5 அக்., 2020

ஹோமியோபதி : உயிர் காக்கும் மருந்துகள் - ஆரம் மெட்டாலிகம் (AURUM METALLICUM)

உயிர் காக்கும் தமாமருந்துகள்---5
(பகுதி - 1)

ஆரம் மெட்டாலிகம்
Aurum Mettalicum

மருந்தின் மூலம் :-

ஆரம் மெட்டாலிகம் என்று அழைக்கப்படும் தங்கம்  அல்லது  பொன் (Gold) என்பது மஞ்சள் நிறமான ஓர் உலோகமாகும். தங்கம் Au என்ற குறியீட்டினால் குறிக்கப்படுகிறது. இதன் அணு எண் 79.  இது மென்மையான ஆபரணங்கள் செய்வதற்கும், முற்காலத்தில் 

நாணயமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது வெப்பத்தை நன்கு கடத்த வல்லது.

தங்கமானது வரலாற்று ரீதியாக அரிய உலோகமாகவே கருதப்பட்டு வந்தது. தங்கம் காரட் என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில்  ஆபரணங்கள் செய்ய முடியாது. 

தங்கம் பெரும்பாலும் நிலத்தடியில் தனி நிலையிலேயே ரேகை போல பாறைகளில் படர்ந்திருக்கும். தங்கம், சுரங்கங்கள் மூலம் தோண்டி எடுக்கப்படுகிறது.பாறைகளில் வெடி வைத்துத் தகர்த்துத் தங்கத்தை இரசாயன (வேதியியல்) முறையில் பிரித்தெடுக்கிறார்கள். அதன்பின் மின்பகுப்பு முறையில் சுத்தம் செய்யப்படுகிறது.

மருந்தின் சித்திரம் :-

ஆரம் (தங்கம்)மின் சாராம்சமான மையக்கரு, "மனஅழுத்தமும், வாழ்க்கையின் மீதான வெறுப்பும்" ஆகும். இறுதியில் இந்த நபர்  உயிரோடு வாழவே விரும்ப மாட்டார். நடைமுறையில் எந்தவொரு துயரர் நேர்காணலிலும் இந்த மையக்கருவை அவர்கள் திறந்த மனதுடன் ஒத்துக்கொண்டாலும் அல்லது இல்லை என்றாலும் நாம் இதைக் காணலாம்.

ஆரம் துயரர்கள் எதையும் திறந்த மனதுடன் வெளிப்படுத்த மாட்டார்கள். அவர்களின் உள்ளூர உணர்வுகளை, அவர்களால் அவ்வளவு எளிதாக ஒப்புக்கொள்ள முடியாது. இறுதியில் அவர்கள் "மனஅழுத்தம்" என்ற வார்த்தையை எளிதாக உபயோகப்படுத்துவார்கள். ஆனால் தங்களுடைய நிலையை, மிகக்குறிப்பாக விவரிக்க திறனற்றவர்களாக இருப்பார்கள். ஆரம்மின் நோயியல் சார்ந்த விஷயங்கள், பல படிநிலைகளில் காணப்படுகின்றன. ஆனால் எப்போதும் அவர்கள் இந்த உலகத்துடனான தங்களின் உறவை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான பாதையையும் அடைத்தே வைத்திருப்பார்கள்.

இத்தகைய மனிதர்கள் தங்களுக்குள்ளாகவே, தாம் இந்த உலகத்திலிருந்து மிகவும் தனிப்பட்டவர்களாக உணர்வார்கள். அவர்கள் எப்போதும் தங்களுக்குள்ளாகவே இருப்பார்கள். அவர்கள் மன அழுத்தத்தையோ அல்லது இக்கட்டான நிலையையோ உணரும்போது அதை  மாற்றக்கூடிய நெருக்கமான நண்பர்களை பெற்றிருக்க மாட்டார்கள். ஆனால் எப்போதும் அவர்கள் மற்றவர்களுடனான செயல் ரீதியான தொடர்புகளில் முறையாகவும், சரியாகவும் இருப்பார்கள். (காலி.கார்ப்பில் இருப்பதை போல)

இந்த மனிதர்கள் சரியான நேர்மை, நியாயம், பொறுப்பு போன்றவைகளை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் அநீதியை மற்றவர்களின் மீது சுமத்தும் விருப்பமற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் அறிவார்த்தமாக இருப்பதிலும், கடினமாக உழைப்பதிலும், காரியங்களில் வெற்றி பெறுவதிலும் மிகவும் முனைப்பாக இருப்பார்கள். இது போன்று இருப்பவர்களில் சிலர் சமூகத்தில் மிக உயர்ந்த நிலைகளையும் அடைகிறார்கள்.

இதுவரையில் இவர்களை பார்த்தோம். இதற்கு மேலாக அதாவது நோயியல் சார்ந்த முதல் படிநிலையில் இந்த மனிதர்கள் விரக்தியை (despondency) வெளிப்படுத்துவார்கள். (பொதுவாக வாழ்க்கையின் மீதான திருப்தியின்மை -- குறிப்பாக சமூகம் மற்றும் தனிப்பட்ட உறவுகள் ரீதியாக) அவர்கள் உணர்சிகளை (emotional) எளிதாக வெளிப்படுத்தாத, திறந்த மனம் அற்றவர்கள். இது அவர்களை உணர்ச்சிகள் மட்ட அளவில் சரியான நிலைத்தன்மையில் (frail) அற்றவர்களாக வெளிப்படுத்தும். அவர்களுடைய உணர்ச்சிகள் வெளிப்படையாக தெரியும் வண்ணம் வெளிப்படுத்தப் போதுமான திறனற்றதாக காணப்படும். அவர்கள் மற்றவர்களிடமிருந்து, மிக எளிதாக பாசத்தை பெற்று கொள்வார்கள். ஆனால் அதை திரும்ப செலுத்த அவர்களுக்கு தெரியாது.

இருப்பினும் ஆரம் துயரங்களை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் அவர்கள் எந்த ஒரு விமர்சனத்திற்கும் எளிதில் உணர்ச்சி வயப்படக் கூடியவர்கள். அவர்கள் கருத்தார்ந்த (serious) சிந்தனை உடையவர்கள். அவர்கள் மீதான எத்தகைய கருத்துக்களை சொன்னாலும், அதை  இதயத்தில் பத்திரமாக போட்டுக் கொள்வார்கள். (Nat.Murயில் இருப்பதை போல). இன்னொரு நபர் கூறும் கடுமையான கருத்துக்களை (போனால் போகட்டும் என்று விடாமல்), மிகவும் தீவிரமாக மனதில் எடுத்துக் கொள்வார்கள். (அந்த நபர் ஒருவேளை பாதிப்படைந்த மனநிலையிலோ, மிகவும் அதிகமான அழுத்தத்திலோ, உடல்நிலை சரியில்லாத நிலையிலோ இருக்கலாம். இது போன்ற சாத்தியக்கூறுகள் இருப்பதை அவர்கள் கருத மாட்டார்கள்).

இவர்களின் இந்த பரந்த பார்வையில் "எந்த ஒன்றும் மேலோட்டமானது அல்ல" என்பது இருக்கும். இவர்களின் நியாயம் சார்ந்த உணர்வுநிலை காரணமாக, மற்ற நபரின் பார்வையிலான கருத்தை புரிந்து கொள்வார்கள். ஆயினும் அதை அவர்கள், "இதயத்தில் பத்திரப்படுத்திக் கொள்வார்கள்" (இதுவே இந்த மருந்திற்கான சரியான சொற்றொடராகும்). மற்றவர்களுக்கான மாறுபட்ட பார்வையிலான கருத்துக்கள் இருக்கும் என்பதை இவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அதனை தொடர்ந்து அந்த நபரின் உறவை தொடர்வதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் இழந்துவிட்டதாக முடிவையும் செய்வார்கள். (குறிப்பு:- என்ன இருந்தாலும் தவறு தவறுதான் என்கிற நீதியின் மீதான பார்வையே காரணம் ஆகும்).

இந்த செயல்முறையின் காரணமாக ஆரம் துயரர்கள் தங்களை சுற்றியுள்ள சமூகம் அல்லது உணர்ச்சி ரீதியான தொடர்புகளிடமிருந்து எவ்விதமான மகிழ்ச்சியும் பெறும் படியாக இல்லை என்ற கருத்துக்கு மெதுமெதுவாக வருவார்கள். அவர்கள் மகிழ்ச்சி அற்றவர்களாக மாறுவார்கள். எந்தவொன்றும் அவர்களை ஊக்கப்படுத்தவோ அல்லது பரவசப்படுத்தவோ செய்யாது.

ஆரம் துயரர்கள் பொதுவாக தாம் மற்றவர்களுக்காக நிறைய கொடுத்துவிட்டதாக நினைக்கும் மனிதர்களாக இருப்பார்கள். ஆனால் உணர்வுத் தளத்தில் அல்ல. அவர்கள் பெரும்பாலும் போதுமான வசதி படைத்தவர்களாக இருப்பார்கள் (வங்கியை நடத்துபவர்கள், நிதியாளுநர்கள், போன்ற பலர்...) அவர்கள் தங்களின் செல்வத்தை மற்றவர்களுக்கு தாராளமாக அள்ளி கொடுத்துவிடுவார்கள். ஆனால் அதற்கு பதிலாக அவர்கள் காயம்பட்டவர்களாக இருந்திருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக அவர்கள் விரக்தி அடைந்து அது அவர்களுக்குள் ஒருவிதமான அழுத்தத்தை உருவாக்கி விடும். இருப்பினும் அவர்கள் தருக்க சிந்தனையும், விவேகமும் உடையவர்களாக இருக்கின்ற காரணத்தினால் இத்தகைய எதிர்மறையான எண்ணங்களை வராமல் உள்ளமுக்குவதற்கு முயற்சி செய்வார்கள். இந்த முயற்சியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவர்கள் வெற்றி பெறவும் செய்வார்கள். ஆனால் அதன் பிறகு உணர்வு (emotional) தளத்தில் சற்றே நிலையற்ற தன்மையை அடைவார்கள். அதன் பிறகு அவர்கள் மனநிலையில் அலைபாய்தலையும், மாறுபாட்டையும் கொண்ட தன்மையை அனுபவிப்பார்கள்.

இந்த படிநிலை சமயங்களில் ஆரம் துயரர்கள் மாலைப் பொழுதுகளில் சமனம் அடைவார்கள். பகல்பொழுதுகளில் அவர்கள் அதிருப்தி, எதிலும் நிச்சயமற்ற, மன அளவில் எரிச்சல், சுயமரியாதை விஷயங்களில் முனைப்பின்மை, தங்களை தகுதியற்றவர்களாக நினைத்துக்கொள்ளுதல் போன்றவற்றை உணர்வார்கள். மாலை நேரம் வந்தவுடன் சுயமதிப்பு தன்மையில் தன்னை விடுவித்து கொண்டு உணர்ச்சியளவில் இருந்த அழுத்தங்களிலிருந்து விடுதலை பெறுவார்கள். இந்த நிலையில் ஆரம்மின் மன அளவு செயல்பாடுகள் சூரியன் மறைந்ததும் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த அடிப்படையில் பார்த்தால் ஆரம் துயரர்கள் செபியா மற்றும் மெடோரினம் போலவே காணப்படுவார்கள். குறிப்பிட்டு சொல்லும்படியான இந்த தன்மை இருந்தபோதிலும் சிற்சில சமயங்களில் ஆரம் துயரர்களில் மன அழுத்தத்தின் அதிகரிப்பை மாலை பொழுதுகளிலும் காணக்கூடும் என்பதும் உண்மையே.

தங்களின் எதிர்மறையான உணர்வுகளை உள்ளமுக்கும் முயற்சியில் தோல்வி அடையும்போது அவர்களிடமிருந்து பயங்கரமான மன எரிச்சலும் ஆத்திரமும் உடைத்தெறிந்துவரும். அவர்கள் மற்றவர்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் விஷயங்களை சொல்லலாம். இந்த படிநிலையில் ஆரம் துயரர்கள், நோயியல் ரீதியாக பார்க்கும்போது கொடூரமானவர்களாகவும் மற்றவர்களிடம் கடின நெஞ்சம் கொண்டவர்களாகவும் காணப்படுவார்கள் (குறிப்பாக அவர்களின் பேசுகின்ற விதத்தில்). உண்மையில் அவர்கள் மற்றவர்களை சபிப்பதில்லை- (அந்தவகையில் அவர்கள் மிக சரியாகவே இருப்பார்கள்) ஆனால் தன்னை சுற்றி இருப்பவர்களிடம் கடுமையாகவும் வன்முறை தன்மையிலும் தான் நடந்துக் கொள்வதாக சொல்வார்கள்.

இத்தகைய நஞ்சு கலந்த மனதை கட்டுப்படுத்தும் முயற்சியில் அவர்களின் உணர்வுகள் (emotional) முந்திக் கொண்டு செல்வதை பார்க்க முடிகிறது. ஆகையால் துயரர்கள் மனதளவு செயல்பாடுகளில் மேலும் மேலும் தங்களை உட்படுத்திக்கொள்கிறார்கள் ஆனால் நோயியல் ரீதியாக பார்த்தால் தீவிர உழைப்பாளர்களாகவும், தொடர்ந்து வேலை செய்பவர்களாகவும் காணப்படுவார்கள். ஏனெனில் உணர்வு அளவில் உள்ள அசௌகரியமான வாழ்க்கையை தவிர்ப்பதற்கு இந்த வேலை என்பது ஒரு வடிகாலாய் அமைந்துவிடுகிறது. இது ஒரு கட்டத்தில் அவர்களை தனிமைப்பட்டுவிட்டவர்களாக மாற்றிவிடுகிறது. இதன் விளைவாக அவர்கள் சத்து குறைப்பாடுமிக்கவர்களாகவும் அதிகரிக்க செய்துவிடுகிறது.

இதன் தொடர்ச்சியாக, இறுதியில் அவர்கள் தாங்கள் வாழ்க்கையில் முழுவதும் தோற்றுவிட்டதாக எண்ணிக்கொள்வார்கள். ஆனாலும் தாங்கள் திறமையுள்ள, பயனுள்ள நபர்களென்று நம்ப வேண்டுமென்று மற்றவர்கள் முன் நடந்துக்கொள்வார்கள். உள்ளுக்குள் தங்களுக்குள்ள இந்த நிலைக்கு, உடைமைக்கு, பொறுப்புக்கு தாங்கள் தகுதியானவர்கள் அல்ல, என எண்ணுவார்கள். அடுத்தப்படியாக தாங்கள் இந்த பூமியில் வாழ்வதற்கான எந்த உரிமையும் இல்லை என்பதைப் போல் உணர தொடங்குவார்கள். சரியாக சொல்லப்போனால் இந்த நிலையில் அவர்கள் தங்களுக்கான பணிகளையோ உறவுகளையோ   தொடர்வதற்கான திறனற்றவர்களாக இருப்பார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக தங்களின் மீது தாங்களே பழி சுமத்திக்கொள்வார்கள்.

இத்தகைய படிநிலையில் (Stage),ஆரம் துயரர்கள் தற்செயலாக மற்றவர்கள் கூறும் சிறு விமர்சனங்களுக்கு கூட உணர்ச்சிவயபடுப்பவர்களாக மாற தொடங்குவார்கள். மிக அற்பமான காரணத்திற்காக அவர்கள் உயர்ந்த ஜன்னலிலிருந்து கூட வெளியே குதித்துவிடுவார்கள். இதை கண்டதும் சுற்றி உள்ள அனைவரும் திகைப்படைவார்கள். ஆனால் மற்றவர்கள் பார்க்கும்போது இவர்களிடம் பெரிய பிரச்சனைகள் எதுவும் இருப்பதாக தெரியாது. மேலும் விஷயங்கள் சீராக இயங்குவதாகவே தோன்றும். ஆனால் இத்தகைய தனிநபர்கள், தங்களுக்குள்ளாக, எவ்வளவு ஆழமாக துயரத்தை அடைந்திருக்கிறார்கள் என்பதை யாரொருவராலும் உணரமுடியாது. 

இறுதியில் தாங்கள் செய்யும் பணிகளில்கூட, செய்யவேண்டிய விஷயங்களில் சிறிது தவறினாலும் உடனே அவர்கள் மனவழுத்தம், சோகம், கவலை என அதிகமாக மூழ்கிவிடுவார்கள். இந்த ஒரு புள்ளியில் எவ்வித நம்பிக்கையுமின்றி எல்லாம் காணப்படும். எங்கும் இருள், எல்லாம் துன்பமயமாக காணப்படும். வெளிச்சத்தின் சிறு ஒளி கீற்றும் தோன்றாது. இந்நிலை ஆரம் துயரர்களை பொறுத்தவரை தன்னுடைய இந்த வாழ்வில் சூரியன் முழுவதும் அஸ்தமனதாக காணப்படும். இனி, இந்த நிலையில், இதற்கு மேல் வாழ்க்கையை தொடர இயலாது என எண்ண தொடங்குவார்கள். இத்தகைய படிநிலையில் எல்லா எதிர்மறை எண்ணங்களும் (எவையெல்லாம் சீற்றமாக, மன எரிச்சலாக, ஆத்திரமாக என வெளிபுறமாக காட்ட உதவியதோ..) தற்போது உட்புறமாக திரும்ப தொடங்கும். அவர்களுடைய சிந்தனை எப்போதும்,  "தற்கொலை" பற்றியதாக மாறும். அவர்கள் முகவாட்டமாகவும் மனச்சோர்வாகவும் மட்டுமே காணப்படுவார்கள். வாழ்க்கை, இனி எந்தவகையில் பார்த்தாலும், இதற்கு மேல் தொடர்வது பலனற்றதே என எண்ணுவார்கள். இந்த நிலையில் ஆரம் துயரர்கள், ஒரு மனிதனால், மன அழுத்தத்தின் எத்தகைய ஆழமான நிலைக்கு செல்லமுடியுமோ, அந்த நிலையை அடைந்துவிடுவார்கள்.

சமீபத்திய ஒரு செய்தித்தாளின் கட்டுரையில் ஒரு மனிதன் தன்னுடைய மனைவி இரு பிள்ளைகளையும் சுட்டுவிட்டு இறுதியில் தன்னையும் சுட்டுக்கொண்ட அந்த நபரின் கதையை வெளியிட்டிருந்தார்கள். அந்த சம்பவத்திற்கு காரணம் என்னவெனில் அவன் தனக்கான வேலையை விரைவில் இழந்துவிட போவதாக அவன் எண்ணினான். இதுதான் சரியான, "ஆரம் துயரர் நிலை". மேலும் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் ஆரம் துயரர்கள், தங்கத்திற்கு (பணத்திற்கு) அதிக மதிப்பை தருவார்கள். அவர்களை பொறுத்தவரை,  அவர்களுடைய பொருளாதார நிலை என்பது மிக மிக முக்கியமானது. இவர்கள் ஏன் கடினமான உழைப்பாளர்களாக  இருக்கிறார்கள் என்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். மேலும் இவர்கள் வேலை நேரம் போக மிகை நேரம் (over time) வேலை செய்பவர்களாக காணப்படுவார்கள். இதற்கு காரணம் ஒன்று, தங்களுடைய பொருளாதார பாதுகாப்புத் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வார்கள். இரண்டு, தங்களுடைய பதவிக்கு/ பொறுப்புக்கு தாங்கள் பொறுத்தமற்றவர்கள் என்று தங்களுக்குள் உள்ள உணர்வை தணிவிப்பதற்காகவும் மிகை நேர வேலைகளை மேற்கொள்வார்கள்.

ஆரம் துயரர்களின் தற்கொலை எண்ணங்களுக்கான சித்தரிப்பை (image) சரியாக பார்த்தோமானால், அவர்களிடம் மிக உயர்ந்த இடத்திலிருந்து குதித்து விட வேண்டும் என்ற தூண்டுதல் இருந்து கொண்டே இருக்கும். அவர்கள் துயரமாகவும் ,  மனசோர்வாகவும்  இருக்கும்போது ஒரு உயரமான இடத்தின் விளிம்பில் நின்று பார்க்க நேர்ந்தால், எத்தகைய யோசனை அவர்களை ஆட்கொள்ளுமெனில், "தற்போது ஒரே ஒரு குதி, எல்லாவற்றிலிருந்தும் விடுதலை. இங்கிருந்து குதித்து விட்டால் எல்லாம் முடிந்து விடும்", என்ற ஒரு உணர்வு உள்ளுக்குள் இனிமையாக எல்லாவற்றையும் மறைக்கிற (மேகம் சூழ்ந்தது போன்ற) தன்மை அவர்களை வயப்படுத்தும். தற்காலங்களில் இன்னொரு வகையான தூண்டுதலும் ஏற்படுகிறது. குறிப்பாக ஆத்திரம் பொங்கும்போது அல்லது விரக்தியான பொழுதுகளில் அவர் காரை எடுத்துக்கொண்டு அதில் வேகத்தை அதிகப்படுத்தும் பொறியை (accelerator) தாறுமாறாக, தரையளவுக்கு அழுத்தி, கட்டுபாட்டை இழக்கும் அளவுக்கு செய்வார்கள் அல்லது இன்னொரு வகை தூண்டலும் இருக்கும். அதாவது காரை எடுத்துச் சென்று சட்டென திசைதிருப்பி சுவர் மீது இடித்து விடவோ, ஏரிக்கரையின் மீது  செலுத்தவோ முற்படுவார்கள். ஆரம்மின் இந்த நிலை, உண்மையாக அவர்கள் நடைபிணமாக இருப்பதை பிரதிபலிக்கும். வாழ்வதற்கான விருப்பம், மனதளவில் முழுவதும் சிதைந்திருக்கும். இந்த படிநிலையில் உணர்வுகள் சார்ந்த மட்டத்தில் பிரச்சனைகள் அப்போது ஆரம்பமாகும்.

இங்கு மிக சுவாரஸ்யமான விஷயம், ஆரம் துயரர்கள், உண்மையானவர்களாகவும், ஒழுக்கம் சார்ந்தவர்களாகவும் இருப்பார்கள். ஒருவேளை இவர்களின் உடல் மனம் சார்ந்த நோய்களின் அடுத்தகட்ட படிநிலை, அவர்களிடையே மதம் சார்ந்த நடத்தைக்கு கொண்டு செல்லலாம். மேற்கண்ட தற்கொலை சிந்தனைக்கு மாற்றாக இறைவனின் இரட்சிப்புக்காக தொடர்ந்து பிராத்திக்க முனைப்படுவார்கள். இது அவர்களுக்கு தணிவை தருவதாக இருக்கும். மிகப்பெரிய மனச்சோர்வோ, வருத்தமோ, வந்தாலும் மணிக்கணக்கில் அழுகையும் பிரார்த்தனையும் செய்வதன்மூலம் அவர்கள் நிம்மதி அடைவதாக உணர்வார்கள்.

இந்த சமயத்தில் ஒரு நிகழ்வு நினைவில் வருகிறது. என்னுடைய கல்லூரி பருவ நண்பன் ஒருவன், இந்தியாவில் இருக்கிறான். அவனுக்கு கடுமையான வலியுள்ள வீக்கம் விரைப்பையில் ஏற்பட்டது. அவன் ஒரு நல்ல மனிதன். அவனை சாதாரணமாக கவனித்ததில் உணர்வுகள் மட்ட அளவில் சங்கடங்களாக எவ்விதமான சரியான நோய்க்குறியையும் வெளிப்படுத்தவில்லை. அவன் பல ஹோமியோபதி பேராசிரியர்களை பார்த்திருக்கிறான். அவர்கள் அவனுக்கு, Clematis, Rhododendron போன்ற மருந்துகளை கொடுத்தும், எவ்விதமான பலனும் கிடைக்கவில்லை. அந்த வலி மிகவும் கடுமையானதாக மாறியது.  என்னிடம் ஆலோசனைக்கு வந்தான். அதன் பிறகு நடந்த கலந்துரையாடலின் முடிவில் அவன்," உனக்கு தெரியும், நான் ஒரு கிறிஸ்தவன். அதை நான் மிகவும் விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் இரவு படுக்கைக்கு தூங்கச் செல்வதற்கு முன்பாக ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் பிரார்த்தனை (prayer) செய்ய உள்ளுக்குள் கட்டாயப்படுவதாக உணர்கிறேன், அதை செய்யாமல் இருக்க முடியாது", என்றான். அதன் மீது விசாரித்ததில் அவன் உண்மையில் மிகவும் மனச்சோர்வில் இருப்பது வெளிப்பட்டது. ஆனால் தற்கொலைக்கான சிந்தனை எப்போதும் பெற்றதில்லை. அந்த துயரருக்கு, "ஆரம்" கொடுத்தேன். அதன் பிறகு இரண்டு மணி நேரத்திற்கு நோய் மிகுதி (aggravation) ஏற்பட்டு பிறகு மூன்று நாட்களுக்குள் நோயிலிருந்து முழுமையாக நலம் பெற்றான்.

சில சமயங்களில், ஆரம், சிறார்களுக்கும் சுட்டிக்காட்டும். ஆனால் அவர்கள் எவ்விதமான மனசோர்வையும் வெளிகாட்ட மாட்டார்கள். எனினும் அவர்கள் தீவிரமாக செயல்படுவதில் முனைப்பாகவும், அதிகமான பொறுப்புணர்ச்சியுடனும், மனநிலைகளில் அடிக்கடி மாறும் தன்மையும், கோபத்தின் வெளிப்பாடுடன் மன எரிச்சலும், முனகுதலும், புலம்பலுடனும் இருப்பார்கள்.

மேலும் சுவாரஸ்யமானது என்னவெனில், அதாவது ஆரம் துயரர்களில் அவர்களின் உணர்வுகள் (emotional) சார்ந்த நிலைக்கும் இதயநோய்களுக்கும் ஒரு பொருத்தபாடு (Correspondence) காணப்படுகிறது. உதாரணத்திற்கு, ஆரம் துயரர் தன்னுடைய இடர்பாடுகளுக்கு, வேறு ஒருவழியில் (விவாகரத்து, புதிய காதல் வாழ்க்கை அல்லது வேறு ஏதாவது முறையில்) தீர்வை கண்டாரெனில், அதன்பிறகு அவரில் இதயம் சார்ந்த நோய்நிலைகள் தோன்றுவதை நாம் காணலாம். மேலும் முடக்குவாத நோய்களின் உள்ளமுக்குதல்களினாலும் (suppression) இதயநோய்களும் வெளிப்படலாம். இவ்வாறு செய்யப்படும் எளிதான உள்ளமுக்குதல்களினால் இதயம் பாதிக்கப்பட்டுள்ளது என்று நாம் அறியும்போது அச்சமயத்தில் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான மருந்து, ஆரம் ஆகும்.

மேலும் அற்பமாக இதய பகுதியில் சிறு  தொந்தரவு ஏற்படும்போதெல்லாம் கூட, ஆரம் துயரர் தங்களுக்குள் ஏதோ இதயம் சார்ந்த  நோய் வந்துவிட்டதை போன்ற பயத்தை உருவாக்கி கொள்வார்கள்.  என்ன மாதிரியான ஆரோக்கியம் சார்ந்த பதட்டம் இருந்தாலும், ஆரம் துயரர்கள் தங்களின் இதயத்தின் மீது கவனம் செலுத்துவார்கள். இது மரணத்தின் மீதான பயம் அல்ல. ஆரம் துயரர்களிடம், தங்களுக்கு மரண பயம் ஏதாவது இருக்கிறதா..? என கேட்கும் போது, பொதுவான அவர்களின் பதில், "ஒருபோதும் இல்லை" என்பதே. மேலும்,  'நான் மரணத்தை வரவேற்கிறேன். எனக்கு இங்கே வாழ்வதற்கு எந்த வாழ்க்கையும் இல்லை" என்பார்கள். ஆனாலும் அவர்கள் இதய நோய் சார்ந்த பயத்தை பெற்றிருப்பார்கள். அது அவர்களின் உணர்வு (emotional) சார்ந்த பாதிப்பு நிலையை பிரதிபலிப்பதாக இருக்கும்.

ஆரம், சில நேரங்களில் கடுமையான நாற்றத்துடன் கூடிய நாசியழற்சிகளுக்கு (Rhinitis) பரிந்துரைக்கப்படுகிறது. அந்த நாற்றம் மிகவும் கடுமையானதாகவும், அருகில் இருப்பவர்களுக்கு கூட தெரியவரும்.

ஆரம் மருந்தில், சிபிலிடிக் (syphilitic) மியாசத்தின் கூறு தெளிவாக இருக்கும். அவர்கள் சிபிலிடிக் மியாசத்திற்கே உரித்தான, குறிப்பிடத்தக்க, ஆழமாக எலும்புகளில் வலிகளை பெற்றிருப்பார்கள்.

மேலும் ஆரம், எந்தவகையான தொடக்கநிலை (origin) கொண்ட வலியாக இருந்தாலும், அது துயரரை, தற்கொலை செய்துகொள்ளும் விருப்பத்தை தூண்டுமேயானால் அத்தகைய வலிகளுக்கு நல்ல மருந்தாக அமைகிறது. அந்த வலிகள் மிகவும் கடுமையானதாக இருக்கும், இறப்பு மட்டுமே அவர்களுக்கு சாத்தியமான நிவாரணத்தை அளிப்பதாக காணப்படும். நான் இப்போது முக்கூட்டு நரம்பினால் (Trigeminal Nerve) நாசி பகுதியில் ஒரு நரம்புவலியினால் துன்பப்பட்ட ஒரு பெண் துயரரை நினைத்து பார்க்கிறேன். அவருக்கு நாம் எண்ணி பார்க்க முடியாத அளவுக்கு வலி இருக்கும். அது அவரை முழுவதும் பைத்தியம் பிடித்தது போன்ற நிலைக்கு கொண்டு செல்லும். அந்த பெண் துயார் இறக்கவே விரும்புவார். அவருக்கு ஆரம் மருந்தின் 10M வீரியத்தில் கொடுக்கப்பட்ட போது மிக விரைவாக நோயிலிருந்து மீண்டாள். மேலும் மற்றுமொரு துயரர் ஆய்வை ஞாபகப்படுத்தி பார்க்கிறேன். அத்துயரர், காதின் பின்புறம் உள்ள எலும்பு கூட்டின் (mastoid) அழற்சியின் காரணமாக கடுமையான வலியுடையதாகவும், வருட கணக்கில் திரும்ப திரும்ப வரகூடியதாகவும் இருந்தது. இந்த துயரரும் ஆரம்மினால் உடனடியாக நலமாக்கப்பட்டார்.

ஆரம் மருந்தானது, மனித உயிரியின் ஆழமான பகுதிகளை அடையக்கூடிய திறனுடைய வல்லமை கொண்டது. அது துயரரிடத்தில் சரியாக சுட்டிகாட்டுமேயானால், அது  உருவாக்கும் மாற்றங்களை பார்க்கிற போது சில நேரங்களில் திகைப்பையூட்டுவதாக இருக்கும். மன அழுத்தம் ஆழமாக குடிக்கொண்டிருந்த துயரர்களிடம் வாழ்க்கையை பற்றிய புதிய எழுச்சி வெளிப்படும். முன்பு இருந்த இருண்ட நிலை காரணமாக, அவர்கள் இனி தங்களுக்கான, புதியதொரு ஒளியான பாதையை கண்டறிந்ததை, உள்ளூர உணர்ந்ததை மெச்சி அகம் மகிழ்வார்கள்.

     -- ஜார்ஜ் வித்தௌல்காஸ்

நன்றி :
பேராசிரியர் ஜார்ஜ் வித்தௌல்காஸ்
மற்றும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக