10 அக்., 2025

இன்றைய புத்தகம் : மெய்யறம் : வ.உ.சி


சிறையில் பிரசவித்த தத்துவ நூல் - மெய்யறம்

வ.உ.சி. ஆய்வு வட்டம் 2025 ம் ஆண்டினை மெய்யறம் ஆண்டாக அறிவித்து பெரியவர் வ.உ.சி.யின் பல்வேறு படைப்பிலக்கிய வரிசையில் மிகவும் முக்கிய தத்துவ வகைமை கருணை இலக்கிய படைப்பாகிய மெய்யறம் குறித்து இளம் தலைமுறையினரிடையே கொண்டு செலுத்த பல்வேறு முயற்சிகள் செய்து வருகிறோம்.
 
தமிழ் இலக்கியங்களில் பெரியவர் வ.உ.சி.யின் மனதைக் கவர்ந்த இரண்டு இலக்கிய படைப்புகள் திருக்குறள், தொல்காப்பியம். மாக்களைப் போல மனம் போனபடி வாழ்க்கை நடத்தும் மக்கள் மனம் திருந்தி வாழத் துணை புரிவது திருக்குறள் எனபதே வ.உ.சி.யின் அசைக்க முடியாத நம்பிக்கை.

மக்கள் நலம் பேணி நல்வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக திருக்குறளின் அடிப்படையில் மெய்யறம் என்ற நூலினை தனது சிறைவாழ்க்கையின் போது தனது உடன் இருக்கும் சிறைக் கைதிகளின் நலன் கருதி அந்த மானுடர்களின் இம்மை மறுமை வாழ்வு சிறக்க எண்ணி திருக்குறளின் வழிநூலாக படைக்கப்பட்டது மெய்யறம்.

மெய்யறம் பாடல் வரிகள் குறட்பாக்களின் அடிகளையொட்டியே குறளை விட குறுகிய அளவில் ஆத்திசூடி போல ஒரடிக்குள் மிகச் செறிவாக மரபு வழிபட்ட அறங்களை விரிந்த விளக்கமளிக்கும்படியாக அமைத்திருக்கிறார் வ.உ.சி. 

சிறையினுள்ளே பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகிய நிலையிலும் தனது நாற்பதாவது வயதில் சீரிய சிந்தனையைச் செலுத்தி தனது சகத் தோழர்கள் சிறையில் வருந்துவதை எண்ணி பிற உயிர்களை தன்னுயிராக கருதி சக மனிதர்களின் மேலான கருணை வெளிப்பாட்டால் விளைந்த விளைச்சல் மெய்யறம். 

இந்த நூலின் மிகச் சிறப்பு அதிகார வைப்புமுறை. முன்னதுக்கும் அதனைத் தொடர்ந்து வரும் பின்னதுக்கும் ஒரு கன்னி போல தொடர்புபடுத்தி ஐந்து இயல்களாக கட்டமைத்த விதம் அலாதியானது. சிறைத் தண்டனை மனதை ஒரு பக்கம் நிலைகுலைய வைத்த போதிலும் அதன் வலி தனது உடம்புக்குத்தானே தவிர அவரது ஆன்மாவை ஒரு போதும் குலையவில்லை என்பதை மெய்யறம் நன்றாகவே புலப்படுத்துகிறது.

சிந்தனைச் செம்மல் கு.ச. ஆனந்தன் அவர்கள் மெய்யறம் குறித்து கூறுகையில் கண்ணனூர் சிறையில் வ.உ.சி. சிறைவாசம் செய்தபோது சிறையில் வாடிய தண்டனைக் கைதிகள் திருந்து பொருட்டு திருக்குறள் தமிழருக்குத் தந்த தனி மெய்யியலைக் ஆய்ந்து “மெய்யறம்” என்ற பெயரால் மெய்யுணர்வுடன் எழுதிய படைப்பு என்கிறார். தண்டனைக் கைதிகள் திருந்தினார்களோ இல்லையோ தமிழ் மக்கள் திருந்தவுமில்லை, இந்த நூலினை ஏறெடுத்து பார்க்கவுமில்லை என்று விசனப்படுகிறார்.

இராஜாஜி மெய்யறம் நூலினை யான் பெரிதும் மதிக்கிறேன்.அருமையான பொருளை யான் இனிதுணர்ந்தேன்.திருவள்ளுவர் குறளினை இக்காலத்திய கருத்துக்களால் மணப்படுத்தி அற்பக் கல்வியுடையாரும் உணரத்தக்கவாறு படைக்கப்பட்ட நூல் மெய்யறம் என்கிறார்.

பெரியவர் வ.உ.சி.யின் உற்ற நண்பர் சுப்பிரமணிய சிவா அவர்கள் ஞானபானு இதழில் மிக விரிவான மதிப்புரை தந்தவர், குறிப்பாக மெய்யறம் –அரசியல் இயல் பற்றி குறிப்பிடுகையில் அரசியல் ராஜாங்க விசயங்களில் மனத்தைச் செலுத்துகின்ற ஒவ்வொருவரும் பார்த்து மனனம் பண்ணத்தக்கது.

நாம் பிள்ளையவர்களுடன் நெடுநாளாக பழகியிருக்கின்றோமாயினும் அவருக்கு ராஜ தருமத்தில் இவ்வளவு அறிவிருக்குமென்று நான் நினைக்கவில்லை. அரசியல் இயல் படிக்க படிக்க ஆனந்தத்தை தருகிறது. அறிவைப் பெருக்குகின்றது என்று சொல்லி இந்த மெய்யறம் நூலினை கட்டாயமாக மாணவர்களுக்கு பாடப்புத்தகமாக வைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியவர் தியாக வேங்கை சுப்பிரமணிய சிவா.

தமிழ்ச் சிந்தனையாளர்கள், அரசியல் சார்ந்த ஆய்வாளர்கள், தத்துவவியலாளர்கள் மற்றும் மாணவர்கள் பெரிதாக மெய்யறம் அறிய மாட்டார்கள் என்பதை மனதில் கொண்டுதான் இந்த ஆண்டு முழுவதும் மெய்யறம் நூலிற்கு உரை எழுதுதல், ஆய்வு வட்ட அன்பர் திரு.ஆ.அறிவழகன் இந்த ஆண்டு முழுவதும் 2025 ஜனவரி 1ம் தேதி முதல் டிசம்பர் 31, 2025 வரை சமூக ஊடகங்கள்  துணையுடன் எளிய உரையுடன் மெய்யறம் காணொளி புலனக் குழு வழியாக கொண்டு செல்கிறார். 

தமிழகம் முழுவதும் எட்டாம் வகுப்புக் குழந்தைகளுக்காக மெய்யறம் – மாணவர் இயல் மட்டுமே கையடக்க பதிப்பு வெளியிட்டு பள்ளிக் குழந்தைகளை படிக்கச் செய்து போட்டி நடத்தி மெய்யறத்தை கொண்டு சென்றிருக்கிறோம்.

மெய்யறம் விளக்க உரை நூல் வடிவில் குறுவிளக்கம் மற்றும் விரிவான விளக்க உரைநடை நூல்கள் விரைவில் வெளிவர இருக்கிறது.

மெய்யறம் என்னும் நூல் மாணவரியல், இல்வாழ்வியல், அரசியல், அந்தணவியல், மெய்யியல் என்னும் ஐந்து இயல்கள் கொண்டது. ஒரு இயலுக்கு 25 அதிகாரங்கள் என்று 125 அதிகாரங்களைத் தன்னகத்தே கொண்டது.
ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் அந்நாட்டின் அங்கங்களாகிய மாணவர், இல்லறத்தவர், அரசர், அந்தணர் ஆகியோர் அவரவர்களுக்குரிய கடமைகளைச் செவ்வனே செய்யவேண்டும். இந்த நால்வர்களுடைய கடமைகளைப் பற்றி கூறிய பின்னர் அனைத்து மக்களுக்கும் பொதுவானதாகிய மெய்ப்பொருள் பற்றி கூறுகிறார் பெரியவர் வ.உ.சி.

இன்றைய கல்வி நிலை பெரும் பரிதாபத்துக்குரிய அரசியலாகி இருக்கும் சூழலில் மாணவரியலில் நடந்து கொள்ள வேண்டிய பயிற்றுமுறை, ஆசிரியர் கடமை, கல்வி பயில தேவைக்கான நினைத்தபடி உடல் வளைந்தால்தான் அறிவை அனுபவத்தில் கொண்டுவர முடியும், மனம் விரியும் என்பதை விளக்கும் உடம்பை வளர்த்தல் அதிகாரம் மெய்யறத்தில் பின்பற்றக் கூடியது.

இல்வாழ்வியல் அதிகாரத்தில் ‘உயிர்த் துணை கொள்ளல்’ அதிகாரத்தில் 
‘துணையிழந்தாரை மணத்தல் புண்ணியம்,
 விரும்பா தவரை விரும்புதல் பாவம்
போன்ற வரிகளினூடாக திருமண முறையில் அவர் காலத்தில் எழுந்த பெண்ணுரிமை பற்றிய மறுமலர்ச்சி கருத்துக்களினை வெளியிடுகிறார்.

விதியை மாற்றிட வினையை மாற்றுக
விதி செய் கர்த்தா வினைசெய் யுயிரே
நல்விதிக்கு நற்செயலே காரணமென்றும், தீவிதிக்கு தீச்செயலே காரணமென புதிய விளக்கம் தருகிறார்.

நாடாள்வோர் நாட்டை நல்ல முறையில் ஆள வேண்டும் என்னும் கருத்தினை

’’அரசுயிர் கட்குச் சிரசென நிற்பது’’

நாடாள்வோரின் இன்றியமையாத கடமையாக குறிப்பிடும் வேளையில்
‘”குடியெலா மகவெனக் கொண்டுமன் னோம்பும்’”
ஒரு நாடு படைபலத்தை எப்படி பெருக்க வழி செய்ய வேண்டும் என்பதை

அரியநற் றொழில்சில வறிதலோர் கடனாம்

படைக்கல மனைத்தும் பண்போடு பயில்க

படைவகுத் தமர்செயு நடையெலா மறிக

புவிக்கடல் விண்மிசை போவன வூர்க

எவ்வகை யுருவு மெடுத்திடப் பழகு

உழவுவா ணிகங்கைத் தொழில்சில வறிக.

இந்த மேற்குறித்த அடிகள் ஆங்கிலேயர் அரசாங்கத்திற்கு எதிரான விரோதமான கருத்துக்கள் என்றெண்ணி மொழிபெயர்ப்பாளர்களுக்கு அனுப்பி இது அரசாங்கத்திற்கு விரோதமான கருத்தா என்று அஞ்சி தணிக்கைக்கு உட்படுத்தி அரசாங்கத்திற்க்கு எதிரான கருத்துக்கள் அல்ல என்று உறுதிப்படுத்திய பிறகே ஆங்கிலேய அரசாங்கம் நிம்மதி அடைந்தது என்றால் வ.உ.சி. குறித்து எவ்வளவு தூரம் அஞ்சியிருக்கிறார்கள் என்று புரிகிறதா. 

ஆனால் நம் சமூகத்தில் இன்று வரை மெய்யறம் என்ற நூலின் வாசனை அறியாமல் கடந்து செல்கிறார்களே?
உரையாசிரியர்கள் எவ்வாறு நூலினை உரையாள வேண்டும் என்பதற்காக ஒரு அதிகாரம் 

‘”உரைநூலாளுதல்’” அதிகாரத்தில் ஆட்சி முறைக்கு நலம் சேர்க்கும் ஒற்றாளுதல், அமைச்சாளுதல், ஆளும் பொறுப்பில் இருக்கும் நாடாள்வோண் பெற வேண்டிய திறமைகள் அரசன் பெற்றிருக்க வேண்டியதையும், உரை நூல்களீணாஈ ஆளும் திறனும் பெற வேண்டுவதையும் வற்புறுத்துகிறார்.

இல்வாழ்வியலில் இருவருள றிவிற் பெரியவ ராள்க, துணை நன் காள்பவர் தொல்லுல காள்வர்போன்ற வரிகள், அந்தணரியலில் கூடாவெழுக்கமாக சன்னியாசிகளுக்கு கூறும் அறிவுரையாக

சாமிக ளுட்பலர் காமிக ளாயினர்
தேசிய ருட்பல ராசின ராயினர்
மகந்துக ளுட்பல ரிகந்தன ரொழுக்கம்
தம்பிரான் மறமெலா மெம்பிரா னறிவர்
போலியந் தணர்பலர்புரியா மறமிலை

போன்ற வரிகளால் போலி காவி கபட வேடதாரிகளைச் சாடுகிறார். சமூகச் சீர்திருத்த பார்வைக்கு இது போன்ற பல மறுமலர்ச்சிக் கருத்துக்கள் மெய்யறத்தில் மூழ்கி முத்து எடுப்பவர்கள் எடுக்கலாம்.
கட்டிடக்கலை பொறியாளர் போன்று ஒரு வீடு எப்படி கட்ட வேண்டும் என்பதை இல்லமைத்தல் அதிகாரத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

அகல நீள மரைக்கான் மைல்கொளல்
ஈரிரு புறமதி லெதிரெதிர் வழி செயல்
இல்லிற் கீரா யிரமடி சதுரமாம்
வளியொளி யளவினுள் வரச்செல வழிசெயல்
என மனையடி சாத்திர கலையறிவினை வெளிப்படுத்துகிறார்.
மெய்யறம் என்ற மெய்க்கடலில் சிறு துளிகள் உங்கல் பார்வைக்கு வைத்துள்ளோம். 

- மெய்யறம் வழியாக திருக்குறள், திருமந்திரம், தொல்காப்பியம், திருவாய்மொழி, அரசியல் நூல் வழி சாத்திரங்கள்

- மெய்யறம் வழியாக துலக்கம் பெறும் மரபறங்கள்

- மெய்யறம் காட்டும் எதிர்மறை அறங்கள்

- மெய்யறம் புலப்படுத்தும் அரசியல் அறம்

- மெய்யறம் வெளிப்படுத்தும் உவமைகள் உருவகங்கள்

- மெய்யறம் புலப்படுத்தும் உடன்பாட்டு அறங்கள்

- மெய்யறம் – மாணவரியலில் வெளிப்படுத்தும் கற்பித்தல் நெறிப் பயிற்றியம்

- மெய்யறம் புகட்டும் கைத்தொழில் மற்றும் உழவுத்தொழில் பண்பாடு

- மெய்யறம் – படைக்கலம் அமைத்தல்

மெய்யறம் வழியாக மேற்குறித்த பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் ஆய்வாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும். மிகச் சிறந்த கட்டுரைகள் தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு ISBN எண் குறிப்பிட்டு புத்தகமாக அச்சிட்டு வெளியிட எண்ணியுள்ளோம்.

ஆய்வாளர்கள் கட்டுரை சமர்ப்பிப்பதற்கான அனைத்து விதிகளை கீழ் இணைப்பில் விவரமாக வெளியிட்டுள்ளோம்.

ஆதார நூல்கள்:

வீ. அரசு. 2021. வ.உ.சி. பன்னூல் திரட்டு. த,பா.க.ப.கழகம்
மா.ரா. அரசு. 2022. வ.உ.சிதம்பரனாரின் தமிழ்ப்பணிகள். சென்னை:பேராசிரியர் மா.ரா. அரசு நினைவு அறக்கட்டளை.

அ. சங்கரவள்ளி நாயகம். 2022. வ.உ.சி.வாழ்க்கை வரலாறும் இலக்கிய பணிகளும். சென்னை: மலர் புக்ஸ்.

மெய்யறம் நூலினை பதிவிறக்கம் செய்ய கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்க:

https://tamildigitallibrary.in/Articles/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-15-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D

நன்றி: தமிழ் இணைய மின் நூலகம்.

தமிழார்வலர்கள் அனைவருக்கும் பகிர வேண்டுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக