9 அக்., 2025

மேன்மக்கள்: சுதந்திரத் தியாகி சுப்பிரமணிய சிவா!


சுப்பிரமணிய சிவா பிறந்த தினம்: அக்டோபர் 4
............................
*சுதந்திரத் தியாகி சுப்பிரமணிய சிவா!*
*திருப்பூர் கிருஷ்ணன்*
............................
  *பி.எஸ். ராமையா, சி.சு. செல்லப்பா ஆகியோர் பிறந்த திண்டுக்கல் மாவட்டத்து வத்தலக்குண்டு தான் சுதந்திரத் தியாகி சுப்பிரமணிய சிவாவின் சொந்த ஊர். பிறந்த ஆண்டு 1884. தந்தையார் ராஜம் ஐயர். தாயார் நாகம்மாள். 

  சுப்பிரமணிய சிவாவுக்கு ஞானாம்பாள், தைலாம்பாள் என்ற இரு சகோதரிகளும் வைத்தியநாதன் என்ற சகோதரரும் உண்டு. 

  கடும் வறுமையில் வாடிய குடும்பம். பன்னிரண்டு வயது வரை மதுரையில் பாரதியார் பணியாற்றிய சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் படித்தார் சிவா. பிறகு ஓராண்டு கோவையில் கல்வி பயின்றார். 
 
   ஒருவேளை உணவுக்கே பெரிதும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த சிவாவுக்கு திருவனந்தபுரத்தில் இலவச உணவோடு கல்வி கிடைக்க வாய்ப்பிருப்பது தெரிய வந்தது. 
 
   ஆகா! வேளாவேளைக்குச் சாப்பாடு மட்டும் கிடைத்துவிட்டால்,. பிறகு படிப்பதில் என்ன சிரமம்?
 
   திருவனந்தபுரம் சென்றார். இலவசச் சாப்பாட்டைச் சாப்பிட்டுக் கொண்டு அங்கே மேற்படிப்புப் படிக்கலானார்.   
 இயற்கையிலேயே கூர்மையான அறிவு படைத்திருந்த அவர் மொழிப் பாடங்களில் கூடுதல் ஆர்வம் காட்டினார். கல்வி பயிலும் காலத்திலேயே பேச்சுத் திறமையையும் எழுத்துத் திறமையையும் வளர்த்துக் கொண்டார். 
  
    திருவனந்தபுரத்தில் இருந்தபோது, சுதந்திர வேட்கை கொண்டிருந்த வாலிபர்களை ஒன்றுதிரட்டி 'தர்ம பரிபாலன சமாஜம்' என்ற அமைப்பைத் தொடங்கினார். தம் கல்வி நிறைவுற்ற பின் அவர் அங்கு தொடர்ந்து வசிக்க இயலாத நிலை ஏற்பட்டது. 

   அவர் தோற்றுவித்த சமாஜம் ஆங்கிலேயே அரசுக்கு எதிராகச் செயல்பட்டதால் அவர்  அங்கிருந்து  வெளியேற்றப் பட்டார். 
  
    தமிழகம் திரும்பிய அவர், சிவகாசியில் காவல் துறை எழுத்தராகச் சேர்ந்தார். ஒரே நாள்தான். திடீரென தாம் இந்தச் சராசரிப் பணிக்காகப் பிறந்தவரல்ல என்று அவரது உள்குரல் சொல்லிற்று. அடுத்த நாளே அந்தப் பணியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டார். 

 அவர் தம் வீட்டில் அதிகம் தங்கியதில்லை. எப்போதாவது வந்து செல்வார். அவருக்குத் திருமணமானால் மாறுவார் என்றெண்ணி அவரை வற்புறுத்தித் திருமணம் செய்து வைத்தார்கள். 

   அவருக்கு மண வாழ்வில் நாட்டம் இருக்கவில்லை. அதன் பின்னும் அவர் வீட்டுக்கு அதிகம் வந்து செல்லவில்லை. 

 நீ எப்போது வீட்டுக்கு வருவாய்  என்று தந்தை பாசத்தோடு வினவியபோது, தேவைப்படும் சந்தர்ப்பத்தில் வருவேன், கவலை வேண்டாம் என வாக்குறுதி கொடுத்துவிட்டு வெளியேறினார். 

   தாயாரின் இறப்புத் தருணத்தில் ஆதிசங்கரர் வந்த மாதிரி, தம் தந்தையின் இறுதித் தருணத்தில் வீடுதேடி வந்து தந்தையைத் தன் மடியில் கிடத்திக் கொண்டார். 

   தோற்றத்தால் பெரிதும் மாறிப் போயிருந்த அவரைக் குடும்பத்தார் யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. ஆனால் அவரது விழிகளை உற்றுப் பார்த்த தந்தை அவரை இனம் கண்டு கொண்டார். 

  மகனே வந்து விட்டாயா எனக் கேட்ட அவர் தன் மகனைப் பாசத்தோடு பார்த்தவாறே மகனின் மடியில் உயிர் நீத்தார். தந்தைக்குச் செய்ய வேண்டிய அந்திமக் கிரியைகளை முடித்துவிட்டு மீண்டும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் சிவா. 

 *தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் சரளமாக எழுதம் ஆற்றல் பெற்றிருந்த அவர், தமிழில் கவிதையெழுதும் கவிஞரும் கூட. 

  சொற்பொழிவாற்ற மேடையேறினால் அவர் பேச்சில் ஒரு தனிக் கவர்ச்சி தென்படும். கேட்பவர் உள்ளங்களை வசப்படுத்தி விடுவார். தாம் சொல்லும் அனைத்துக் கருத்துகளையும் கேட்பவர்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளும்படிச் செய்துவிடுவார். 

   மகுடிக்கு நாகம் கட்டுப்படும் என்பார்களே, அப்படி அவர் குரலுக்குக் கட்டுப்பட்டார்கள் மக்கள். 

  ஊர் ஊராக நடந்தே சென்றார். ஆங்கிலேயர்கள் இந்திய நாட்டின் செல்வ வளத்தைச் சூறையாடுவதை அவர் உணர்ந்திருந்தார். தேசபக்தி நிறைந்த அவர் மனத்தில் சுதந்திரச் சிந்தனைகள் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தன.  

  தாம் நடந்து செல்லும் இடங்களிலெல்லாம் ஆங்காங்கே நின்று மக்களிடையே சொற்பொழிவாற்றி விடுதலை உணர்ச்சியைத் தூண்டி விட்டார். 

 அப்படி அவர் தூத்துக்குடி சென்றபோது வ.உ. சிதம்பரனாரைச் சந்தித்தார். இரும்பைக் காந்தம் ஈர்ப்பதுபோல் வ.உ.சி.யால் ஈர்க்கப் பட்டார். சுதந்திரத் தியாகிகளான அவர்கள் இருவருக்கும் ஆழ்ந்த நட்பு ஏற்பட்டது. 

 காலப் போக்கில் மகாகவி பாரதியார் இவர்கள் இருவருக்கும் அணுக்கமானார். இவர்கள் மூவரும் மேடைப் பேச்சு மூலம் மக்களிடையே சுதந்திர எழுச்சியைத் தோற்றுவிக்கத் தொடங்கினார்கள்.    

 சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற இடங்களில் தொழிலாளர் போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் சுப்பிரமணிய சிவா தான். அந்தப் போராட்டங்கள் எண்ணற்ற மக்களை ஆங்கிலேயருக்கு எதிராகத் திருப்பின. 

  சிவாவின் மக்கள் செல்வாக்கை அறிந்த ஆங்கிலேய அரசு ராஜத் துரோகக் குற்றம் சுமத்தி 1908-ல் அவரைச் சிறையில் அடைத்தது-   

   சிறையில் சொல்லவொண்ணாத கடும் சித்ரவதைகளுக்கு ஆளானார். நான்கு ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு 1912-ல் விடுதலையாகி, சென்னையில் குடியேறினார்.

  'ஞானபானு' என்ற மாத இதழைத் தொடங்கினார். பிறகு 'பிரபஞ்ச மித்திரன்' என்ற வார இதழையும் தொடங்கினார். அதில் நாரதர் என்ற புனைபெயரில் கட்டுரைகள் எழுதினார். 

 `மோட்ச சாதனை ரகசியம், அருள்மொழிகள், வேதாந்த ரகஸ்யம், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ச வைபவம்` உட்பட 20-க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர் அவர். அவரது கவிதைகள் பின்னர் 'ஞானபானு' என்ற பெயரில் தொகுக்கப்பட்டன.

 *ஒருமுறை திருவனந்தபுரத்தின் அருகே உள்ள கொட்டாரக்கரை என்ற கிராமத்திற்குச் சென்றபோது அங்கே சதானந்த சுவாமிகள் என்ற ஒரூ தெய்வீகத் துறவியைச் சந்தித்தார் சிவா.     
  
   அந்தப் பெயர் அந்தத் துறவிக்குக் காரணப் பெயராய் அமைந்ததோ என்னவோ? சதா ஆனந்தத்திலேயே திளைத்திருந்தார் அவர்.  

   அவரது விழிகளில் பளிச்சிட்ட ஒளியும் முகத்தில் தென்பட்ட மாறாத மலர்ச்சியும் சிவாவின் நெஞ்சத்தைக் கொள்ளை கொண்டன. 

   ஆனந்தம் என்பது வெளியே இல்லை, ஒவ்வொருவரது உள்ளத்தின் உள்ளே இருக்கிறது என்ற உண்மையை அந்தத் துறவி அவருக்கு எடுத்துச் சொன்னார். 

  `மனிதன் தன்னை உடலாகக் கருதும்போது இன்ப துன்பங்களில் ஆழ்கிறான். தான் ஆன்ம சொரூபம்தான் என்பதை உணர்ந்து கொண்டால் நிலையான ஆனந்தத்தைப் பெறுவான். ஏனெனில் ஆன்மாவின் இயல்பே ஆனந்தம்தான். 

    ஆன்மாவை வெய்யில் உலர்த்தாது. மழை நனைக்காது. நெருப்பு சுடாது. நீ அழிவில்லாத, அழிக்க முடியாத ஆன்மா என்பதை உணர்ந்துகொள்!` என போதித்தார் சதானந்தர்.  

  சதானந்தரிடம் ராஜயோகம்  பயின்ற சிவா, தம் ஆழ்மனத்தை எப்போதும் இறைச்சக்தியில் நிலைநிறுத்தி வாழலானார்.  

   அவரிடம் தீட்சை பெற்றுக் காவியாடை உடுத்தித் துறவியாகவே மாறினார். இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்பதில் பெரிதும் வேட்கை கொண்டிருந்த சிவா, தன் பெயரை 'ஸ்வதந்திரானந்தர்' என்று மாற்றம் செய்துகொண்டார்.  

   விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக மீண்டும் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப் பட்டார். இரண்டாவது சிறை வாசத்தின்போது சிறையில் தொழுநோய் அவரைப் பற்றிக் கொண்டது. 

    விடுதலையானதும், சென்னைக்கு வந்தார். உடல்நிலை ஓரளவு முன்னேறியதும் கூட்டங்கள், போராட்டங்களில் மறுபடி பங்கேற்கலானார். 

   நண்பர்கள் உதவியுடன் தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் 6 ஏக்கர் நிலம் வாங்கி ஓர் ஆசிரமத்தை உருவாக்கினார். அதற்கு 'பாரதபுரம்' என்று பெயர் சூட்டினார். 

   சர்வ மதத்தினரும் வழிபடும் வகையில் அங்கு பாரதமாதா கோயில் கட்ட முடிவு செய்தார். அதற்கு அடிக்கல் நாட்டியவர் அரவிந்தர் சிறைப்பட்ட போது அரவிந்தரது விடுதலைக்காக வாதாடிய புகழ்பெற்ற  வழக்கறிஞரான 'தேசபந்து' சித்தரஞ்சன்தாஸ். 

  தொழுநோயைப் பொருட்படுத்தாமல், ஊர் ஊராகச் சென்று தாம் நிர்மாணிக்கவிருந்த பாரதமாதா ஆலயத்திற்கு நிதி திரட்டினார். அவரது செயல்பாடுகளால் எரிச்சலடைந்த ஆங்கிலேய அரசாங்கம் அவரது நோயைக் காரணம் காட்டி, பேருந்து, ரயில்களில் அவர் பயணம் செய்யலாகாது எனத் தடை விதித்தது. 

 அதனால் என்ன? நடந்தும், கட்டை வண்டியில் சென்றும் பல ஊர்களில் சொற்பொழிவாற்றி, நிதி திரட்டலானார். 

    தொடர் பயணத்தால் உடல்நலம் குன்றியது. தன் நடைபயணத்தை முடித்துக் கொண்டு பாரதமாதா ஆலயத்தை நிர்மாணிக்கும் கனவுடன் அதற்கென வாங்கிய நிலம் இருக்கும் பாப்பாரப்பட்டிக்குத் திரும்பினார். உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு 41ஆவது வயதில் (1925) தமது பாரதமாதா ஆலயக் கனவு நிறைவேறாமலேயே மறைந்தார். 
  
     'வீரமுரசு' என்று போற்றப்பட்ட சுப்பிரமணிய சிவா நினைவாக பாப்பாரப்பட்டியில் அவருக்கு மணிமண்டபம் நிர்மாணிக்கப் பட்டுள்ளது. 

(நன்றி: ஓம் சக்தி மாத இதழ்.)

நன்றி:

ஓம் சக்தி மாத இதழ் 
மற்றும் 

 ............................

கருத்துகள் இல்லை: