13 மார்., 2020

குட்டிக்கதை

குறுங்கதை 30 

குற்றத்தின் மலர்

போலீஸ் ஸ்டேஷனுள் ஒரு மஞ்சள் ரோஜாச் செடியை யார் நட்டு வைத்தார்கள் என்று தெரியவில்லை. அந்தச் செடியில் நிறைய மஞ்சள் ரோஜாக்கள் பூத்திருந்தன.

லாக்கப்பில் எவனோ ஒரு குற்றவாளி அடிவாங்கும் போது ஒரு ரோஜாப்பூ “கொடூரம் “என்றபடியே தலைகவிழ்ந்து கொண்டது.

மகளைக் காணாமல் தேடும் தந்தை போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வந்து நின்று கண்ணீர் விட்டபோது ரோஜாச் செடி சொன்னது

“கண்ணீர் குருதியை விடக் கனமானது.“

சந்தேகத்தின் பேரில் அடித்து இழுத்துவரப்பட்ட இளைஞனின் தாயும் சகோதரிகளும் ஸ்டேஷன் வேப்ப மரத்தடியில் செய்வதறியாமல் நிற்பதைக் கண்ட ரோஜாச் செடி சொன்னது

“குற்றவாளியை விடவும் அவனது குடும்பமே அதிகம் துயரமடைகிறார்கள்“.

பின்னொரு நாள் கைது செய்யப்பட்ட திருடனைக் காண வந்த அவனது மகள் வண்ணப்பென்சிலால் ரோஜாச் செடியை வரைய முற்பட்ட போது ரோஜா சொன்னது.

“குழந்தைகளின் மீது குற்றத்தின் நிழல் படிவதேயில்லை.“

அடியும் வலியும் கூக்குரலும் வேதனையும் கருணைக்காகக் கெஞ்சும் குரல்களையும் கேட்டுக் கேட்டு ரோஜாச்செடி தன்னைக் குற்றசாட்சியமாக எண்ணி வாடியது. போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் இத்தனை பெண்களில் ஒருவருக்குக் கூடத் தன்னைப் பறித்துச் சூடிக் கொள்ளும் தைரியம் வரவில்லையே என ஆதங்கம் கொண்டது.

பறவைகள் வராத, வண்ணத்துப்பூச்சி பறக்காத, சிரிப்பு சப்தமே கேட்காத இடத்தில் ரோஜாச்செடியாக இருப்பதற்காக வருந்தியது.

இதைக் கண்ட போலீஸ் நிலையத்தின் சிவப்பு வண்ண சுவர் சொன்னது.

“போலீஸ் ஸ்டேஷனுக்குள் தேநீர் தன் ருசியை இழந்துவிடுகிறது. மனிதர்கள் தன் குரலை இழந்துவிடுகிறார்கள். சொற்கள் தன் அர்த்தம் இழந்து விடுகின்றன. இவ்வளவு ஏன் பகல்வெளிச்சம் கூடத் தைரியம் இழந்து தயங்கித் தயங்கியே உள்ளே வருகிறது… அழகான மஞ்சள் நிறம் கொண்டிருந்தாலும் நீ குற்றத்தின் மலரே. இருக்குமிடமே உன் மதிப்பைத் தீர்மானிக்கிறது அதை மறந்துவிடாதே“.

“உண்மை தான்“ என்றபடி வாடி நின்றது அந்த மஞ்சள் ரோஜா

நன்றி: திருமதி சந்திரபிரபா ராமகிருஷ்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக