🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️
*சூரியின் நாட்குறிப்பு: விரிந்த பொருள் காணல்-3*
🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️
*நாட்காட்டியில் கண்ட குறள்*
2005 ஆண்டு வாக்கில் என்று நினைக்கின்றேன். எங்கள் அலுவலகத்தில் இயக்குநரின் செயலராக இருந்த நாட்கள். அவர் ஒரு workaholic. அவரது துறைமீது அவருக்கு அளவுகடந்த பற்று. தனிநபராக அலுவலகக் குடியிருப்பிலே தங்கி இருந்தார். வீ்ட்டில் இருப்புக் கொள்ளாது. காலை ஒன்பது மணி அலுவலகத்திற்கு எட்டு மணிக்கே வந்துவிடுவார். மிகவும் சென்ஸிடிவ் ஏரியா என்பதால் எங்கள் அறைகளின் சாவிக்கொத்து ஒன்று அவரிடமும், மற்றொன்று என்னிடமும் மட்டுமே இருந்தது.
நானும் அலுவலகக் குடியிருப்பில் அருகேயே இருந்ததால் அவருக்கு முன்னதாக வந்து விளக்குகளைப் போட்டு, குளிர்சாதனத்தை இயக்கி, அவருக்கு வந்திருக்கும் மின்அஞ்சல்களை, அவர் படிக்க ஏதுவாக, முக்கிய பகுதியை பெரிய எழுத்தில் பிரின்ட் எடுத்து, ஒரு பிளாஸ்டிக் ஃபோல்டரில் எளிதாக புரட்டிப் பார்க்கும் வண்ணம் தயார் செய்து அவரது மேஜையில் வைத்து விடுவேன்.
ஒருநாள் அதுபோல் எல்லாம் தயார் செய்து வைத்துவிட்டு, நாட்காட்டித்தாளைக் கிழிக்கும்போது அதில் குறுகலாக அச்சிடப்பட்டிருக்கும் திருக்குறளை வாசித்தேன்.
*தூய்மை, துணைமை, துணிவுடமை இம்மூன்றும் வாய்மை வழியுரைப்பான் பண்பு*
படித்த உடனேயே மிகவும் பிடித்துவிட்டது. இரண்டு மூன்று முறை சொல்லிப் பார்த்துவிட்டு அதன் பொருளை ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தேன்.
வாய்மை வழியனுப்புரைப்பான் பண்பு, அதாவது உண்மையே பேசி அதன் வழிநடப்பவன்; அவனது பண்புகள், குணங்கள் எப்படி இருக்கும்?
வள்ளுவப் பெருந்தகையே சொன்னது, *அகத்தூய்மை வாய்மையாற் காணப்படும்* எனவே அகத்தூய்மை அவனுக்கு இயல்பாகவே அமைந்துவிடும்.
திருமூலர் சொன்னபடி. *உள்ளம் பெருங்கோயில்*. தூய உள்ளத்தில் இறைவன் கோவில் கொள்கிறான். ஒருவனுக்கு இறைவனைவிட பெரியதுணை யார் இருக்கமுடியும்?
அப்படி இறைவனே துணையாக வந்தபின் அவன் யாருக்கு, எதற்காக அஞ்சவேண்டும்? எனவே துணிவுடமையும் அவனது இயல்பாகிறது.
உண்மையையே பேசுவதன் மூலம் ஒருவன் இத்தனை சிறப்புகளையும் பெறமுடியும்.
இராமகிருஷ்ண பரமஹம்சர்
சொன்னது நினைவிற்கு வந்தது. கலியுகத்தில் உண்மை எனும் அறத்தைக் கடைப்பிடிப்பவனுக்கு வேறு ஆன்மீக சாதனை தேவையில்லை.
அற்புதமான குறள். எனது காலைப் பொழுதை இனிமையாக்கியது.
பின், பல நாட்கள் சென்றபிறகு திருக்குறளை புரட்டிப் பார்க்கும் வாய்ப்புவந்தபோது அந்தக் குறள் நினைவுக்கு வர, உரையாசிரியர் என்ன சொல்கிறார் என்று தேடினேன்.
முதல் அதிர்ச்சி அந்தக் குறள் *தூது* அதிகாரத்தில் 668வது குறள்.
அரசனின் தூதுவனிடம் இருக்கவேண்டிய பண்புகளாக தூய்மை, துணைமை, தூணிவுடமை ஆகிய மூன்றும் கூறப்பட்டிருந்தது. (தற்போது அரசனும் இல்லை, தூதுவனும் இல்லை!)
மகாப்பெரியவரும், வினோபாஜியும் கூறியது போல் மகான்களின் வார்த்தைகளில் ஆழ்ந்த பொருள் இருக்கும், விரிந்த பொருள் காணமுடியும் என்று எண்ணிக் கொண்டேன், புரிந்துகொண்டேன்.
🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️🧜♀️