25 ஏப்., 2020

அறிவியல் உலகம்

நன்றி: அறிவுஜீவி சுஜாதா வாசகர்கள் குழு

தலைமைச் செயலகம்: சுஜாதா நன்றியுரை

இந்தக் கட்டுரைத் தொடர் ஜூனியர் விகடன் இதழில் தொடர்ந்து வெளியிடுவதற்கு ஊக்கமளித்து, அந்தப் பத்திரிக்கையில் முன்பு நான் எழுதிய “ ஏன்? எதற்கு? எப்படி?” கேள்வி பதில்கள்தான். அது தமிழ் பத்திரிக்கை உலகில் புதிய அத்தியாயத்தை துவங்கியது. வாரப்பத்திரிகையில் அறிவியல் விஷயங்கள் போட்டால் படிப்பார்களா என்பது பற்றிஎல்லோருக்கும் சந்தேகம் இருந்த காலம் அது. இருந்தும் ஆசிரியர் பாலசுப்ரமணியன் அவர்கள் தைரியமாக அதை வெளியிட்டது அது எல்லோருக்கும் சில மனக்கதவுகளைத் திறந்து ஆச்சரியங்களை அளித்தது. தொடர்ந்து அறிவியல் எழுத ஊக்கத்தையும் தந்தது. அந்தப் பகுதி அமோக வரவேற்பு பெற்று புத்தகமாக வந்து தமிழ் பதிவுலகத்தில் சாதனை படைத்தது.

இந்த முறை கொஞ்சம் சிக்கலான விஷயத்தை தொட்டுப் பார்க்கலாமே என்று மூளையை பார்க்கும் தைரியத்தையும் பாலசுப்பிரமணியன் அவர்களும் மதன் அவர்களும்தான் அளித்தனர். இந்தக் கட்டுரைகள் வெளிவந்த போது பக்கபலமாக பல மேல்நாட்டு குறிப்புகளையும் கட்டுரைகளையும் எனக்கு அனுப்பி வைத்து, அழகாக படம் போட்டு வெளியிட்டு என்னை ஊக்கப்படுத்தினார்.

இதனால் நான் நியூரோ அனாட்டமி, நியூரோ சயின்ஸ் போன்ற விஷயங்களில் விற்பன்னன் என்று எண்ணிக் கொள்ளவில்லை. இந்த அபாரமான தலைமைச் செயலகத்தை சற்றேனும் புரிந்துகொண்டு அதன் மர்மங்களை லேசாக கட்டவிழ்க்கும் போது, நம்மை நாமே அறிந்துகொண்டு, நம் திறமைகளை மேலும் சிறப்பாக பயன்படுத்த உதவி செய்யும் என்கிற குறிக்கோளுடன் தான் இந்த கட்டுரைத் தொடர் எழுதப்பட்டது.

புத்தகத்தின் பெரும்பகுதி The Brain : A Users Manual by Diagram Group என்கிற புத்தகத்தில் இருந்தும் Scientific American என்ற அமெரிக்கன் அறிவியல் புத்தகத்தில் இருந்தும் எடுக்கப்பட்டவை. அதன் ஆசிரியர்களுக்கும், எனக்கு இந்த தொடரின்போது பலவிதத்திலும் கடிதம் எழுதி ஊக்கமளித்து தங்களது பிரச்சனைகளை என்னுடன் இருக்கும் ஒரு சகோதரன் போல பங்கிட்டு எழுதிய வாசகர்களுக்கும் என் நன்றி.

புத்தகத்தை சிறப்பாக வெளியிடும் சாதனையாளர் விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அவர்களுக்கும் இணை ஆசிரியர் மதன். உதவி புரிந்த அசோகன், பப்ளிகேஷன் மேனேஜர்ஆரோக்கியவேல் ஆகிய அனைவருக்கும் நன்றி.

சில சுவையான கேள்வி பதில்கள்

மனிதன் இறக்கும் கடைசி நிமிடங்களில் தலைமைச் செயலகத்தில் என்னவெல்லாம் நடக்கும்- கே வி அழகிரி காஞ்சிபுரம்

இறக்கும் தருவாயில் மூளைக்கு ரத்த சப்ளை குறைவதால் மூளை ஆக்சிஜனுக்கு ஏங்கிப் போய் பகுதி பகுதியாக மடிகிறது. முதலில் மயக்கம் வந்து நினைவை இழக்கிறோம். மெல்ல மெல்ல ஒரு வீட்டில் விளக்கை அணைப்பது போல. ஆனால் மூளையைப் பொறுத்த வரை நாம் பிறந்து சில வருடங்களிலேயே இறக்க ஆரம்பித்து விடுகிறோம். சுமார் இருபது வயதில் உச்சத்தில் இருக்கும் மூளை திறமை, புத்திசாலித்தனம் அப்போதிலிருந்தே படிப்படியாக குறைகிறது. 50 வயதுக்குள் நம் மூளை சில உச்ச ஸ்ருதி ஒலிகளை கேட்கும் திறமையை இழக்கிறது. மெல்ல மெல்ல செவிடா. குறிப்பாக இடது காதில் நம் மூக்கு நாக்கு இரண்டிலிருந்தும் வரும் செய்திகள் பழுதடைகின்றன. குறிப்பாக ருசி, மூளை செல்கள் புதுப்பிக்கப்படுவதில்லை. தினம் ஆயிரக்கணக்கில் இவற்றை இழக்கிறோம். மூளையின் எடை ஒரு வருடத்திற்கு ஒரு கிராம் குறைகிறது.

கட்டக் கடைசியாக நம் இதயத் துடிப்பையும் மூச்சையும் கட்டுப்படுத்தும் செல்கள் நம் மூளை அடித்தண்டில் கீழ் பாகத்தில் உள்ளன. அவை செத்துப் போகும் போதுதான் நாம் நிஜமாகவே சாகிறோம். அதுவரை கோமா மயக்கத்தில், மூச்சுவிடும் மெஷினாக இருந்து, இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் நினைவுகள் மிதக்க, இதைத்தான் என்கிறார்கள்.

நாய்க்கு மட்டும் அப்படி ஒரு மோப்ப சக்தி எப்படி வந்தது? பூனை மட்டும் இருட்டை ஊடுருவி எப்படி பார்க்க முடிகிறது? சில மிருகங்களுக்கு இருக்கிற இந்த மாதிரி ஸ்பெஷல் சக்திகள் மனித மூளைக்கு மட்டும் ஏன் அமையவில்லை? - எம் பி பத்மநாபன் வேலூர்

இருந்தது; அவற்றை  துறந்து விட்டோம். நாய்க்கு மோப்ப சக்தி இரை தேடவும், இணை தேடவும் தேவை. அந்த தேவை அதற்கு இன்னும் இருக்கிறது. நமக்கு இந்த தேவைகள் இல்லை என்பதால் இல்லை. ஆனால் முறைகள் மாறிவிட்டன. இரை தர ஹோட்டல்களும், வீட்டில் அம்மா, மனைவி இவர்களும் இருக்கும்போது மோப்ப சக்தி அதிகத் தேவை இல்லை. நல்ல சம்பளமும், நாலு காசும், மேட்ரிமோனியல் விளம்பரங்களும் இருந்தால் இணை கிடைப்பது சுலபம். அதனால் இந்தச் சக்திகள் குறைந்துவிட்டன.

ராத்திரி பார்க்க சோடியம் வெளிச்சம் இருக்கவே இருக்கிறது. தேவைக்கேற்ப மாறுவதுதான் இயற்கையின் மகத்தான ரகசியம்.

ஜப்பானில் ‘ மக்கா’ குரங்குகள் நகர நாகரிகத்திற்கு ஏற்ப, தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு விட்டதைப் பற்றி ஒரு டிவி நிகழ்ச்சி காட்டினார்கள். திருப்பதியில் குரங்குகள் தலை மேல் ஏறிக்கொண்டு பேனாவை எடுத்து எஜமானனிடம் கொடுத்ததும் பரிணாம வளர்ச்சிதான்.

கேள்வி : ESP - அதாவது ஆவிகளோடு பேசுதல் உண்மையா அல்லது ஏமாற்று வேலையா? நியூரான் செல்களின் பாதிப்பா அல்லது பணம் பிடுங்கிகளின் வேலையா?

சுஜாதா : கடைசி

கேள்வி : மூளைச்சலவை - விளக்கம் சொல்லுங்களேன் - ஆர் விஜி, அரகண்டநல்லூர்

சுஜாதா : மூளைச்சலவை என்பது மருந்துகளையோ அல்லது மற்ற முறைகளையோ பயன்படுத்தி மூளையை கட்டுப்படுத்துவது. சோடியம் தயோபென்டோன் (Sodium Thiopentone) கொடுத்து ஒருவரிடமிருந்து உண்மையை வரவழைக்கலாம். Carbachol, Atrophine போன்றவற்றை மூளையின் ஒரு சில முக்கிய பாகங்களுக்கு கொடுத்தால் ஒரு சாதாரண ஆளை மிக சாதுவாகவோ, கொலைகாரனாகவோ ஆக்க முடியும். முனிசிபல் தண்ணீரில் ட்ராங்க்விலைஸர் (Tranquilizer) கலந்தால் ஒரு நகரத்தையே, ஏன் நாட்டையே சாத்வீமாக்க முடியும். BZ என்கிற சங்கதியை ஏரோசால் ஸ்ப்ரே அடித்து காற்றில் கலந்து எதிரிகளை கலங்கடிக்க முயற்சித்தார்கள். நரம்பு காஸ் (Gas) என்பது பயங்கரம். நம் நரம்புகளில் கலந்து கொள்ள ஒரு தசை நாரையும் அசைக்கமுடியாமல் மூச்சு முட்டி சாக வைக்கலாம். இதெல்லாம் எதற்கு? ஒரு ஆசாமி இருட்டில் தனியாக மூன்று மணி நேரம் அரைத்து வைத்தால் போதும்; தனிமை தாங்காது. மூன்றில் ஒருத்தர் தாய் நாட்டையே காட்டிக் கொடுப்பார். கணவன் தனக்குப் பிடித்த புடவையை மனைவிக்கு பிடிக்க வைப்பதும் கூட மூளைச்சலவை தான்.

கேள்வி : Biological clock எனப்படும் உயிரிக் கடிகாரம் மூளையில் உள்ளதா? முதுகுத் தண்டில்?- எஸ் செந்தில்குமார் பழனி

சுஜாதா : உயிரிக் கடிகாரம் சரியே. நம் மூளையின் செயல்கள் 90 நிமிட சுழற்சியில் இயங்குகின்றன. அதாவது 90 நிமிடத்திற்கு ஒருமுறை மூட் (Mood) மாறுகிறோம் என்கிறார்கள். நம் நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை, உடல் உஷ்ணம், சுரப்பிகள், எண்ணம், அளவுகள் இவ்வாறு 40 செயல்பாடுகள் தினப்படி உயர்ந்து தணிக்கின்றன. இதற்கும் தினப்படி சூரியகதிக்கும் சம்பந்தம் இருப்பது போல தோன்றுகிறது. நமக்குள் ஏதோ ஒரு அலாரம், கடிகாரம் தக்க நேரத்திற்கு விதவிதமான ஸ்விட்சுகளை அனைத்து ஏற்றுவது போல். இந்த செயல்பாட்டை Biological Clock என்கிறார்கள்.

இதை ஸர்காடியன் ரிதம் (Circadian Rhythm) என்பார்கள். Circadian என்றால் தினசரி அல்லது தினப்படி. காலை மாலை இல்லாமல் இருக்கும் குகைவாசிகள், அஸ்ட்ரோநாட்கள் ஆகியோருக்கு இது கொஞ்சம் கலைந்துவிடுகிறது.

பரிசோதனைகள் மூலம் நம்முள் பதிந்திருக்கும் செயல்பாடுகள்தான் இந்த உயிரி கடிகாரம் என்று கண்டறிந்திருக்கிறார்கள். இந்த மெக்கானிசம் எளிய உயிர்களி கூட உள்ளது.

மூளையின் சில பகுதிகளில் இருந்து வரும் நரம்பு செய்திகள் இந்த செயல்பாடுகளை கட்டுப்படுத்துவது என்னவோ நிஜம். ஒரு பெண்ணின் மாதாந்திர மாறுதல்களை கட்டுப்படுத்துவது அவள் ஹைபோதலாமஸ் என்ற ஒரு பகுதி. ஹைபோதலாமஸ்ஸை மூளையின் கீழ்ப்பகுதி கட்டுப்படுத்துகிறது எனவே அங்கே கடிகாரம் இருக்கிறது.

ஒரு நடை அமெரிக்காவுக்கு போய்விட்டு திரும்பி வாருங்கள். ஜெட்லாக் (Jetlag) கடிகாரத்தை கலைத்துவிட்டு இருக்கும் . ஒரு வாரம் ஆகும் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ள.

எஸ். பாலசுப்ரமணியன் (ஆசிரியர் ஆனந்தவிகடன்) அவர்களின் என்னுரை:

‘எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்’ என்ற பழமொழி, தலைக்குள் இருக்கும் மூளையைத்தான் குறிப்பிடுகிறது. மனித மூளை அதிசயமானது. அதன் செயல்பாடுகள் வியப்பானவை, புதிரானவை. மருத்துவ மேதைகளும் விஞ்ஞானிகளும் இன்னமும் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நமது உடலை அடக்கியும் கட்டளைகள் பிறப்பித்தும் இயங்கும் மூளையைத் தலைமைச் செயலகமாகவே குறிப்பிடலாம்.

சுஜாதா  ஊழலற்ற இந்தத் தலைமைச் செயலகத்தின் சுறுசுறுப்பான பணியை எளிய நடையில் புரியவைத்தார். மிகவும் நுணுக்கமான விஷயங்களைக்கூட வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்ளுமாறு எழுதிய சுஜாதாவின் தலைமைச் செயலகத்தை எத்தனை பாராட்டினாலும் தகும்! 

இந்தப் புத்தகத்தைப் படிக்கும் வாசகர்களும் இதை ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

நன்றி: திரு ஆர்.சி.நடராஜன், சுஜாதாவின் கடைசி பக்க ரசிகர் குழு, முகநூல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக