபாய். ஆனால் அந்த கழிப்பிடங்களுக்குள் நுழைந்து, புதிதாக ஏதாவது நோய் கொள்முதல் செய்யாமல் வருபவர்கள் அதிர்ஷ்டசாலிகள். வெளிச்சம் கிடையாது, பராமரிப்பு கிடையாது, சமயத்தில் தண்ணீரும் இருக்காது. மூக்கைக் கையில் பிடித்தபடியேதான் உள்ளே செல்லவேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் இரண்டு ரூபாயா என்பதே சந்தேகமாக இருக்கிறது. அரசியல்வாதிகள் பினாமிகள் மூலமாக ஒப்பந்தம் பெற்று, பணம் குவிப்பதிலேயே குறியாக இருப்பதால் பராமரிப்புச் செலவு செய்யப்படுவதில்லை. யாராவது ஏதாவது கேட்டால் அடி, உதைதான். முதலில் கழிப்பிடங்கள் பணம் சம்பாதிப்பதற்காகக் கட்டப்பட்டுள்ளனவா அல்லது மக்களின் ஆரோக்கியத்திற்காக சேவை நோக்கில் கட்டப்பட்டிருக்கின்றனவா என்பது தெளிவாக வேண்டும். சேவை நோக்கம் என்பது உண்மையானால் கழிப்பிடங்களை தொண்டு நிறுவனங்களோ அல்லது பராமரிப்புச் செலவு அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் பெரிய தொழில் நிறுவனங்களோ நிர்வகிக்க வேண்டும். நடக்குமா?

கடிதம்-7: "குற்றப் பின்னணி"

சமீபத்தில் நடந்து முடிந்துள்ள ஐந்து மாநில தேர்தல்களில் வெற்றிபெற்ற வேட்பாளர்களின் விபரங்களை தேசிய தேர்தல் கண்காணிப்புக் குழு ஆராய்ந்துள்ளது. அதன்படி குற்றப் பின்னணி கொண்டவர்களில் 125 பேர்கள் வெற்றிபெற்றுள்ள சேதி மிகுந்த கவலை தருகிறது. இவர்களுக்கு இனி எம்.எல்.ஏ. என்ற அதிகாரமும் கிடைக்கும்போது, நிலை என்னவாகும் என சொல்லவே தேவையில்லை. குற்றப் பின்னணி உள்ளவர்கள் யாராக இருந்தாலும் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும். தேர்தல் கமிஷன் இந்த விஷயத்தில் தீவிர கட்டுப்பாடுகளை கொண்டுவரவேண்டும். - வி.எஸ்.கிருபானந்தம், கும்பகோணம்.
தகவல்: தினகரன், மதுரை, டிசம்பர் 19, 2008. ("கடிதங்கள்").

இன்றைய சிந்தனைக்கு-35: "கடன் அட்டைகள், ஒரு எச்சரிக்கை!"

அமெரிக்காவின் மக்கள் தொகை முப்பது கோடி. அங்கு புழக்கத்தில் உள்ள கிரெடிட் கார்டுகள் எனப்படும் கடன் அட்டைகளின் எண்ணிக்கையோ நூற்றுஇருபது கோடி! அதாவது, சராசரியாக ஒவ்வொரு அமெரிக்கரும் நான்கு கடன் அட்டைகள் வைத்துள்ளனர். அமெரிக்கக் குடும்பங்களின் சேமிப்பு 1980-களில் எண்பது சதவிகிதமாகவும், 1990-களில் எழுபத்துஒன்று சதவிகிதமாகவும், 2000-ல் நாற்பத்துஒன்பது சதவிகிதமாகவும், 2005-ல் சேமிப்பிற்குப் பதிலாக கடன் சுமையும் ஆக மாறிவிட்டது. 2006-ல் சேமிப்பு மைனஸ் இருபத்தி இரண்டு சதவிகிதமாக மாறிவிட்டது. இந்தியர்கள் அனைவருக்கும் இது ஒரு பாடம். இப்போதே நாம் விழித்துக் கொள்ளாவிடில், நமக்கும் இதே நிலைமைதான்.
ஆதாரம்: தினமலர், மதுரை, டிசம்பர் 19, 2008. ("தகவல் சுரங்கம்").
நன்றி: தினமலர்.

15 டிச., 2008

இன்று ஒரு தகவல்-16:

மருத்துவத் துறையில் அதிவேகமாக வளர்ந்து வரும் ஒரு உப துறை, 'சத்துமருந்தியல் துறை' (Neutraceuticals). ஆரோக்கியத்தை தக்கவைத்துக்கொள்ள உணவுடன் கூடுதலாக எடுத்துக் கொள்ளப்படும் டயட்டரி சப்ளிமென்ட்ஸ் (Dietary Supplements), ஃபங்ஷனல் புட்ஸ் (Functional Foods), வைட்டமின்கள் மற்றும் மூலிகைப் பொருட்கள் (Vitamins and Herbal Products) ஆகியவற்றை உள்ளடக்கியது இத்துறை. உலக அளவில் ஆண்டிற்கு ரூபாய் 4.8 லட்சம் கோடி அளவிற்கு இத்துறையில் வர்த்தகம் நடக்கிறது! இந்தியாவில் மட்டும் ரூபாய் 1900 கோடி அளவிற்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி: தினமலர், மதுரை, அக்டோபர் 9, 2008.

கருத்துக்கள்-12: "லஞ்சம், இலவசம், அன்பளிப்பு, சலுகை!"

இன்று நாடெங்கும் செழித்து வளர்ந்த்திருக்கும் லஞ்சம், ஊழல் ஆகியவற்றின் ஆணிவேரை தேடிச்சென்றால் அதன் உண்மை நமக்கு கசக்கத்தான் செய்யும். லஞ்சம், இலவசம், தள்ளுபடி, அன்பளிப்பு மற்றும் சலுகை - அப்பப்பா, இதற்கு எத்தனை ரூபம்? காரணம் நமது சமுதாயமும் அரசும்தான். சிறுவயதிலேயே நிறைய இலவசங்களும், சலுகைகளும் வாங்கிப்பழகிவிட்ட பிறகு, அதை விடமுடியாமல் முக்கிய பொறுப்புக்கு வந்தபிறகும் 'அன்பளிப்பு' என்ற பெயரில் தொடர்கிறார்கள். இலவசமாக எது கிடைத்தாலும் நாம் கௌரவக் குறைச்சலாக, பிச்சையாகக் கருதினால் மட்டுமே நம் நாடு முன்னேறும். - ஷே.குலாப்ஜான், திருப்பத்தூர்.
நன்றி: திரு ஷே.குலாப்ஜான் & தினகரன், மதுரை. (டிசம்பர் ௧௧. ௨00௮ - "கடிதங்கள்")

என்ன நடக்கிறது?-6: "கட்டிடத் தொழிலாளர்களுக்காக வசூலித்த 940 கோடி ரூபாய் எங்கே?"

கட்டிடத் தொழிலாளர்களுக்கான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்த, கட்டுமானத் தொழிலில் உள்ள 'பில்டர்களிடம்' இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை தீர்வையாக மாநில அரசுகள் வசூலிக்கின்றன. 1996-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கட்டிடத் தொழிலாளர்கள் நலச்சட்டத்தின் கீழ் இந்த தீர்வை வசூலிக்கப்படுகிறது. ஆனால், இந்தத் தொகை சரிவர வசூலிக்கப்படுவதும் இல்லை, தொழிலாளர் நலனுக்காகச் செல்விடப்படுவதும் இல்லை. சில மாநிலங்களே வசூலித்து, அந்தத் தொகையில் மிகச்சிறிய அளவில் செலவழிக்கின்றன என்று தன்னார்வ தொண்டு அமைப்பு ஒன்று, சுப்ரீம் கோர்ட்டில் பொது நலன் வழக்கு பதிவு செய்தது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், நீதிபதி சதாசிவம் மிகவும் வேதனை அடைந்தனர். அவர்கள் கூறுகையில், திட்டங்களை அமல்படுத்தவேண்டிய மாநில அரசுகள் இந்த விஷயத்தில் அசட்டையாக இருந்துள்ளது வேதனை தருகிறது. இது தொடர்பான பதில் அறிக்கையை நான்கு வாரத்துக்குள் மாநில அரசுகள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளனர். இது தொடர்பாக மனுதாரர் சார்பில் ஆஜரான சுப்ரீம் கோர்ட் சீனியர் வக்கீல் காலின் கொன்சால்வஸ் தெரிவித்தாவது: "இந்தியாவின் தலைநகரமான டில்லி மாநிலத்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக ஏகப்பட்ட கட்டுமான திட்டங்கள் நடந்துவருகின்றன. மேலும், பலமாடிக் குடியிருப்பு, வர்த்தக கட்டிடங்கள் கட்டும் பணிகளும் நடக்கின்றன. இதற்காக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் அமர்த்தப்பட்டு வருகின்றனர். ஆனால் டில்லி அரசு, இதுவரை வசூலித்த 140 கோடியில் ஒரு பைசா கூட, கட்டிடத்தொழிலாலர்களுக்குச் செலவழிக்கவில்லை. மத்தியப் பிரதேச மாநில அரசு 174 கோடி ரூபாய் வசூலித்துள்ளது; அதில் ஒன்பது கோடி ரூபாய் மதிப்புக்கு மட்டுமே திட்டங்களைத் தீட்டி அமல் படுத்தியுள்ளது. மேற்கு வங்க அரசு இதுவரை இரண்டரைக் கோடி மட்டுமே வசூல் செய்து, அதில் வெறும் இரண்டு லட்ச ரூபாய் அளவிற்கு மட்டுமே தொழிலாளர்களுக்காகச் செலவழித்துள்ளது. தமிழகம் 246 கோடி வசூலித்துள்ளது. குஜராத் 91 கோடி வசூலித்துள்ளது.
தகவல்: தினமலர், மதுரை, டிசம்பர் 9, 2008.
நன்றி: தினமலர்.

கடிதம்-6:

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட ஊசி, சிரிஞ்சுகளை மீண்டும் பயன்படுத்துவதால் பரவும் இரத்த சம்மந்தமான தொற்று நோய்களால் ஆண்டிற்கு மூன்று லட்சம் பேர் இறக்கின்றனர் என்ற செய்தியைப் படித்து அதிர்ச்சியடைந்தேன். இதை இப்படியே அலட்சியமாக விடக்கூடாது. மத்திய, மாநில அரசுகள் முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். மேலும் பாதுகாப்பான ஊசியை மருத்துவர்கள் பயன்படுத்தும் வகையில் பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுவது அவசியம். - இ.தாமோதரன், சங்கராபுரம்.
நன்றி: திரு இ.தாமோதரன் & தினகரன், தமிழ் நாளிதழ், (மதுரைப் பதிப்பு) ("கடிதங்கள்" பகுதி)

கேள்வியும் பதிலும்-25:

வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கிறேன். எந்த சாமியைக் கும்பிட்டால் வாழ்க்கையில் முன்னேறலாம்? (கா.வீரபாபு, பூண்டி)
மூன்று சாமிகளைக் கும்பிடவேண்டும். அவை, தன்னம்பிக்கை சாமி, தைரியசாமி, தளராமுயற்சி சாமி! (அந்துமணி பதில்)

நன்றி: தினமலர், வாரமலர், டிசம்பர் ௧௪, ௨00௮ ("அந்துமணி பதில்கள்")

நலக்குறிப்புகள்-26: உப்பு

உணவில் உப்பு அளவுக்கு அதிகமாகச் சேர்த்தால் கழிவு உறுப்புக்களின் வேலை அதிகமாகும். இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

இன்றைய சிந்தனைக்கு-34:

உழைக்க மறுக்கும் மனிதனை தோல்வி மட்டுமல்ல - நோயும் தழுவும்.

4 டிச., 2008

கடிதம்-5:"துப்பாக்கி முனையில் தேர்தல்!"

துப்பாக்கி முனையில் தேர்தல் நடத்தவேண்டிய நிலைமை வேதனை அளிப்பதாக தலைமை தேர்தல் கமிஷனர் கோபாலசுவாமி தெரிவித்துள்ளார். சட்டீஸ்கரில் தேர்தலைத் தடுக்க பல சாலைகளில் நக்சலைட்டுகள் தடை ஏற்படுத்தினர். அதனால், ஹெலிகாப்டர், சிறு விமானங்களில் வாக்குச்சாவடிக்கான பொருட்களைக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. இதுபோல, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எங்கும் வன்முறை, எதற்கெடுத்தாலும் வன்முறை, போராட்டம். தீவிரவாதத்திற்கு அஞ்சியே மக்கள் வாழவேண்டியுள்ளது. இது என்ன ஜனநாயக நாடா? - வா.ரா.சண்முகம், திருப்பத்தூர்.
தகவல்: தினகரன் நாளிதழ், மதுரை, டிசம்பர் 2, 2008.
நன்றி: திரு சண்முகம் & தினகரன்.

இன்றைய சிந்தனைக்கு-33:

தர்மத்திற்கு என்றும் அழிவில்லை. மண், வின், கடல், சூரியன், சந்திரன் முதலிய இயற்கை அனைத்தும் ஒரு நாள் அழிந்து போகும். ஆனால் செய்த தர்மம் என்றும் அழியாது நிற்கும். - திருமுருக கிருபானந்த வாரியார்.

என்ன நடக்கிறது?-5: "தரக்குறைவான நிலக்கரி இறக்குமதி"

நவம்பர் 16, 2008 தினகரன் நாளிதழ் மதுரைப் பதிப்பில் இந்த செய்தி வெளியாகி உள்ளது: ("பீட்டர் மாமா: தாத்தா வீட்டுக் கல்யாணம்") நிலக்கரி இறக்குமதி செய்ததில் தமிழக மின்துறை சிக்கலில் மாட்டியுள்ளதாக ஹேஷ்யம் வெளியாகியிருக்கிறது. டன் 143 டாலர் விலையில் 45000 டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதாம். சென்னைத் துறைமுகம் வந்தபிறகுதான் தெரிய வந்ததாம், அக்கரி அனல்மின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் கரியே இல்லை என்பது. சீக்கிரம் சாம்பலாகக் கூடிய, சாதாரணக் கரிதான் வந்துள்ளது. அதனால் அதைத் துறைமுகத்திலே கிடக்க விட்டுள்ளார்கள். இந்த இறக்குமதியிலும் ஊழல் இருப்பதாக சிலர் வழக்குத் தொடரத் தயாராக இருக்கிறார்களாம்.
நன்றி: தினகரன்

நலக்குறிப்புகள்-25: "வாழைப்பூ"

வாழைப்பூவை பொடியாக நறுக்கி, அத்துடன் முருங்கைக்கீரை சேர்த்து வதக்கி, அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குடற்புண் குணமாகிவிடும். - தகவல்: சி.ராஜலட்சுமி, மேட்டுப்பட்டி தாதனூர்.
நன்றி: திருமதி சி.ராஜலட்சுமி & பெண்மணி டிசம்பர் 2008 இதழ்.

இன்று ஒரு தகவல்-14: "மதுரையில் யுவான் சுவாங்"

சீனப்பயணி யுவான் சுவாங் பற்றி வரலாற்றுப் புத்தகத்தில் வாசித்திருப்போம். சீனாவில் கி.பி.600-ல் பிறந்த இவர், தன் இருபதாம் வயதில் புத்த பிட்சுவானார். அங்கிருந்த சீனத்து புத்தமத புத்தகங்களில் திருப்தியடையாத அவர், அந்நாட்டு மன்னர் டைட்சங்கின் எதிர்ப்பையும் மீறி, புத்தர் பிறந்த பூமியான இந்தியாவிற்கு கிபி 629-ல் வந்தார். காஷ்மீரத்தில் கிபி 632 வரையிலும், கன்னோசியில் கிபி 636 வரையிலும், நாலந்தாவில் கிபி 637 வரையிலும், ஆந்திராவில் கிபி 639 வரையிலும், கிபி 640-ல் காஞ்சியிலும், கிபி 641-ல் மஹாராஷ்ட்ராவிலும், மீண்டும் 642 முதல் 643 வரை நாலந்தாவில் ஹர்ஷருடனும் இருந்தார்.

யுவான் சுவாங் தென்னாட்டில் காஞ்சி மாநகர் வந்தபோது நரசிம்ம வர்மன் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. பின்னர் திருவதிகை வழியாக யுவான் சுவாங் மதுரைக்கு வந்தார். மதுரையில் சடைய வர்மன் செழியன் சேந்தன் இறந்து, அவரது மகன் சீர் நின்ற நெடுமாறன் முடிசூடும் தருணத்தில்தான் யுவான் சுவாங் வந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. சீனப்பயணி யுவான் சுவாங்கை தேடி வர வைத்திருப்பதிலிருந்து மதுரையின் தொன்மைச் சிறப்பை அறியலாம்.
நன்றி: தினகரன், நாளிதழ், டிசம்பர் 1, 2008 ("தகவல் களம்")

3 டிச., 2008

கடிதம்-4:

ஈரோடு மாவட்டத்தில் ஒரு கிராம மக்கள் இலவச சமையல் காஸ் கேட்டு போராடிய செய்தியைப் படித்தேன். இதைப் பார்த்ததும் எனது மனம் சங்கடப்பட்டது. வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் அரசு இலவசமாகத் தரமுடியுமா? இப்படி தவறான, சோம்பேறித்தனமான எண்ணம் மக்களுக்கு வந்திருப்பதற்கு, அரசின் இலவச டிவி போன்ற திட்டங்களே காரணம். - எஸ்.சந்திரசேகரன், பாலக்காடு.
நன்றி: தினகரன், நாளிதழ், மதுரை, டிசம்பர் 1, 2008.

நலக்குறிப்புகள்-24: கண் நோய்களுக்கு...

அதிகாலையில் ஐந்து மணிக்கு எழுந்து சிவப்பு சூரியனையும், பௌர்ணமி அன்று சந்திரனையும் பார். கண்நோய்கள் தீரும். - வாழும் வழி, திருமுருக கிருபானந்த வாரியார்.

ஆன்மிக சிந்தனை-15:

பேசவேண்டியதைப் பணிவுடன் பேசுவது வாய்மையாகும். மிகைபடப் பேசுதலே நோய்களுள் கொடிய நோயாம். வாய்பொத்திப் பேசாதிருக்கக் கற்றுக்கொள்ளுதல் பாடங்களுள் முதல் பாடமாகும். பிறகு, பயன்படுவதையே பேசவேண்டும். அதையும் இன்சொற்களால் பேசவேண்டும். வற்புறுத்திப் பிறர் மீது நம் வாக்குகளைத் திணிக்கலாகாது. நாம் பேசியது போதவில்லையென்ற உணர்ச்சி கேட்பவரிடம் உண்டாகும்படி சுருங்கப் பேசவேண்டும். - சுவாமி சித்பவானந்தர்.

திருமந்திரம்-9: தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்...

தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவார்கள்
சென்னியில் வைத்த சிவனரு ளாலே.

இன்றைய சிந்தனைக்கு-32:

பிறனுக்கு உரியவளைத் தான் பெற விரும்புவது கொடுமை. தன்னை விரும்பாத ஒருத்தியைத்தான் விரும்புவது கயமை. தன்னைப்பற்றி அறியாத ஒருத்தியைத்தான் நாடுவது குற்றம். தன்னைப் புறக்கணிக்கும் ஒருத்தியைத் தான் நாடி நிற்பது பேதைமை. தன்னை வெறுத்து ஒதுக்கும் ஒருத்தியைத் தான் நினைந்து வருந்தி உடைவது கோழைத்தனம். - முனைவர் மு.வரதராசனார் ('திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்)

"சத்யாக்கிரகம்" - பரதன் குமரப்பா

'சத்தியாக்கிரகம்' என்ற வார்த்தையின் பொருள் உண்மையை உறுதியாகக் கடைப்பிடிப்பது என்பதாகும். சத்தியமே காந்திஜிக்குக் கடவுள். ஆகையால் சத்தியாக்கிரகம் என்ற சொல், கடவுளிடம் ஆழ்ந்த நம்பிக்கைகொண்டு அதற்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்களுடைய வாழ்க்கைமுறை என்று பொதுவாகப் பொருள் படுகிறது. எனவே உண்மையான சத்தியாக்கிரகி கடவுள் பக்தனாவான்.

இப்படிப்பட்ட ஒருவன் இவ்வுலகில் தீயகாரியங்களை எதிர்க்காமல் இருக்கமுடியாது. உலகில் அநீதி, கொடுமை, சுரண்டல், ஆக்கிரமிப்பு ஆகியவை இருப்பதை அவன் காண்கிறான். தன்னிடமுள்ள சக்திகளைஎல்லாங்கொண்டு அவைகளை அவன் எதிர்க்க வேண்டியிருக்கிறது. இப்புனிதப்போரில் அவனுடைய நன்கூரமாயிருப்பது சத்தியம் அல்லது பரம்பொருள். எல்லா உயிர்களும் ஒன்றென உணர்வதுதான் இவ்வுலகத்தில் சீரிய உண்மையாகையால் அன்புடன் எல்லோருக்கும் தொண்டு செய்வதன் மூலமே அதாவது அஹிம்சையின் மூலமே சத்தியத்தை அடையமுடியும். ஆகவே சாதரணமாகப் புரிந்துகொள்ளப்படுகிற குறுகிய பொருளில் சத்தியாக்கிரகம் என்பது ஆன்ம சக்தி அல்லது அஹிம்சையின் மூலம் தீமையை எதிர்ப்பதாகும்.

மஹாத்மா காந்தியின் 'சத்தியாக்கிரகம்' (தமிழ் மொழிபெயர்ப்பு) நூலுக்கு திரு பரதன் குமரப்பா அவர்கள் எழுதிய முன்னுரையிலிருந்து ஒரு பகுதி.
நன்றி: காந்திய இலக்கிய சங்கம், மதுரை.

இளங்கோவன் கவிதைகள்-3:

முழுதாகச் சிரித்தாலுன் அச்சம் நாணம்
முகமாடும் மடம்பயிர்ப்பு சிதறுமென்றோ
இழுது, தீமுன் உருகல்போல் என்னுள் மின்னி
ஏந்துநகை தன்னாலே உருக்கும் என்றோ
பொழில்மலரின் அழகொளியாய் பொழியும் இன்பப்
புன்னகையைப் பாதியிலே நிறுத்தி மின்னும்
எழில்மலராம் கண்ணாலே நகை முடிக்கும்
என்னாளே! பொன்னாளே! ஏனிச் செய்கை?

கேள்வியும் பதிலும்-24:

வாழ்க்கையில் உயர என்ன வழி? (பா.ராஜசேகர், விழுப்புரம்)
செய்யவேண்டிய வேலையை தள்ளிப்போடாமல், மூளையைப் பயன்படுத்தி உழைத்தாலே உயர முடியும். இன்றுள்ள பொருளாதார நெருக்கடியான காலகட்டத்தில், உழைத்துக்கொண்டே இருந்தால் மட்டுமே உயர முடியும். (அந்துமணி பதில்கள், தினமலர், வாரமலர், 30.11.2008)
நன்றி: தினமலர்.

2 டிச., 2008

கடிதம்-3: "முறைகேடுகளுக்கு தளமாகலாமா தமிழகம்?"

"அமெரிக்க டாலர்கள் அச்சடிக்க முயற்சி" என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே, இந்தியாவில் அதிகமான கள்ளநோட்டுப் புழக்கத்திற்கு தமிழகம் தளமாக அமைந்துள்ளதாகச் செய்திகள் வெளியானது. மேலும், கொலைகள், கொள்ளைகள், தீவிரவாதிகள் நடமாட்டம், பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள், போதைப்பொருள் கடத்தல், போலி மது தயாரித்தல் என காவல்துறை "வேடிக்கைத்துறை"யாகி விட்டதால், தமிழகத்தில் ஜாதி, மதக் கலவரங்கள், அண்டை மாநில வெடிகளுக்கு வேடந்தாங்கள், சரணாலயம் என எண்ணற்ற முறைகேடுகளுக்கும் தளமாக அமைந்துள்ளது தமிழகம். இன்று போலி அமெரிக்க டாலர் அச்சடிக்கும் கும்பலுக்கு 'மதுரை' தளமாக அமைந்துள்ளதை அறிந்த தமிழர்கள் வேதனைப்படுகிறார்கள். - இரா.அசோகன், சென்னை.
தினமணி, மதுரை, நாளிதழில் "அன்புள்ள ஆசிரியருக்கு" பகுதியிலிருந்து.
நன்றி: திரு.இரா.அசோகன் மற்றும் தினமணி.

நற்றிணை விளக்கம்

ஓடுகின்றனன் கதிரவன் அவன் பின்
ஓடுகின்றன ஒவ்வொரு நாளாய்
விடுகின்றன என் செய்வோம்? இனியவ்
வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே.

இளங்கோவன் கவிதைகள்-2:

கிஞ்சுகவாயஞ்சுகமே! கிளைத்துகின்ற
கிளிஎன்றால் பசுமையில்லை! பூங்கா தன்னில்
விஞ்சுகின்ற குயிலென்றால் கருமையில்லை!
வீனைஎன்றால் கவிழவில்லை! யாழேன்றாலோ
கொஞ்சுமிசை அறிந்ததன்றி உருவம் இல்லை!
கோத்தும்பி இசைபெற்று வந்ததில்லை!
அஞ்சுநிறப் பூங்கில்லாய்! பேசல் ஏனோ!
அவனியிலே சிறந்தீர்க்கும் பேச்சு ஏனோ?

1 டிச., 2008

இன்று ஒரு தகவல்-14: "நான்கு ஆண்டுகளில் குண்டு வெடிப்பிற்கு 7000 பேர் பலி!"

2004 முதல் நடந்துள்ள வெவேறு குண்டுவெடிப்புகளில் நம் நாட்டில் 7000 பேர் இறந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நன்றி: தினமலர், மதுரை, 1.12.2008

என்ன நடக்கிறது?-4: "கேள்வித்தாள் அச்சிட மறந்த பல்கலைக்கழகம்"

தேர்வுக்கான வினாத்தாள்களை அச்சடிக்காமல் பல்கலைக்கழகம் மறந்துவிட்டது. இதனால், தேர்வு எழுதவந்த மாணவர்கள் ஏமாற்றத்தோடு திரும்பினர். மும்பை பல்கலைக்கழகத்தின் கீழ், மும்பை, தானே மற்றும் ரத்னகிரியில் உள்ள 19 மையங்களில் தேர்வு நடக்கவிருந்தது. மொத்தம் 90 மாணவர்கள் தேர்வு எழுதச் சென்றனர். அப்போது, தேர்வைக் கண்காணிக்கும் அதிகாரிகள், மாணவர்களுக்கு வழங்குவதற்கான வினாத்தாள்களை தேடியபோது, அது கிடைக்கவில்லை. அங்கும், இங்கும் அலைந்த பின்னர், பல்கலைக்கழகத்தில் இருந்தே வினாத்தாட்கள் வரவில்லை என்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து, பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு பேசினர். அப்போதுதான், அன்று நடக்கவிருந்த தேர்வுக்கான கேள்வித்தாள்களே அச்சிடப்படவில்லை என்பதை பல்கலை நிர்வாகத்தினர் கண்டுபிடித்தனர்.
தினமலர், மதுரை, 8.11.2008 அன்று வெளியான செய்தியிலிருந்து ஒரு பகுதி.

இன்றைய சிந்தனைக்கு-31:

தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அலட்டிக்கொள்வதால் நம் சக்தியைச் சிதற விடுகிறோம். அமைதியுடனும், ஆண்மையுடனும், ஆக்கபூர்வ பணிகளில் கருத்தைச் செலுத்துங்கள். - சுவாமி விவேகானந்தர்

இளங்கோவன் கவிதைகள்-1:

அயர்வுவரும் அப்பொழுதும்
உன் நினைப்பே
ஆபத்தில் துணிவு தரும்
உன் முகந்தான்
உயர்வின்மீன் கூட்டத்தில்
பார்ப்பதெல்லாம்
ஒண்டொடியே உன்கண்கள்
நானென் வாழ்வில்
முயற்சிசெயும் வேலைகளில்
கிடைக்கும் வெற்றி
முத்தமிழே, புத்தொளியே
உன்னாலன்றோ!