14 அக்., 2021

நூல் நயம் : பிரம்மசூத்திரம் - அ வெ சுகவனேஸ்வரன்


பிரம்மசூத்திரம் 

இந்தியத் துணைக்கண்டத்தில் நிலவி வந்த பல்வேறு வழிபாட்டு முறைகளை இந்து மதம் என்று குறிப்பிட்டவர்கள் வெளிநாட்டவர் தான். 

ஒரு இறைமறுப்பாளனாக, பார்ப்பனிய எதிர்ப்பாளனாக, என்னுடைய நிலைப்பாட்டை உறுதி செய்ய பார்ப்பனிய மதம் என்று எதிர்ப்பாளர்களாலும், இந்து மதம் என்று வெளிநாட்டவர்களாலும் அரசியலமைப்பாலும், சனாதன மதம், வேத ஞான மரபு, இந்து தர்மம் என்றெல்லாம் ஆதரவாளர்களாலும் குறிப்பிடப்படுகிற மதத்தின் நூல்களை வாசிப்பது கடமையாகிறது.

இந்து மதம் பற்றி அறிந்து கொள்ள எதைப் படிக்கலாம் என்று தேட ஆரம்பித்தால், வேதங்கள், பிராமணங்கள், உபநிடதங்கள், பகவத்கீதை போன்ற பல உபதேசப் பகுதிகளைத் தாங்கிய மஹாபாரதம், ராமாயணம், பல புராணங்கள், சங்கரர் போன்ற ஆளுமைகள் எழுதிய நூல்கள் என ஒரு பெரிய கடலே நம் முன் விரிகிறது. அனைத்தையும் படித்து முடிக்க ஒரு ஐந்தாறு பிறப்பாவது எடுக்க வேண்டி வரும். (மறுபிறப்பு என்று ஒன்று இருந்தால்..)

பலவற்றை மேலோட்டமாக பகுதிகளாக வாசித்த பிறகு,  இந்து மதத்தின் சாரத்தை அறிந்து கொள்ள பிரம்மசூத்திரம் என்ற ஒரு நூலை வாசித்தால் போதுமானதாக இருக்கும் என்று அறிய முடிந்தது. 

இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளான  ஆத்மா-பரமாத்மா, பிறப்பு, முக்தி, கர்மா, சொர்க்கம், நரகம் என அனைத்தையும் ஒவ்வொன்றாக ஆராய்ந்து விளக்கும் நூல் தான் பிரம்மசூத்திரம். 

நூலை எழுதியவர் வேதங்களைத் தொகுத்தவரும் மஹாபாரதத்தை எழுதியவரும் ஆன  வியாசர் என்று நம்பப்படுகிறது. ஆனால், வியாசர் என்ற ஒருவர் இல்லை; பதராயணர் என்னும் பிராமண அறிஞரைத் தான் வியாசர் என்று குறிப்பிடுகிறார்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். 

சூத்திரம் என்றால் சுருங்கக் கூறுவது என்று பொருள் கொள்ளலாம். இந்த நூலில் இருக்கும் 555 சூத்திரங்களும் மிகக் குறைவான சொற்களைக் கொண்டு பெரிய விஷயங்களைப் பேசுகின்றன. 

இந்த சூத்திரர்களுக்கு பலர் உரைகள் எழுதி இருந்தாலும், ஆதிசங்கரர் (அத்வைதம்), ராமானுஜர் (துவைதம்), மத்வர் (விசிஷ்டாத்வைதம்) என்னும் மூன்று முக்கியமான ஆளுமைகளின் உரைகள் தான் அதிகமாகக் கவனிப்பைப் பெற்றுள்ளன. மூன்று ஆளுமைகளும்  தாங்கள் சார்ந்த கொள்கைகளின் அடிப்படையில் இருந்து சூத்திரங்களையும் சூத்திரங்களை அடிப்படையாக வைத்து தங்களுடைய கொள்கைகளையும் விளக்குகின்றனர். 

இந்த சூத்திரர்களுக்கு 
அ வெ சுகவனேஸ்வரன் என்கிற அறிஞர் எழுதிய உரையை தோழர் தினகரன் செல்லையாவிடம் pdf ஆகக் கேட்டுப் பெற்றேன். 

பிரம்மசூத்திரத்தை மிக எளிதாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கி இருப்பதற்கு அவருக்கு பாராட்டுக்கள். மேலும்,  கொள்கைகளில் முரண்பட்டு இருக்கும் சுலோகங்களுக்கு சங்கரர் என்ன பொருள் கூறுகிறார், ராமானுஜர் என்ன கூறுகிறார், அவற்றுக்குத் தொடர்புள்ள தமிழ்ப்பாடல்கள் என அழகாக அவற்றை நமக்கு விவரிப்பது வாசிப்பில் ஆர்வத்தைக் கூட்டுகிறது. 

"அதாதோ பிரம்ம ஜிஞாஸா" ஆகையால் இனி பிரம்மத்தைப் பற்றிய விசாரணையைத் தொடங்குவோம் என்று முதல் சுலோகத்தில் தொடங்கும் பிரம்ம சூத்திரம் இரண்டாம் சுலோகத்தில் "ஜன்மாதி அஸ்ய யத:" என்னும் இரண்டாம் சுலோகத்தில் "இவ்வுலகின் உற்பத்தி, காத்தல், அழித்தல் முதலியன எதில் இருந்து உண்டாகின்றனவோ, அதுவே பிரம்மம்" என்று பிரம்மத்தின் அடிப்படையைக் கூறுகிறது.

பலதெய்வ வழிபாட்டு முறையான இந்துமதத்தின் அடிப்படையும் ஆபிரகாமிய மதங்களைப் போல ஒற்றைத்தெய்வ வழிபாட்டையே முன்னிறுத்துகிறது. ஆனால், ஆபிரகாமிய மதங்களில் இறைவன் என்பது தனித்து நின்று அனைத்தையும் படைத்துக் காப்பதாக இருக்கிறது; வேதமதத்திலோ அந்த பிரம்மம் படைத்தும், காத்தும் அழிப்பதும் மட்டுமன்றி அதுவே அனைத்திலும் நிறைந்தும் அனைத்துமாகவும் இருக்கிறது.

உயிர்களில் நிறைந்திருக்கும் ஆன்மாவும், அனைத்திலும் நிறைந்திருக்கின்ற அறிவார்ந்த பெரும்பொருளான பரமாத்மா அல்லது பிரம்மமும் எப்படி வேறுபடுகின்றன; எப்படி ஒன்றிணைகின்றன என்பது விளக்கப்படுகிறது.

"பிரம்மசூத்திரம் நம் மதத்தின் வேதாந்தத் தத்துவங்களை அதிகாரப்பூர்வமாக விளக்கி பிரம்மம் ஒன்றே மெய்ப்பொருள் என்பதை நிலைநாட்டும் ஒப்பற்ற நூலாக நம் மத இலக்கியத்திலே உயர்ந்த இடத்தை அடைந்து இருக்கிறது என்றால் மிகையல்ல" என்று இந்த நூலின் ஆசிரியர் சுகவனேச்வரன் கூறுகிறார்.   

இந்த உலகில் உயிர்களாகப் பிறப்பவை ஜீவாத்மாக்கள். ஜீவாத்மாக்கள் பிறவியில் சேர்த்துக் கொள்ளும் கர்மங்களின் பலன்களைச் சுமப்பவை; ஜீவாத்மாக்களைத் தோற்றுவிப்பது பரமாத்மா; படைப்பும், காத்தலும், அழித்தலும் பரமாத்மாவாக இருப்பதால், அதுவும் ஜீவாத்மாவும் ஒன்றாக முடியாது என்கிறது இந்த நூல். 

எங்கும் நிறைந்த பிரம்மத்தை வழிபடுவதற்காக அதற்கு சில குணங்களைக் கற்பித்து தியானிக்கலாம் என்று பலதெய்வ வழிபாட்டுக்கு காரணம் சொல்லப்படுகிறது.

"அந்தர்யாமி அதிதைவாதிஷூ தத்-தர்ம-வ்யபதேசாத்" என்னும் சூத்திரம் தெய்வங்களுக்குள்ளும் மற்றவைகளுக்குள்ளும் உறையும் பொருள் பிரம்மமே ஆகும்; ஏனெனில் அதனுடைய குணாதிசயங்கள் கூறப்படுகின்றன என்கிறது.

ஆன்மா பற்றி பேசும்போது ஆன்மா மிகச்சிறியதாக நுண்ணியதாக உடல் முழுவதும் ஓடி புலன்கள் மூலம் உணர்வைப் பெற்று பிறவியை அனுபவிப்பதாகக் கூறுகிறது. 

ஆன்மா உடலில் இருந்து அந்த உடல் மூலமாகச் செய்யும் கர்மத்தைச் சேர்த்துக் கொண்டு உடலை விட்டு நீங்கி கர்மத்தின் பலன்கள் நல்லவையாக இருந்தால் சொர்க்கம் சென்று அந்த நற்பலன்கள் தீருமட்டும் சுகங்கள் அனுபவித்து, மீண்டும் எஞ்சி இருக்கும் கர்மப்பலன்கள் அடிப்படையில் பிராமணர், சத்திரியர் போன்ற உயர்பிறப்புகளிலும், தீய கர்மங்கள் நிறைய உடையோர் மற்ற இழிபிறப்புகளாகவும் பிறக்கிறார்கள். (சூத்திரம்  3.1.8) இந்த சூத்திரத்தின் மூலம் பிறப்பின் அடிப்படையிலான வர்ணாசிரம முறையை பிரம்மசூத்திரம் உறுதி செய்கிறது. வர்ணங்கள் தொழிலின் அடிப்படையிலோ குணத்தின் அடிப்படையிலோ வகுக்கப்பட்டவை அல்ல என்பதும் தெளிவாகிறது. 

 பல இடங்களில் பிரம்மம்-ஜீவாத்மா-கர்மப்பலன்கள்-மறுபிறப்புகள்- படைப்பு ஆகியவற்றை நிரூபிக்க சுருதிகள் என்று அழைக்கப்படும் வேதங்கள் உபநிடதங்கள் இப்படித் தான் கூறுகின்றன என்று சூத்திரம் கூறுகிறது. வேத-உபநிடதங்களை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இந்த வாதம் ஏற்புடையதாக இருக்கலாம். அவற்றை மறுப்பவர்கள் பிரம்மசூத்திரத்தின் வாதங்கள் மூலமாக வேதாந்தத்தையும், பிரம்மத்தையும், அதன் படைப்பையும், ஜீவாத்மா கோட்பாட்டையும் ஏற்க வாய்ப்புகள் மிகக் குறைவே. பிரம்மத்திற்கு ஆதாரம் சுருதி தான்; அறிவுப்பூர்வமான வாதப்பிரதி வாதங்கள் இல்லை என்று அறிவுப்பூர்வமான விவாதங்களை ஒதுக்குகிறது பிரம்மசூத்திரம். 

மேலும் சாதிப்பாகுபாட்டுக்கு வேத-உபநிடதங்களில் அடிப்படையே இல்லை; அனைத்தும் இசுலாமியர்கள் மற்றும் வெள்ளையர்கள் கொண்டு வந்தது தான் என்னும் பொய்ப்பிரச்சாரத்தை பிரம்மசூத்திரம் பின்வரும் சூத்திரங்களால் உடைக்கிறது.

வேதம் கற்க கீழ்ஜாதியினருக்கு தகுதி இல்லை. ரைக்வர் என்னும் முனிவர் ஜானஸ்ருதி என்னும் அரசன் சத்திரியன் தான் என்பதை உறுதி செய்த கொண்ட பிறகு தான் அவனுடைய மகளை குருதட்சணையாக  ஏற்றுக் கொண்டு அவனுக்கு உபதேசம் செய்ய முன்  வந்தார். 1.3.34 

உபநயனம் போன்ற புனிதப்படுத்தும் சடங்குகள் மேல்ஜாதியினருக்கு மட்டுமே உண்டு. அவர்கள் மட்டுமே வேதங்களைக் கற்கத் தகுதி உடையவர்கள்.  1.3.36

சத்தியகாம ஜாபாலன் தன் தந்தை யார் எனத் தனக்கு தெரியாது என்ற உண்மையை தனக்கு ஏற்படும் பாதகங்களைப் பற்றி கவலையின்றி கூறியதால் அவன் உயர்ந்த சாதியினனாகத் தான் இருக்க முடியும் என்று எண்ணி கோதமர் அவனுக்கு உபதேசம் செய்தார். 1.3.37

ஸ்ம்ரிதி நூல்கள் வேதத்தைக் கற்கவும், வேதச்சடங்குகள் புரியவும் கீழ்ஜாதியினருக்குத் தடை விதிக்கிறது. அதனால் அவர்கள் வேதம் மூலமாக ஞானத்தை அடைய முடியாது. 1.3.38

மேலும் அறிவியலுக்கு ஒவ்வாத பல கருத்துக்களை பிரம்மசூத்திரம் உண்மையைப் போல உரைக்கிறது. உதாரணத்துக்கு, வியர்வையில் இருந்து உயிர்கள் தோன்றுவதாகவும், விதை தரையில் விழுவதால் தோன்றும் உயிர்களுக்கு ஆண்-பெண் சேர்க்கை தேவை இல்லை என்றும் கூறுகிறது. 

ஒன்றுமில்லாத ஜடப்பொருளில் இருந்து பிரம்மம் எப்படி படைப்பை உருவாக்குகிறது என்ற கேள்விக்கு, ஜடப்பொருள்களில் இருந்து அறிவு மயமானவை உண்டாகின்றன என்பதற்கு ஜடமான மாட்டுச் சாணியிலிருந்து அறிவுள்ள தேள் உற்பத்தியாகிறது; ஜடமான தேனிலிருந்து புழுக்கள் உண்டாகின்றன. அதைப்போலவே மூலப்பொருளுடன் எதுவும் சேர்க்காமல் பிரம்மம் படைப்பை உருவாக்குகிறது என்கிறது சூத்திரம்.2.1.6

உண்ணும் உணவில் கெட்டியானது மலமாக வெளியே வருகிறது; நடுப்பாகம் சதையாகவும், நுண்ணிய பாகம் மனதாகவும் வருகிறது என்றெல்லாம் உபநிடதங்களில் இருந்து மேற்கோள்கள் காட்டுகிறது பிரம்மசூத்திரம். 

இவற்றைப் பார்க்கும் போது, பிரம்மசூத்திரத்தை உருவாக்கிய வியாசருக்கோ, அதற்கு உரையெழுதிய மும்மூர்த்திகள் மற்றும் பல ஞானிகளுக்கோ அடிப்படை அறிவியல் ஞானம் வாய்க்காத சூழலே அவர்களுடைய காலங்களில் நிலவியது என்பதை உணர முடிகிறது. 

லோகவத்து லீலா கைவல்யம் II
பிரம்மம் உலகத்தைப் படைத்தது வெறும் விளையாட்டு தான் என்று ஆபிரகாமிய மாதங்களில் இருக்கும் பரிட்சைக் கோட்பாட்டைப் போன்ற ஒன்றை நிறுவுகிறது இந்த  நூல்.

ஒரு இறைமறுப்பாளனாக, எனக்குள் "ஒரு வேளை நாம் தான் ஏதோ வெறுப்புணர்வால் இந்திய வேத ஞானத்தை உணர்ந்து கொள்ளாமல் உண்மையான அறிவை இழக்கிறோமோ?" என்ற கேள்வி ஒரு ஓரத்தில் உறுத்திக் கொண்டே இருந்தது. 

பிரம்மசூத்திரம் என்னும் வேத-உபநிடதங்களின் சாரத்தைப் படித்ததும் அந்த கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது. நான் அப்படி எதையும் இழக்கவில்லை; என்னுடைய இறைமறுப்பும், பார்ப்பனிய எதிர்ப்பும் சரியானது தான் என்ற முடிவுக்கு நான் வர எனக்கு இந்த நூல் துணை புரிந்து இருக்கிறது.


நன்றி :

திரு அரவிந்த் சாமி, 
வாசிப்பை நேசிப்போம், 
முகநூல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக