5 பிப்., 2009

பாரதி கவிதைகள்-14: "ஆத்ம ஜெயம்"

கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ? - அட
மண்ணில் தெரியுது வானம், அது நம்
வசப்படலாகாதோ?
எண்ணி யெண்ணிப்பல நாளும் முயன்றிங்
கிறுதியிற் சோர்வோமோ? - அட
விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்
மேவு பராசக்தியே!
என்ன வரங்கள்! பெருமைகள், வெற்றிகள்,
எத்தனை மேன்மைகளோ!
தன்னை வென்றாலவை யாவும் பெறுவது
சத்திய மாகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்
முற்றுமுணர்ந்த பின்னும்
தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு
தாழ்வுற்று நிற்போமோ?

1 கருத்து:

nellaiappan சொன்னது…

தன்னை வென்றால் யாவும்
சாத்திய மாகுமென்றே ....

- அட அதுதானே அண்ணே கஷ்டமான சமாச்சாரம்.

-NELLAI.