6 அக்., 2020

கருத்து மேடை :

விஜய் தொலைக்காட்சியில் 'நீயா நானா' நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியை கோபிநாத் இவ்வாறு அறிமுகப்படுத்துகிறார்.

தூய தமிழில் பேசுவது சாத்தியமா? சாத்தியமில்லையா? பவர்டு பை லெட்சுமி செராமிக்ஸ். கோ பிரசன்டட் பை அரசன் சோப்.

'பவர்டு பை' என்பதை 'நிகழ்ச்சியை வழங்குவோர்' என்றும் 'கோ பிரசன்டட் பை' என்பதை 'நிகழ்ச்சியை உடன் வழங்குவோர்' என்றும் கூறினால் யாருக்காவது புரியாமல் போய்விடுமா என்ன?

'நிகழ்ச்சியை வழங்குவோர்' 'நிகழ்ச்சியை உடன் வழங்குவோர்' என்ற தமிழ் வார்த்தைகள் காட்சி ஊடகங்களில் வலிந்து திணிக்கப்பட்டவை அல்ல. சமகாலத்தில் தொலைக்காட்சிகளில்  பரவலாக பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள்தான். இப்படியிருக்கும்போது ஏன் மறுபடியும் ஆங்கிலத்தில் அவ்வார்த்தைகளைக் கூறுவானேன்?

தூய தமிழில் பேசுவதும் எழுதுவதும் சாத்தியமில்லை என்பதுதான் யதார்த்தம். இது தமிழுக்கு மட்டுமல்ல; உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் தூய்மையைப் பேணுவது சாத்தியமில்லை. ஆனால் வழக்கத்தில் இருக்கக்கூடியதும், அனைவரும் எளிதில் விளங்கிக்கொள்ளும் விதத்திலும் இருக்கும் வார்த்தைகளை, வலிமைமிக்க காட்சி ஊடகத்தின் வழியாக 'பிரசன்டட் பை' என்றும் 'கோ பிரசன்டட் பை' என்றும் பரப்புவதை எப்படி புரிந்து கொள்வது?

'எனக்கு சந்தோஷமாக இருக்கு', 'நான் ஹேப்பியாக இருக்கேன்' 'it's ok' 'don't mention' எனச் சரளமாக நாம் பேசியும் எழுதியும் வந்த நேரத்தில், ஒரு திரைப்படத்தில் 'மகிழ்ச்சி' என்ற வார்த்தையை கதாநாயகன் அடிக்கடி பயன்படுத்துவார். அதனால் மகிழ்ச்சியடைந்த பெருவாரியான மக்கள் 'மகிழ்ச்சி' என்ற வார்த்தையை அதிகமாகத் தங்களது உரையாடல்களில் பயன்படுத்தினர். இதுபோன்ற முயற்சிகளை காட்சி ஊடகங்கள் தங்களால் முடிந்த அளவு கடைப்பிடிப்பதில் என்ன சிரமம் இருக்கப் போகிறது?

ஒரு நாட்டுக்கு ஏற்றுமதியும் இறக்குமதியும் அவசியம். ஏற்றுமதி அதிகமாகவும், இறக்குமதி குறைவாகவும் இருந்தால்தான் அந்நாட்டின் பொருளாதாரம் செழிக்கும். குறைந்தபட்சம் ஏற்றுமதியும் இறக்குமதியும் சமமாகவாவது இருக்க வேண்டும். ஆனால் ஏற்றுமதி குறைவாகவும், இறக்குமதி அதிகமாகவும் இருந்தால் அது பொருளாதாரத்தைப் பாதிக்கும். 

தேவையும் அவசியமும் இல்லாமல் பிற மொழிச் சொற்களை தமிழ்கூறும் நல்லுலகின் காட்சி ஊடகங்கள் இறக்குமதி செய்வது அவசியம்தானா?!

-இரா.சுந்தரபாண்டியன்.

நன்றி :





கருத்துகள் இல்லை: