25 ஆக., 2008

எனக்குப் பிடித்த கவிதை-33: "தனிமை"

எனக்குப் பிடித்த கவிதை: "தனிமை"

உணர்வுக்குள் ஒளிந்துவிட்ட ஒருகோடி ரகசியத்தை
எனக்குள்ளே தேடுவதில் என்காலம் கழிகிறது.
முடியாத மோனநிலை முனகிவிட்ட சொற்களையே
விடியாத வைகறையில் வெண்மேகம் உதிர்க்கிறது.
தனிமையிலே கடைசிமிச்சம் தவிப்புத்தான் என்றாலும்
நானினிமேல் தனிமையிலே விடமாட்டேன்.
மௌனக்கடலுக்குள் மனத்தோணி மிதந்திருக்க,
கனவுப் பொதிகளினால் கண்முதுகு கனக்கட்டும்.
புரியாத உணர்வுகளில் புதைந்துவிட்ட என்னுயிரைத்
தெரியாமல் தனிமையிலே தினம்தோண்டிப் பார்க்கின்றேன்.
மனக்கொடிக்கு நீர்வார்த்து மரணமலர் பூப்பதற்குள்
எனக்குள்நான் தேடுவது எதுவென்றே தேடுகின்றேன்.
ஆகா! ஒ! தனிமைகளே! ஆவிகளின் நினைவுகளே!
சாகாத நினைவுகளைத் தவிக்கவிட்ட தனிமைகளே!
இறக்காமல் இனி நீங்கள் எனக்காக வாழுங்கள்!
மறக்காமல் நானுங்கள் மடிமீது தவமிருப்பேன்.
ஒளிப்பூவின் மெத்தைகளில் உறங்குங்கள் தனிமைகளே!
குளிர்மேகச் சிறகடியில் கூடுகட்டிப் படுத்திருங்கள்.
இமைக்கோழி அடைகாக்கும் எழிலான விழிமுட்டை
அமைதியிலே தனிமைதரும் அகச் சூட்டில் பொரியட்டும்!
சோகரத்தம் சொட்டுகின்ற சுயநினைவுக் காயங்கள்
தாகமுத்தத் தனிமையிலே சந்தனம் போல் ஆறட்டும்!

(கவிஞர் வைரமுத்துவின் "தனிமைதான் தத்துவம்" என்ற கவிதையிலிருந்து எனக்கு மிகவும் பிடித்த சில வரிகள்.)
"வைகறை மேகங்கள்"
கவிஞர் வைரமுத்து
சூர்யா வெளியீடு, சென்னை.
எண்பது பக்கங்கள்.
விலை ரூபாய் முப்பது மட்டும்.

கருத்துகள் இல்லை: