Thursday, December 3, 2009

இன்றைய சிந்தனைக்கு-86:

பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை
அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்.

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறான்.

'பாபு' திரைப்படப் பாடல் வரிகள்.

Wednesday, December 2, 2009

கருத்துக்கள்-19: "இரவல் புத்தகங்கள்"

இன்று காலை மரபின் மைந்தன் ம.முத்தையா அவர்கள் எழுதிய "ஒரு கப் உற்சாகத்தை" எடுத்துப் புரட்டினேன். (கையடக்கமான அழகான, நேர்த்தியான பதிப்பு (நன்றி: விஜயா பதிப்பகம், கோவை). பக்கத்துக்கு நச்சென்று நான்கு வரிகள், மனதில் உரைக்கும் வண்ணம். பலமுறை படித்தும் திரும்பத் திரும்ப வாசிக்கும், அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு ஒப்பற்ற நூல். தமிழில் இது போன்ற உற்சாகமூட்டும் சுய முன்னேற்ற நூல்கள் இருப்பது பெருமகிழ்ச்சியைத் தருகிறது. முத்தையா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.)

அதிலே "இரவல் வாங்குபவற்றைத் திருப்பிக் கொடுங்கள்" என்றொரு மணி வரி. இதை நான்கு முறை திரும்பத் திரும்ப போட்டிருந்தாலும் தவறில்லை. நான் என்னுடைய புத்தகங்கள், மிகச் சிறந்த புத்தகங்கள், சிலவற்றை இரவல் கொடுத்துவிட்டு திரும்பப் பெறமுடியாமல் இருக்கிறேன். (நான் சிலரிடம் புத்தகங்கள் இரவலாக வாங்கிவிட்டுத் திருப்பாமல் இருந்தது வேறு விஷயம்!).

பொதுவாக நம்மவர்களுக்கு இரவல் வாங்கினால் திரும்பக் கொடுப்பது என்பது ஒரு சிரமமான வேலை. அதிலும் இரவலாகப் பெற்ற பொருள் புத்தகமாக இருந்துவிட்டால், சிக்கல்தான். அவர்களது மனசாட்சி இடம் கொடுக்காது.

- அங்கே இருப்பது இங்கேயே இருந்துவிட்டுப் போகட்டுமே!
- திரும்பக் கொடுக்காவிட்டால்தான் என்ன செய்யப்போகிறார்?
- மறுபடியும் தேவைப்படும், மறுபடியும் போய் கேட்கவேண்டும், அதனால் இங்கேயே இருக்கட்டுமே.
- இன்னும் படித்து முடிக்கவில்லை, முடித்தபின் கொடுக்கலாம்.
- கேட்டால் கொடுக்கலாம். அல்லது நச்சரித்தால் கொடுக்கலாம்.
- அந்த முட்டாளுக்கு இதன் அருமை தெரியாது.

இப்படிப் பல சமாதானங்கள்.

எங்கேயோ படித்திருக்கிறேன். ஒரு பெரிய மனிதர் சொன்னார்: "என்னுடைய புத்தகங்களை நான் யாருக்கும் இரவல் கொடுப்பதில்லை. கொடுத்தால் அவர்கள் திருப்பிக் கொடுக்க மாட்டார்கள். சொல்லப்போனால், என்னுடைய புத்தகங்களெல்லாம் அப்படிச் சேர்த்ததுதான்!"

இன்னும் சில மேன்மக்கள் இரவல் கொடுக்கும் நிலை வந்தால், பேசாமல் அதை தன் கையொப்பமிட்டு அன்பளிப்பாகவே கொடுத்துவிடுகிறார்கள். இதனால் பெற்றவர்க்கும் குற்ற உணர்வு இல்லை. கொடுத்தவர்க்கும் பெற்றவர் மேல் மனதில் ஒரு மூலையில் கோப உணர்வோ, வெறுப்போ இல்லாமல் இருக்கும்.

ஆன்மிகப் பாதையில் அடியெடுத்து வைத்ததாலோ என்னவோ, திடீரென்று ஒரு நாள் என்னுடைய புத்தக அலமாரிகளைப் புரட்டி இரவல் வாங்கியவற்றை எல்லாம் தேடித் தேடி திரும்பக் கொடுக்க ஆரம்பித்தேன். அதிலும் ஒரு புத்தகம் பல வருடங்களாக கொடுக்க மனமில்லாமல், பாதி படித்ததோடு நின்றுவிட்ட, அருமையான புத்தகம், William Shirer's "The Rise and Fall of Third Reich". கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்கள் சென்று திருப்பிக் கொடுத்ததும் நண்பராலேயே நம்பமுடியவில்லை. அவர் கேட்கவே இல்லை, முற்றிலுமாக மறந்தே போய்விட்டார். இன்னும் சொல்லப்போனால் அவருக்குத் தன் புத்தகமா என்றே சந்தேகம் வந்துவிட்டது.

தேவைக்கு அதிகமாகச் சேர்த்துவைப்பது ஒருவித வியாதி என்ற உணர்வும், அடுத்தவர் பொருள் நமக்கு ஏன் என்ற உணர்வும் வந்ததால்தான் இந்த மாற்றம். பிறனில் விழையாமை என்பது சிறு சிறு பொருட்களில் இருந்து ஆரம்பிக்கிறது என்று கருதுகிறேன். அதைச் சிறுவயதிலேயே நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது நலம்.

நான் தற்போது அதற்கு அடுத்த நிலைக்கு வந்துவிட்டேன். அறுபதைத் தாண்டிவிட்டேன். உடல் முழுவதும் உபாதைகள். இன்னும் எவ்வளவு காலம் இருக்கப் போகிறேன். நல்லபடியாக இருக்கும்போதே யாருக்கு எந்தப் புத்தகம் பயனுள்ளதாக இருக்குமோ அதை அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன், தொடர்ந்து கொடுப்பேன்.

"Fight The Hoarding Instinct. Be true to yourself. இரவல் பெற்றவற்றை சுடும் நெருப்பாக எண்ணி, சீக்கிரம் திரும்பக் கொடுங்கள்.

நன்றி, வணக்கம்.

Tuesday, December 1, 2009

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்




நன்றி: திரு எம்.என்.தீனதயாளன் மற்றும் YouTube.

இன்றைய சிந்தனைக்கு-85:

மற்றவர்களிடம் கொள்ளும் அன்பாக இருக்கட்டும், உங்கள் தோட்டத்தில் மலரும் பூக்களாகட்டும், வாழ்வில் நீங்கள் அடையும் வெற்றிகளாகட்டும், தகுந்த சூழ்நிலையை உருவாக்கத் தவறிவிட்டால், அவை நிகழ்வதில்லை. ஒரு மலரை உருவாக்குவதைவிட, அதற்கான தகுந்த சூழ்நிலையை உருவாக்குவதற்கே நாம் முனைய வேண்டும். எனவே, தோட்டத்துப் பூக்களானாலும், உங்களுக்குள் மலரும் மாற்றமானாலும், அதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்குவதே உங்கள் நோக்கமாக இருக்க வேண்டும்

- சத்குரு ஜாக்கி வாசுதேவ், ஆன்மிக மலர், தினமலர் 22.8.2009.

சத்குருவுக்கு பணிவான வணக்கங்கள், தினமலருக்கு நன்றிகள்.

Monday, November 30, 2009

இன்று படித்தவை-13: நவம்பர் 28, 2009


படிக்கவேண்டும் என்று புத்தகங்களையும், பத்திரிக்கைகளையும், சஞ்சிகைகளையும் மேஜை மேல் அடிக்கிக்கொண்டே போகிறேன். பத்து புத்தகம் அல்லது பத்திரிக்கை வாங்கி, ஒன்றை எடுத்துப் படித்து முடிப்பதற்குள் அடுத்த பத்து வந்து சேர்ந்துவிடுகின்றன. என்ன செய்வது என்றே புரியவில்லை. ஒரு காலத்தில் ஹேரி லோரைன் வேகமாகப் படிக்கும் முறையை (Harry Loraine Speed Learning Technique) ஓரளவு பயின்று அதைப் பின்பற்றியும் இந்த நிலை.

புதிய தலைமுறை, வார இதழ், அக்டோபர் 15, 2009:
-------------------------------------------------------------

புதிய தலைமுறை வார இதழ் மெருகேறிக்கொண்டே போகிறது. தமிழில் இப்படி ஒரு இதழ் இருப்பது பேரு மகிழ்ச்சியைத் தருகிறது. நான் மிகவும் பின்தங்கியிருக்கிறேன் - நான்கு இதழ்கள் சேர்ந்துவிட்டது!

இந்த இதழில் என்னைத் தொட்ட சில மட்டும்:

1. தேவை: சிகரெட் உற்பத்திக்குத் தடை

பொது இடங்களில் புகைக்க தடைச் சட்டம் வந்து ஓராண்டைத் தாண்டியும் எதிர்பார்த்த பலன் இல்லை. நிறையப் பேர் பொது இடங்களில் புகைக்கின்றனர். அவர்களை யாரும் எதுவும் செய்வதில்லை. இதைப் பற்றிய மாலன் அவர்களது கட்டுரை.

2. பத்தாயிரம் மைல் பயணம்

வெ.இறையன்பு அவர்களின் இனிய கட்டுரை. பல பயனுள்ள, சுவையான தகவல்கள் அடங்கியது. முதல் வரியே அருமை: "சீனத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. "ஒருவன் மரணமடைவதற்கு முன் பத்தாயிரம் புத்தகங்கள் படித்திருக்க வேண்டும், பத்தாயிரம் மைல் நடந்திருக்க வேண்டும்". பத்தாயிரம் மைல் நடக்கிறேனோ என்னவோ, பத்தாயிரம் புத்தகங்கள் நிச்சயம் படித்திடுவேன்.

"பயனங்கலால்தான் வரலாற்று நூல்கள் உருவாயின. முதல் வரலாற்று நூலை எழுதியவர் ஹிரோடட்டஸ். அவர் சரித்திரங்கள் என்ற பெயரில் ஒன்பது புத்தகங்களை எழுதினார். ஒரு சுற்றுலாப் பயணியைப்போல ௨௪௩0 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்து நாட்டிலிருக்கும் மூன்று பிரமிடுகளைப் பார்வையிட்டார். பயணத்தின்போது அவர் பார்த்தவையும், கேட்டவையும் அவரை நூலாசிரியராக மாற்றியது. பயணம் நமக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வருகின்ற ஒளிச்சாதனமாய்த் திகழ்கிறது."

"பயன்களால் தேசங்கள் இணையும். தடுப்புச் சுவர்கள் உடையும். அன்பு பெருகும். பண்பாடு பரிமாறப்படும். விஞ்ஞானம் செழிக்கும். வாழ்க்கைத்தரம் உயரும்..."

இப்படி பல சுவாரஸ்யமான, சுவையான செய்திகள்.

3. அன்று பத்தாம் வகுப்பு தவறியவர் இன்று பிஎச்.டி.

கல்வி தடைப்பட்டால் வாழ்க்கை முடிந்து விடுவதில்லை என்று தன்னம்பிக்கை ஊட்டும் முனைவர் பரசுராம் அவர்களைப்பற்றிய யுவகிருஷ்ணா அவர்களின் கட்டுரை.

4. தெய்வம் தந்த பூ!

இந்தக் கட்டுரையைப் பார்த்துவிட்டுத்தான் நானும், தம்பி நெல்லையும் தனுஷ்கோடி, அரிச்சல்முனை எல்லாம் சென்று வந்தோம். மறக்க முடியாத அனுபவங்கள். ஏற்கனவே இந்த வலைப்போவில் தனியே பதிவு செய்துள்ளேன் படங்களுடன்.

5. உருப்பட ஒரு புத்தகம்: "உன்னதம் உங்கள் இலக்கா?"

"நீங்கள் உன்னதங்களை நேசிப்பவரா? உன்னத நிலையை கனவு காண்பவரா? அடைய முயற்சி கொண்டிருப்பவரா? "

உன்னத நிலையை அடைவதற்கான வழிகளைக் கூறும் பா.ராகவன் அவர்கள் எழுதிய "எக்ஸலன்ட்" என்ற சுய முன்னேற்ற நூலைப் பற்றிய கட்டுரை.

இன்னும் பல கட்டுரைகள், பயனுள்ள செய்திகள், தகவல்கள். குறிப்பாக இளைஞர்கள் வாங்கிப் படித்து, தொக்குத்து வைக்க வேண்டிய பொக்கிஷம். ஆசிரியர் திரு மாலன் அவர்களுக்கும், ஆசிரியர் குழுவிலுள்ள மற்றவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

Sunday, November 29, 2009

கருத்துக்கள்-18: "பரிசுகள்"



பரிசுகள் வழங்கும் பழக்கம் உலக மக்கள் அனைவர்க்கும் பொதுவானது. திருமணம், பிறந்தநாள், மணிவிழா, புத்தாண்டு, கிறிஸ்துமஸ் என்று பல சமயங்களில் பரிசுகள் வழங்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகளிலும் போட்டிகளுக்கும், மற்றும் சாதனை புரிந்தவர்களுக்கும் பரிசுகள் வழங்கப் படுகின்றன.

இதில் பிரச்சினை என்னவென்றால் பரிசுப் பொருளை தேர்ந்தெடுப்பது. என் நண்பர் ஒருவர் கூறினார்: "என் வீட்டில் கழிப்பறை தவிர எல்லா அறைகளிலும் சுவர்க்கடிகாரம் உள்ளது. அத்தனையும் பரிசாக வந்தது." ஒரு சமயத்தில் பல பேர் ஒரே பொருளை பரிசாக வழங்கி, பெற்றவர் அதை என்ன செய்வது என்று தெரியாமல், அடுத்து வரும் வாய்ப்பில் அதை அவர் மற்றவர்க்கு பரிசாக வழங்கி, அப்பாடா என்று பெருமூச்சு விடலாம்.

இந்த பிரச்சினைக்கு விடையாக சிலர் பணமாகவே பரிசுகளை வழங்கி விடுகின்றனர். இதிலும் வேடிக்கை இருக்கிறது. ஒரு பெரும் பணக்காரருக்கு ஒன்றுமே இல்லாத சாதாரண மனிதர் பணம் பரிசாகக் கொடுப்பது.

நானறிந்தவரை இதற்கு சரியான விடை நல்ல புத்தகங்களை பரிசாக வழங்குவதே. பெறுபவரின் விருப்பு வெறுப்புகளை ஓரளவு அறிந்திருந்தால் சரியான புத்தகங்களை தேர்ந்தெடுக்க முடியும்.

காரைக்குடியில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழாக்கள் நடத்தும்போது, முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் மாவட்டத்திலுள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு ஒரு விண்ணப்பம் அளித்தோம். பள்ளிகளில் வழங்கப்படும் பரிசுகள் அனைத்தும் புத்தக வடிவில் இருக்க வேண்டும். பல பள்ளிகள் பிளாஸ்டிக் சாமான்கள், பாத்திரங்கள் என்று பரிசு வழங்கியதை மாற்றி, புத்தகங்களைப் பரிசாக வழங்கினர்.

சமீபத்தில் நடந்த எனது மணிவிழாவில் இரண்டு அன்பர்கள் மட்டும் புத்தகங்களைப் பரிசாக வழங்கினர். ஒரு அன்பர், சிரிக்க வேண்டாம், இரயில்வே கால அட்டவணையைப் பரிசாக வழங்கினார்! இன்னொரு நண்பர் ஜக்கி வாசுதேவ் அவர்களின் சிந்தனைத் தொகுப்பான, "ஆயிரம் ஜன்னல்" என்ற அற்புதமான நூலையும், சுஜாதாவின் "கடவுள்" என்ற நூலையும் அன்புப் பரிசாக வழங்கினார்.

ஒன்று இரண்டுமே என்னிடம் இல்லாத புத்தகங்கள். இரண்டாவது இரு நூலாசிரியர்களும் நான் பெரிதும் மதிப்பவர்கள். ஆயிரம் ஜன்னலில் முதல் இரு அத்தியாயங்களைப் படித்து விட்டேன். என் மனதிற்கு மிகவும் ஏற்புடையதாக இருக்கின்றது. அற்புதமான புத்தகம் என்பதை அவை கட்டியம் கூறுகின்றன. ஏற்கனவே சத்குரு அவர்களின் "அத்தனைக்கும் ஆசைப்படு" புத்தகத்தை மூன்று முறை படித்து மகிழ்ந்திருக்கிறேன். முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை தேர்ந்தெடுத்த பகுதிகளை எனது குறிப்பேட்டில் பதிவு செய்திருக்கிறேன். ஈடு இணையற்ற நூல் அது.

இந்த இரு புத்தகங்களை வழங்கிய அன்பர் பணத்தைச் செலவு செய்தது மட்டுமல்லாமல், நேரத்தை செலவு செய்து, சிந்தனை செய்து, எனக்கு என்ன பிடிக்கும் என்று யூகித்து, புத்தகக் கடையைத் தேடிச் சென்று அருமையான இந்த இரு புத்தகங்களை வாங்கியிருக்கிறார் என்பதை என்னால் உணரமுடிகிறது. அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

இத்தருணத்தில் எனது மணிவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அன்பர்கள், சிறப்பாக நடக்க உதவிய அன்பர்கள், பரிசுகள் வழங்கிய அன்பர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் நல்லருள் புரியட்டும்.

Friday, November 27, 2009

கருத்துக்கள்-17: "கண் திருஷ்டி" (Evil Eye)

கோவிலுக்குச் சென்று திரும்புகையில், ஒரு வீட்டுச் சுவரில் அந்த அழகிய 'கண் திருஷ்டி விநாயகர்' படத்தைக் கண்டேன். கேமெரா கையில் இல்லை. சரி பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

அது கண் திருஷ்டி பற்றி என்னை சிந்திக்க வைத்தது. பொறாமைக்காரர்கள், வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள் பார்வை நம்மை பாதிக்கும் என்ற நம்பிக்கை நம்மிடையே பரவலாக இருக்கிறது. பல வீடுகளில் சுவற்றிலோ அல்லது வாசலிலோ கண் திருஷ்டி விநாயகர் படத்தைப் பார்க்கலாம். சில வீடுகளில் திருஷ்டி பூசணிக்காயை கட்டித் தொங்கவிட்டிருப்பர்கள். அல்லது கோரமான ராக்ஷஸ உருவத்தின் படத்தை மாட்டியிருப்பார்கள். இதை மூட நம்பிக்கை என்று எளிதாக தள்ளிவிடலாம்.

ஆனால் இதில் ஏதோ உண்மை இருக்கிறது என்பதை என்னால் கூறமுடியும். நான் ஹோமியோபதி பயின்ற காலத்தில் 'அஸாரம் யூரோப்பியம்' (Asarum Europeum) என்ற மருந்தைப் பற்றி படித்திருக்கிறேன். ('நிலக் கடம்பு' என்ற தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் கண் திருஷ்டிக்கான (Evil Eye) மருந்து அது). எனக்கு ஆச்சரியமாக இருந்தது, மேலை நாட்டினரிடமும் இது போன்ற நம்பிக்கை இருப்பது. மேலும் அந்த மருந்திற்கான அனுபவக் குறிப்புகளில் ஹோமியோபதி மருத்துவர்கள் கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களை இந்த மருந்தைக் கொடுத்து குணப்படுத்தியதைக் கூறியிருந்தார்கள்.

நன்றாகப் பால் கொடுத்துக் கொண்டிருந்த கொழு கொழுவென்றிருந்த பசுமாடுகள் திடீரென பால் கொடுப்பதை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், உருக்குலைந்து எழும்பும் தோலுமாக ஆகின. அவற்றை ஹோமியோ மருத்துவர்கள் குணப்படுத்தியிருக்கிரார்கள். எனவே மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளும் 'கெட்ட பார்வையால்' பாதிக்கப் படக்கூடும்.

நம் தமிழ்நாட்டிலேயே ஒரு புகழ் பெற்ற ஹோமியோபதி மருத்துவர் இதைப் பற்றிக் கூறியிருந்தது நினைவுக்கு வருகிறது. அவரது உறவினரின் குழந்தை வயதுக்கு மீறிய அறிவு வளர்ச்சி மற்றும் இனிமையான குரல், ஸ்லோகங்கள், பாடல்களை மிகத் தெளிவாகப் பாடி அனைவரையும் கவரும் தன்மை பெற்றிருந்தது. ஒருநாள் அவர்கள் வீட்டிற்கு ஒரு பெண்மணி வந்திருந்தபோது, வழக்கம்போல் அந்தக் குழந்தையை அழைத்து பாடச் சொன்னார்கள். அதன் பாடும், பேச்சும் அந்தப் பெண்மணியை மிகவும் கவர, அவர் "குழந்தை என்னமா பாடுகிறாள்" என்று வியந்து பாராட்டிச் சென்றாராம். திடீரென அது முதல் அந்தக் குழந்தை பேச முடியாமல் போனது. பெரிய மருத்துவர்களிடம் சிகிச்சை அளித்தும் குணப்படுத்த முடியவில்லை, என்ன நோய் என்று அறியவும் முடியவில்லை. இறுதியில் அப்போது ஹோமியோபதி படித்துக்கொண்டிருந்த பின்னாளில் புகழ் பெற்ற அந்த ஹோமியோபதி மருத்துவர், அந்தக் குடும்பத்தில் ஒருவர். குழந்தையின் பெற்றோர் எப்படியாவது குணமானால் சரி என்று சம்மதிக்க. அவர் 'அஸாரம் யூரோப்பியம்' என்ற மருந்தைக் கொடுக்க, குழந்தை விரைவில் குணமடைந்து, முன்போல் பாட, பேச ஆரம்பித்து விட்டாள். இதெல்லாம் பலருக்கு நம்பக் கடினமாக இருக்கும். ஆனால் நான் இதை முழுமையாக நம்புகிறேன்.

Wednesday, November 25, 2009

இன்னொரு மணிவிழா






இன்று நண்பர், சாமி.கிருஷ்ணன் அவர்களது மணிவிழா. எனது மணிவிழா முடிந்து பத்து நாட்களில் இன்னொரு மணிவிழா!

முனைவர் சாமி.கிருஷ்ணன் எங்கள் அலுவலகத்தில் உலோக அரிமானப் பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற விஞ்ஞானி. நான் அந்தப் பிரிவில் பணியாற்றியபோது எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது.

அவர் அன்னை-அரவிந்தர் மீது பற்றுக் கொண்டவர். எனது ஈடுபாடோ ஸ்ரீஇராமகிருஷ்ணர்-அன்னை சாரதாதேவி-சுவாமி விவேகானந்தர் மீது. நாங்கள் நேரம் கிடைக்கும்போது ஆன்மீகக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வோம்.

வருடத்தில் மூன்று-நான்கு முறை பாண்டிச்சேரி சென்று அரவிந்த ஆஸ்ரமத்தில் தங்குவார். போகும்போதெல்லாம் என்னையும் அழைப்பார். இறுதியில் ஒருநாள் அவருடன் சென்றேன். தங்குவதற்கு ஆஸ்ரம சர்வதேச விடுதியில் அறை பதிவு செய்திருந்தார். அங்கே அவருடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன்.

அரவிந்தரின் மாபெரும் காப்பியமான சாவித்ரியைப் பற்றி அப்போதுதான் அறிந்து கொண்டேன். மில்டனின் 'பேரடைஸ் லாஸ்டுக்கு' (Paradise Lost) இணையான ஒரு பெருங் கவிதை. பேராசிரியர் நட்கர்னி அவர்களது தொடர் உரைகளை கேட்டு பிரமித்தேன், இன்புற்றேன். தினம் இரண்டு சிறப்புரைகள் என்று தொடர்ந்து பத்து நாளோ-பதினைந்து நாளோ நடைபெற்றது. நான் இரண்டு நாட்கள் மட்டுமே தங்கியிருந்ததால் நான்கு சிறப்புரைகளை மட்டுமே கேட்க முடிந்தது. மறக்க முடியாத ஒரு அற்புத அனுபவம் அது.

மேலும் என்னை அவர் ஆரோவில்லுக்கு அழைத்துச் சென்றார். அங்கே அன்னையின் ஆலயத்தில் (Matri Mandir) தியானம் செய்தோம். மற்றுமொரு மறக்கமுடியாத அனுபவம் இது.

பெரிய இடைவெளிக்குப் பின் நண்பர் கிருஷ்ணன் அவர்களை சந்தித்தது, அதுவும் அவரது மணிவிழாவில் சந்தித்தது மகிழ்ச்சியைத் தந்தது. மேலும் பல நண்பர்களை அங்கே கண்டேன். அங்கே எடுத்த சில படங்களை இங்கே பதிவு செய்துள்ளேன்.

நண்பர் கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சகல நலமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Wednesday, November 18, 2009

வீடியோ சிறுகதைகள்-1: பொன்.சுதாவின் "மறைபொருள்"



இன்று காலை வலையில் தேடும்போது, பொன்.சுதாவின் இந்தக் குறும்படத்தைக் கண்டேன். மிகவும் நேர்த்தியாக, வசனம் எதுவும் இல்லாமல், ஆழமான, ஒரு வீடியோ கதையை (வீடியோ கவிதை என்றே சொல்லலாம்) உருவாக்கியமைக்காகப் பாராட்டுக்கள். இறுதியில் நெஞ்சில் ஒரு முள் குத்தியதைப் போன்ற வலி.

நீங்களும் பாருங்களேன்.

நன்றி: பொன்.சுதா & YouTube.

Tuesday, November 17, 2009

கருத்துக்கள்-16: உழைக்காமல் உண்பதில்லை!


இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் பெரியவர், சிறியவர், குழந்தைகள் பிச்சை எடுப்பதை அன்றாடம் நாம் பார்க்கிறோம். மனதிற்கு கஷ்டமாக இருக்கும். ஏதோ சில்லறையைப் போட்டுவிட்டு மறந்துவிட முயற்சிப்போம், ஒருவகையான குற்ற உணர்வோடு.

சென்ற முறை இராமேஸ்வரம் செல்லுகையில், இராமநாதபுரம் இரயில் நிலையத்தில் அந்தப் பாட்டியைப் பார்த்தேன். பனை ஓலை விசிறி, பனை ஓலை கிலுகிலுப்பை வேண்டுமா என்று ஒவ்வொரு இரயில் பெட்டியாகத் தேடித் தேடி விற்றுக்கொண்டிருந்தாள்.

சிரித்த முகத்தோடு, பொறுமையாக, குறைந்த விலையில் கலைநயம் மிக்க பொருட்களை விற்று, வாழும் அந்தப் பாட்டி என்னைப் பெரிதும் கவர்ந்தாள். அந்தப் பாட்டியிடம் ஒரு படம் எடுக்கலாமா என்று கேட்டதும் வெட்கம் வந்துவிட்டது. இரண்டு விசிறி பத்து ரூபாய், இரண்டு கிலுகிலுப்பை பத்து ரூபாய்! கிலுகிலுப்பை வைத்து விளையாடும் வயதில் வீட்டில் யாரும் இல்லாதிருந்தபோதும், நாங்கள் கிலுகிலுப்பைகள், விசிறிகள் வாங்கினோம்.

இந்தத் தள்ளாத வயதிலும் உழைத்து உண்ண வேண்டும். வேறு யாரையும் சார்ந்து வாழக் கூடாது என்றிருக்கும் அந்தப் பாட்டியை நாம் அனைவருமே, குறிப்பாக, நம் இளைஞர்கள் முன்மாதிரியாகக் கொள்ளலாம்.