24 ஏப்., 2020

பால்ஜாக்கின் காதல்

எஸ்ராவின் வலைப்பக்கத்திலிருந்து

பால்சாக்கின் காதல்

பிப்ரவரி 1832 இல் எழுத்தாளர் பால்சாக் (Honore de Balzac) முகவரிக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. அது உக்ரேனின் ஒடேஸாவிலிருந்து எழுதப்பட்ட கடிதம். எழுதியவர் பெயர் முகவரி எதுவுமில்லை. ஆனால் அக் கடிதம் பால்சாக்கின் படைப்புகளைக் கோபமாக விமர்சனம் செய்திருந்தது. குறிப்பாக அவரது La Peau de chagrin நாவலின் பெண் கதாபாத்திரம் பற்றி எதிர்மறையான விமர்சனத்தை வைத்திருந்தது. யார் எழுதியது என்று தெரியவில்லை. அந்நியர் என்று மட்டுமே கையெழுத்து இடப்பட்டிருந்தது. ஆனால் அதை எழுதியது ஒரு பெண்ணாக இருக்கக் கூடும் எனப் பால்சாக் நினைத்தார்.

இந்தக் கடிதத்திற்கான பதிலை Gazette de France, என்ற பத்திரிக்கையில் விளம்பரமாக வெளியிட்டார். காரணம் அந்தப் பெண் நிச்சயம் பத்திரிக்கையைப் படிக்கக் கூடும் என்பதே. அவர் நினைத்தது போலவே அந்தப் பெண் பத்திரிக்கையில் வெளியான அந்த விளம்பரத்தை வாசித்தாள். அதற்குப் பதில் சொல்வது போல மறுகடிதம் எழுதினாள். இப்படித்தான் பால்சாக்கிற்கும் அவரது காதலி எவெலினா ஹன்ஸ்கா என்ற போலந்து சீமாட்டிக்கும் இடையில் கடிதப் போக்குவரத்துத் துவங்கியது

பதினைந்து ஆண்டுகள் இருவரும் மாறி மாறி கடிதம் எழுதிக் கொண்டார்கள். பால்சாக்கின் கடிதங்கள் தற்போது Letters of Honore de Balzac to Madame Hanskaஎனத் தனி நூலாக வெளியாகியுள்ளது.

எவெலினா யார் எங்கேயிருக்கிறார் என்று பால்சாக்கிற்கு ஒரு விபரமும் தெரியாது. ஆனால் கடிதம் வழியாகவே அவளைக் காதலித்தார். நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆசை கொண்டார். அவள் அதை விரும்பவில்லை. ஒரேயொரு முறை சந்தித்தால் கூடப் போதும் என்று மன்றாடினார்.

1820 களின் பிற்பகுதியில், எவெலினா பால்சாக்கின் நாவல்களைப் படிக்கத் தொடங்கினார், 1832 ஆம் ஆண்டில், பால்சாக்கிற்கு  ஒரு அநாமதேய கடிதத்தை அனுப்பினார். எவெலினாவின் சகோதரி கரோலினா புஷ்கின் மனைவி. ஆகவே அவர்கள் வீட்டில் எழுத்தாளர்களுடன் நேரடி தொடர்பும் தீவிர வாசிப்பும் இயல்பாக இருந்தது.

அதன் பிறகு எவெலினா ஒரு நம்பகமான கூரியர் மூலம் பால்சாக்கிடமிருந்து கடிதங்களை நேரடியாகப் பெறுவதற்காக ஏற்பாடுகளைச் செய்தார், இதன் மூலம் ரகசிய கடிதப் பரிமாற்றத்தை அனுமதித்தார்.

அப்போது தான் அவள் திருமணம் ஆனவள். அவளது கணவருக்கு அவளை விட இருபது வயது அதிகம். அவளுக்குக் குழந்தைகள் இருந்தன என்பது தெரிய வந்தது. திருமணமான பெண் என்றாலும் பால்சாக்கின் காதல் குறைந்து விடவில்லை. அவளைத் தான் மனப்பூர்வமாகக் காதலிப்பதாக எழுதினார். கொஞ்சம் கொஞ்சமாக அவளது மனதை மாற்றி அவளை நேரில் சந்திக்க ஒத்துக் கொள்ளச் செய்தார் பால்சாக்.

அவளும் கணவரும் ஐரோப்பாவுக்குப் பயணம் செய்ய இருப்பதை பற்றி எவெலினா கடிதம் அனுப்பிய போது தான் அவளை நிச்சயம் சந்திக்க வேண்டும் என்று பால்சாக் மன்றாடினார்.

சுவிட்சர்லாந்தில் சந்தித்துக் கொள்வதென முடிவு செய்தார்கள். கணவருடன் பயணம் செய்து வந்த எவெலினா பால்சாக்கை சந்திக்கும் இடம் நேரம் பற்றி ஒரு கடிதம் கொடுத்தனுப்பினார்.

சுவிட்சர்லாந்தில் பால்சாக் மார்க்விஸ் டி என்ட்ராகுஸ் என்ற பொய் பெயரில் அறை எடுத்துக் கொண்டு ஒரு ஹோட்டலில் தங்கினார். ஏரிக்கரையிலிருந்த மாளிகையில் எவெலினாவை சந்திக்க ஆசையாகப் பால்சாக் காத்திருந்தார். அவள் பால்சாக்கை அடையாளம் கண்டுவிட்டாள். அந்தச் சந்திப்பின் வழியே அவர்களின் காதலை உறுதியானது. இருவரும் நெருக்கமாக பழகினார்கள். அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பால்சாக் துடித்தார். அவளோ அதை ஏற்கவில்லை. வேடிக்கை என்னவென்றால் இதே காலகட்டத்தில் பால்சாக் வேறு ஒரு பெண்ணையும் காதலித்துக் கொண்டிருந்தார் என்பது தான்.

எவெலினாவின் கணவர் மிகவும் வசதியானவர். அவரது பண்ணை 21,000 ஏக்கர் பரப்பளவிலிருந்தது. வீட்டில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பணியாளர்களாக இருந்தார்கள். அவர்கள் மாளிகையை ஒரு பிரெஞ்சு கட்டிடக் கலைஞர் வடிவமைத்துள்ளார், வீட்டில் 25,000 புத்தகங்களைக் கொண்ட பெரியதொரு நூலகம் இருந்தது. எவெலினாவின் கணவர் பண்ணை நிர்வாகத்திலே நேரத்தைக் கழித்து வந்தார். அது எவெலினாவை சங்கடப்படுத்தியது. அவள் தனக்கு ஒரு புதிய வாழ்க்கை வேண்டுமென விரும்பினாள். அதைப் பற்றியே கனவு கண்டாள். அந்த நாட்களில் தான் அவள் பால்சாக்கை படிக்க ஆரம்பித்தாள்.

எவெலினாவின் கணவர் 1841 இல் இறந்த பிறகு அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனப் பால்சாக் முடிவு செய்தார். இதற்காக ரஷ்யப் பயணத்தை மேற்கொண்டார். ஆனால் அப்படித் திருமணம் செய்து கொண்டால் சொத்து முழுவதையும் இழந்துவிடுவாள் என்று எவெலினாவின் மாமா கட்டுப்பாடு விதித்தார். இதனால் பால்சாக் என்ன செய்வதென அறியாமல் குழம்பிப் போனார்.

தானே ஒரு ரஷ்ய குடிமகனாக மாறி, ஜார் மன்னரிடம் தனது திருமணத்தை அனுமதிக்கும்படி கேட்கப்போகிறேன் என்றார் பால்சாக் அது எளிய விஷயமாகவில்லை. ஆகவே அவளே இதற்கு ஒரு வழி கண்டுபிடித்தாள். இன்னொருவரைத் திருமணம் செய்து கொண்டு சில மாதங்களில் விவாகரத்துப் பெற்றுவிடலாம் என்பதே அந்த யோசனை.

பால்சாக் அதற்கும் சம்மதித்தார். அதன்படி எவெலினா வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர் நினைத்ததுப் போல அந்தக் கணவரிடமிருந்து விடுபடமுடியவில்லை. மாறாக அவர் மீதும் அன்பு செலுத்த ஆரம்பித்தார். இது பால்சாக்கிற்குக் கடுமையான மனநெருக்கடியைத் தந்தது. நோயாளியாக மாறினார். நிறையக் கடன்சுமையும் அவரை அழுத்தியது. இதற்கிடையில் எவெலினாவை மனதில் வைத்துக் கொண்டு அது போன்ற பெண் கதாபாத்திரத்தைத் தனது நாவலில் உருவாக்கினார் பால்சாக்

1850 ஆம் ஆண்டில் அவர்கள் இறுதியாகத் திருமணம் செய்துகொண்டு பாரீஸுக்குக் குடிபெயர்ந்தனர். இதற்காகவே தனி வீடு ஒன்றை வாங்கினார் பால்சாக். அந்த மணவாழ்க்கை ஐந்து மாதங்களே நீடித்தது. 1882 இல் பால்சாக் நோயுற்று இறந்து போனார்.

தான் விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளப் பதினெட்டு ஆண்டுகள் பால்சாக் போராடினார். அவர்களின் விசித்திரக்காதல் பால்சாக்கின் நாவலை விடவும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

இத்தனை காதலும் ஆசையும் கொண்டிருந்த பால்சாக் திருமணமான ஐந்தே மாதங்களில் இறந்து போனது துயரமே.

பால்சாக்கின் மரணத்திற்குப் பிறகு அவரது தாயுடன் எவெலினா வசித்து வந்தார். அத்தோடு. பால்சாக்கின் வெளியாகாத படைப்புகளை வெளிக்கொண்டு வர உதவிகள் செய்தார். எவெலினா 1851 ஆம் ஆண்டில் ஓவியர் ஜீன் கிகோக்ஸை சந்தித்தார். அவருடன் நெருக்கமான நட்பு உருவானது. அந்த உறவு கடைசி வரை நீண்டது. ஆனால் எவெலினா அவரைத் திருமணம் செய்து கொள்ளவில்லை. கடைசிவரை பால்சாக்கின் மனைவியாகவே வாழ்ந்தார்.

நன்றி: Htay Htay, புதிய தகவல்கள், முகநூல்.

கருத்துகள் இல்லை: