17 பிப்., 2009

நெல்லையப்பன் கவிதைகள்-53: "காமம்"

எப்போதும் விழித்திருக்கும்
அடங்கியதாய் பாவனை காட்டும்
உலை மூடி போல் தலை தூக்கும்
கிடைக்கும் முதல் வாய்ப்பில்
கட்டவிழ்ந்து கரை உடைக்கும்.

நூலில் கட்டிய மதயானை
நூலறுக்கும் ஆசை -
அவமானத்திற்கு அஞ்சி
கால் மாற்றிக் கால் மாற்றிக்
காத்து நிற்கும்
காணும் காட்சிகள் கனல் மூட்டும்
கனவுகள் உணர்வை உசுப்பிவிடும்.

அடக்க நினைப்பது அழகல்ல
அலட்சியப்படுத்துவது அறிவுடைமை அல்ல
அடிக்கடி புசிக்க உணவல்ல
பலர் கூடிச்செய்ய பொதுப்பணியல்ல.

வெறும் மெய்மட்டும் என்றால் மெய்யல்ல
உயிரும் மெய்யும் கலக்கும் ரசவாதம்
தக்க துணையோடு தணிக்க வேண்டும்
தவமென்று உணர்ந்தால் இனிமை கூடும்.

கருத்துகள் இல்லை: