12 அக்., 2009

பயணங்கள்-1: "அழியாநிலை"

அறந்தாங்கியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் நான்கு கிலோமீட்டரில் அழியாநிலை என்றொரு சிற்றூர். (என்ன ஒரு அற்புதமான பெயர்! அழியாநிலையை அடைவதுதானே வாழ்வின் குறிக்கோள்!) அங்கே நெடுஞ்சாலை அருகே ஒரு அற்புதமான சிறிய ஆஞ்சநேயர் கோவில். பல ஆண்டுகளுக்கு முன் எதிர்பாராதவிதமாக அந்தக் கோவிலுக்குச் சென்று வழிபடும் வாய்ப்புக்கிட்டியது. உபயம் இனிய நண்பர், முனைவர் வே.சுந்தரம் அவர்களும், எங்கள் நிறுவன இயக்குனர் முனைவர் மீ.இராகவன் அவர்களும், மனித மேம்பாட்டு அறிவியல் அமைப்பும். (அவர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்).

அங்கு சென்று வழிபட வேண்டும் என்று ஆசை கைகூடாமல் நழுவிக் கொண்டே இருந்தது. நேற்று அருமை நண்பர் எம்.செந்தில்குமார்Justify Full தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் என்னை அங்கு அழைத்துச் சென்று என் ஆசையை நிறைவேற்றி வைத்தார். (அவரும் அவரது குடும்பத்தார் அனைவரும் இறையருளால் சகல நலமும் பெற்று நீடுழீ வாழ்க!)

காலை ஒன்பது முப்பது மணி அளவில் என் வீட்டை விட்டுக் கிளம்பினோம். அழகாபுரி, கண்டனூர், புதுவயல், கல்லூர், கீழாநிலைக்கோட்டை, கே.புதுப்பட்டி, ஆளப்பிறந்தான் (!) என்று போகும் வழியில் சிற்றூர்கள்.

கோவிலில்லா
ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற அவ்வையின் பொன்னுரைப்படி வழிநெடுக சிறிய, பெரிய கோவில்கள். (அதிலும் பெரும்பாலும் அம்மன் கோவில்கள். எல்லாம் வல்ல பரம்பொருளை அன்னையின் வடிவில் காண்பது எவ்வளவு எளிதாக இருக்கிறது! அன்னை வழிபாடு நம்மவர்களிடையே எவ்வளவு ஆழமாக வேரூன்றியிருக்கிறது!!)

வழவழப்பான
அகண்ட தார்ச் சாலை. இயற்கைக் காட்சிகள். இதமான சுகமான வெயில், நண்பர் செந்திலின் அன்பைப்போல. எனது கேமெராவில் மனதிற்குப் பிடித்ததையெல்லாம் பிடித்துக்கொண்டு அங்கங்கே நிறுத்தி நிதானமாகச் சென்றோம். (நண்பர் செந்தில் முப்பத்து ஒன்பது கிலோமீட்டர் (optimum speed) வேகத்தில் வண்டியை சீராக, அலுங்கல் குலுங்கல் இல்லாமல் ஓட்டிச் சென்றார். பல விதத்திலும் இனிமையாக இருந்தது அப்பயணம்.

வழியில் கல்லூருக்கு முன், சற்றும் எதிர்பாராத பெரிய நவீன உணவகம் - ஸ்ரீமயூரி உணவகம். நடுக்காட்டில் அப்படி ஒரு உணவகம் இருந்தது நம்பமுடியாமல் இருந்தது. கொறித்துவிட்டு, தேநீர் அருந்திவிட்டு, பயணத்தைத் தொடர்ந்தோம்.

பதினோரு மணியளவில் அழியாநிலை ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலை அடைந்தோம். அருமையான இயற்கைச் சூழல். உள்ளேயே பூஜைப் பொருட்கள் கடை, சிற்றுண்டிச்சாலை, தண்ணீர் வசதி. முதலில் ஸ்ரீ செல்வ விநாயகரை வணங்கி, ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயரை வழிபடச் சென்றோம். (எங்கே செல்வ விநாயகரைப் பார்த்தாலும் எனக்கு வினோத்தின் நினைவு வரும் - அவன் பெயரின் பிற் பகுதி 'செல்வகணேஷ்').

அங்கே ஸ்ரீ ஆஞ்சநேயரின் திரு உருவச் சிலை இரண்டு. திறந்த வெளியில் சுமார் இருபத்தைந்து அடி உயரமான பிரம்மாண்டமான பஞ்சமுக ஆஞ்சநேயர் ஒன்று. கோவிலினுள் சுமார் பத்தடி உயரமான ஆஞ்சநேயர் வடிவமொன்று. இரண்டுமே மனதை விட்டு அகலாது இருக்கின்றன. அங்கே இருந்த ஒரு மணி நேரமும் மனதிற்கு மிகவும் இதமாகவும், இனியதாகவும் இருந்தது. அங்கே ஒரு தியான மண்டபமும் உண்டு. சிறிது நேரம் தியானம் செய்தோம். பூஜை முடிந்து தினமும் காலை பன்னிரண்டு மணி அளவில் பிரசாதமும் தாராளமாக வழங்கப் படுகிறது.

நின்னருளாலே நின் தாள் பணிந்து என்றபடி, ஸ்ரீ ஆஞ்சநேய பகவானே அடுத்த மாதம் குடும்பத்துடன் உன்னை தரிசிக்க அருள் புரிவாய் என்று வேண்டி வந்தேன்.

பயணத்தின் முக்கிய நோக்கம் நிறைவேறியபின் வழி நெடுக மேகக் கூட்டங்கள், மரம் செடி கொடிகள் என்று கண்ணில் பட்டதையெல்லாம் கேமெராவினால் சுட்டேன். குறிப்பிடத்தக்க இரண்டு கீழாநிலைக்கோட்டை கோவில்கள் இரண்டும், சிதிலமடைந்த கோட்டை ஒன்றும். (ஏன் இப்படி சிதைந்து கிடக்கிறது அதன் வரலாறு என்ன? விசாரிக்க வேண்டும்).

கீழாநிலைக்கோட்டையில் நண்பர் செந்தில் 'இளவட்டக்கல்லை' தூக்க முயல்வதை படம் பிடித்தேன். ('இளவட்டக்கல்' என்பது சினிமாக்காரர்களின் கப்சா என்று எண்ணியிருந்தேன் .)

கே
.புதுப்பட்டியில் ஸ்ரீ மாங்குடி சாத்தையனார் கோவில். ஸ்ரீ மாங்குடி சாத்தையன் வல்லம்பர்களின் குல தெய்வம் என்றும், வல்லம்பர்கள் வீட்டில் மாங்குடி என்றோ சாத்தையா என்றோ பெயர்சூட்டப்பட்ட பிள்ளைகள் இருப்பார்கள் என்று என்னுடன் பணி செய்த நண்பர் கருப்பையா கூறியது நினைவிற்கு வந்தது.

மதியம் ஒன்றரை மணியளவில் வீடு வந்து சேர்ந்தோம். (போக வர சுமார் எழுபது கிலோமீட்டர்.) மறக்கமுடியாத இப்பயணத்தில் எடுத்த சில படங்களை இங்கே கீழே பதிவு செய்திருக்கிறேன்.

2 கருத்துகள்: