6 அக்., 2020

காமராசர் நினைவுகள்

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தின்னு சொல்லிக் குடுத்து, மனதில் பதிய வைத்த சமூகத்துக்கு...

தமிழ்நாட்டையே செழிப்பாக ஆட்சி செய்த கர்மவீரர் காமராஜர் மறைந்த தினம்னு ஏன் தெரியாமல் போனது..?

அவர் கடைசியாக பேசின வார்த்தை...
'அந்த விளக்கை அணைத்து  விடு'....
அன்றே அணைந்தது மக்களாட்சி செய்த அந்த விளக்கும்....

ஆம்... கர்மவீரர்., கல்விக்கண் திறந்தவர்., படிக்காத மேதை., பெருந்தலைவர்., கிங் மேக்கர்., என பல அடைமொழிகளோடு மக்களால் அன்பாக நினைவு கூரப்படும் தமிழக முன்னாள் முதல்வர் திரு. காமராஜர்  இறந்த தினம் இன்று, அக் 2... 

காமராஜரை இன்று எத்தனை பேர் அல்லது எத்தனை அரசியல் தலைவர்கள் ஞாபகம் வைத்திருக்கிறார்கள்?.

நினைவு கூறுதல் என்பது ஏதோ மூத்தோர்களுக்கு சடங்கு செய்வது என்பது போலல்ல... அவர்களை நினைவு கூர்வதன் மூலம் இன்றைய நமது பாதையைச் சரி பார்ப்பது அல்லது சரி செய்துக் கொள்வதே ஆகும்.

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் அனைத்தும், தாங்கள் வெற்றி பெற்றால் 'காமராஜரின் ஆட்சி' தருவோம் என்று பிரச்சாரம் செய்வது வழக்கம். அவர் செய்த சாதனைகளும், அவரின் எளிமையும், அவரைப் போன்ற தலைவர் அடுத்து யாருமே வரவில்லை என்பதும் அவர் விட்டுச் சென்ற வெற்றிடமும் தான், காமராஜ் ஆட்சி தருவோம் என்று அரசியல் கட்சிகளைப் பிரச்சாரம்... அல்லது பிரகடனம் செய்ய வைக்கின்றது.

காமராஜர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்த போதிலும், எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். 

அவரது ஆட்சிக் காலத்தில் தான் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27 ஆயிரம் ஆனது. அவரது மதிய உணவுத் திட்டம் இன்றும் உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும்.

அதன் பலனாக பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 %  உயர்ந்தது. (வெள்ளையர் காலத்தில் இது 7 சதவீதமாக இருந்தது). பள்ளிகளில் வேலை நாட்கள் 180-லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. ஆசிரியர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கவும் ஆணையிட்டவர். 
 சென்னையில், இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் இவர் காலத்தில் தொடங்கப்பட்டதுதான்.

காமராசர் முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம்., நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம்., கல்வி., தொழில் வளம் என எல்லாற்றுக்கும்  முன்னுரிமையளித்து பல நல்ல, நல்ல திட்டங்களை நிறைவேற்றினார்.

அவரது ஆட்சியின் கீழ் 10 முக்கிய நீர்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்குக் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காகக் காமராஜரால் கட்டப்பட்ட 'மாத்தூர் தொட்டிப் பாலம்' "ஆசியா"வின் மிகப்பெரிய தொட்டிப்பாலமாக இன்றளவும் உள்ளது. 

அவர் காலத்தில் தான், நம் தமிழகத்தில் எண்ணற்ற முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந் தொழிற்சாலைகளும் தொடங்கப்பட்டன. 
பாரத மிகு மின் நிறுவனம்., நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்., மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL).,
இரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF).,
நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை., கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை., மேட்டூர் காகிதத் தொழிற்சாலை., குந்தா மின்திட்டமும்., நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டங்களும் காமராஜரால் ஏற்படுத்தப் பட்டவை தான். 

அவர் இறந்த போது, சிறிதளவு பணம், 2 ஜோடி வேஷ்டி, 'காதி' சட்டைகளும் மட்டுமே இருந்தன. இதைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேறு எந்த விதமான சொத்துக்களோ எதுவுமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

பகைவர்களும் மதிக்கும் பண்பாளராகவும், மனித நேயத்தின் மறு உருவமாகவும், நிஜ வாழ்க்கையில் உண்மையான ஹீரோவாகவும் வாழ்ந்துக் காட்டியவர். அரசியலில் நேர்மை., வாய்மை., தூய்மை., நாணயம் என அனைத்தையும் கற்பித்த மாமனிதர். 

உன்னைப் போல அரசியல்வாதி உலகில் இல்லை.., நிச்சயமாக உன்னைத் தவிர உனக்கு நிகர் வேறு யாருமே இல்லை!!!🙏

நன்றி :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக