"ஆன்டன் செகாவ்"
( சிறுகதைகளும் குறுநாவல்களும் ) மொழிபெயர்ப்பாளர்கள் கிருஷ்ணய்யா,
பூ. சோமசுந்தரம் .சுபா பதிப்பகம் முதல் பதிப்பு 2018 பக்கங்கள் 320 விலை ரூ.260.
ஆன்டன் செகாவ் எனக்கு எப்பொழுது அறிமுகமானார் ?
மார்கழி மாத பின்னிரவு முன்பனி போல நினைவு எனக்கு .
அறிமுகப்படுத்தியவர் ஒரு காலத்தில் நண்பராக இருந்த து.ராஜா MP.அவர்கள் .
(இவர் தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். இந்திய பொதுவுடமைக் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி ,தற்பொழுது கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய அளவிலான தலைவராக இருக்கிறார் .
இன்று நான் குடியாத்தம் செதுக்கரை மலைக் குன்று ;அவர் இந்திய இமயமலை எவெரெஸ்ட் சிகரம்.)
நான் எனது கிராமத்தில் ஒன்றாம் வகுப்பில் ஒரு மாதம் மட்டுமே படித்தேன் .அப்போது அவர் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார் என்று நினைவு .அதன்பிறகு குடியாத்தம் நகரில் நான் படிப்புக்காக சேர்க்கப்பட்டேன் .குடியாத்தம் அரசினர் திருமகள் கலைக் கல்லூரியில் P.U.C.படிக்கும்போது கல்லூரி தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக மாணவர்கள் வாக்கு சேகரிக்க வந்த போது இவரும் அதில் ஒருவராக இருந்தார் .அப்போது அவர் இளங்கலை முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தார் .அதன் பிறகு நான் விவசாய கல்லூரி சேர்ந்துவிட்டேன் . படித்து முடித்தபின் குடியாத்தம் மேலாஆலத்தூர் மண் பரிசோதனை கூடத்தில் நான் துணை வேளாண்மை அலுவலர் ஆக பணியில் சேர்ந்த பொழுது எங்கள் நகரில் வருடாவருடம் சோவியத்து புத்தக கண்காட்சி நடக்கும் .
எங்கள் ஊரில் இரண்டு பிரபலமான டாக்டர்கள் அந்த காலத்தில் .ஒருவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் ,அடுத்து ஜிகே கண்ணபிரான் அவர் மனைவி சகுந்தலா மகப்பேறு மருத்துவர் .ஆனால் டாக்டர் கண்ணபிரான் அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக பணியாற்றியதால் அன்றைய காலகட்டத்தில் தலைமறைவாக வாழ்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு திரும்பவந்து புத்தகக் கண்காட்சியில் என்னை பேசுமாறு அழைக்கிறார். அப்போது அருகில் இருந்தவரை பார்க்கிறேன் .அவர்தான் இன்றைய து.ராஜா எம் பி அவர்கள் .
அவர் கையில் ஆண்டன் செகாவ் புத்தகம் , சோவியத்நாடு இதழ் இருந்தது .கொடுத்தார் ,படித்தேன் .ஆர்வம் அவ்வளவாக இல்லாமல் .
எனது ஆர்வம் எல்லாம் அந்த காலத்தில்
டாக்டர் மு. வ, ஜெயகாந்தன் ,தி .ஜானகிராமன் மட்டுமே .
அதன்பிறகு ஆண்டன் செகாவ்வை முழுமையாக மறந்து விட்டேன் .
செகாவ் குறித்து படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் .இதற்கு முன் "கி. ரா. பக்கங்கள் "படித்தபோது அதில் கி. ரா. அவர்கள் செகாவ் குறித்து சிலாகித்து எழுதி இருப்பார்.
இப்போது 5, 6 ஆண்டுகளாக
எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் மூலமாக எனக்கு மிகவும் நெருங்கிய பரிச்சயம் மிக்க நண்பராகவும் ஆசிரியராகவும் ஆகிவிட்டார் ஆன்டன் செகாவ்.
ஏனோ என்ன இருந்தாலும் எனக்கு நமது இந்திய ஆசிரியர்களைப் போல அவர் என்னை கவரவில்லை.
#####
ஆசிரியர் குறிப்பு:
ஆன்டன் செகாவ் சிறிய தென்திசை நகரான தகன்ரோகில் 1860 இல் பிறந்தார் .இருபதாவது வயதில் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில் சேர்ந்தார் .அப்போதே நையாண்டி நகைச்சுவை ஏடுகளிலும் செய்தி ஏடுகளிலும் சிறுகதைகளும் விகடத் துணுக்குகளும் ஓரங்க நாடகங்களும் வசனங்களும் எழுத ஆரம்பித்தார்.
இளைஞராக இருந்த ஆண்டன் செகாவ் எழுதிய கதைகளில் பணத்தையும் பட்டம் பதவியையும் நாடிய சிறுமதியினரை சித்தரித்தார்.
ஆன்டன் செகாவ் எதையும் பலத்த குரலில் பிரகடனமும் செய்வதில்லை. வாசகருக்கு நேரடியாய் அறிவுறுத்த முற்படுவதில்லை.
எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் ஆன்டன் செகாவ் குறித்து கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.:
"கா. நா. சு .,வல்லிக்கண்ணன் ,
தி. க. சி.,ஜெயகாந்தன் ,ஜானகிராமன், அசோகமித்திரன்,சுந்தர ராமசாமி, பிரபஞ்சன் முதலான பலரும் வியந்து பாராட்டி இருக்கிறார்கள்.
பெண்கள்பூ வேலைகள் செய்வது போல நுட்பமான அழகு உணர்ச்சியுடன் தனித்துவத்துடன் சிறுகதைகள்
எழுதியவர்செகாவ் என்று லியோ டால்ஸ்டாய் வியந்து கூறியிருக்கிறார் .
கார்ககியும் , இவான் புநினும்,குப்ரினும் செகாவை
ஷேக்ஸ்பியருக்கு நிகரான படைப்பாளியாக கூறுகிறார்கள்.
19 வயதில் மருத்துவம் பயில துவங்கினார்; 24 ஆவது வயதில் காச நோய் அவரைத் தாக்கியது.
ஒரு பக்க கதை முதல் 100 பக்க குறுநாவல் வரை பல்வேறு விதமான கதைகளை எழுதியிருக்கிறார் ; 600 க்கும் மேலாக .
"ஷகலின் தீவில் "இருந்த ஆயிரக்கணக்கான கைதிகளை தேடிச் சென்று சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை குறித்து ஆராய்ந்து எழுதியவர் .
தனது கதைகளில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் காதலை கொண்டாடியவர் செகாவ்
சோவியத் அரசின் சார்பில்" ராதுகா பதிப்பகம் " ரஷ்ய இலக்கியங்களை ருஷ்ய மொழியில் இருந்து நேரடியாக தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டது.
செகாவ் எழுதிய 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள் அவரது காப்பகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டு இருக்கின்றன.
தனது கையெழுத்துப் பிரதிகள் ,கதைகள் வெளியான இதழ்கள் டைரிகள், நோயாளிகளின் குறிப்பேடு ,மருத்துவ குறிப்புகள் ,பயணக்குறிப்புகள் ,வாசித்த புத்தகப் பட்டியல் ,நாடக நிகழ்வின் விளம்பரங்கள் ,புகைப்படங்கள் என அத்தனையும் முறையாக பராமரித்து வந்திருக்கிறார் .அவை இன்றும் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளதாக எஸ்.ஆர். குறிப்பிடுகிறார் .
" செகாவ் போல பலவேறு வகையாக கதாபாத்திரங்களை உருவாக்கியவர் எவருமில்லை. மன உணர்ச்சிகளை துல்லியமாக எழுதியது அவரது தனிச்சிறப்பு .அவரின் எழுத்து மிகவும் யதார்த்தமானது .அலங்கார மொழியை ஒருபோதும் அவர் பயன்படுத்தியது இல்லை."
"துறவிகள் ,வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் ஆகிய மூவர் மீதான அவரது கடுமையான விமர்சனம் மிகுந்த முக்கியத்துவமானது "என்கிறார் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள்.
######
இனி இந்த புத்தகம் குறித்து பார்ப்போம்:
இந்தப் புத்தகத்தில் எட்டு சிறுகதைகளும் குறுநாவல்களும் இடம்பெற்றிருக்கிறது 1)பச்சோந்தி.
2) வான்கா .
3)தத்துக்கிளி .
4)ஆறாவது வார்டு .
5)மாட வீடு.
6) இயோனிச்.
7)நாய்க்கரச் சீமாட்டி .
8)மணமகள்...
என்று மொத்தம் எட்டு கதைகள் இடம்பெற்றிருக்கின்றன.
1) பச்சோந்தி :
. இந்த கதையை 1874ஆம் ஆண்டு ஆண்டன் செகாவ் இளைஞராக இருக்கையில் எழுதிய பிரபலமான கதைகளில் ஒன்று.
மேலிடம் என்றதும் பல்லை காட்டும் மனோபாவத்தை நயம்பட எடுத்துரைக்கிறது இந்த கதை. சந்தை வழியே செல்லும் போலீஸ் அதிகாரி அங்கு ஓர் ஆளை நாய் கடித்து விட்டதாய் கேள்விப்பட்டதும் நாயின் உரிமையாளரைச் சும்மா விடக்கூடாது என்று கத்துகிறார் .அந்த நாய் ஜெனரலுடையதாக இருக்கலாம் என்று யாரோ ஒருவர் கூறியதும் போலீஸ் அதிகாரி பச்சோந்தியை போல் உடனே நிறம் மாறி , நாயால் கடிப்பட்ட மனிதனை திட்ட முற்படுகிறார். அந்த ஆள் தான் நாயுடன் குறும்பு செய்திருப்பான் என்று அவனை கண்டிக்கிறான் .
நாய் ஜெனரலுடையதாய் இருக்காது என்று பேசப்பட்டதும் திரும்பவும் அதிகாரியின் நிலை மாறி விடுகிறது .இம்மாதிரியான நாயின் உரிமையாளரைத் தண்டிக்காமல் விட கூடாது என்று கூறிவிடுகிறார்.
படிப்பதற்கு நகைச்சுவை போல இருந்தாலும் உள்ளே ஆழ்ந்து சிந்திக்கத் தக்க அளவில் கருத்துப் பரிமாற்றம் செய்விக்கப்படுகிறது.
2) இயோனிச்:
1898ஆம் ஆண்டு எழுதப்பட்டது.
இளம் வயதில் எஸ்.நகருக்கு வந்து வேலை ஏற்கும் ஒரு டாக்டரின் கதை இது .இந்த நகரில் கல்வி கேள்விகளில் சிறந்தவராகவும் கலைகளில் தேர்ந்தவராகவும் கூறப்படும் தூர்க்கின் குடும்பத்தாருடன் அவருக்குப் பரிச்சயம் ஏற்படுகிறது .இவர்களது வீட்டில் வளரும் நங்கை காத்யாவின் மீது அவர் காதல் கொள்கிறார் .ஆனால் காதலின் உணர்ச்சித் துடிப்பும் ஊக்கமும் மிக்க மணிக்குரலுடன் கூடவே டாக்டர் மனத்துள் வேறு ஒரு குரலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது .--நகர மத்திய தர வகுப்பினர் வாழ்க்கையின் சிடுசிடுப்பான குரல் அது .இந்த இரண்டாவது குரல் நாளடைவில் பலத்துப் பெருத்து முதலாவது குரலை மூழ்கடிக்கிறது . அற்பமும் புன்மையும் பகட்டும் மடமையும் நிறைந்த கொச்சையான சுற்றுப்புற வாழ்க்கையின் வெள்ளம் இந்த இளம் டாக்டரையும் தன்னுள் இழுத்துக் கொண்டு விடுகிறது .அவரது ஆன்மா ஒளி இழந்து மங்குகிறது .பணம் பண்ணுவதை தவிர வேறு எதிலும் நாட்டமில்லாதவராகிறார் .சலிப்புற்று சிடுசிடுக்கிறார் .
இயோனிச்சின் கதை மனித ஆன்மா சிறுகச் சிறுகத் நலமிழந்து போவதைக் காட்டுகிறது. அடர்த்தியான மூடுபனி ஆன்மாவின் எழில் மலரை முகர்ந்து முக்காடிட்டு மூடுவதை காட்டுகிறது.
3) மணமகள்:
1903 இல் ஆன்டன் செகாவ் கடைசியாக எழுதிய சிறுகதை இது .
இதில் நாதியா என்ற மங்கையின் கதையை கூறுகிறார் .கதையின் ஆரம்பத்தில் பொழுது புலர்வதற்கு சிறிது நேரம் முன்னதாக நாதியா விழித்தெழுந்து தோட்டத்தில் உற்று நோக்குகிறாள் ."அடர்த்தியான வெண்ணிற மூடுபனி செந்நிற மலர்களை முக்காடிட்டு மூட விரும்புவது போல் அவற்றை நோக்கி வளர்ந்து வந்தது ".
கொள்கை குறிக்கோள் அற்ற தனது வாழ்க்கையை வாழ முடிவதில்லை என நினைக்கிறாள் அவள் .
அப்போது அடர்த்தியான அதே வெண்ணிற மூடுபனி நாதியாவின் ஆன்மாவை முக்காடிட்டு மூடுவது போல் தோன்றுகிறது நமக்கு .
ஆனால் பிற்பாடு பொழுது புலர்கிறது .
"ஜன்னலுக்கு அடியிலும் தோட்டத்திலும் புல்லினங்கள் கூச்சலிட்டன.தோட்டத்திலிருந்து மூடுபனி அகன்றுவிட்டது .வசந்த சூரியனது ஒளி யாவற்றைச் சுற்றிலும் பிரகாசித்தது .யாவும் புன்னகை புரிந்தன."
இயற்கை காட்சிகள் ஏற்படும் ஒரு மாற்றம் மட்டுமல்ல இது, நாதியாவினது ஆன்மாவிலே ஏற்படும் ஒரு பெரிய மாற்றமாகவும் விளங்குகிறது .--குறிக்கோளற்ற அற்பத்தனமான ஒரு வாழ்க்கையுடன் தனக்குள்ள பிணைப்புகளை முற்றாகவும் முடிவாகவும் துண்டித்துக் கொள்வது என்று ஏற்கனவே அவள் தீர்மானத்திற்கு வந்து விடுகிறாள்.
இந்த கடைசி கதையின் தலைவியினது ஆன்மாவில் ஏற்படும் இந்த மாற்றம் சேகாவின் இலக்கியப்பணி அனைத்தையும் ஓரளவுக்கு தீர்மானிப்பதாய்
சொல்லலாம்.
ரஷ்யாவிலும் அனைத்து உலகிலும் சேகவ் போற்றப்படுகிறார் .கோடான கோடி வாசகர்கள் அவரது புத்தகங்களை ஆவலுடன் படிக்கிறார்கள். காரணம் என்னவென்றால் ஆண்டன் செகாவ் யாவற்றிற்கும் முதலாய் உண்மையை எடுத்துரைக்கிறார் .உள்ளதை உள்ளபடி கூறி உள்ளத்தை ஒளி பெறச் செய்கிறார் .செகாவின் உண்மையானது மனச்சான்றுதனைத் துயில் எழச் செய்யும் தொழிலைச் செய்யும் உண்மையாகும் .மனிதனின் நிலையை மனிதனுக்கு தெரியப்படுத்தும் போது மனிதன் மேம்படுவான் என்று செகாவ் கூறி வந்தார்.
எடுத்தால் படித்து முடிக்காமல் கீழே வைக்க மனம் வரவில்லை.
நன்றி :
திரு கருணா மூர்த்தி
&
முகநூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக