29 ஆக., 2011

மனதில் பதிந்தவை-15: ஆனந்த விகடன், ஆகஸ்ட் 17, 2011

 ஆனந்த விகடன், ஆகஸ்ட் 17, 2011 
-------------------------------------------------
 புள்ளிவிபரங்கள் பகுதியில் தலையைச் சுற்றும் ஒரு எண்: 
1,78,10,00,00,000. ஸ்பெக்ட்ரம்  ஒதுக்கீட்டில் அரசு இழந்த பணமா?  இல்லை, வேறு ஏதாவது புதிய ஸ்கேமில் அரசு இழந்த பணமா?  இவை எதுவுமே இல்லை. டாஸ்மாக் மது விற்பனை மூலம் அரசு எதிர்பார்க்கும் தொகை இது!  யார் கண்டது, இலவசங்கள் நிறையத் தரவேண்டி உள்ளது; அதற்குப் பணம் நிறையத் தேவைப்படுகிறது என்றும், நிறையப் பணம் ஈட்டச் சுலபமான வழி என்றும், இன்னும் இருபது அல்லது முப்பது வருடங்களில் அரசே விபச்சார விடுதிகளை ஏற்று நடத்தும் நிலை வந்தாலும் வரலாம்!

தலையங்கம்: "அழகிய அசுரன்".  வேறு யார், பிளாஸ்டிக்தான்! சுற்றுச்சூழலை பிளாஸ்டிக் எவ்வளவு கடுமையாகப் பாதிக்கிறது, அதன் பின்விளைவுகள் எவ்வளவு மோசமானவை என்று அனைவருக்கும் தெரியும், அரசுக்கு நன்றாகவே தெரியும்.  இருந்தும் நாட்டில் ஒரு நாடகம் நடைபெறுகிறது.  'கேரிபேக்குகளை' தடை செய்தல்; அபராதம் விதிக்கப்படும், இவற்றைக் கொளுத்தாதீர்கள், விஷ  வாயு வெளியாகும்  என்று அச்சுறுத்துதல்கள், அறிவுறுத்தல்கள்.  எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்.  அப்புறம் எல்லோரும் மறந்துவிடுவார்கள்; மறுபடியும் எங்கும் 'கேரிபேக்குகளும்' மற்ற மக்காத பிளாஸ்டிக் குப்பைகளும்.  இத்தகைய பிளாஸ்டிக்கையும், பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியையும் தடை செய்வதை விடுத்து, இதற்கு மாற்றுத் தேடும் வழியை விடுத்து, சும்மா ஒப்புக்காக நாடகம் ஆடுவது ஏன்?  உறுதியான தடுப்பு நடவடிக்கை விடாமல் அரசைத் தடுப்பது எது, தடுப்பவர் யார்? என்ற கேள்விகளே என் மனதில் எழுந்தன.

அடுத்து, ப.திருமாவேலனின் நிலா அபகரிப்புக் குற்றங்கள் பற்றிய கட்டுரை.  இரண்டாயிரத்து எண்ணூறு வழக்குகள் பதிவாகியுள்ளனவாம்.  சரியான நடவடிக்கை எடுத்து, அடாவடிப் பேர்களை சிறைக்கு அனுப்பி, நிலங்களை மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்தால் நன்றாக இருக்கும். பார்க்கலாம்!

வலைபாயுதே பகுதியில் நான் மிகவும் ரசித்தது, அன்னா ஹஜாரே தேர்தலில் போட்டியிடத் தயாரா எனும் மனீஷ் திவாரியின் கேள்விக்கு, டிவிட்டரில் ஈரோடு கதிரின் எதிர்க் கேள்வி: "அய்யா, முதல்ல மன்மோகன் சாரை தேர்தல்ல நின்னு ஜெயிச்சு வரச்சொல்லுங்க!" 

அச்சச்சோ அவார்ட்ஸ் பகுதியில் கோயிந்து கொஸ்டீனை மிகவும் ரசித்தேன்: "விவசாஈகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தர்றதா போன ஆட்சியில வாக்குக் கொடுத்தீங்களே பெரியவரே.  நடக்கற வழக்குகளைப் பார்த்தா, கொடுத்த மாதிரி தெரியலையே... எல்லாமே எடுத்த மாதிரி இருக்கே?"


  

நெல்லையப்பன் கவிதைகள்-78: இலக்கு

கருத்தரங்கில் கைகலப்பு.
தலைப்போ வள்ளுவம்.
காரணம் ஆய்வறிக்கை.
.
வள்ளுவன் திருக்குறளில்
அதிகம் பயன்படுத்திய சொல்
எதுவென்ற ஆய்வில்
அறிஞர் பெருமக்கள்
ஆளுக்கு ஒன்றை முன்மொழிய,
.
சொல்லுக்காக சொற்களால்
அடித்துக் கொண்டவர்கள்,
சொற்கள் தீர்ந்து போனதும்,
கைகளால் அடித்துக் கொள்ள,
.
கிழிந்தன சட்டைகள்,
பறந்தன புத்தகங்கள்,
மிதிபட்டது திருக்குறள்.

27 ஆக., 2011

நெல்லையப்பன் கவிதைகள்-77: படிப்பினை

பிள்ளையாரப்பா ...
புத்தகம் இல்லாம
எவ்வளவு நல்லாருக்கு!
இது இப்படியே இருந்தா
எவ்வளவு விசயம் கத்துக்கலாம்!


எங்க வாத்தியாருக்கு
என்ன வெல்லாம் தெரியுமுன்னு
இப்பத்தான் தெரியுது!


இதையெல்லாம்
ஏன் சொல்லித்தரல
இத்தனை நாளா?


சாதாவோ, சமச்சீரோ
இந்த ஒரு மாதம்
நாங்க படிச்சது
எந்த புத்தகத்திலுமில்ல.


புத்தகம் வந்தா
எங்க சந்தோசமெல்லாம்
காணாத பூடும்.


இப்ப நான் கத்துக்கிட்டது
புத்தகத்திற்கு வெளியேயும்
நிறைய படிக்கணும்.

20 ஆக., 2011

நெல்லையப்பன் கவிதைகள்-76: "விடியல்"

மாலையா
மலர்ச்சரமா
மலர் வளையமா
அர்ச்சனை உதிரியா
உதிரும் சருகா -

சேருமிடம்
எதுவானாலும்
மலரின் காத்திருத்தல்
ஓரிரு நாட்களே!
மலரினும் மெல்லிய
மங்கையர்க்கு?

மரணத்தைப் போலவே
மணநாளும் தெரியாமல்
எத்தனை நாள் காத்திருக்க?
வருமா, வராதா?

இத்தனை வயதிற்குள்
காத்திருக்கும் கன்னியர்க்கு
மணம் முடிக்க வேண்டுமென
அவசரச் சட்டம் வராதா?
அரசே நடத்த முடியாதா?

அவசரம் எனக்கில்லை,
இளைய மகள் நான்.
அக்காக்கள் இருவர்
அவர்களுக்கு விடியட்டும்!

19 ஆக., 2011

மனதில் பதிந்தவை-14: குமுதம் தீராநதி, ஜூலை 2011

குமுதம் தீராநதி, ஜூலை 2011, விலை ரூ.15/- 
-----------------------------------------------------------------
மேஜை நிறைய இதழ்கள்.  நிறைய படிக்கவேண்டியியது பாக்கி இருக்கிறது.  ஏகப்பட்ட இடையூறுகள், குறுக்கீடுகள்; அப்புறம் இயலாமை, உடற்சோர்வு, மனச்சோர்வு.  எல்லாம் தள்ளிக்கொண்டே போகிறதே, காலம் ஓடிக் கொண்டேயிருக்கிறதே என்ற கவலை.  என் செய்வது?

தீராநதி வருடத்திற்கு ஒன்றோ இரண்டோ வாங்கியிருக்கிறேன்.  ஒவ்வொருமுறையும் இது நமக்கல்ல, விட்டுவிடலாம் என்றே தோன்றும்.  இருப்பினும் எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் வாஸந்தி, செயப்பிரகாசம் இவர்கள் பெயரைப் பார்க்கும்போது வாங்கலாம் என்று மறுபடியும் தொடர்கிறேன். தற்போது இந்திரன் அவர்கள் பெயரையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.  அவரது எழுத்து எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

இந்த இதழைப் பொறுத்தவரை, ஐந்து கட்டுரைத் தொடர்கள், மூன்று கட்டுரைகள், ஐவரின்  கவிதைகள்,  ஒரு சிறுகதை, ஒரு புத்தக விமர்சனம், ஒரு நேர்காணல் என்று நிறைய இருந்தாலும், எனக்குப் பிடித்தவை குறைவே. முதலிடம், ஈழ எழுத்தாளர்  உமா வரதராஜன் அவர்களது நேர்காணலுக்கே. சந்தித்தவர் பவுத்த அய்யனார். பதினோரு சுவையான பக்கங்கள்!  மேலோட்டமாக சில இதழ்களில் அரைப் பக்கம், ஒரு பக்கம் நேர்காணல் என்ற பெயரில் வரும்போது எரிச்சலாக இருக்கும். அதைப்படித்து பெரிதாக எதுவும் தெரிந்துகொள்ள முடியாது.  ஆழமான இது போன்ற நேர்காணல்கள் அந்த எழுத்தாளரையே நேரில் சந்தித்துப் பேசிப் பழகுவது போன்ற ஒரு உணர்வைத் தருகின்றன.  (நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் வெளியிடும் 'இனிய உதயம்' மாத இதழை இதற்காகவே நான் தொடர்ந்து வாங்கிவருகிறேன்.  என்ன காரணத்தாலோ 'இனிய உதயம்' பற்றி பதிவுகள் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கின்றன.  விரைவில் பதிவேன்.)

தன் தாத்தா(உடையப்பா), தந்தை(மாணிக்கம்) ஆகியோரின் பெயரிலிருந்து முதல் எழுத்தை தன் பெயருடன் இணைத்து, உமா வரதராஜன் என்ற பெயரில் எழுதிவரும் இவர் பிறந்தது கிழக்கிலங்கையிலுள்ள பாண்டியிருப்பு என்ற கிராமத்தில், 1956-ம் வருடத்தில். சிற்றிதழ் ஆசிரியர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், சிறுகதை எழுத்தாளர் (உள்மன யாத்திரை), நாவலாசிரியர் (மூன்றாம் சிலுவை), கவிதை விமர்சகர், பத்தி எழுத்தாளர் என்று இவருக்கு பல முகங்கள் உண்டு. இலக்கியத்தில் பிரதேசவாதம், இனவாதம், தவாதம் என்பதற்கு அப்பாற்பட்டவராக தன்னை இவர் அடையாளப்-படுத்தியிருப்பது இவர்மீது எனக்கு ஒரு தனி மரியாதையை ஏற்படுத்தியுள்ளது.  இந்த நேர்காணலின் மூலம் ஈழத்தின் மற்ற படைப்பாளிகளைப்  பற்றியும் (நீலாவணன், சண்முகம் சிவலிங்கம், நுஃமான், மருதூர்க்கொத்தன், அ.யேசுராசா போன்ற பலர்)  அறிந்து கொண்டேன். 

அதிலும் குறிப்பாக சிங்கள அரசியல் தலைவர்கள் கலந்துகொண்ட முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டில், தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் ஒரு கவியரங்கில், சண்முகம் சிவலிங்கம் அவர்கள் துணிவுடன் சொன்ன ஒரு கருத்து என் மனதில் ஆழமாகப் பதிந்தது: "தமிழர்களின் பிரச்சினையைத் தீர்த்துவிட்டு பின்னர் தேசிய ஒருமைப்பாடு பற்றிப் பேசுங்கள். உண்மையான பிரச்சினைகளைக் காண மறுத்து தீக்கோழிகளைப்  போல மண்ணுக்குள் தலையை மறைக்காதீர்கள்."

சுவையான, சிந்தனையைத் தூண்டும் பல தகவல்கள் இந்த நேர்காணலில் கண்டேன்.

அடுத்தபடியாக, எனக்கு மிகவும் பிடித்தது இந்திரன் அவர்களின் தொடரில் இந்த மாதம் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் அலெக்ஸ் காபஸ் பற்றி எழுதியிருந்தது.


மூன்றாவதாக, பா.செயப்பிரகாசம் அவர்களின், "சட்டாம்பிள்ளைகளும் சமச்சீர் கல்வியும்".  இதில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள நுட்பமான உண்மைகளையும், அவை எவ்வாறு மீறப்பட்டுள்ளன என்பதுவும்  இதைப் படித்த பின்னரே அறிந்தேன். "கல்வி என்பது எழுத்துக்களைக் கற்பது அல்ல. எழுத்துக்களின் வழி பயணம் செய்து அறிவைப் பெறுவது" என்பது அவரது கருத்து. (என்னைப் பொறுத்தவரை முழு மனிதர்களை, பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்கவும், மேன்மையான சிந்தனைகளை மனதில் விதைத்து, அதன்படி வாழக் கற்றுக் கொடுப்பதும்தான் உண்மையான கல்வி.  வெறும் அறிவைத் தருவது, திறமைகளை வளர்க்க வழிகாட்டுவது மட்டுமல்ல  கல்வியின் நோக்கம். இன்றைய சமுதாயத்தில் நாம் நிறைய அறிவாளிகளைத், திறமைசாலிகளைப் பார்க்கிறோம்;  ஆனால் அவர்களில் பலரும் சுயநலத்திற்காக தங்கள் அறிவை பயன்படுத்தி, எதுவேண்டுமானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் செய்யலாம்-வாழலாம் என்று இருப்பதால்தான் இன்றைய சமுதாயத்தில் பல சுரண்டல்கள், அநியாயங்கள், அராஜகங்கள், அக்கிரமங்கள் மலிந்திருக்கின்றன. சுவாமி விவேகானந்தர் கூறிய மனிதர்களை உருவாக்கும் கல்வியே  (Man-making Education) இன்றையத் தேவை.)


சிந்திக்க வேண்டிய அவரது கேள்விகள் சிலவற்றை இங்கே பதிவு செய்கிறேன்: "... பொதுக் கல்வியை அரசே வழங்க வேண்டுமென்ற அரசியல் யாப்பின் கோட்பாட்டிற்கு எதிராக தனியார் கல்வியை எவ்வாறு அனுமதித்தார்கள்?  அரசியல் அமைப்புச்சட்ட அத்துமீறலைச் செய்ததோடு அல்லாமல், கல்வி வழங்கலில் நீங்களும் அரசியல் சட்டத்தைக் காலில் போட்டு மிதியுங்கள் என்று தனியார்களையும் தூண்டி அவமதிக்கச் செய்தது சரியா?... அறுபது ஆண்டுகள் கழித்து சமச்சீர் கல்வி என்று நாம் பேசுவதும், போராடுவதும், இந்த ஆண்டு, அடுத்த ஆண்டு என்று இழுத்துக்கொண்டு போவதும், அரசியல் சட்டத்தைக் கேலி செய்வதாக இல்லையா...."

அடுத்து, ரவிக்குமாரின் சிறுகதை, "கடல்கிணறு".  இக்கதையில் சில பகுதிகளை நான் மிகவும் ரசித்தேன். அவற்றில் சில: "...நிலாவை மேகம் தின்றுகொண்டிருந்தது.... யாரோ காற்றைச் சுருட்டி எடுத்துச் சென்றுவிட்டதுபோல் இறுக்கம்.... நான் எப்போதும் தனிமையோடே சிநேகமாக இருந்தேன்... வீட்டிலிருந்து கிளம்பும்போது தனிமையும் என்னோடு பள்ளிக்குக் கிளம்பிவிடும். ...  கடலைப் பார்ப்பது சுவாரஸ்யமான விஷயம்தான். கடல் என் அம்மாவைப் போல எனக்குத் தோன்றும். அதில் இருக்கும் மீன்களை என்னைப்போல் உருவகித்துக் கொள்வேன். அவை அம்மாவை விட்டுப் பிரிவதில்லை. பிரிந்தால் அவற்றுக்கு மரணம் நிச்சயம். நிலத்தோடு ஓயாமல் உரையாடிக் கொண்டிருக்கும் கடலுக்கு சலிப்பே ஏற்படாதா? பின்வாங்கிப் போவதும், திரும்ப வந்து பேசுவதுமான இந்தப் பழக்கத்தை மனிதர்களிடமிருந்து கடல் கற்றுக்கொண்டதா அல்லது கடலிடமிருந்து மனிதர்கள் கற்றுக் கொண்டார்களா? நிலத்துக்குக் கடல் தரும் அன்பளிப்புதான் மீன்களா?...."


அடுத்து, வாசந்தியின் தொடர் கட்டுரையான 'பெற்றதும் இழந்ததும்'.  இதில் உலக வங்கியின் தலைவராக இருந்து, பெண் சபலத்தால் அவமானப்பட்டு, பதவி இழந்து, பிரஞ்சு நாட்டின் அதிபராகும் வாய்ப்பை இழந்து நிற்கும் கோடீஸ்வரரான டாமினிக் ஸ்ட்ராஸ் கான் பற்றியும், பெண்களை வெறும் போகப் பொருளாகவும், அவர்கள் தங்களை விட எல்லாவிதத்திலும் தாழ்ந்தவர்கள் என்றும், அவர்களைச் சமமாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஆணாதிக்க மனப்பான்மையையும் சாடியிருப்பது ஆணினம் சிந்திக்க வேண்டிய ஒன்று.


இறுதியாக, தமிழச்சி தங்கப்பாண்டியனின் கவிதை.  நல்ல கவிதை.  ஒவ்வொரு வரியும் என் தந்தையாரை நினைக்க வைத்தது.  பொதுவாக, எனக்குக் கவிதையில் ஈடுபாடு குறைவு; தெளிவாக, எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் இல்லையென்றால் பெரும்பாலும் நான் விட்டுவிடுவேன்.  இழப்பு எனதுதான் என்பது எனக்குப் புரிகிறது.  இருப்பினும் என் செய்வது?


மொத்தத்தில் இந்த இதழ் எனக்கு நிறைவைத் தந்தது. 


நன்றி: குமுதம் தீராநதி 

நெல்லையப்பன் கவிதைகள்-75: "விழியிழந்தோர்"

முக்கண்ணன்
இவர்கள் மீது
நெற்றிக்கண்
ஏன் திறந்தான்?
காக்கும் இமையே
கண் திருடலாமா?


பன்னிரு  விழிகளிலே
பரிவோடு ஒரு விழியால்
பார்த்திடவே வேலவனும்
ஏன் மறந்திட்டான்?


கண்ணாத்தாள்
ஏன் கைவிட்டாள்?
மீன் கண்ணாள்
ஏன் மறந்திட்டாள்?


ஆயிரம்
கண்ணுடையாள்
அலட்சியமாய்
விட்டதென்னே?


விரல்களை
விழிகளாக்கி
காதுகளால்
கற்கும் இவர்கள்
மூன்று கால்களால்
நடந்தாலும்
சொந்தக்காலில்
நிற்ப்பவர்கள்.


இருட்டு ஒரு
பொருட்டில்லை
இறைவன் மீதும்
வெறுப்பில்லை


எண்ணும் எழுத்தும்
கண் எனத் தெளிந்ததால்
கல்வி எனும் வெளிச்சம்
கைகொடுக்கும் இறுதிவரை.


வெறும் ஆறு புள்ளிகளால்
எதனையும் படிக்கலாம்
கெல்லரும்,பிரைலரும்
வெற்றி பெற வில்லையா?


அன்பின் மிகுதியினால்
வீட்டினுள் சிறை வைத்து
எதிர் காலத்தை
இருட்டாக்காமல்


பர்வையற்ற சிறார்களை
சிறப்புப் பள்ளியில் சேர்த்து
கல்விக்கண் கொடுப்போம்
கண்மணிகள் வாழட்டும்!

8 ஆக., 2011

மனதில் பதிந்தவை-13: ஆனந்த விகடன், ஆகஸ்ட் 10, 2011

ஆனந்த விகடன், ஆகஸ்ட் 10, 2011   

நம்பர் ஒன் தமிழ் வார இதழ்

-------------------------------------------------------------
முதலில், ப.திருமாவேலனின், "ரியல் ஹீரோஸ்".  
டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி, டிராஃபிக் ராமசாமி, காவல்துறை அதிகாரி கண்ணப்பன், ஆஸ்ரா கார்க், தேர்தல் கமிஷனர் பிரவீன் குமார், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உமாசங்கர், சகாயம் பற்றி.

என்னைப் பொறுத்தவரையில், டாக்டர் சுவாமியைப் பற்றி பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன: கோமாளி, குழப்பவாதி, அமெரிக்க சி.ஐ.ஏ.ஏஜென்ட். இப்படிப் பல. இவற்றில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, பல ஊழல்கள் வெளிச்சத்திற்கு வரக் காரணமாய் இருந்தவர்; இவர் கிளப்பியிருக்காவிடில்  சில ஊழல்கள் முற்றிலுமாக மறைக்கப் பட்டிருக்கலாம் என்று கூறலாம். எனவே நிச்சயமாக அவர் ஒரு ஹீரோதான். 

அதுபோல் திரு ராமசாமி பொதுநல வழக்குகள் மூலம் பல அக்கிரமங்களை, அராஜகங்களை எதிர்த்துப் போராடியவர். அதனால் பல தொல்லைகளுக்கு ஆளானவர்.  சுயநலம் இல்லாமால் இப்படிப் பொது நலத்திற்காகப்  போராடிய இவரும் ஒரு ஹீரோதான். 

அரசியல்வாதிகளின் உருட்டல் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் கடமையாற்றிய காவல்துறை மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் பாராட்டுக்குரியவர்களே; அவர்களையும் ஹீரோ என்று பாராட்டலாம்.

அடுத்து, டி.எல்.சஞ்ஜீவ்குமாரின்  , "பொருள்: சென்னை". 
வட சென்னையைப் பற்றிய தகவல்கள் அச்சம் தருவதாக உள்ளன.  இதெற்கெல்லாம் விடிவு காலம் எப்போது என்ற கேள்விதான் என் மனதில் நிற்கிறது. காலம்தான் பதில் சொல்லவேண்டும். அதிலிருந்து:

"திருவொற்றியூர் கன்டெய்னர் கார்ப்பரேஷனில் மறைமுகமாக நடக்கும் கடத்தல், திருட்டு, மாமூல் எனத் தினமும் கொடிகளில் பணம் புரளும். கேடி, கோடி, வறுமை, வயிறு ஒட்டிய வாழ்க்கை என முற்று முரணான வாழ்வியலே வாடா சென்னையின் அடையாளம்....

அரசு யந்திரம் என்கிற ஒன்று அந்தப் பக்கம் இயங்குகிறதா என்பதே கேள்வி. அந்த அளவுக்குப் பாரா முகமும், பகீர் ரகமுமாக வன்மம் காட்டுகிறது வடசென்னை!..." 


அடுத்து, "விகடன் வரவேற்பறை"யிலிருந்து:  
ஆர்,சூடாமணியின் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச் சிறந்த முப்பத்தாறு சிறுகதைகளின் தொகுப்பு, "நாகலிங்க மரம்".  பக்கம்: 328. விலை: ரூ.230/- வெளியீடு: "அடையாளம்", புத்தாநத்தம். இதன் பின் இணைப்பாக சூடாமணியின் சிநேகிதி பாரதி மற்றும் எழுத்தாளர் அம்பை ஆகியோரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 

"இணையம் அப்டேட்ஸ் " -
"சிலிக்கான் பள்ளத்தாக்கின் மாற்றங்களைப் புதுப் புது டெக்னிகல் வார்த்தைகள் சொல்லிப் புரியவைக்கிறார்கள்." அனைவருக்கும் பயனுள்ள பல தகவல்கள்.

"வெளிநாடு போவோருக்கு": 
  
"வேலை தேடி வெளிநாடு செல்வோருக்கு பயனுள்ள தளம்.

அடுத்து, ந.வினோத்குமாரின், "பாஸ்கோவின் இரும்புப் பிடி!" நம் நாட்டு இயற்கை வளங்களையும், மனித வளங்களையும் வெளிநாட்டார் நம் ஆட்சியாளர்களின் உதவியுடன் எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு பாஸ்கோ.  இக்கட்டுரையிலிருந்து:

"... இடிஷாவில் உள்ள ஜகத் சிங் பூர் மாவட்டத்தில் பாரதீப் துறைமுகத்திலிருந்து பத்து கி.மீ. தூரத்தில் அமைய இருக்கிறது இந்த 'பாஸ்கோ' நிறுவனம். ... "போஹாங் ஸ்டீல் கம்பெனி" என்பதன் சுருக்கம்தான் பாஸ்கோ.  முதலில் தென் கோரிய அரசிடம் இருந்த இந்த நிறுவனம் தற்போது தனியாரிடம்!..."

உலகிலேயே மிகச் சிறந்த இரும்புக் கனிமம் ஓடிஷாவின் சுந்தர்கர் மாவட்டத்திலுள்ள கண்டாதர் சுரங்கத்தில் நிறைந்திருக்கிறது. இங்கே இந்திய வரலாற்றிலேயே மிகப் பெரிய அளவில் அந்நியமுதலீட்டுடன் (55,000 ௦௦௦கோடி) தொடங்கப்படும் திட்டம் இது! இருபது வருடங்களுக்குள் கனிமங்களை முழுதாகச் சுரண்டி எடுத்துவிடவேண்டும் என்பது இவர்களின் நோக்கம். ஒரு மெட்ரிக் டன் கனிமத்திற்கு ஓடிஸா அரசிற்கு இவர்கள் கொடுப்பது வெறும் அறுபது சென்ட்! வெளிச்சந்தையில் இதன் விலை சுமார் இருநூறு டாலர்!! இதைச் செறிவூட்டி விற்றால் இரண்டாயிரம் டாலர்!!! உயர்தரக் கனிமமாக மாற்றி விற்றால் சுமார் ஐயாயிரம் டாலர்!!!!  பன்னிரண்டு மில்லியன் டாலர் முதலீட்டில் இருநூறு பில்லியன் டாலரைக் கொள்ளைகொண்டு போகும் திட்டமிது.  சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிப்பது மட்டுமல்லாது, இப்பகுதியிலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தையும் பறிக்கிறது.  வனப் பாதுகாப்புச் சட்டம், கடற்கரை ஒழுங்கமைவு சட்டம் போன்ற பல சட்டங்கள் மீறப்பட்டுள்ளன.  எதிர்த்துப் போராடும் மக்களின் மீது பொய் வழக்குகள் போடப்படுகின்றன (சராசரியாக, ஒவ்வொரு ஆணின் மீதும் இருநூறு வழக்குகள்!).

அடுத்து, ஷங்கர் ராமசுப்பிரமணியனின், "நல்ல தங்காள்" என்கிற கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அடுத்து, அன்டன் பிரகாஷின், "வருங்காலத் தொழில் நுட்பம்". இதிலிருந்து: "... சின்ன விஷயங்களில் புதுமையைப் புகுத்தி அதை TALK OF THE TOWN ஆக மாற்றிவிடலாம் என்பதற்கு சமீபத்திய உதாரணம்: iWatch.
(http://www.iwatchz.com /).  ஐ-பாட் நானோ என்பது ஆப்பிள் ஐ-பாட் குடும்பத்தின் ஒரு உறுப்பினர். சதுர வடிவில் இருக்கும் இந்த இசைப் பேழை சாதனத்தில், மிகவும் அடிப்படையான மென்பொருட்கள் சிலவும் உண்டு. உதாரணத்துக்கு, புகைப்படங்களைச் சேமித்துப் பார்க்க முடிகிற வசதி. கடிகார மென்பொருளும் உண்டு.  அந்த மென்பொருளை இயக்கினால், ஐ-பாட் நானோ பார்ப்பதற்கு கைக்கடிகாரம்போல் இருக்கும் என்பதைப் பார்த்து அதற்கு STRAP ஒன்றைச் செய்திருக்கிறது இந்த நிறுவனம். இதை வாங்கி, ஐ-பாட் நானோவை அதில் செருகினால் போதும், கைக்கடிகாரம் தயார்!..."

அடுத்து, வாலியின் தொடர் கட்டுரை, "நினைவு நாடாக்களின்" நாற்பத்திரெண்டாவது பகுதியிலிருந்து இசைஞானி இளையராஜா பற்றி: "...அவர் - கண்மூடித்தனமாய்க் கை கூப்பிக் கன்னத்தில் போட்டுக்கொள்ளும் ஆண்மீகவாதியல்ல. தன்னுள், தன்னைத் தேடி, அந்தத் 'தன்'னிலேயே, தன்னைக் கரைத்துக் கொண்ட சித்தர் அவர்!  ஒரு நூற்றாண்டுக் காலம் அருள் பிலிற்றி நின்ற காஞ்சிப் பெரியவாளால், பெரிதும் போற்றப்பட்டவர் இளையராஜா..."

அடுத்து, எஸ்.கலீல்ராஜாவின், "மரணம் தப்பினால் மரணம்". அதிலிருந்து:
"...கடல், காற்று, நிலம் என்று மூன்றிலும் அதிவேகமாகச் செயல்படும் அமெரிக்கக் கடற்படையின் சிறப்பு அதிரடிப்படைதான் - சீல்.  Sea, Air, Land ஆகியவற்றின் சுருக்கம்தான் SEAL.  இரண்டாம் உலகப் போரின்போது ஏற்பட்ட அனுபவங்களால், எதிரி-நண்பன் எனப் பாரபட்சம் காட்டாமல் அனைத்து நாடுகளுக்குள்ளும் மூக்கை நுழைக்க வேண்டிய அவசியம் குறித்து யோசித்தது அமெரிக்கா. அதைத் தொடர்ந்து, வியட்நாம் போரின்போது உருவாக்கப்பட்ட அமைப்புதான் சீல்.  மூக்கை நுழைப்பது என்பது அடுத்த நாடுகளின் நிலவரங்களைத் தெரிந்துகொள்வது மட்டுமல்ல. படுகொலை, சதித் திட்டங்கள் செய்வதன் மூலம், அரசியல் நிலைமைகளை அமெரிக்காவுக்குச் சாதகமாக மாற்றி அமைப்பதும் கூட. பிற நாடுகளின் எல்லைப்புறத்தில் நுழைந்து அதிரடித் தாக்குதல் நடத்துவது, எதிரி நட்டு முக்கியத் தலைகளைக் காலி செய்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட சீல், பின்னாட்களில் தீவிரவாதிகளைக் கொல்வது, போதைக் கடத்தல்காரர்களைப் போட்டுத்தள்ளுவது, பணயக் கைதிகளை விடுவிப்பது, விமானக் கடத்தலைத் தடுப்பது எனப் பல்வேறு பணிகளுக்காக விரிவாக்கப்பட்டது. உலகின் எந்த நாட்டு அதிரடிப் படைகளையும்விட, சீல் வீரர்களுக்கு மிக மிகக் கடினமான பயிற்சி கொடுக்கப்படும்....ஒசாமா என்கவுன்டருக்காக அதிகம் சத்தம் வராதபடி ப்ளாக் ஹாக் ஹெலிகாப்டர்களை வடிவமைத்தார்கள். ஒன்றுக்கு மூன்று ஹெலிகாப்டர்களை அனுப்பிவைத்தார்கள்.  பாகிஸ்தான் ரேடாரில் சிக்காதபடி மிகத் தாழ்வாகப் பறந்தார்கள். ஒசாமா வீட்டு மொட்டை மாடியில் இறங்கினார்கள். இருபது நிமிடங்களில் காரியத்தை முடித்தார்கள். அடுத்த அரை மணி நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் சுதாரித்து, போர் விமானங்களை அனுப்பியபோது, அங்கே யாரும் இல்லை...."

அடுத்து, சார்லஸின், "ரெபேக்கா புரூக்ஸ்".  
'நியூஸ் ஆஃப் தி வேர்ல்டு', 'தி சன்'  ஆகிய  பத்திரிக்கையின் ஆசிரியராகவும், அதன் பின் நியூஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றியவர். இந்தக் கட்டுரையிலிருந்து: 

"...ரெபக்கா புரூக்ஸ்... இங்கிலாந்து அரசியலில் புயல் கிளப்பி இருக்கும் அதிரடி மீடியா பெண்மணி.  இங்கிலாந்து அரசியலை அதிரவைத்த, தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தின் முக்கியப் புள்ளி இவர்தான். ரூபர்ட் முர்டோக்கின் மீடியா பேரரசில் நுழைந்து, சாம்ராஜ்யத்தின் லகானை இறுக்கிப் பிடித்து ஆதிக்கம் செலுத்தி, இன்று நாற்பத்தி மூன்று வயதில் சிறைவாசலையும் தொட்டு இருக்கும் ரெபக்கா புரூக்ஸ் கடந்து வந்த பாதை மிகவும் சுவாரஸ்யமானது!...  தனி மனுஷியாக மீடியாவில் நுழைந்து, அசுர பலம் காட்டினாலும்... தவறான அணுகுமுறையால் இப்போது தலைகுனிந்து நிற்கிறார் ரெபக்கா புரூக்ஸ்!"

கவின்மலரின், "கன்னித்தீவு கதையா கல்வி?".  சமச்சீர் கல்விப் பிரச்சினை இன்னும் இழுத்துக் கொண்டே போகிறது.  பள்ளிகள் திறந்து மூன்று மாதங்கள் முடியப் போகிறது.  இன்னும் மாணவர்கள் கைக்கு புத்தகங்கள் போய்ச்சேர்ந்த பாடில்லை. இக்கட்டுரையிலிருந்து:

"... 'பாடத் திட்டம் பொது.  ஆனால், பாடப் புத்தகம் பொது கிடையாது. அப்படியென்றால், அரசுப் பள்ளிகளில் ஒரு பாடப் புத்தகமும், மெட்ரிக் பள்ளிகளில் ஒரு பாடப் புத்தகமும் வைக்க அரசே வழிவகுக்குத் கொடுக்கிறது. எப்படியோ ஒருவகையில் மாணவர்களை இரண்டு வகையினராகப் பிரித்துவிட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது' என்கிறார் அ.மார்க்ஸ்'...." 

அடுத்து, சி.கார்த்திகேயனின், "தி ஸ்பிரிட் ஒப் மியூசிக்".  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றி  நஸ் ரீன் முன்னி கபூர் எழுதிய நூலிலிருந்து சில பகுதிகள் இக்கட்டுரையில்.    இந்த குறும்பட இயக்குனர் மற்றும் எழுத்தாளருடன் கடந்த நான்கு வருடங்களாக ரஹ்மான் அவ்வப்போது உரையாற்றியதன் தொகுப்பே இந்தப் புத்தகம்.

அடுத்து. OP-ED  பக்கத்திலிருந்து, இலங்கையில் நடந்த தமிழ் இனப் படுகொலை பற்றி சந்திரிகா குமாரதுங்கே கூறியது: "லண்டன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட, தமிழர்கள் கொல்லப்படும் காட்சிகளைக் கண்டு என் இருபத்தெட்டு வயது மகன், தான் ஒரு சிங்களவன் என்று சொல்ல வெட்கப்படுவதாக என்னிடம் அழுதபடி கூறினான். இதே கருத்தை என் மகளும் தெரிவித்தாள்!" இதற்குமேல் என்ன வேண்டும்?


அடுத்து, விகடனுடன் இனிப்பான, "என் விகடனிலிருந்து": 


"நாஞ்சில் சம்பத், நாஞ்சில் நாடன் - நாகர்கோவிலைச் சேர்ந்த பல வி.ஐ.பிக்களின் பெயரோடு ஒட்டியே இருக்கும் 'நாஞ்சில்' பட்டம். நாஞ்சில் என்றால் 'கலப்பை' என்று அர்த்தம். தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு குமரி மாவட்டம் இருந்த காலகட்டத்தில் இங்கிருந்துதான் சமஸ்தானம் முழுவதற்கும் நெல் சென்றது.  அந்த அளவுக்கு நெல் சாகுபடியில் கொடிகட்டிப் பறந்த பகுதி இது.  ஆனால், இன்று விளைநிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக மாறிவிட்டதால், அரிசி உற்பத்தியில் உள்ளூர் தேவைக்கே தடுமாறுகிறது நாஞ்சில் நாடு!"


"என் ஊர்" பகுதியில் எழுத்தாளர்  ம.காமுத்துரை தன் ஊர் அல்லிநகரம் பற்றி எழுதியிருக்கிறார். அவரைப் பற்றி இதிலிருந்து: "...இதுவரை பதினான்கு தொழில்கள் வரை மேற்கொண்ட இவர், கடந்த எட்டு வருடங்களாக அல்லிநகரத்தில் ஒரு வாடகைப் பாத்திரக் கடை வைத்து நடத்தி வருகிறார். ... இதுவரை ஒன்பது சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டு இருக்கும் காமுத்துரை, தனது ஒன்பதாவது சிறுகதைத் தொகுப்பின் தலைப்பாக, அவர் நேசிக்கும் எழுத்தாளர் பூமணியின் பெயரையே சூட்டி இருக்கிறார்.  தற்போது இவர் எழுதி முடித்து விரைவில் வெளியாக இருக்கும் நாவலின் தலைப்பு, "ஆயா!".  


6 ஆக., 2011

மனதில் பதிந்தவை-12: புதிய தலைமுறை, முழுமையான தமிழ் வார இதழ், ஜூலை 28 , 2011

புதிய தலைமுறை, முழுமையான தமிழ் வார இதழ், ஜூலை 28 , 2011, ஆசிரியர்: மாலன், விலை ரூ.10/-
------------------------------------
வாரா வாரம் படிக்கப் படிக்க, புதிய தலைமுறை உண்மையிலேயே ஒரு முழுமையான வார இதழ் என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது.  பலருக்கும் பயன்படும் பல்வேறு அம்சங்கள்.  எல்லாமே 'பாசிடிவ்', எதுவுமே 'நெகடிவ்' இல்லை.  இன்றைய சூழலில் இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

அடுத்து அவர்கள் 84  மாணவர்களின் இலவச உயர்கல்விக்கு உதவுகிறார்கள் என்பதைப் படித்தபோது மிகவும் மகிழ்ந்தேன்;  சொல்லிலும், செயலிலும் மேன்மை; மனமார்ந்த பாராட்டுக்கள்.

நான் இங்கே பதிவு செய்யப்போவது எனக்கு மிகவும் பிடித்தவற்றிலிருந்து ஒரு சில பகுதிகள் மட்டுமே. இடம், நேரம் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த முடிவு. 

முதலில் தலையங்கம்: "வேதனையான நேரத்தில் வேண்டுமா வெட்டிப் பேச்சு?".  அண்மையில் நிகழ்ந்த மும்பை குண்டுவேடிப்பப் பற்றி.  இதிலிருந்து: "...வேதனையில் மக்கள் துடித்துக் கொண்டிருக்கையில், அரசியல்வாதிகள் வெட்டி அரட்டைகளிலும், வேடிக்கைப் பேச்சுக்களிலும், விதண்டாவாதங்களிலும் பொழுதைப் போக்கிக்கொண்டிருப்பது. மேற்கே மும்பை குண்டு வெடிப்புச் செய்தி வந்து இரண்டு மணி நேரம் கூட ஆகியிராது, கிழக்கே புவனேஸ்வரில் ராகுல் காந்தியின் பேட்டி: 'ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் காவல்துறை, உளவுத்துறை சீர்திருத்தங்கள் காரணமாக 99 சதவீத பயங்கரவாதத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுவிட்டன' என்றார் ராகுல். அழுவதா, சிரிப்பதா?

ஒருபுறம் ராகுல் இப்படிப் பேசிக்கொண்டிருக்க, இன்னொரு புறம் 'மும்பைச் சம்பவம் குறித்து உளவுத்துறையிடமிருந்து முன்கூட்டியே தகவல் ஏதும் வரவில்லை' என்கிறார் மத்திய உள்துறை அமைச்சர்.  மராட்டிய முதல்வர், 'மாநிலத்தின் காவல்துறை அமைச்சராக கூட்டணிக் கட்சிக்காரரை நியமித்தது தப்பாகிவிட்டது' என்கிறார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், 'இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் ஆர்.எஸ்.எஸ். சம்பந்தப் பட்டிருக்கலாம்' எனக் குற்றம் சாட்டுகிறார். உடனே பா.ஜ.க. பொங்கி எழுகிறது. 

ஒரு மாபெரும் துயரத்தில் மக்கள் சிக்கி, ஏதும் செய்ய இயலாதவர்களாகத் துவண்டு கிடக்கிற நேரத்தில், இத்தனை அரசியல் கூத்துக்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.... வெட்கக்கேடு!"


அடுத்து, ஆ.பழனியப்பனின்  "நிலப்பறி:  குவிகிறது புகார்!"    இதிலிருந்து: "...(தமிழ்நாட்டில்) 2006-2011  காலக்கட்டத்தில் அபகரிக்கப்பட்ட சொத்துக்கள் குறித்து புகார்களைப் பெற முப்பத்தொரு மாவட்டங்களிலும், ஏழு மாநகர ஆணையங்களிலும், காவல்துறையில் சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.... அரசின் இந்த நடவடிக்கைகள், இதுவரை அச்சத்தால் அரண்டு கிடந்த மக்களுக்குத் தற்போது நம்பிக்கை துளிர் விட்டிருக்கிறது. தனிப்பிரிவு தொடங்கப்பட்டு இரண்டு வாரங்களில் தமிழகம் முழுவதும் 1,449 புகார் மனுக்கள் வந்து குவிந்துள்ளன...."

(படிக்கப்படிக்க அதிர வைக்கிறது இந்தக் கட்டுரை.  அதிலும் கடந்த ஐந்தாண்டுகளில் நடைபெற்ற நில விற்பனையில் தொண்ணூறு சதவிகிதம் மோசடியானது என்ற ஒரு குற்றச்சாட்டும், இந்த மோசடிகளில் காவல்துறையினரும், பத்திரப்பதிவுத் துறையினரும் சம்பந்தப் பட்டிருக்கலாம் என்பதும், அவ்வப்போது நாட்டில் நடந்த மிரட்டல்கள், கொலைகள்  பலவற்றின் பின்னணியில் வீடு, நிலம் அபகரிப்பு இருக்கக்கூடும் என்ற செய்தித் தாட்களில் படித்த அனுமானங்களும் நம்மை நடுங்க வைக்கின்றன. மேலும் நண்பர்கள் மூலம் நான் அறிந்த எங்கள் பகுதியில் நடந்த இது போன்ற மோசடிகளும், சொத்து பத்து இருப்பது  உயிருக்கே ஆபத்தாகலாம் என்று எண்ணவைக்கிறது.  ஆனால் வேதனை தரும் விஷயம் என்னவெனில் இதையெல்லாம் தடுக்க இதுவரை எந்த வழியும் இல்லை என்பது.  தற்போதாவது மோசடிப் பேர்வழிகள் தண்டிக்கப்படுவார்களா, அபகரிக்கப்பட்ட வீடுகளும், நிலங்களும் உடையவர்களிடம் திரும்பப் போய்ச் சேருமா என்பதும் நிச்சயமாகச்  சொல்லமுடியாமல் இருக்கிறது.)

அடுத்து, பிரபஞ்சனின், "மனிதர், தேவர், நரகர்" தொடரிலிருந்து: 

"... ஒரு மழை நாளில் வீசிய புயற்காற்றில் முருங்கை இடுப்ப ஒடிந்து விழுந்தது. நாங்கள் மிகுந்த சோகத்துக்கு ஆளானோம். மரம் இருந்தது, இறந்தது என்று இருந்தோம்.  சில நாட்களுக்குப் பிறகு, மரத்தின் மிச்சமாகி மண்ணில் புதைந்திருந்த பகுதியிலிருந்து, கடுகு அளவில் பச்சை ஒன்று முகிழ்த்தது. இல்லை.

உயிர்.

நான், இந்த அனுபவத்தைப் பிரும்மம் என்ற சிறுகதையாக எழுதினேன். மரணம் என்ற உண்மையை இல்லாமையாக நான் உணரவில்லை.  மாறாக, மரணத்தை ஒரு மாற்றமாக உணர்ந்தேன்.  பிறந்தது எதற்கும் மரணம் அல்ல, மாற்றமே நிரந்தரம் என்பதாக உணர்ந்தேன்.  அதையே பிரும்மம் என்பதாக நான் குறிப்பிட்டேன். 

ஒரு நாள் மாலை, 'கணையாழி' அலுவலகத்தில் ஜானகிராமனைச் சந்தித்தேன். அப்போது அவர், 'கணையாழி' ஆசிரியராக இருந்தார். மிகுந்த மகிழ்ச்சியோடு, 'பிரும்மம் ரொம்ப நல்ல கதை' என்றார். நடந்து, ரத்னா கபேவுக்கு வந்து காபி சாப்பிட்டோம். அவர்தான் பில்லுக்குப் பணம் கொடுத்தார். அக்கதை, 'கணையாழி'யில் பிரசுரம் கண்டது.

அந்த மாதத்தின் சிறந்த கதை என்று இலக்கியச் சிந்தனைக்காகத் திருப்பூர் கிருஷ்ணன் அதைத் தேர்ந்தெடுத்தார். ஆண்டின் சிறந்த கதையாகக் கரிச்சான் குஞ்சு அதைத் தெரிவு செய்தார். ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுதியாகத் தமிழக அரசு பிரும்மம் உள்ளிட்ட கதைத் தொகுதியைத் தெரிவு செய்து பரிசளித்தது. முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன், அரசுப் பரிசை வழங்கினார். ஆங்கிலத்திலும், இந்தியாவின் பெரும்பாலான மொழிகளிலும் பிரும்மம் மொழியாக்கம் கண்டது."

அடுத்து, 'மரம் வளர்ப்போம்'.  எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று.  வீட்டைக் கட்டும் போதே வீட்டைச் சுற்றியுள்ள இடத்தில் மரங்கள் நடுவது பற்றி ஆலோசனை கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து புதிதாக வீடுகட்டுபவர்களுக்குத் தேவையான நல்ல தகவல்கள்: 


"...வேப்ப மரம் நல்லது. மா, தென்னை மரங்கள் நடலாம். இவற்றின் வேர்கள் அப்படியே செங்குத்தாக பூமிக்கு கீழே செல்லக்கூடியது. இதனால் கட்டிடத்திற்கு எந்த பாதிப்பும் வராது. பெற்றோம் ஜன்னலைத் திறந்தவுடன் கண்ணில் படும் பசுமை மனத்தைக் குளிர்விக்கும். சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கும். குறுகிய காலத்தில் பலன் தரக்கூடிய வீரியமிக்க மரக்கன்றுகள் கிடைக்கிறது. மூன்று ஆண்டுகளில் வீட்டுத் தேவைக்கான மாங்காய், தேங்காய் வந்துவிடும்."

அடுத்து, 'இன்பாக்ஸ்' பகுதியிலிருந்து மங்களபுரம் கா.ராஜசேகர் எழுதிய ஒரு கடிதம்: "நியாய விலைக் கடை என்றால நியாயமில்லாத கடை என மக்கள் சொல்லும் நிலையில் செம்பாக்கம் 'காஞ்சி மக்கள் அங்காடி'யின் செயல்பாடுகள் குறித்து படிக்கும்போது, தமிழகம் முழுவதும் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என ஏக்கம் பிறக்கிறது."

அடுத்து, "வரும் வாரம்" பகுதியில், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் பிறந்த நாள் பற்றிய தகவல். 1876-ம் ஆண்டு ஜூலை மாதம் இருபத்தேழாம் நாளன்று பிறந்தார்.  மற்ற  தகவல்கள்: 


"... தமிழ் படித்த அறிஞர் என்றாலும் அவர் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றினார். முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகவும், கல்லூரி விரிவுரையாளராகவும் பணிபுரிந்த தேசிக விநாயகம் பிள்ளை, இலக்கியத்தில் செய்த சாதனைகள் பல. அவற்றுள் முக்கியமானவை உமர்கய்யாமின் ருபையாத் மொழி பெர்யர்ப்பும், நாஞ்சில் நாட்டு  மருமக்கள் வழி மான்மியமும். அவர் ஆங்கிலத்தில் எழுதிய நூல் காந்தளூர்ச்சாலை. சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி தயாரிப்பில் இவரது பணி குறிப்பிடத்தக்கது. கவிதைகள் எழுதுவதோடு, கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்தார் கவிமணி..."

நன்றி: "புதிய தலைமுறை"    

4 ஆக., 2011

மனதில் பதிந்தவை-11: ஆனந்த விகடன், நம்பர் ஒன் தமிழ் வார இதழ், ஆகஸ்ட் 3, 2011

ஆனந்த விகடன், நம்பர் ஒன் தமிழ் வார இதழ், ஆகஸ்ட் 3, 2011
------------------------------------------------------------------------------------ 
முதலில் விகடன் வரவேற்பறையிலிருந்து: "மூன்றாம் பிறை" எனும் மம்மூட்டியின் வாழ்பனுவங்கள் - தமிழில் கே.வி.ஷைலஜா - பக்கங்கள் ௧௨௮ - விலை ரூ.80/- - வம்சி புக்ஸ். இந்நூலில், "...வக்கீலாக வாழ்ந்தது, முதல் தர நடிகர் ஆனது வரை வாழ்வில் சந்தித்த மனிதம், அன்பு, நேரம், நட்பு, பாடம் என எல்லாவற்றையும் பாசிடிவ் கோணத்தில் பகிர்ந்துகொண்டு இருக்கிறார் மம்மூட்டி..."

"அறிவியல் ஆயிரம்":
"மாணவர்களுக்கு பயனுள்ள வலைப்பூ. முழுக்க முழுக்க அறிவியல் செய்திகள் மட்டும்தான். வெறுமனே வார்த்தைகளில் விவரிக்காமல் படங்கள், காட்சிகள் ஆகியவற்றோடு விளக்கம் சொல்கிறார்கள். ... பின் பி.பி.சி-யின் உரலியைக் கொடுத்திருக்கிறார்கள்(தொடர்புள்ள விரிவான செய்திகளுக்கு)..."

"சக்தே இந்தியா":   
"... ஊழல் இல்லா இந்தியாவை உருவாக்கத் துடிக்கும் ஆர்வலர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட தளம்..."

"எனக்கு இல்லையா கல்வி?" -  குறும்படம் - இயக்கம்: பாரதி கிருஷ்ணகுமார் - வெளியீடு: மனித உரிமைக் கல்வி நிறுவனம். "வசதியற்ற அரசுப் பள்ளிகள், வகுப்பறை வன்முறை, சமச்சீர் கல்வி, பாடத்திட்டம் என்று கல்வித்துறையின் அத்தனைக் கோளாறுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் படம்..." 

அடுத்து, "நானும் விகடனும்" தொடரில், வண்ணதாசன் கட்டுரை.  

கவின்மலரின், "குழந்தைகள் அடம் பிடிக்கலாம்! அம்மா..?" சமச்சீர்  கல்வி  பற்றி:  "... உயர்நீதி மன்ற விசாரணையின்போது நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை தவிர, ஒவ்வொரு உறுப்பினரும் தனித்தனியே கொடுத்த கருத்துக்களையும் சர்மர்ப்பிக்க வேண்டும் என்று ஆணையிட்டது நீதிமன்றம்.  அதன்படி சமர்ப்பிக்கப்பட்ட தனித்தனி அறிக்கைகளையும், இறுதி அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தனர் நீதிபதிகள்.  நிபுணர் குழு அறிக்கை, ஒவ்வொரு உறுப்பினரின் கருத்தையும் பிரதிபலிக்கவில்லை.  சமச்சீர்ப் பாடத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும், அதைப் படிப்படியாகச் செய்யவேண்டும் என்றும் நிபுணர் குழுவில் ஒரு சிலர் கூறியுள்ளனர்.  ஆனாலும், சமச்சீர் கல்வியை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்று அவர்கள் ஒட்டுமொத்தமாகக் கருதவில்லை.  அதோடு, பழைய 2004-ம் ஆண்டு பாடத் திட்டங்களுக்குச் செல்லவேண்டும் என்றும் அவர்கள் கூறவில்லை.  ஆனால், அறிக்கையோ தமிழக அரசு எடுத்துள்ள நிலையைத்தான் பிரதிபலிக்கிறது. ... ஆக, நிபுணர் குழு, உறுப்பினர்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்காமல், தன இஷ்டத்துக்கு ஓர் அறிக்கையைத் தயார் செய்திருக்கிறது அரசு.  இது மக்களையும், நீதிமன்றத்தையுமேகூட ஏமாற்றும் வேலை. நேர்மையற்ற இந்தச் செயலை நீதிமன்றம் மன்னித்தாலும், மக்கம் மன்றம் மன்னிக்கப்போவது இல்லை!"

வா.மு.கோமுவின் சிறுகதை, "ரகசியங்களை யாரிடமும் சொல்லவேண்டாம்" 

வாலியின் "நினைவு நாடாக்கள்" (நாற்பத்தோராவது)

அன்டன் பிரகாஷின் "வருங்காலத் தொழில்நுட்பம்".

"புள்ளிவிபரங்கள்" பகுதியிலிருந்து: "... பதினோரு மாநில முதல்வர்கள், தங்கள் மாநிலங்களில் புகையிலைப் பொருட்கள் விற்கத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளனர்!" .  இந்த நல்ல செய்தியோடு இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.

நன்றி: "ஆனந்த விகடன்"        

3 ஆக., 2011

மனதில் பதிந்தவை-10: உயிர் எழுத்து, ஜூலை 2011

உயிர் எழுத்து,  படைப்பிலக்கியத்தின் குரல், தமிழ் இலக்கிய மாத இதழ், ஜூலை 2011, ஆசிரியர் - சுதீர் செந்தில், விலை ரூ.20 /- 
---------
நண்பர், கவிஞர் ஜனநேசன் மூலமாக அறிமுகமான இதழ்.  காலச்சுவடும், உயிர்மையும், தீரானதியும்தான் சிறந்த தமிழ் இலக்கிய இதழ்கள் என்றெண்ணி இருந்தேன்.  நான்காவதாக ஒரு இதழும் இருக்கிறது என்பதை நண்பர் ஜனநேசன் மூலம் அறிந்துகொண்டேன்.

இந்த இதழோடு நான்காண்டுகள் நிறைவுபெற்று, ஐந்தாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.

முதலில் பெண்ணியம் பற்றிய கொற்றவையின் பதினைந்து பக்கக் கட்டுரை. அதிலிருந்து: "யூனிசெ ஃப்பின் "உலக குழந்தைகள் நிலை - 2009" அறிக்கைப்படி 20-24 வயதில் உள்ள 47 சதவிகித பெண்கள் பதினெட்டு வயதிற்கு முன்னரே திருமணம் செய்துகொண்டவர்கள்.  நாற்பது சதவிகித குழந்தைத் திருமணங்கள் இந்தியாவில்தான் நடப்பதாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது. 1994-ல் ஹையிஸ் என்பவரால் செய்யப்பட்ட ஆய்வில் ஐந்து நிமிடத்திற்கொருமுறை பெண்களுக்கெதிரான குற்றங்கள் நேர்வதாக பதிவாகியிருக்கிறது."

அடுத்து, பாவண்ணனின் சிறுகதை, "கனவு".  தற்போது வாடா மாநிலங்களில் நடைபெறும் "கௌரவக் கொலைகளை"  அடிப்படையாகக் கொண்ட கதை.

ந.முருகேசபாண்டியனின், "ராஜபார்ட்" எனும் நாடகம்.

எஸ்.வி.ராஜதுரையின், "பா பா ராம் ஷீப்"  எனும் கட்டுரை.  ராம்தேவின் சாகும்வரை உண்ணாவிரத நாடகத்தை சாடியிருக்கிறார்.  அதிலிருந்து:

"... இந்திய அரசு யந்திரம் ஊழல்மயமானது, இலஞ்ச லாவண்யங்களால்  கரைபட்டுள்ளது என்பதைக் குறைந்தது கருத்தளவிலேனும் ஆட்சியாளர்களை ஒத்துக்கொள்ள வைத்த அண்ணா ஹசாரேயின் இயக்கத்தையே பிசுபிசுக்கச் செய்துவிட்ட மத்திய அரசாங்கம், பாபா ராம்தேவ் விஷயத்தில் இன்னும் துணிச்சலான நடவடிக்கையை மேற்கொண்டதில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை. மேற்சொன்ன இரண்டு சந்தர்ப்பங்களையும் எடுத்துக்கொண்டால் உண்மையான அவலத்துக்கு, துன்பத்துக்கு ஆளானவர்கள், கடந்த ஜூன் நான்காம் நாள் டெல்லி ராம் லீலா திடலில் கூடியிருந்த மக்கள்தான்; முன் அறிவிப்பில்லாமல் நள்ளிரவில் அத்திடளுக்குள் நுழைந்து பெண்கள், குழந்தைகள் என்று பார்க்காமல் மூர்க்கத்தனமாக அவர்களை அடித்துத் துவைத்த, அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வெடித்த காவல்துறையினர், அதிரடிப்படையினர் ஆகியோரை ஏவிவிட்ட மத்திய அரசாங்கமும் டெல்லி நிர்வாகமும் கடும் கண்டனத்துக்குள்ளாக்கப்பட வேண்டியவை என்பதில் இரு கருத்துகள் இருக்க முடியாது...

...நக்குள்ள ஒரே வருத்தம் தனது கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டத்தை நிறுத்த மாட்டேன் என சிங்கல்போல கர்ஜித்த ராம்தேவ், கடைசியில் கழுத்தறுபட்ட ஆடுபோலக் கதரியதுகூட அல்ல; மாறாக, புற்றுநோய், எய்ட்ஸ், ஓரினச்சேர்க்கை ஆகியவற்றை குணப்படுத்தக்கூடிய சர்வரோக நிவாரணியான பிராணாயாமத்தால், கண்ணீர்ப்புகைக் குண்டுகளுக்குத் தாக்குப் பிடித்து நிற்க முடியவில்லையே என்பதுதான்!"

கவிதா முரளீதரன், ஆத்மார்த்தி, செல்மா பிரியதர்ஷன், நாஞ்சில் நாடன், சுதிர் பாரதி, ச,விஜயலட்சுமி, அ.வெண்ணிலா, பூர்ணா, தேவேந்திர பூபதி ஆகியோரின் கவிதைகள்.  ஏகப்பட்ட கவிதைகள்!

பொன்.சந்திரனின் பாதல் சர்க்காருக்கு அஞ்சலி.

இந்த இதழிலேயே எனக்கு மிகவும் பிடித்தது கலாப்பிரியாவின், "நினைவின் தாழ்வாரங்கள்" எனும் நூல் பற்றிய எஸ்.எஸ்.செங்கமலத்தின் விமர்சனம்.  அதிலிருந்து:

"கலாப்பிரியா பொதுவாகவே ஒரு கவிஞராகவே அறியப்பட்டவர். சுமார் நாற்பது ஆண்டு காலம் கவிதை உலகில் தீவிரமாக இயங்கி வருபவர். முதன்முதலாக உரைநடையில் கவனம் செலுத்தி தன இளமைக் கால ஞாபகங்களை நினைவுக் கேணியின் ஆழத்தில் இருந்து, இறைத்து, குளுமையாக, இனிமையாக, துல்லியமாக, அற்புதமாக "நினைவின் தாழ்வாரங்கள்" என்ற தொகுப்பில் பதிவு செய்துள்ளார்.  இளம்பிராயத்தில் நடந்த நிகழ்வுகளை சுமார் ஐம்பது தலைப்புகளில் (383 பக்கங்களில்) சொல்லி இருக்கிறார்.  சந்தியா பதிப்பகம், சென்னை, இந்த நூலை வெளியிட்டுள்ளது..."

இந்த இதழில் எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை, மதிகண்ணனின், "பேராசிரியர் முரளியின் சுட்டுவிரல்".  அதிலிருந்து:

"...'மனித மனங்களில் இடம் பெற்றால்தான் நீங்கள் ஜெயித்ததாக அர்த்தம்' என்றார்.  புறப்படும்போது அவர்  எதிரில் நின்று விடை பெற்றபோது, என் நெஞ்சில் அவரின் சுட்டுவிரலை வைத்து அழுத்தி, 'நீங்கள் எத்தனை பேருக்கு எதிரில் நிற்கிறீர்கள் என்பதைவிட, நீங்கள் எத்தனை பேருக்கு உள்ளே நிற்கிறீர்கள் என்பதே முக்கியம். அதில் கவனம் செலுத்துங்கள்' என்றார். ஒருசில நேரங்களில் என் செயல்பாடுகளின் வழியாக அவரின் சுட்டுவிரல் அழுத்தத்தை நான் உணர்ந்திருக்கிறேன்...."

அடுத்து, இளஞ்சேரலின், "நினைவில் நிற்கும் பகிர்தல்".  கோவையில் மே 29 ஞாயிறன்று நடைபெற்ற புத்தக அறிமுக விழா பற்றி.  அதிலிருந்து:

"...தலைமையுரையாற்றிய வெ.மு.பொதியவெற்பன் ... சிற்றிதழ்களின் இடையறாத இலக்கிய முயற்சிகள் தொடர்ந்த வண்ணமே இருப்பது நம்பிக்கையும் வலிமை தருவதாகவும் இருக்கிறது என்றார். ஃபிர்தௌஸ் ராஜகுமாரனின் 'நகரமே ஓநாய்கள் ஊழையிடும் பாலைவனம் போல' சிறுகதைத் தொகுப்பை க.அம்சப்பிரியா அறிமுகப்படுத்திப் பேசினார்.... சுதிர் செந்தில், லக்ஷ்மி சரவணக்குமாரின் "யாக்கை" எனும் சிறுகதைத் தொகுப்பை அறிமுகப்படுத்திப் பேசினார்.  ந.முருகேசபாண்டியன் "காட்டின் பெருங்கனவு" எனும் சிறுகதைத் தொகுப்பு பற்றிப் பேசினார்.

அடுத்து, "கடிதங்கள்" பகுதியில், தி.க.சி. அவர்களின் கடிதத்திலிருந்து ஒரு பகுதி மட்டும்:  "... உயிர் எழுத்து, ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்ற இதழ் என்பது மிக்க மகிழ்ச்சிக்கும், மன நிறைவுக்கும் உரியதாகும்.  கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த அருமையான பயனுள்ள பன்முகமான இலக்கிய இதழைத் தொடர்ந்து நடத்துவதற்கு எவ்வளவு எதிர்நீச்சல் போட்டிருப்பீர்கள் என்பதை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சிற்றிலக்கிய ஏடுகளில் எழுதி வருபவன் - 1952 முதல் 1962 வரை 'சரஸ்வதி' ஆசிரியர் வ.விஜய பாஸ்கரனுடன் நெருங்கிப் பழகியவன். அந்த இதழின் வளர்ச்சிக்கு என் ஆசான் வல்லிக்கண்ணன் அவர்களின் ஒத்துழைப்புடன் சிறு பங்களிப்புச் செய்தவன் என்ற முறையில், என்னால் நன்கு உணர முடிகிறது.  எனவே, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போகும் உயிர் எழுத்து இதழுக்கும், அதன் ஆசிரியர் குழுத் தோழர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.  இதழின் நற்பணிகள், தமிழ் இலக்கியத்தையும், தமிழ் மக்களின் வாழ்வையும், எல்லா வகையிலும் மேம்படுத்த உதவுமாக! வளர்க; வெல்க!"

தி.க.சி. அவர்களின் மேலான உணர்வுகளை நானும் எதிரொலிக்கிறேன். உயிர் எழுத்து, வாழ்க! வளர்க!!

நன்றி: "உயிர் எழுத்து"    
            

மனதில் பதிந்தவை-9: ஆனந்த விகடன், ஜூலை 27, 2011

ஆனந்த விகடன், ஜூலை 27, ௨௦௧௧.  இந்த இதழில் "புள்ளிவிபரங்கள்" பகுதியிலிருந்து தொடங்குகிறேன்.

இந்தியாவின் மக்கட்தொகை 121 கோடியாக உயர்ந்திருக்கிறது.  கவலை தரும் தகவல். குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரமும், அதற்காக அரசு செலவழித்த பெரும்பணமும் வீணோ என்று தோன்றுகிறது.  என்னதான் திட்டம் திட்டமிட்டு செயல்படுத்தினாலும், மக்கட்தொகையைக் கட்டுப்படுத்தாதவரை வாழ்க்கைத்தர உயர்வோ, பொருளாதார முன்னேற்றமோ சிரமம்தான்.

அடுத்து, அறுபது சதவிகித உணவுப் பொருட்கள் பதப்படுத்தாததால் வீணாகின்றன என்ற அதிர்ச்சித் தகவல்.  ஏற்கனவோ நமது உணவு தானியக் கிடங்குகளில் தானியங்கள் புழுத்து வீணாகி பயனற்றதாகிக் கொண்டிருக்கிறது என்ற விஷயம் உச்ச நீதிமன்றம் வரை சென்று, கண்டனங்கள், ஏழை எளியவர்க்கு இலவசமாகக் கொடுக்கவேண்டும் என்று வெளியான செய்திகள் நினைவிற்கு வருகின்றன.  ஆனால் நம் அரசோ வழக்கம்போல் செயல்படாமல் இருக்கிறது.  வீணாகப் போனாலும் பரவாயில்லை, யாருக்கும் இலவசமாகத் தரமோட்டோம் என்று பிடிவாதமாக இருக்கிறார்கள்.  அவர்கள் படித்த பொருளாதாரக் கோட்பாடுகள் அதைத் தவறு என்று என்று சொல்கிறதோ?

"சொல்வனம்" பகுதியில், அமீர் அப்பாஸின் அற்புதமான கவிதை, "தேவதைகளின் உலகம்".  

அடுத்து, என்னை ஈர்த்தது, விகடன் மேடையில் எஸ்.ராவின் கேள்வி-பதில்கள்.  அதிலிருந்து:

தமிழ் இலக்கியத்தின் டாப் டென் புதினங்கள்: 

1 . தி.ஜானகிராமன் - மோகமுள்
2.  ஜெயகாந்தன் - ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்
3.  கி.ராஜநாராயணன் - கோபல்ல கிராமம்
4.  ப.சிங்காரம் - புயலிலே ஒரு தோணி
5.  ஜி.நாகராஜன் - நாளை மற்றும் ஒரு நாளே
6.  சுந்தர ராமசாமி - ஒரு புளிய மரத்தின் கதை
7.  அசோகமித்ரன் - ஒற்றன்
8.  கரிச்சான் குஞ்சு - பசித்த மானுடம்
9.  வண்ணநிலவன் - கடல்புரத்தில்
10.எஸ்.சம்பத் - இடைவெளி 

"நேர்மையாக வாழ்வது என்பது ஒரு சவால்.  அது தனி நபர், சமூகத்துடன் மோதும் போராட்டம். அதை சமூக அமைப்பு எளிதாக அன்கீகரித்துவிடாது. பொதுவாக, மனிதம் மனம், கீழ்மைகளையும், தீய எண்ணங்களையும், வன்முறைகளையும் நோக்கியே ஓடுகிறது. நல்வழிப்படுத்துதல் நாமாக மேற்கொள்ளவேண்டிய முயற்சி!"  (அற்புதம், எஸ்.ரா!)

படித்துப் பிரமித்துப்போன வாழ்க்கை வரலாறு: "ஹெலன் கெல்லர். சிறு வயதில் கண் பார்வை, கேட்கும் சக்தி, பேசும் சக்தி ஆகியவற்றை இழந்த அவர் விடாமுயற்சியில் கல்வி கற்று, அதன் வழியே உலகம் வியக்கும் ஆளுமையாக எப்படி உருமாறினார் என்பதை விளக்கும் அவருடைய சுயசரிதையான "STORY OF MY LIFE " மறக்க முடியாத புத்தகம்!" 

விகடன் வரவேற்பறையிலிருந்து: மகாபாரதக் கதைகளின் வழியே அதில் மறைந்திருக்கும் தத்துவ விசாரங்களை எடுத்துக் கூறும் வலைப்பூ:                   <http://bagavathgeethai.blogspot.com>.

அடுத்து, குழந்தைகளுக்கு கதை சொல்ல உதவும் எளிமையான இணையதளம்: .

அடுத்து, அழகிய பெரியவனின் பத்தொன்பது சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு, "குறடு".  பக்கங்கள் 200 - விலை ரூ.130 /-.  கலப்பை வெளியீடு.

"வலைபாயுதே" பகுதியிலிருந்து: 

thoppi_az@twitter.com: "மனிதன் தான் செய்யும் தவறுகளுக்கு சிறந்த வக்கீலாகவும், மற்றவர்கள் செய்யும் தருகளுக்கு சிறந்த நீதிபதியாகவும் இருக்கிறான்!

இதழுடன் இலவச இணைப்பு: "என் விகடன்".  அதிலிருந்து:




"கலாம் கண்காட்சி" - இராமேஸ்வரத்தில் கலாம் அவர்கள் வசித்த வீட்டை புனரமைத்து, அங்கே ஒரு அருங்காட்சியகம்.  இந்த நேரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்ப்படுமுன் தம்பி நெல்லையப்பனுடன் நான் சென்றிருந்தபோது அவன் வீட்டின் நிரபதுபோல படம் எடுத்தேன்.  மற்றபடி, வீடு பூட்டியிருந்தபடியால் உள்ளே சென்று பார்க்க முடியவில்லை.

"என் ஊர்" பகுதியில், கவிஞர் விக்ரமாதித்யனின் திருநெல்வேலி பற்றிய கட்டுரை.  நானும் பழைய திருநெல்வேலிக்காரன்.  கட்டுரையில் வரும் பழக்கமான பெயர்கள்:  புட்டாரத்தி அம்மன் கோயில், கள்ளத்தி முடுக்குத் தெரு, நயினார் குளம், குறுக்குத்துறைக் கோயில்(ஒரு காலத்தில் என் மாமா இக்கோவிலின் மேலாளர்), கீழப் புதுத் தெரு, தெற்குப் புதுத் தெரு (இரண்டு தெருவிலும் நாங்கள் குடியிருந்திருக்கிறோம்), காந்திமதியம்மன் சன்னதி, நெல்லையப்பர் கோவில், வாகையடி முக்கு, பூதத்தார் முக்கு, ராயல் டாக்கீஸ், பாப்புலர் தியேட்டர் (இத்தியேட்டர் உரிமையாளரின் மகன் என்னுடன் ஒரு வருடம் படித்தான்), ரத்னா டாக்கீஸ் என்று சிறு வயதில் நண்பர்களுடன் கொட்டமடித்த நாட்கள் நினைவிற்கு வருகின்றன.  
         

சூரியின் டைரி-50: "சாருமுகம்"

நேற்று திடீரென என் பால்ய கால நண்பன் ஆறுமுகத்தின் நினைவு வந்தது.

நெல்லை டவுணில் (நெல்லையில் 'டவுன்' என்று எழுதுவதில்லை.   மூன்று சுழி 'ண" தான் பயன்படுத்துவார்கள்.) அம்மன் சன்னதி நேராக வந்து கீழப் புதுத்தெருவில் மோதும்  இடம்தான் எங்கள் வீடு.  இடது பக்க எதிர் வரிசையில் ஆறுமுகத்தின் வீடு.  அப்போது எனக்கு பல நண்பர்கள் இருந்தபோதும் அவன்தான் மிக நெருக்கம். புத்தகங்கள் மீதிருந்த ஈடுபாடு இதற்கு முக்கிய காரணம். தவிர,  இரண்டு பேருக்கும் எழுதவேண்டும் என்ற ஆசையும்  உண்டு.  

நான் "அமுதம்" என்ற பெயரில் ஒரு கையெழுத்து இதழைத் துவங்கினேன்.  அவன் அதில் முழு மூச்சுடன் ஒத்துழைத்தான். அப்போது நான் மந்திரமூர்த்தி உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு  படித்துக் கொண்டிருந்தேன்.  எங்கள் பள்ளி பிரச்சினையில் சிக்கி, அரசு மானியம் நின்று, ஆசிரியர்களுக்கு சம்பளமும் நிற்க, பெரும்பாலான ஆசிரியர்கள்  வேலையைவிட்டு விலக, மாணவர்களும் வேறு பள்ளிகளுக்குச் செல்ல, என்னைப்போல் ஒரு சிலர் மட்டும் பள்ளியில் வகுப்புகள் சரியாக நடைபெறாமல், பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தோம்.  கையெழுத்து இதழ்கள் நடத்துவது போன்ற பொழுதுபோக்குகளுக்கு பள்ளியில் நிறைய அவகாசம் கிடைத்தது.   ஆனால் ஆறுமுகமோ நகரில் நல்ல பள்ளிகளில் ஒன்றான, சாஃப்டர் உயர்நிலைப்பள்ளியில் ஏழாவது  படித்துக் கொண்டிருந்தான். அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி கொலை செய்யப்பட சமயம் அது (நவம்பர் 1963).  அதைப் பற்றியும், "கார் ஒட்டி வந்தது யார்?" என்ற சிறுகதையும் வேறு சில துணுக்குகளும் நான் எழுதினேன்.  அவன் அவன் பங்கிற்கு துக்கடாக்களாக நிறைய எழுதினான், "சாருமுகம்" என்ற பெயரில். (அவனது இனிஷியல் 'S') .  எங்கள் வகுப்பிலும், அவன் வகுப்பிலும் இதழைப் படிக்கக் கொடுப்போம். இரண்டு மூன்று இதழோடு "அமுதம்" நின்றுபோனது. காரணம் நினைவில் இல்லை. 

பதினோராம் வகுப்பிற்கு (அப்போது பள்ளியிறுதி வகுப்பு - SSLC) அவன் படித்த பள்ளியிலேயே நானும் படிக்கச் சென்றேன். அப்போது எங்கள் நட்பு இன்னும் நெருக்கமானது. அவன் வாங்கும் புத்தகங்களை எனக்குப் படிக்கக் கொடுப்பான். நானும் கொடுப்பேன். புத்தகங்கள் பற்றி கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும். ஆனால் அந்த ஆண்டு கோடை விடுமுறையிலேயே என் அப்பாவிற்கு மாற்றலாகி நான் மானாமதுரை சென்றுவிட்டேன்.  வருடம் ஒரு முறை நெல்லை செல்லும்போது அவனைப் பார்ப்பேன்.  அதன் பிறகு தொடர்பு படிப்படியாகக் குறைந்துபோனது. திடீர் திடீரென்று என்  வாழ்வில் வந்து குதிப்பான், காணாமல் போவான்.  

நான் காரைக்குடி வந்து, அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம் ஒரு நாள், எப்படியோ என் முகவரியைக் கண்டுபிடித்து எனக்கு கடிதம் எழுதினான்.  அதில் நினைவில் இருக்கும் ஒரு வரி: "என் இலக்கிய தாகத்தைத் தூண்டியவனல்லவா நீ!" நான் உடனே பதில் எழுதினேன்.  ஆனால் அவன் அதன் பிறகு தொடரவில்லை. 

பல ஆண்டுகள் கழித்து மதுரையில் அரசு ஊழியனாக மனைவி, மகளுடன் அரசு குடியிருப்பில் இருப்பதாக எழுதியிருந்தான்.  ஒருநாள் அதிகாலை அவன் வீட்டிற்குச் சென்று பார்த்தேன்.  அது ஒரு வேலை நாளாக இருந்தபடியால், நான் அதிக நேரம் தங்கவில்லை. ஒரு காப்பி குடித்துவிட்டுக் கிளம்பிவிட்டேன்.  அதன் பிறகு ஒரீரு கடிதப் பரிமாற்றம். அப்புறம் முற்றிலுமாக நின்றுபோனது.

நான்கைந்து வருடங்களுக்கு முன் எனக்கு அமெரிக்காவிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு.  பேசியது ஆறுமுகத்தின் மகள். எனக்கு ஒரே ஆச்சரியம். எனது எண் எப்படிக் கிடைத்தது என்று. திருமணமாகி கணவருடன் அமெரிக்காவில் இருப்பதாகக் கூறினாள்.  மதுரையில் நான் பார்த்த சின்னப்பெண் பெரியவளாகி, திருமணமாகி அமெரிக்காவில்! காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்று எண்ணிக்கொண்டேன்.  அவளது உறவினர் ஒருவர் எங்கள் நிறுவனத்தில் வேலைக்கு முயல்வதாகவும், நெல்லையில் ஒரு அரசியல்வாதி இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்தால், காரைக்குடியில் உள்ள ஒரு ஆடிட்டர் மூலம் வேலைவாங்கித் தருவதாகச் சொன்னாராம். கொடுக்கலாமா என்று என்னைக் கேட்டாள்.   கொடுக்க வேண்டாம், யாரையும் நம்பவேண்டாம், எனக்குத் தெரிந்தவரை அப்படி நடக்க வாய்ப்பில்லை என்று கூறினேன்.  அப்போது அவள் 'கேஷுவலாக'  "மாமா, உங்களுக்குத் தெரியுமா, அப்பா இப்போது இல்லை என்று கூற, நான் திகைத்துப் போனேன்.  எனக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை.  "என்னம்மா, சொல்கிறாய்?" என்று கேட்டேன்.  ஒரு சில வருடங்களுக்கு முன், அவளது திருமணம் பேசி முடித்திருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஒருநாள் இரவில் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு, அன்றே ஆறுமுகம் இறந்துவிட்டான்.  என்னைவிட, இரண்டு மூன்று வயது சிறியவன்.  என்னால் நம்பவே முடியவில்லை.  எனது வருத்தத்தை அவளிடம் தெரிவித்தேன்.  

அவனது நிழற்படமோ, அவன் எழுதிய கடிதங்களோ எதுவுமே என்னிடமில்லை. நினைத்தால் வருத்தமாக இருந்தது.  என்னுடைய இலக்கிய ஆர்வத்தை வளர்த்தவன் அவன் என்று இப்போது நினைத்துக் கொள்கிறேன். அதன் பிறகு அவனை நான் மறந்துவிட்டேன்.  ஏனோ நேற்று அதிகாலை அவனது நினவு வந்தது.  என் வாழ்க்கையில் என்னுடன் பயணித்தவர்களில் அவனும் ஒரு முக்கியமானவன் என்று நினைக்கிறேன்.