திருப்பூர் குமரன் பிறந்த தினம்: அக்டோபர் 4, 1904
...............................
*கொடிகாத்த குமரனும் ராமாயி அம்மாளும்!*
(பகுதி 1)
*திருப்பூர் கிருஷ்ணன்*
..............................
*மகாத்மாவின் சிந்தனைகளால் கவரப்பட்டு, காந்திமயமாக வாழ்ந்து இளம்வயதில் மறைந்த திருப்பூர் குமரன் வாழ்வில் ஓர் ஆச்சரியம்.
தேதியும் ஆண்டும் வேறு வேறானாலும் அவர் காந்தி பிறந்த அக்டோபர் மாதம் பிறந்தார். (அக்டோபர் 4, 1904.) காந்தி மறைந்த ஜனவரி மாதம் மறைந்தார். (ஜனவரி 11, 1932.) திருப்பூர் குமரன் இறக்கும்போது அவர் வயது வெறும் 27 மட்டுமே.
தந்தை நாச்சிமுத்து முதலியார். தாய் கறுப்பாயி அம்மாள். இளம் வயதிலேயே கைம்பெண் ஆன குமரனின் மனைவி பெயர் ராமாயி அம்மாள்.
காந்தியிடம் அளவற்ற ஈடுபாடு கொண்ட தியாகி குமரன், `தேசபந்து வாலிபர் சங்கம்` அமைத்து சுதந்திர
உணர்வுகளை மக்களிடையே வலுப்படுத்தினார். உண்மையில் அவர் ஊர் ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை அருகிலுள்ள மேலப்பாளையம் என்ற சிற்றூர்தான். பின்னாளில் திருப்பூர் வந்ததாலும் அங்கேயே கொஞ்சகாலம் வாழ்ந்து பின் அங்கேயே காலமானதாலும் திருப்பூர் அவர் பெயரோடு இணைந்துவிட்டது.
சென்னிமலையில் நெசவுத் தொழில் நசித்ததால், திருப்பூரில் எடைபோடும் தொழிலில் ஈடுபட்டுப் பணியாற்றினார் குமரன்.
இன்று மதுவிலக்கை ஆதரிக்கும் நல்லுள்ளம் கொண்டவர்கள் அனைவரும் திருப்பூர் குமரனை மனத்தில் வணங்கக் கடமைப்பட்டவர்கள். சுதந்திரப் போராட்ட காலத்திலேயே காந்தியின் மதுவிலக்குக் கொள்கையின் பெருமையை உணர்ந்துகொண்டார் குமரன்.
மதுவிலக்குப் போராட்டத்தில் கலந்துகொண்டு கள்ளுக்கடை மறியல் நடத்தினார். தங்கள் மது வணிகம் படுத்ததால் எரிச்சலடைந்த மது விற்பனையாளர்கள் ஆங்காரத்தோடு குமரன் தலையிலேயே மதுப் பானையைப் போட்டு உடைத்தார்கள்.
பானையின் கழுத்து வளையம் குமரன் கழுத்தில் மாட்டிக் கொண்டது. கழுத்தில் பானை வளையத்தோடு, `இது மகாத்மா காந்தி எனக்குப் பரிசாகத் தந்த மாலை` என அறிவித்து, கம்பீரமாக திருப்பூர் வீதிகளில் நடந்துசென்றார் அவர்.
*குமரன் உயிர்துறக்கக் காரணமாக இருந்த அந்த மோசமான தினத்தன்று சுதந்திர எழுச்சி ஊர்வலத்தில் கொடிதாங்கி நடந்தார் அவர்.
ஊர்வலத்தில் உடன் நடந்தவர்கள் பி.எஸ். சுந்தரம், ராமன் நாயர், நாச்சிமுத்துக் கவுண்டர், பொங்காளி முதலியார், நாச்சிமுத்துச் செட்டியார், சுப்பராயன், அப்புக்குட்டி, நாராயணன் உள்ளிட்ட பற்பல தியாகிகள். ஆங்கிலேயர் மேல் கொண்ட அச்சத்தில் மக்கள் உறைந்திருந்த காலம் என்பதால் ஊர்வலத்தில் கூட்டம் மிகக் குறைவாகத்தான் இருந்தது.
காவல் துறையினர் கடும் ஆவேசத்தோடு கம்பால் அடித்த அடியில் சுந்தரத்திற்கு நிரந்தரமாகக் காது செவிடாயிற்று.
(சுந்தரம் `காதல் தூங்குகிறது` என்ற நாவலை எழுதியவரும் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியருமான கு. ராஜவேலுவின் நண்பர். கொஞ்சம் வெண்ணெயை விழுங்கி தொண்டையைச் சரிசெய்துகொண்டு கம்பீரமான குரலில் சுதந்திர எழுச்சி உரைகளை வழங்குவார் சுந்தரம் என்று கு. ராஜவேலு என்னிடம் சொன்னதுண்டு.)
தலையில் விழுந்த பலமான அடியொன்றால் குமரனின் மண்டையோட்டுச் சில் இரண்டரை சென்டிமீட்டர் தலைக்குள் போயிற்று. குமரன் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கீழே விழுந்தார்.
அந்த நேரத்திலும் கையில் பிடித்திருந்த கொடியை மட்டும் அவர் விடவேயில்லை. கொடியை அவர் கைவிரல்களிலிருந்து இழுத்துப் பறிக்க நினைத்த காவல் துறையினர் முயற்சி வெற்றிபெறவில்லை.
பல மருத்துவர்கள் குமரனுக்கு மருத்துவம் பார்க்கத் தயங்கினார்கள். ஆங்கிலேயரைப் பற்றிய அச்சம்தான் காரணம். ரங்கநாதன் என்ற மருத்துவர் ஒருவர் மட்டும் மனம்பொறுக்காமல் தைரியமாக மருத்துவம் பார்த்தார்.
(அந்த ரங்கநாதன் என் தூரத்து உறவினர். அவர் வசித்த பகுதியைத் திருப்பூரில் ரங்கநாதபுரம் என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.)
ஆனால் மண்டையோட்டுச் சில்லே உடைந்திருந்ததால், மருத்துவச் சிகிச்சை எதுவும் பலனளிக்கவில்லை. ஜனவரி 11 ஆம்தேதி குமரன் காலமானார். `தங்கள் நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார்` என்ற மகாகவி பாரதி வரிகளுக்கு விளக்கமாக அமைந்த வாழ்வு நிறைவுற்றது.
குமரனின் இறுதி ஊர்வலத்தில் அச்சத்தால் மிகக் குறைவான நபர்களே கலந்துகொண்டார்கள். குமரனின் தம்பி ஆறுமுகம் கொள்ளி வைத்தார். குமரன் தேசத்தின் பொதுச் சொத்து என்று கூறி வெங்கடாசலம் பிள்ளை, மாணிக்கம் செட்டியார், ராஜகோபால ஐயர் ஆகிய தேச பக்தர்களும் கண்களில் கண்ணீர் வழிய குமரன் உடலுக்குக் கொள்ளி வைத்தனர்.
ஆண்டுகள் பல ஓடின. குமரன் கனவுகண்ட சுதந்திரம் நமக்குக் கிடைத்தது. ஆனால் அதைக் கண்டு மகிழக் குமரன்தான் இல்லை. குமரனின் தியாகத்தை கெளரவிக்கும் விதமாக, திருப்பூர் குமரன் நூற்றாண்டை ஒட்டி அவர் திருவுருவைத் தாங்கிய அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
திருப்பூர் ரயில் நிலையம் அருகே குமரனுக்கு ஒரு நினைவில்லம் அமைக்கப்பட்டுள்ளது. குமரன் வாழ்க்கை நிகழ்வுகளைச் சித்திரிக்கும் சில ஓவியங்கள் அங்கு காணப்படுகின்றன.
எந்தச் சாலையில் திருப்பூர் குமரன் காவல் துறையினரின் தடியடிபட்டு மயங்கி விழுந்து பின் காலமானாரோ அந்தச் சாலைக்கு குமரன் சாலை எனப் பெயரிடப்பட்டுள்ளது.
*திருப்பூரில் ஓடக்காடு பகுதியில்தான் திருப்பூர் குமரனின் மனைவி ராமாயி அம்மாள் வசித்து வந்தார். என் வீடிருந்த ரங்கநாதபுரம் பகுதியிலிருந்து சைக்கிளில் போய் நான் ராமாயி அம்மாளை அடிக்கடிச் சந்தித்ததுண்டு. இளைஞர்களிடமெல்லாம் சொந்தப் பிள்ளைபோல் பாசமாகப் பழகும் பண்பு அவரிடம் இருந்தது.
( இது ஒரு மீள் பதிவு. ராமாயி அம்மாளைப் பொதிகைத் தொலைக்காட்சி நேரலையில் நான் பேட்டி கண்டபோது எழுந்த சிக்கல் என்ன, சிவாஜி கணேசன் திருப்பூர் குமரன் வேடத்தில் நடிப்பதைப் பார்த்த ராமாயி அம்மாள் ஏன் மயக்கம் போட்டு விழுந்தார், எம்.ஜி. ஆர் இறந்தபோது என் பிள்ளை காலமாகிவிட்டான் என அவர் வருந்தக் காரணம் என்ன, தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியில் சேரச் சொல்லி அவரை அழைத்தபோது அவர் சொன்ன பதில் என்ன....உள்ளிட்ட கேள்விகளுக்கான விளக்கங்கள் அடுத்த பதிவில்!)
..............................
நன்றி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக