30 டிச., 2025

மேன்மக்கள்

கக்கன் நினைவு தினம்: டிசம்பர் 23:
.............................
*கக்கன் என்றொரு மாமனிதர்!*
*திருப்பூர் கிருஷ்ணன்*
.............................
  *பொதுவாழ்வில் நேர்மைக்கு உதாரணமாக விளங்கிய கக்கன் 1908 இல் பிறந்தவர். மதுரையைச் சேர்ந்தவர். 

   அதே மதுரையைச் சேர்ந்த தியாகி வைத்தியநாதய்யரைத் தம் தந்தை போல் கருதியவர். வைத்தியநாதய்யரோ கக்கனைத் தம் பெறாத மகன் போலவே எண்ணினார். 

   மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெற்ற ஹரிஜன ஆலயப் பிரவேச நன்னாளில் வைத்தியநாதய்யர் தலைமையில் உடன்சென்றவர் கக்கன். 

   கலவரம் நிகழ்ந்தால் ஒருகை பார்ப்போம் என வைத்தியநாதய்யருக்குத் துணையாக நின்றவர் குணத்தில் பசும்பொன்னே ஆன முத்துராமலிங்கத் தேவர். 

  அன்றுதான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆலயக் கதவு திறந்தது. திருப்புன்கூர் ஆலயத்தில் நுழைய நந்தன் சங்கடப்பட்டதுபோல் இனி நந்தன் மரபில் வந்தவர்கள் எந்த ஆலயத்திலும் நுழையச் சங்கடப் படத் தேவையில்லை என்றெண்ணிக் கக்கன் மனம் மகிழ்ந்தது. 

  திருப்புன்கூரில் நந்தனுக்குத் தானே விலகியது நந்தி. ஆனால் மதுரையில் ஹரிஜன ஆலயப் பிரவேசத்திற்குக் குறுக்கே நின்ற சில நந்திகளை முத்துராமலிங்கத் தேவரின் துணிச்சல்தான் விலக வைத்தது. 

  என்றாலும் தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயத்தில் நுழைந்ததால் மீனாட்சியம்மன் ஆலயத்தை விட்டுப் போய்விட்டதாக அர்ச்சகர்களில் சிலர் நினைத்தார்கள்! 

   அவர்கள் அதே கோயில் வளாகத்தில் உள்ள சொக்கநாதர் சன்னிதியில் மட்டும் வழிபாட்டை நிகழ்த்தினார்கள். 

  இந்த விசித்திரத்தை எண்ணி ராஜாஜி நகைத்தார். அவர் காமராஜரோடு மீனாட்சி ஆலயத்திற்குச் சென்றார். 

   காமராஜரிடம், `மீனாட்சியம்மன் கக்கனைப் போன்றோர் நுழைந்ததால் ஆலயத்தை விட்டு வெளியேறி விட்டதாகச் சிலர் நினைக்கிறார்களே? மீனாட்சியம்மன் சிலையைப் பார்த்தபின் என்ன தோன்றுகிறது?` என்று கேட்டார். 

  `முன்னர் இல்லாத மலர்ச்சியோடு மீனாட்சி அம்மன் தென்படுவதைப் பார்க்கிறேன்! தான் பெற்ற பிள்ளைகள் தன்னைப் பார்க்கத் தடைவிதித்த சிலர் சன்னிதியிலிருந்து விலகியதால் அன்னை இன்று கூடுதல் பொலிவோடு இருக்கிறாள்!` என்று பதில் சொன்னார் பெருந்தலைவர்.  

  வைத்தியநாதய்யர் காலமானபோது அவரது புதல்வர்கள் அவருக்குக் கொள்ளி வைத்தது இயல்புதான். 

  ஆனால், கக்கன், அந்தண வகுப்பைச் சேர்ந்த வைத்தியநாதய்யருக்கு, தாமும் மொட்டை அடித்துக் கொண்டு கொள்ளி வைத்தார். 

   வைத்தியநாதய்யரின் புதல்வர்கள், தங்கள் சமூகத்திலிருந்து இதற்கு வந்த எதிர்ப்பை மீறி கக்கன் கொள்ளி வைப்பதற்கு ஆதரவாக நின்றார்கள். 

  ஹரிஜன ஆலயப் பிரவேசத்தைத் தலைமை தாங்கி நடத்திய வைத்தியநாதய்யரின் உடலுக்கும் இந்து சமயத்தில் தவறுதலாக நடைமுறையில் வந்துவிட்ட தீண்டாமை என்ற அநீதிக்கும் அன்று ஒருசேரக் கொள்ளி வைக்கப்பட்டது.  

  ராமபிரானின் உருவப் பட எரிப்புப் போராட்டத்தை ஈ.வெ.ரா அறிவித்தபோது பெரிதும் மனம் வருந்தினார், சமய நம்பிக்கையும் காந்தியிடம் பெரும் ஈடுபாடும் கொண்ட கக்கன். 

  பெரியாருக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்த அவர், `தேசத் தந்தையான காந்தியின் நம்பிக்கைக்குரிய கடவுளை அவமதிப்பது ஒரு சமூக விரோதச் செயல்!` எனக் குறிப்பிட்டார்....  

  *கக்கன் குடும்பத்தினரின் குலதெய்வத்தின் பெயர்தான் கக்கன். ஆண்பிள்ளை பிறந்தால் கக்கன் என்றும் பெண்பிள்ளை பிறந்தால் கக்கி என்றும் யெர் வைப்பது அவர் குடும்ப வழக்கம். 

  சுதந்திரப் போரில் ஈடுபட்ட காலங்களில், காவல் துறையினரின் பலத்த கண்காணிப்பிலிருந்து தப்பிக்க கக்கன் பெண்வேடமிட்டுக் கக்கியாக மாறிய சந்தர்ப்பங்கள் பல உண்டு! 

 வெகுகாலம் இந்த ரகசியம் தெரியாமலிருந்து பிறகுதான் காவல்துறை விழித்துக் கொண்டது. கக்கன் கைதுசெய்யப்பட்டு அலிபூர் சிறையில் அடைக்கப் பட்டார். 

  சிறைவாசத்தில் கற்றுக் கொண்ட இந்தி பின்னாளில் அமைச்சரானபோது அவருக்குப் பெரிதும் பயன்பட்டது. 

   அமைச்சர் பதவியிலிருந்து விலகியபின் பொதுப் பேருந்துகளில்தான் மக்களோடு மக்களாக கக்கன் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத் தக்கது.... 
 
  *கக்கன் மத்திய சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பொதுப்பணித் துறை, விவசாயம், ஆதித் திராவிடர் நலத்துறை, உள்துறை என்று பல பொறுப்புகளை வகித்தவர்.

  9 ஆண்டுகள் அமைச்சராகவும் 5 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். கறைபடாத கரத்தை உடையவர். 

  அமைச்சராக இருந்தபோது, அரசு வாகனத்தில் குடும்ப உறுப்பினர்கள் போக அனுமதிக்க மாட்டார். 

  அவரின் தம்பி விஸ்வநாதன் வேலையில்லாமல் இருந்தபோது எங்கும் பரிந்துரை செய்ய மறுத்தார். 

   தம்பிக்கு மனை ஒதுக்கிய பொழுது, அந்தக் கோப்பை வாங்கிக் கிழித்துப் போட்டுவிட்டு மனை வழங்கக் கூடாதெனக் கூறிவிட்டார். 

  சொந்த மகளைக் கான்வென்ட் பள்ளியில் சேர்க்காமல் அரசுப் பள்ளியில் சேர்த்துப் படிக்கவைத்தார். எனக்கு அங்கேயெல்லாம் சேர்த்துப் படிக்கவைக்கப் பொருளாதாரச் சக்தி இல்லை எனக் குறிப்பிட்டார். 

  தியாகி என்ற வகையில் அவருக்கு வழங்கப்பட்ட நிலத்தை வினோபாவின் பூமிதான இயக்கத்துக்குத் தந்துவிட்டார். 

  இப்படி அவரது நேர்மைக்கு உதாரணமாக இன்னும் எத்தனையோ சம்பவங்கள். லஞ்ச ஒழிப்புத் துறையைத் தமிழகத்தில் கொண்டு வந்ததும் கக்கன் தான்.... 

 *இறுதிக் காலங்களில் தாள முடியாத வறுமையில் சிரமப்பட்டாலும் அதை வெளியில் சொல்லாமல் வாழ்ந்தார். அவருக்கு உதவி செய்ய விரும்பிய சிவாஜி கணேசன் ஒரு தங்கச் சங்கிலியைப் பரிசளித்தார். 

  அந்தத் தங்கச் சங்கிலியை ஏலம் விட்டார் கக்கன். அதில் கிடைத்த தொகையை ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தார். அதில் கிடைத்த வட்டியை மாதாமாதம் பெற்றுச் செலவு செய்து வந்தார். 

  அந்தத் தொகையும் சரிவரக் கிடைக்கவில்லை என்று பின்னால் அறிந்த சிவாஜி கணேசன் மனம் வருந்தினார். 

   1981இல் சென்னையிலிருந்து மதுரை சென்ற கக்கன் உடல் நலம் பாதிக்கப்பட்டார். அரசு மருத்துவமனையில் சாதாரண வகுப்பில் சேர்ந்தார். 

  அதே மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த மேயர் முத்துவைப் பார்க்கச் சென்ற எம்.ஜி. ஆரிடம், கக்கன் அங்கே சாதாரண வகுப்பில் சிகிச்சை பெற்றுவரும் விவரம் சொல்லப்பட்டது. 

  எம்.ஜி.ஆர்., விரைந்துசென்று கக்கனைப் போய்ப் பார்த்தார். `உங்களுக்கு என்ன உதவி செய்யட்டும்? தனி வார்டுக்கு மாற்றவா?` எனக் கேட்டார். `நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி!` எனச் சொல்லிவிட்டார் கக்கன். 

  மருத்துவமனை அதிகாரிகளை அழைத்த எம்.ஜி.ஆர். `இவர் யாரென்றாவது தெரியுமா?` எனக் கேட்டார். 

  `இவர்தான் கக்கன்ஜி. இவர் பெற்றுத்தந்த சுதந்திரத்தைத் தான் நாம் அனுபவித்து வருகிறோம். இவரை இப்படி நடத்த எப்படி உங்களுக்கு மனம் வந்தது? இவருக்குத் தனி அறை வசதியும் உயர் மருத்துவமும் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள். 

  ஏதேனும் தேவைப்படும் அரிய மருந்து கிடைக்கவில்லை என்றால் எனக்குத் தெரியப்படுத்துங்கள். நான் வரவழைத்துத் தருகிறேன்!` 

  என்று சொல்லிக் கக்கனிடம் பிரியாவிடை பெற்றார் எம்.ஜி.ஆர்.

  *1981 டிசம்பர் 23ஆம் தேதியன்று, 73 வயதில் காலமான கக்கன் பொதுவாழ்வில் அரசியல்வாதிகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்த பெருமகன். 

  அவருக்கு அஞ்சலியாக இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டது. பொதுவாழ்வில் முத்திரை பதித்த அவரை, முத்திரையிடும் அஞ்சல் தலை மூலம் கெளரவித்தது குறித்து கக்கன் அன்பர்கள் நிறைவடைந்தார்கள். 

  தனிமனித ஒழுக்கமும் சமுதாய ஒழுக்கமும் நிறைந்த ஓர் அரசியல் நட்சத்திரம் உதிர்ந்துவிட்டது. இந்த இரண்டும் இல்லாதவர்கள் அரசியலில் பெருகி விட்ட காலம் இது. 

  மகான் கக்கனின் நாமத்தை உரத்து முழங்குவதாலாவது நாட்டில் நேர்மை மறுபடி தழைக்குமா என நாம் முயற்சிசெய்து பார்க்கலாம்.   

(நன்றி: கல்கி வார இதழ்.)

மனமார்ந்த நன்றிகள்:
திரு.திருப்பூர் கிருஷ்ணன் மற்றும் கல்கி 🙏🙏🙏
   .............................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக