23 அக்., 2008

இன்றைய சிந்தனைக்கு-28: "ஆயிரம் உண்டிங்கு ஜாதி" - சுஜாதா

ஞாயிற்றுக்கிழமைகளில் நான் தவறாமல் பார்ப்பது - ஹிந்து பத்திரிக்கையின் 'மேட்ரிமோனியல்' விளம்பரங்களை. எனக்குக் கல்யாண உத்தேசம் எதுவும் இல்லை. அது முப்பத்தேழு வருடங்களுக்கு முன்னேயே நிகழ்ந்து, சண்டை போட சப்ஜெக்ட் தீர்ந்துபோய், நானும் மனைவியும் ஒரு சமநிலைக்கு வந்துவிட்டோம்.

'ஹிந்து'வின் இந்தத் திருமணப் பக்கங்கள் நம் சமூகத்தின் உண்மையான குறிகாட்டி. இந்த நாட்டில், குறிப்பாகத் தென்னாட்டில் அத்தனை சாதிகளும் பத்திரமாக இருக்கின்றன என்பதற்கு அத்தாட்சி.

உதாரணம் - ஆர்.சி.வன்னியர், தெலுகு பிராடஸ்டன்ட், கிறிஸ்டியன் நாடார், ரோமன் கத்தோலிக், கள்ளர் முக்குலத்தோர், தமிழ் முஸ்லீம், சன்னி உருது, பலிஜா நாயுடு, கேரளைட் விஸ்வகர்மா, வன்னியகுல க்ஷத்ரியர், வடமா பரத்வாஜா, வடகலை தைத்திரிய காசியபம்!

"ஆயிரம் உண்டிங்கு ஜாதி - இது
ஞாயிறுதோறும் தவறாத சேதி" - என்று பாரதி இப்போது பாடியிருப்பார்.

இதை நான் தனிப்பட்ட விமர்சனம் செய்வதைவிட, இதில் பொதிந்துள்ள சமூகவியல் செய்திகள் தாம் முக்கியமாகப்படுகின்றன.

1. சாதி இல்லை என்ற கொள்கை வீட்டுக்கு வெளியே மற்றவர்களுக்கு.
2. தங்கள் குடும்பத்துக்கு வரும்போது மட்டும் சாதி பாராட்டுகின்றனர். இதற்குப் பல யதார்த்தமான காரணங்கள் இருக்கலாம். உணவுப் பழக்கங்கள், மொழி, பெறப்போகும் பிள்ளைகள் குழப்பம் இல்லாமல் வளர்வது.
3. பிராம்மணர்கள் மட்டுமின்றி அனைத்து வர்க்கத்தினரும் சாதி பாராட்டுகின்றனர் - கல்யாணம் என்று வரும்போது.
4. 'கிரீன் கார்டு ஹோல்டர்" என்கிற புதிய சாதி உருவாகிக் கொண்டிருக்கிறது.

வேலைவாய்ப்பு, மெடிக்கல் அட்மிஷன் - இவற்றுக்கு சாதி தேவைப்படுவது வேறு விஷயம். இவற்றை மீறித்தான் கலப்புத் திருமணங்கள் நிகழ்கின்றன. அதுவும், வேறு விஷயம். அதன் பின்னும் சாதிகள் பத்திரமாக இருப்பதுதான் செய்தி. உதாரணம் -
Mother Brahmin, Father Vanniyar, 26 - Poorattathy, Multinational company, Five figure salary, seeks graduate girl Brahmin or pure vegetarian.

இந்த விளம்பரத்தில் ஒரு நாவலுக்குரிய சமாசாரமே அடங்கியிருக்கிறது.

நன்றி: ஆனந்தவிகடன், 11.4.1999

கருத்துகள் இல்லை: