26 மே, 2025

இன்றைய புத்தகம்


" கொற்றவை ".
ஜெயமோகன். தமிழினி பதிப்பகம் முதல் பதிப்பு 2005 .விலை ரூபாய் 280 மொத்த பக்கங்கள் 600.

       "# இது ஒரு இலக்கிய புத்தகம் இலக்கிய நாவல் என்றும் சொல்லலாம்.

     நினைவு தெரிந்த வயதில் இளங்கோ அவர்கள் திரைக்கதை வசனம் எழுதிய கண்ணகி திரைப்படம் பார்த்திருக்கிறேன் .கண்ணம்மாள் நடித்தது கண்ணகியாக .திரைக்கதையின் தந்தை என்று சொல்வார்கள் இளங்கோ அவர்களை.

        அதற்குப் பிறகு பாக்யராஜ் அந்த பெயரை எடுத்துக் கொண்டதாக நினைவு.

        அடுத்து எனது மாமா வீட்டில் ம.பொ .சிவஞானம் அவர்கள் எழுதிய சிலப்பதிகாரம் புத்தகம் படித்து கண்ணகி குறித்து கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொண்டேன் .

       பிறகு பூம்புகார் சினிமா பார்த்து விஜயகுமாரி எஸ்எஸ் ராஜேந்திரன் ராஜஸ்ரீ அவர்கள் நடித்த பூம்புகார் சினிமா பார்த்து , கலைஞரின் தமிழ் மீதும் தமிழ் எழுத்துக்கள் மீதும் கண்ணகி மீதும் மாறா காதல் கொண்டேன் .

     அதன் பிறகு எனது முகநூல் தோழி அடிக்கடி நியாயப்படுத்தும் நினைவுபடுத்தும் அப்துல் ரஹ்மான் எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.

      சிலம்பு பால்நகையாள் வெண்முத்துப்பல்நகையாள் கண்ணகி தன்
கால்நகையால் வாய்நகைபோய்க் கழுத்துநகை இழந்தகதை‌ கவிக்கோ அப்துல் ரகுமான் நல்லபதிவு.

        சென்ற வாரம் கலைஞரின் பூம்புகார் புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தஞ்சை பல்கலைக்கழகத்தின் மூலமாக வெளியிடப்பட்ட புத்தகத்தை வாசித்து பதிவிட்டிருந்தேன் .அந்த புத்தகத்தின் தலைப்பு 
Tale of the Anklet .

      கண்ணகி  குறித்தான பலரின்  சில புத்தகங்களையும் வாசித்திருக்கிறேன்.

       கண்ணகியை குறித்து நான் அறிந்த விஷயங்களை எல்லாம் அப்பால் ஒதுக்கி விட்டு தள்ளிவிட்டு புதுவிதமாக எனக்கு இந்த கொற்றவை தந்திருக்கிறார் ஜெயமோகன் அவர்கள்.
        வாங்கி வைத்து பல நாட்கள் ஆன பிறகும் இன்று தான் இந்த புத்தகத்தை முழுமையாக முடித்து இருக்கிறேன். முடித்த புத்தகத்தின் விமர்சனப் பதிவாக என்னால் எழுத முடியாது .படித்துவிட்டேன் என்று 
தோற்றத்தைக் கொள்ளலாம் அவ்வளவே.

      ஐம்பெரும் பூதங்கள் ஆக்கி ஐம்பெரும் பூதங்களில் முதன்மையானதான தீ இதனை திருப்பதமாக வைத்து ஒரு பதமாக சொல் வடித்து முன்னரே போல முதன்மையாக தந்திருக்கிறார் அதனை முதலில் பார்த்து விடுவோம்.

      உண்ணும் அனைத்தையும் விண்ணுக்குக் கொண்டுசெல்லும் ஓயாப்பெருநடனமே காப்பியம் என்க, மண்ணில் அதற்கு உணவாகாத எதுவும் இல்லை. தீண்டும் அனைத்திலும் தாவி ஏறி உண்டு தன்னைப் பெருக்கிக் கோடிகோடி இதழ்விரித்து எங்கும் நிறையும் முடிவற்ற நாக்கு அது துடிதுடித்தும் தவிதவித்தும் உரையாடிக் கொண்டிருக்கிறது ஊழியூழிக் காலங்களாய், அது கூறுவது அழியாத ஒற்றைச் சொல்லையே என்றறிந்தனர் மண்ணை மீறி விண்ணில் உளம் எழுந்த அறவோர். திசையழிந்த வெளியெங்கும் நிரம்பிய ஒளியே மண்ணில் தீ என உறைகிறது என்று உணர்ந்தனர். தீ தொட்டபின் எதுவும் அழுக்கு அல்ல. எதுவும் இழுக்கும் அல்ல ஊன்வாய் திறந்து மண்ணில் விழும் உடல் உண்டு உயிர்த்து கண்டு கற்று அடையும் அழுக்குகளை யெல்லாம் தீயுண்ணக் கொடுத்தபின்னரே அதனுள் சிறையுண்ட சீவம் தன்னிலை இழந்து சிவமாகும் என்றனர். தீயுண்ணும் அனைத்தும் தீய்மை எனப்பட்டது. தீயுண்ணவே தூய்மை என்றாயிற்று. தீ எனும் ஒலியே தீங்குக்கும் தீஞ்சுவைக்கும் சொல்லாயிற்று. தீ உறையாத பரு ஏதும் இல்லையென்றனர் அறிவர். பச்சைப்பசுங்குருத்திலும் மென்மலர் இதழிலும் குளிர்ச்சுனை நீரிலும் தாய்முலைப்பாலிலும் தீ உறைகிறது என்றனர். ஒவ்வொன்றிலும் உறையும் தீயை அப்பொருளின் ஆணவம் அணைகட்டி அணைத்து நிறுத்துகிறது. அணை மீறுகையில் அது எரியும் எரியாகிறது என்றறிந்தனர். சொல்லில் உறையும் தீ தன் சிறை மீறுதலே காப்பியம் என்றனர் கற்றோர். காப்பியங்களுக்கு அவியாகி அவிதற்பொருட்டே மண்ணில் மாந்தர் பிறந்திறப்பதாகச் சொன்னது மண் மறைந்த பேரிலக்கண நூல் ஒன்று.

      Bகனன்றெரிந்து கரியாகி உப்பாகி மண்ணில் மறைவர் மாந்தக் கோடிகள் மாசற்று ஒளிபெற்று மீள்பவர் சிலரே அவர்களை எரிமலரிதழ் நடுவே இலங்கும் இறைவடிவென்பர் சுற்றோர். ஆம், அவ்வாறே ஆகுக!

****

     1987ல் இப்படைப்பின் கரு தனது நெஞ்சில் முகிழ்த்தது என ஆசிரியர் சொல்லுகின்றார். தனது 25 ஆம் வயதில் இந்த கொற்றவையை முற்றும் படைத்து வெற்றி கலப்பில்  களிப்பில் மகிழ்ந்திருக்கிறார்.

  கவிஞர் ஆற்றூர் ரவிவர்மாவின் நண்பரான மறைந்த உண்ணிராஜா என்னும் கவிஞர் சிலப்பதிகாரக் கதையை மலையாளத்தில் கதகளிக்குரிய 'ஆட்டக்கதை ' வடிவில் எழுதினார். அது கள்ளிக்கோட்டைப் பல்கலையில் பாடமாகியது. அதற்கு மாணவர் நலம் கருதிச் சிலம்பைப்பற்றிய விரிவான ஓர் அணிந்துரையை ஆசிரியர் எழுதியிருக்கிறார்.
அந்த நூலைவிடப் பெரிதாக எழுதிய அவ்வுரை அமைந்தது. 
       
       அதில் கேரளப் பண்பாட்டுக்கும் சிலம்புக்கும் இடையேயான உறவையும் கண்ணகி மதுரைக்கு எரியிட்டது குறித்த தன் நோக்கையும் விரித்தெழுதியிருந்தார்.

      சிலம்பை நாடகவடிவில் எழுதவேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டதன் காரணமாக பல வடிவங்களில் பல காலமாக எழுதிக் கைவிட்டபின் இப்போதைய வடிவம் கண்டு எழுதி இருக்கிறார் ஆசிரியர்.

        இதை எழுதி முடிக்க நான்கு ஆண்டுகள் ஆயின.

       கண்ணகி கதையை புகாரில் தொடங்காமல் குமரியில் தொடங்கி இருப்பது சிறப்பு.

      கொற்றவை என்பது மற்ற படைப்புகளில் இருந்து மாறுபட்ட படைப்பாக இருக்கின்றது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

நன்றி: திரு கருணா மூர்த்தி அவர்கள் மற்றும் முகநூல் 

கருத்துகள் இல்லை: