5 அக்., 2021

நூல் நயம் : பறந்து திரியும் ஆடு : எஸ்.ராமகிருஷ்ணன்


#ஆண்டுவிழா
#குழந்தைகள் இலக்கியம்

புத்தகம்: பறந்து திரியும் ஆடு
ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: தேசாந்திரி
விலை: ₹100

            குழந்தைகள் உலகமே மிக விந்தையானது. இயக்குனர் சங்கர் திரைப்படக் காட்சிகள் போல பிரம்மாண்டமும் விசித்திரமும் கலர்கலரான சுற்றுப்புறமும் சேர்ந்து அமைந்த ஒரு சூழலில் சஞ்சரித்துக் கொண்டு இருப்பது.
    "பறந்து திரியும் ஆடு" புத்தகத்தின் பெயரே நம்மை ஒரு அற்புத உலகப் பயணத்திற்கு தயார் செய்கிறது.
            கதைக்குள் செல்வோம். யக்கர் ஒரு ஆட்டு மந்தை வைத்து உள்ள மேய்ப்பர்.
                அவற்றுள் கண் பார்வை இல்லாத ஒரு ஆட்டுக்குட்டி தான் நம்ம ஹீரோ டுவிங்.
           யக்கரின் ஆடுகள் காலையில் மேய்ச்சலுக்கு செல்லும் இடம் ஆகாயத்தில்  உள்ள  ஒரு புல்வெளி.
     காலையிலும் மாலையிலும் அந்த புல்வெளிக்கு போய் வர பறவைகள் போல பறக்கும் விசேஷ சக்தி பெற்றவை யக்கரின் ஆடுகள்.
         அவரது மந்தையில் இருந்து வழி தவறி பல இடங்களை சுற்றி கடைசியாக யக்கரை சேரும் டுவிங்- ன் தேடுதல் பயணமே கதை.
          டுவிங் தனது பயணத்தில் சந்திக்கும் பாத்திரங்கள் அனைவருமே நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களை போலவே குணமுள்ளவர்கள்.
              டங்கா எனும் பாறை,உயரமான மரம்,அருவி,பூக்கள்,சூரியன், மேகம் என அனைவரும் அவரவர் குறைகளை பெரிதாக நினைத்து வெதும்பி கொண்டு உள்ளார்கள்.
           டுவிங் அவர்களுடைய குறைகளை குறைகளாக பார்க்காமல் மாற்று கோணத்தில் கண்டு அவர்களை பற்றிய ஒரு பெருமித உணர்வை உண்டாக்கி விடுகிறது.
                இவர்கள் அனைவரும் நாம் வாழ்வில் சந்திக்கும் மனிதர்களையே பிரதிபலிக்கின்றன.
   (உ. ம்) பாறை போல இறுகிய குணம் கொண்டவர்கள், தன்னிடம் உள்ள வாசனையால் பெருமை கொள்ளாமல் வண்ணமின்மை நினைத்து கவலை கொண்ட மலர் போன்றோர்,
உயரம் தொட்ட பலர் உடன் பழக ஆள் இன்றி தனித்து இருக்கும் அந்த மரம் போல இருத்தல்
            கதை போகிற போக்கில்  இதுபோல மனதில் படியும் கருத்துகளை விதைத்து விட்டே செல்கிறது. சூழலியல், ஜீகாருண்யம்,பிறரை சார்ந்து இருத்தல்,பிறருக்காக வாழ்தல் போன்ற அத்தியாவசிய கருத்துகள் அவை.
    (உ. ம்) பக்.14
    " அவரது வீட்டிற்கு கதவுகளே கிடையாது.கல்லால் ஆன வீடது.பகலில் சில சமயம் நாய்கள் உள்ளே புகுந்து மீதம் வைத்த உணவை சாப்பிட்டு போவது உண்டு.அப்போதும் அவர் கோபம் கொள்ள மாட்டார்.நாய்களுக்கும் பசிக்கும் தானே?"
             இன்னொரு இடத்தில், உண்மையில் தான் அழுது கொண்டு இருப்பதாய் தன்னிரக்க சூபாவியாய் இருக்கும் அருவியிடம் டுவிங் சொல்லும் கருத்து நமக்கும் சேர்த்து தான்.
          அருவியிடம் டுவிங் " நீ நிச்சயமாக அழவில்லை.அடுத்தவர் பொருட்டு கஷ்டபடுகிறவர் அதை வருத்தமாக நினைப்பதே இல்லை" என்கிறது.(பக்.55)
           மொத்தத்தில் தன் கூட்டத்தில் இருந்து தொலைந்து போன ஒரு குட்டி ஆடு வாழ்க்கை பயணத்தில் நாம் தொலைத்த குழந்தை தனத்தை நமக்கு மீட்டுத் தருகிறது.
          சிறு வயதில் சிந்துபாத் உடன் சேர்ந்து நிம்பஸ் கப்பலில் சாகச பயணம் போன நமக்கு நீண்ட காலத்திற்கு பிறகு டுவிங் உடன் ஒரு சிறு சாகச பயணம் போன மாதிரி இருந்தது.
          நவீன கல்வி உலகம் கூறும் படைப்பாற்றல் (creativity) திறனை குழந்தைகளிடம் மேம்படுத்த இதுபோன்ற இனிய நூல்கள் அவசியம்.
        இக்கதை தந்த குழந்தைப் பருவ அனுபவத்தால் என்னுடைய wishlist இல் இன்னும் சில எஸ். ரா அவர்களின் குழந்தைகளுக்கான புத்தகங்களை add செய்து விட்டேன்.

நன்றி :
ஜெ. மோகனப்பிரியா,
வாசிப்பை நேசிப்போம்,
முகநூல்  


கருத்துகள் இல்லை: