21 ஜன., 2013

சூரியின் டைரி-65: தென்றலாய் வருடியவை - நீதியே மன்னவன் உயிர் நிலை


சூரியின் டைரி-65: தென்றலாய் வருடியவை - நீதியே மன்னவன் உயிர் நிலை

இனிய உதயம் மாத இதழை பல ஆண்டுகளாக நான் வாங்கிப் படித்து வருகிறேன்.  இதில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி பேட்டி.  படைப்பாளிகளுடனான ஆழமான, விரிவான பேட்டி வேறு எந்த இதழிலும் இல்லாத அளவிற்கு மிகச் சிறப்பாக இருக்கும்.  தற்போது இந்த இதழில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

2013 ஜனவரி இதழில் புலவர் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதியுள்ள புதுமை வேட்டலா? புரட்டு வித்தையா? என்ற கட்டுரை எனக்கு மிகவும் பிடித்தது. 

நாளிதழ் ஒன்றில் யாரோ எழுதிய சிலப்பதிகாரம் காலத்திற்கு ஏற்றதாக இல்லை, சிலம்பின் பேருண்மைகள் நிலயல்ல என்று எழுதியுள்ளார். அதை மறுத்து மிகத் தெளிவாக, மேற்கோள்களுடன் சிலப்பதிகாரத்தின் சிறப்பினை அற்புதமாக நிலை நாட்டியுள்ளார்.  இது தமிழார்வர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு கட்டுரை.

ஆய்வு என்ற பெயரில் வாய்க்கு வந்ததையெல்லாம் எழுதுவது தற்போது வழக்கமாகி விட்டது.

இந்தக் கட்டுரையிலிருந்து எனக்கு மிகவும் பிடித்த ஒரு பகுதியினை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன்.  மீண்டும் கேட்டும் கொள்கிறேன்.  இந்தக் கட்டுரையை முழுமையாகப் படித்துப் பாருங்கள்.

...
நமது இலக்கியங்கள், காப்பியங்கள் , நீதி நூல்கள்  அனைத்தும் மக்கள் வாழ்க்கையை நெறிப்படுத்த, சீர்மை செய்திடவே படைக்கப் பட்டவையாகும்.

அல்லவை செயார்க்கு அறங்கூற்றாதல்;  என்றும் அறத்தின் மீது, எல்லாக் காலத்திலும் ஆள்வோர்க்கு அச்சம் இருந்திட வேண்டும்.  அஃது இல்லாமல் போனதால்தான் இன்றைய அரசியலில் அவலங்கள், அநீதிகள், அக்கிரமங்கள், அயோக்கியத்தனங்கள் அரங்கேறுகின்றன.

தவறிழைத்த பாண்டியனைக் கண்ணகி தண்டிக்கவில்லை; யாரும் கொலை செய்யவில்லை. நீதியை அறத்தை உயிராகக் கொண்டவன் அவனாதலின் நீதி தவறினோம் என்று உணர்ந்தவுடன், அக்கணமே உயிர் பிரிந்தது. மிகவுயர்ந்த சாவு இது. நீதியே மன்னவன் உயிர் நிலையாயிற்று.

வல்வினை வளைத்த கோலை மன்னவன்
 செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது

என்றார் இளங்கோ.

கண்ணகியும் காப்பிய நிறைவுக்குமுன், வாழ்த்துக் காதையில்,

தென்னவன்  தீதிலன் தேவர்கோன்  தன்கோவில்
 நல்விருந்தாயினன்  நானவன்  தன் மகள்

என்று சான்றளிக்கிறார்.


புலவர் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

இனிய உதயம்  மாத இதழுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்



15 ஜன., 2013


சூரியின் டைரி-64: தென்றலாய் வருடியவை வணக்கத்திற்குரிய வாத்தியார்!

ஆனந்தவிகடன் 2013 ஜனவரி இரண்டாம் நாள் இதழில் வெளியான 2012 டாப் 10 மனிதர்கள் பகுதியிலிருந்து:

தடகள விளையாட்டுகளில், தமிழ் வீரர்களைச் சர்வதேச உயரத்துக்கு இட்டுச்செல்லும் ஏகலைவன், சென்னையைச் சேர்ந்த நாகராஜ்.  கேரள அரசின் கோடிக்கணக்கான நிதி உதவியுடன் செயல்படும் பி.டி.உஷா அகாடமியில் இருந்து, இதுவரை உருவானது இரண்டு சர்வதேசத் தடகள வீரர்கள் மட்டுமே.  ஆனால், எந்த அரசு உதவிகளும் இல்லாமல், நாகராஜ் இதுவரை 24 சர்வதேச வீரர்களை உருவாக்கி இருப்பது மகத்தான சாதனை. அதில் 14 பேர் சர்வதேச சாம்பியன்கள். 100க்கும் அதிகமானோர் தேசியத் தடகள சாம்பியன்கள்.  இவை அனைத்தையும் எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல், தேசத்தின் மீதும், விளையாட்டின் மீதும் உள்ள காதலால் செய்கிறார் நாகராஜ்.  மாநிலம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் இடங்களுக்கு அலைந்து திரிந்து, தகுதியும் ஆர்வமும் உள்ள மாணவர்களைத் தேடிப் பிடித்து வந்து, பயிற்சி அளிப்பதை, கடந்த 25 ஆண்டுகளாக ஒரு தவம் போல் செய்து வரும் நாகராஜின் கனவு, தமிழ் நாட்டில் இருந்து பல ஒலிம்பிய்ன்களை உருவாக்க வேண்டும் என்பதுதான். நடக்கும் நாகராஜ்!


திரு நாகராஜிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!

ஆனந்தவிடனுக்கும் மனமார்ந்த நன்றிகள்

14 ஜன., 2013

சூரியின் டைரி-63: கவலை தருபவை – செல்போன் மற்றும் கணினிக் கழிவுகள்


சூரியின் டைரி-63: கவலை தருபவை –   செல்போன் மற்றும் கணினிக் கழிவுகள்

ஆனந்தவிகடன் 2013 ஜனவரி ஒன்பதாம் நாள் இதழில் மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் மிகச் சிறப்பாக எழுதிவரும் தொடர்கட்டுரை ஆறாம் தினையிலிருந்து ஒரு பகுதி மட்டும்:

பனை ஓலையில் இருந்து, காகிதத்தில் எழுதுவதை எதிர்ப்பது மடமை.  காகிதத்தினால் அழியும் காடுக்ளைப் பார்த்து, கணினி உபயோகத்திற்கு மாறுவதை குறை சொல்வது முட்டாள்தனம்.  ஆனால், ரோஜாப்பூ சேலைக்குப் பொருத்தமாக சிவப்பு நிற செல்போன், கறுப்பு ஜீன்ஸுக்குப் பொருத்தமாக மஞ்சள் நிற லேப்டாப் என ஹேர்பின், ரிப்பன் போல வருடத்துக்கும் ஒரு மின்சாதனப் பொருள் என நுகர்வதால் குவியும் கணினிக் கழிவுகளைக் கண்டிப்பாக எதிரிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

அந்தக் கழிவுகள் அனைத்தும் மண்ணுக்குத்தான் செல்கிறது.  கொஞ்ச நஞ்சம் அல்ல... கிட்டத்தட்ட 8,000 டன் பயன்படுத்து, தூர எறி எனும் புதிய வணிகச் சித்தாந்தத்தில் அமெரிக்கா மட்டும் 3 மில்லியன் டன் கணினிக் கழிவைப் பூமியில் கொட்டுகிறது.  உலகத்தின் குப்பைக்கூடமாக ஆகி வருவது இந்தியாவும், சீனாவும்தான்.  ஈயம், செம்பு, பாதரசம், பல்லாடியம், கோபால்ட்... கலந்து கொட்டப்படும் இந்தப் பேசாத செல்போன் கழிவுகள் பூமித்தாய்க்குச் செரிக்காது தோழா!

விதை மட்டும் அல்ல, கணினி துவங்கி சலவை சோப் வரை எந்தப் பொருளையும், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது என்று சொல்லியோ, சந்தைக்குப் புதிது என்றோ விற்பனைக்கு வரும் எதையும் உபயோகிக்கும் முன்னர் ஒரு முறைக்கு மூன்று முறை சிந்தியுங்கள் நண்பர்களே!

சில புதுசுகளைக் காட்டிலும், பல பழசுகள் பாதுகாப்பானவை. அறிவியல் என்பது புதுமையில் மட்டும் இல்ல, பழ்மையிலும் உறைந்து இருக்கிறது.


நன்றி: மருத்துவர் சிவராமன் மற்றும் ஆனந்தவிகடன்

இன்றைய சிந்தனைக்கு-163:




கருணையும், இரக்கமும் இல்லாத ஒருவனை மனிதன் என்று அழைக்கமுடியாது.  இவ்விரண்டு பண்புகளும் அனைவருக்கும் அவசியம் அன்னை சாரதா தேவி

13 ஜன., 2013

சூரியின் டைரி-62: தென்றலாய் வருடியவை – நீர் ஆதாரம் இல்லாமல், இரசாயன உரங்களோ, இரசாயனப் பூச்சிக்கொல்லிகளோ இல்லாமல், விவசாயம்


சூரியின் டைரி-62:  தென்றலாய் வருடியவை நீர் ஆதாரம் இல்லாமல், இரசாயன உரங்களோ, இரசாயனப் பூச்சிக்கொல்லிகளோ இல்லாமல், விவசாயம்

தினமலர் 2013 ஜனவரி பதினொன்றாம் நாள் இதழில் வெளியான செய்தியிலிருந்து ஒரு பகுதி மட்டும்.

நீர் ஆதாரம் இல்லாத இடத்தில், ஆண்டு முழுவதும் விவசாயம் செய்யும் சின்னசாமி:

.....

இரண்டு ஏக்கர் அளவில் சிறு குட்டை வெட்டி, மழை நீரை தேக்கி, எழுபது ஏக்கர் நிலத்தில் நான்கு கிணறுகளை வெட்டி, குட்டியயில் தேங்கிய நீரை, பிவிசி பைப் மூலம் கிணற்றுக்குள் செலுத்தி, அதன் மூலம், இருபது ஆழ்துளை கிணறுகல் அமைத்து, நீர் ஆதாரம் இல்லாத இடத்தில், ஆண்டு முழுவதும் விவசாயம் செய்கிறேன்.

இனிப்பு சுவையுடைய அறுபது தாய்லாந்து புளிய மரங்களை நட்டு வளர்த்து வருகிறேன்.  ஒரு மரத்திலிருந்து ஆண்டிற்கு, 15,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது.  கோ-3 ரக சப்போட்டா கன்றுகளை சீரான இடைவெளியில் நட்டதில், மரத்திற்கு, 100 பழங்கள் வீதம், நன்கு காய்க்கின்றன.

என்னிடம் உள்ள, 70 பசுக்கள், 150 ஆடுகளிலிருந்து சாணம், புழுக்கை, சிறுநீரையும், கோழிப் ப்ண்ணையிலிருந்து பெறும் கழிவுகளையும், கல் உப்பு, காய்ந்த சருகு, சோகையை மக்கச் செய்து, இயற்கை உரமாக பயன்படுத்துகிறேன்.  வேப்ப மரங்களின் விதையை அரைத்து, பூச்சிகள் வராமல் தெளிக்கிறேன்.

ஊடு பயிராக பீட்ரூட், கத்தரிச்செடி, மிளகாய் செடி, வெண்டை என பயிரிடுகிறேன்.  வீட்டின் முன்னே கொடியில் பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காயும், கீரை வகைகளையும் பயிரிட்டு, தினமும் லாபம் ஈட்டுகிறேன்.


இரசாயன உரங்களோ, இரசாயனப் பூச்சிக்கொல்லிகளோ இல்லாமல், நீர் ஆதாரம் இல்லாத இடத்தில் வெற்றிகரமாக விவசாயம் செய்துவரும் பல்லடம் திரு சின்னசாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

நன்றி: தினமலர் நாளிதழ்

இன்றைய சிந்தனைக்கு-162:



முடியாது என்று நீங்கள் சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்து கொண்டிருக்கிறான்.

--       மதுரை கிருஷ்ணாபுரம் காலனியில் ஒரு மருத்துக்கடையில் கண்டவர்: பி.சாந்தா, மதுரை-14.

   - தினமணி கதிர் 2013 ஜனவரி பதின்மூன்றாம் நாள் இதழில்  
     படித்தது.

நன்றி: பி.சாந்தா மற்றும் தினமணி கதிர்

12 ஜன., 2013

சூரியின் டைரி-62: தென்றலாய் வருடியவை – டாக்டர் வர்கீஸ் குரியன்


சூரியின் டைரி-61: தென்றலாய் வருடியவை டாக்டர் வர்கீஸ் குரியன்

டாக்டர் வர்கீஸ் குரியன் தனது 90வது வயதில் காலமானபோது, உயிர்மை 2012 டிசம்பர் மாத இதழில், ஷாஜி எழுதிய பால் வீதியில் ஒரு பயணம் என்ற அஞ்சலிக் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி மட்டும்

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பெரும் புகழ்கொண்ட அமுல் என்ற வணிகப் பெயரையும், அதன் வணிக சாம்ராஜ்யத்தையும் 63 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தில் உருவாக்கி வளர்த்தெடுத்தவர் டாக்டர் வர்கீஸ் குரியன்.  அமுல் என்றால் ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெட் என்று பொருள் (Anand Milk Union Limited). உருவாகி சில மணி நேரத்திற்குள்ளேயே கெட்டுப் போகக்கூடிய ஒரு பொருளை வைத்துக்கொண்டு பலகோடி மக்களின் ஏழ்மையை, ஒரு தனிமனிதனால் எப்படித் தீர்க்க முடியும் என்பதற்கு உலகில் இருக்கும் ஒரே உதாரணம், டாக்டர் வர்கீஸ் குரியந்தான்!  ஒரு தனிமனிதனால் ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றியமைக்க முடியும் என்று நிரூபித்த ஒரே இந்தியரும் அவர்தான் என்று திட்டவட்டமாகச் சொல்வேன்.

டாக்டர் வர்கீஸ் குரியன் அமுலின் உரிமையாளரோ, முதலீட்டாளரோ ஆக ஒருபோதும் இருந்தவரல்ல.  ஒரு அரசு ஊழியராக இருந்துகொண்டே ஒரு சமூகத் தொழில் முனைவராக அவர் முன்வந்தபோது நிகழ்ந்த அதிசயம்தான் அமுல்!  அமுல் ஒரு மாபெரும் கூட்டுறவு சங்கம்! 16,200 கிராமிய கூட்டுறவ் சங்கங்களின் கூட்டமைப்பு அது. 32 லட்சம் பொதுமக்கள்தான் அதன் உரிமையாளர்கள்!  ஆண்டில் 12,000 கோடியின் மொத்த விற்பனையுடன், பாலையும், பால் பொருட்களையும் பதப்படுத்தி விற்கும் உலகின் தலைசிறந்த நிறுவனமாக இன்று அமுல் திகழ்கிறது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாலில் தொடங்கி வெண்ணெய், குழந்தைகளுக்கான பால் சத்துணவுகள், பால் கட்டி, பால் பொடி, தயிர், நெய், பாலாடை, பனிக்கூழ், பால் குளிர்பானங்கள், ஆரோக்கிய பானங்கள், உறைவிக்கப்பட்ட பால், பால் மொரப்பா, பால் அடிப்படையிலான பலகாரங்கள் மற்றும் மிட்டாய்கள் போன்றவற்றின் உற்பத்தியிலும் விற்பனையிலும் அமுலுக்கு நிகராகயிருக்கும் நிறுவனங்கள் உலகில் குறைவே.  அமுலில் டாக்டர் வர்கீஸ் குரியன் ஆரம்பித்த செயல் பெருவெள்ளம் (Operation Flood) திட்டத்தின் வாயிலாகத்தான் இந்தியா முழுவதும் பால் கூட்டுறவு சங்கங்கள் உருவானது.  அதனூடாக உலகில் மிக அதிகமாகப் பாலை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறியது!

உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்பதற்கான மிகக்குறைந்த காரணங்களில் ஒன்று!  எல்லாமே டாக்டர் வர்கீஸ் குரியனின் சாதனைகள்.  மாத சம்பளம் வாங்கும் ஒரு அரசு ஊழியரின் அன்றாட வேலைகளின் பகுதியாக நினைத்துக் கொண்டே இதையெல்லாம் செய்து முடித்தார் அவர்!


நன்றி : திரு ஷாஜி மற்றும் உயிர்மை மாத இதழ்

இன்றைய சிந்தனைக்கு-161:



வெற்றி வந்தால் பணிவு அவசியம்
தோல்வி வந்தால் பொறுமை அவசியம்
எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம்
ஆனால்
எது வந்தாலும் நம்பிக்கை அவசியம்.

-         துரை ஏ.இரமணன், துறையூர்
-         பேல்பூரி, தினமணி கதிர் 2013 ஜனவரி ஆறாம் நாள் இதழ்

நன்றி: திரு துரை ஏ.இரமணன் மற்றும் தினமணி கதிர்

11 ஜன., 2013

சூரியின் டைரி-61: நோகவைத்தவை - காவிரிப் பிரச்னை


சூரியின் டைரி-61:  நோகவைத்தவை - காவிரிப் பிரச்னை

குமுதம் தீராநதி 2013 ஜனவரி இதழில் வெளியான செ.சண்முகசுந்தரம் எழுதிய வறண்ட காவிரியில் தொலைந்த மனிதம் என்ற மிகச் சிறப்பான கட்டுரையிலிருந்து ஒரு பகுதி மட்டும்:
----------

காவிரி டெல்டா மாவட்டங்களில் அடிப்படை வாழ்வாதாரம் சீர்குலைவுக்கு ஆளாகத் தொடங்கி பல்லாண்டுகளாகி விட்டன.  தொடர்ச்சியான நதிநீர்ப் பிரச்னை.  தமிழ் நாட்டை மாறி மாறி ஆண்டு கொண்டிருக்கும் கட்சிகளின் உதாசீனம், பாசனக் கட்டமைப்புகளை வலுப்படுத்தாமல் வைத்திருக்கும் போக்கு, விளை நிலங்களை விரைவாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ரியல் எஸ்டேட்.  வேறு வேலை வாய்ப்புகளைத் தேடி இடம் பெயரும் டெல்டா விவசாயத் தொழிலாளர்கள், விளை நிலங்களை மனைகளாக வாங்கிப் போட்டு விட்டு சாப்பாட்டுக்கு மைசூர் பொன்னியை எதிர்பார்க்கும் நடுத்தர வர்க்கத்தினர், விவசாயிகளை புழுப்பூச்சிகளைப் போல் பார்க்கும் அரசு, வங்கி அதிகாரிகள், பிரச்னை வந்தால் மட்டுமே அது பற்றி சிந்தனை கொள்ளும் தமிழக, கர்நாடக ஆளும் வர்க்கங்கள், இரு மாநிலங்களிலும் மக்களை உசுப்பிவிடும் சுய நலக் கட்சிகள், மௌனமாகிப் போன மனசாட்சி கொண்ட இரு மாநில மக்கள், வேடிக்கை பார்க்க்கும் மத்திய அரசு, தனது அதிகாரம் வெற்று வேட்டாகிப் போவதை இயலாமையுடன் நோக்கும் உச்ச  நீதி மன்றம், களவாடப்படும் குளங்கள், ஏரிகள்.  யாரிடம் போய் முறையிடுவது?

....

பாமணி ஆற்றில் தண்ணீர் வந்து, தம்மங்குறிச்சி வாய்க்காலில் மோட்டார் போட்டு இறைத்துவிட்டு, அதன் நான்கு கிலோமீட்டர் தொலைவுள்ள மருதங்காவெளியின் வானம் பார்த்த பூமிக்கு கொண்டு வந்து, இரவில் வாய்க்கால் வரப்பில் படுத்து, பாம்புகளுடன் பழகி, சொற்பத்தண்ணீரையும் வயலுக்குப் பாய்ச்சிய அனுபவங்கள் என்  நினைவில் நிழலாடுகின்றன. சமீபத்தில் அப்பகுதிக்குச் சென்றிருந்தபோது, அவ்விளை நிலங்கள் எல்லாம் ரியல் எஸ்டேட் மனகளாயிருந்தன. வாய்க்கால் தூர் வார வராத அதிகாரி அவ்விளை நிலங்களை அளந்து மனைக் கற்கள் போட ஓடோடி வருகிறார்.  என்ன தேசம் இது?


நன்றி: திரு செ.சண்முகசுந்தரம் மற்றும் குமுதம் தீராநதி 

10 ஜன., 2013

சூரியின் டைரி-60: தென்றலாய் வருடியவை - குப்பை கிடங்குகளாய் மாறிய ஏரிகளைச் சீரமைத்த அருண் கிருஷ்ணமூர்த்தி


சூரியின் டைரி-60: தென்றலாய் வருடியவை குப்பை கிடங்குகளாய் மாறிய ஏரிகளைச் சீரமைத்த அருண் கிருஷ்ணமூர்த்தி

தினமலர் மதுரைப் பதிப்பு ஜனவரி ஒன்பதாம் நாள் இதழிலிருந்து:

சிறுவயதிலேயே ஏரி, பறவைகள் பிடிக்கும்.  சென்னை கீழ்கட்டளை ஏரியில் பறவை, மீன், ஆமை இருந்தன.  பின் குப்பைக் கிடங்காக மாறியதால், ஏரியை சீரமைக்கும் எண்ணம் ஏற்பட்டது.  நன்கு படித்து, கூகுள் நிறுவனத்தில் வேலை செய்தேன். 

வேலை பார்க்கும் போதே ஆந்திராவின் குருனாதன் செருவு ஏரி, சென்னையின் லக்ஷ்மி புஷ்கரம் ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழுவதும் தூர் வாரி, சுற்றிலும் வேலியிட்டு, நண்பர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியோடு சீரமைத்தேன்.  ஆர்வத்தால் கூகுள் நிறுவ்ன வேலையை ராஜினாமா செய்து, முழு நேரமும் ஏரியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டேன். 
....
ஏரிகளை சீரமைத்து, சுற்றுச்சூழலை பாதுகாத்ததற்காக, சர்வதேச இளைஞர் சங்கமும், சுவிட்சர்லாந்தின் ரோலக்ஸ் நிறுவனமும் விருது அளித்து பெருமைப்படுத்தின. 

விருதிற்கான பணத்திற்குப் பதில், கீழ்கட்டளை ஏரியை ம்றுசீரமைக்கும் தொழில் நுட்ப உதவிகளை வழங்கக் கேட்டேன்.  நிறுவனம் அதற்கு சம்மதம் தெரிவித்தது.  விரைவில் பணி துவங்கும்.  மொபைல்: 9940203871


மனமார்ந்த பாராட்டுக்கள்: திரு அருண் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு
நன்றி:  தினமலர் நாளிதழ் 

8 ஜன., 2013

சூரியின் டைரி-59: நோக வைத்தவை


சூரியின் டைரி-59:   நோக வைத்தவை

ஆனந்த விகடன் டிசம்பர் இருபத்தாறாம் நாள் இதழின் தலையங்கத்திலிருந்து ஒரு பகுதி:

வெளி நாட்டு வியாபாரி... உள் நாட்டு துரோகம்!

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் அங்குள்ள வியாபார நிறுவனங்களின் முன்னேற்றத்திற்காகவும் லாபி செய்வதற்கென்றே அங்கு லாபியிஸ்ட்கள் இருக்கிறார்கள். அந்த நாட்டின் அதிபிரம்மாண்டமான சில்லறை வர்த்தக நிறுவனங்கள் மட்டுமல்ல... கம்ப்யூட்டர் நிறுவனங்களும், பிரபல மருத்துக் கம்பெனிகளும்கூட இந்தியச் சந்தையை ஆக்கிரமிப்பதற்காக, பணத்தை இறைத்து லாபி செய்திருக்கும் செய்தி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் இருந்தே ஆதாரபூர்வமாக வெளியாகி இருக்கிறது.

இதில், இந்திய நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களைக் குளிரிவிப்பதற்கான செலவும் அடங்குமா என்பதுதான் இப்போதைய கேள்வி.

....

ஆண்டாண்டு காலமாக அந்நியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்துவிட்டு, சுய உழைப்பாலும், மூலதனத்தாலும் பல இந்தியக் குடிமக்கள் சொந்தமாக வியாபாரம் பார்க்கத் தலைப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் மறுபடியும் அவர்களை எல்லாம் அடிமைகள் ஆக்குவதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் மத்திய் அரசு செய்கிறது என்பதுதான் வலிமிக்க நிஜம்.

அமெரிக்க லாபி செலவில், இந்தியாவுக்குள் அளிக்கப்பட்ட லஞ்சமும் உண்டா?  இதற்கு, வழக்கமான வழுக்கல் பதிலைத் தந்துள்ளது காங்கிரஸ்.  அப்படி எல்லாம் இருக்காதாம்.  ஒருவேளை இருந்து விட்டால், சட்டம் தன் கடமையைச் செய்யுமாம்!  நாட்டை ஏலம் விடும் மொத்த வியாபரிகள் சிக்கல் வ்ந்தால் சொல்லும் கெட்ட வார்த்தை அல்லவா இது!

....

நன்றி:  ஆனந்தவிகடன்







7 ஜன., 2013

சூரியின் டைரி-58: குமுற வைத்தவை: விலைவாசி ஏன் உயர்கிறது?


சூரியின் டைரி-58:  குமுற வைத்தவை: விலைவாசி ஏன் உயர்கிறது?

ஆனந்தவிகடன் டிசம்பர் இருபத்தாறு இதழில் டி.எல்.சஞ்சீவிகுமார் எழுதிய வந்தே விட்டது வால்மார்ட் என்ற கட்டுரையிலிருந்து ஒரு பகுதி மட்டும்:

இன்று பொருட்களின் விலைவாசி அதிகரித்துக்கொண்டே செல்வதற்கு உண்மையான காரணம் என்ன தெரியுமா?

ஆன்லைன் சூதாட்ட வர்த்தகம், சேவை வரி, சுங்க வரி, உற்பத்தி வரி, வாட் வரி, வருமான வரி என சகல திசைகளில் இருந்தும் தாக்கும் விதவிதமான வரிகள்தான். ஒரே பொருள் பத்து பேரிடம் கைமாறி வரும்போது பத்து இடங்களிலும் அதற்கு வரி விதிக்கப் படுகிறது. அந்த வரிவிதிப்புகள்தான் பொருட்களின் விலையை அதிகரித்துவிடுகிறது.

அரிசி விலை ஏன் உயர்கிறது? விவசாயிகள் பெயரில் பெரும் நிறுவனங்களின் ஆட்கள் விவசாயிகளிடமிருந்து ஒட்டு மொத்தமாக நெல் கொள்முதல் செய்து அதை அரசு குடோனில் இருப்புவைக்கிறார்கள். இந்த இருப்பைக்காட்டினால் வெளி நாட்டு வங்கிகள் மிகக் குறைந்த வட்டியில் கடன் அளிக்கும். நாடு முழுவதும் ஆஙகாங்கே இப்படி நெல்லைப் பதுக்கிவைக்க, ஒரு கட்டத்தில் தட்டுப்பாடு அதிகரிக்கும்.  விலை கடுமையாக இருக்கும். நெல்லை அதிக விலைக்கு விற்பார்கள்.  லாபத்துக்கும் லாபும். இடையே இருப்பைக் காட்டி மிகக் குறைந்த வட்டியில் கடன் வாங்கி அதிலும் லாப்ம்.  இவை மிகச் சில உதாரணங்கள் மட்டுமே.  இன்னும் இப்படி நிறையக் குள்றுபடிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்..

தவறு என்று தெரிந்தும் அதை ஏன் ஊக்குவிக்கிறது மத்திய அரசு?  சாதாரண வியாபாரிக்குத் தெரிந்த உண்மை, மெத்தப் படித்த பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் தெரியாதா? மிக நன்றாகத் தெரியும்.......
.

அந்நியரின் உரத்துக்கு மண்ணைப் பலியாக்கினோம், பாழாய்ப்போனது விவசாயம். இப்போது கிழக்கிந்தியக் கம்பெனி பாணியில் ஊடுருவியிருக்கும் வால்மார்ட்டுக்கு    நம்மவர்களின் வணிகத்தையும் பலி கொடுக்கப் போகிறோமா?!

நன்றி: திரு சஞ்சீவிகுமார் மற்றும் ஆனந்தவிகடன். 


தவறான நபர்கள் கையில் இந்த நாடு சிக்கிக் கொண்டு என்ன பாடு படுகிறது?  தங்கள் சுய நலத்திற்காகவும், வெளிநாட்டான் தங்களைப் பாராட்ட வேண்டும் என்பதற்காகவும், தங்கள் சொந்த நாட்டிற்கும், மக்களுக்கும் இவர்கள் இழைக்கும் அநீதிகளை என்னென்று சொல்வது?



வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் நுழைவதற்காக மட்டும் சென்ற நான்காண்டுகளில் ரூபாய் நூற்றம்பது கோடி லஞ்சம் கொடுத்துள்ளது என்பதும், அதைத் தொடர்ந்து அவர்கள் மட்டுமல்ல அவர்களைப் போன்ற மற்ற நிறுவனங்களும் இதுபோல் நிறைய செலவு செய்துள்ளன என்ற் செய்திகளும் குமுற வைக்கின்றன, நெஞ்சைக் கொதிக்க வைக்கின்றன.

இந்த நிறுவனங்களெல்லாம் நம்மைக் கொத்திக் கூறுபோடக் காத்திருக்கின்றன என்பதை நாம் உணரவேண்டும்

இந்தத் தீய சக்திகளிடமிருந்து இந்த நாடு என்று மீளுமோ?  கிழக்கு இந்தியக் கம்பெனி என்று வியாபாரத்திற்காக வந்த ஒரு நிறுவனம் இந்த நாட்டை நூற்றுக் கணக்கான ஆண்டுகள் அடிமைப்படுதியதை எப்படி அவ்வள்வு எளிதாக நாம் மறந்துவிட்டோம்?









6 ஜன., 2013

சூரியின் டைரி–57: தென்றலாய் வருடியவை - வழிகாட்டும் திம்பக்கு!


சூரியின் டைரி 2013 ஜனவரி ஆறாம் நாள் - தென்றலாய் வருடியவை: வழிகாட்டும் திம்பக்கு!

என் வலைப்பூக்களுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு குறைந்துகொண்டே வருகிறது.  பொதுவாக மனம் எதிலும் ஒட்ட மறுக்கிறது.  ஈடுபாடு இல்லாமல் ஏனோதானோ என்று வாழ்ந்துகொண்டிருக்கிறேன். போராடித்தான் சிறு செயலையும் செய்ய வேண்டியிருக்கிறது.

அப்படி ஒரு போராட்டத்தின் முடிவாக இந்தப் பதிவு:

பெரிதாக ஏதோ சொந்த சரக்கைப் பதியப் போவதில்லை. இன்னும் இருக்கிறேன், கதை முடிந்துவிடவில்லை என்று காட்ட, நான் படித்தவற்றில் மனதில் படிந்த சிலவற்றை மட்டும், சுருக்கமாக இங்கே பதிவு செய்கிறேன்.

படித்த இதழ், ஆனந்தவிகடன் டிசம்பர் இருபத்தாறாம் நாள் இதழ்.

மருத்துவர் கு.சிவராமன் அவர்களின் தொடர் கட்டுரை, ஆறாம் திணையிலிருந்து:

திம்பக்கு சூழலிலும் விவசாயத்திலும் பெரும் மாற்றத்தைக் காட்டியுள்ள ஆந்திர அமைப்பு.  தினையும் வரகும் பயிராக்கி பெருமளவில் பயன்படுத்திகிறார்களாமே? என்று நான் தேடிப் போன ஊர் இது.  திம்பக்கு பகுதிக்குள் நுழைந்ததும் அவர்கள் ஏற்படுத்தியிருந்த மாற்றம் பிரமிக்க வைத்தது. கிட்டத்தட்ட நூறு கிராமங்கள். ஏறத்தாழ முப்பதாயிரம் மக்களை வறண்ட விவசாயத்தில் இருந்து மீட்டு (இந்தியாவின் இரண்டாவது பெரிய மிக வறட்சி மாவட்டம் அனந்தப்பூர்1) அவர்கள் வாழ்வியலை உயர்த்தியதுடன், அருகில் உள்ள வறண்ட மூன்று மலைகளைப் பசுமைப் பூங்காவாக்கி இருக்கின்றனர் திம்பக்கு மக்கள்.  ஊரே தினையையும், ராகியையும் வரகையும்தான் மூன்று வேளையும் சாப்பிடுகிறது.  அங்கு ஓர் உணவு விடுதிக்குப் போனால் சாம்பார், ரசம், தயிர், கோவைக்காய் பொரியல் என்று முழுச்சாப்பாடும் தினை அரிசியில் போடுகிறார்கள்.  இன்று இந்தியா முழுவதும் அந்த மக்கள் இயற்கை விவசாயத்தில் எந்த ரசாயனக் கலப்பும் இல்லாத அந்த சிறு தானியத்தை மிகக் குறைவான, சரியான விலையில் விற்று தங்கள் வாழ்வை உயர்த்தி வருகின்றனர்.....

படிக்கப் படிக்க மன மகிழ்வையும், பிரமிப்பையும் ஏற்படுத்திய கட்டுரை இது.  இதை அனைவரும் படித்து மகிழவேண்டும், சிந்திக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிறு பகுதியை மட்டும் பதிகின்றேன்.  மொத்தத்தில் இந்தத் தொடர் கட்டுரை விடாமல் தொடர்ந்து படித்து மகிழ, பயன் பெற வேண்டிய ஒன்று.

மருத்துவர் சிவராமன் அவர்களுக்கும் ஆனந்தவிகடனுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளும், பாராட்டுக்களும்.