19 பிப்., 2009

சிற்றிதழ்கள்-1: "புதிய ஆசிரியன்"

தமிழிலக்கிய வளர்ச்சியில் சிற்றிதழ்களின் பங்களிப்பு அளப்பரியது என்பதில் எள்ளளவும் ஐயமே இல்லை. ஆனால், தமிழ் வளர்ச்சி பற்றியும், தமிழின் பெருமை பற்றியும் வாய்கிழியப் பேசுபவர்கள், இது போன்ற சிற்றிதழ்களுக்கு உதவிக்கரம் நீட்ட ஏன் தயாராக இல்லை. இலக்கியத்தரம் வாய்ந்த சிற்றிதழ் கண்ணில் பட்டால், உடனே ஓராண்டு சந்தாவோ, பத்தாண்டு சந்தாவோ கட்டுவது என்கிற தமிழுணர்வு ஏன் நமது தமிழார்வலர்களுக்குத் தோன்றுவதில்லை?

சமீபத்தில் நெல்லையில், மூத்த பத்திரிக்கையாளர் தி.க.சி.யை சந்தித்தபோது, "இதைப் படித்துப் பாருங்களேன்" என்று சொல்லாமல், "இதை நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டும்" என்கிற கட்டளையுடன் ஒரு சிற்றிதழை என்னிடம் தந்தார். அந்த இதழின் பெயர் 'புதிய ஆசிரியன்'. மதுரை, காக்காத்தொப்புத் தெருவிலிருந்து வெளிவரும் அந்தப் பத்திரிக்கையின் ஜனவரி மாத இதழைப் படித்தபோதுதான் தெரிந்தது, ஜனரஞ்சகமாகவும் ஒரு இலக்கிய இதழை நடத்தமுடியும் என்று.

'புதிய ஆசிரியன்' இதழில் ஜீவி என்கிற கவிஞர் எழுதியிருந்த 'சாணை பிடித்தல்' என்கிற கவிதை எனது சிந்தனையை நிஜமாகவே சாணை பிடித்தது. தன்னம்பிக்கை ஊட்டும் இதுபோன்ற கவிதைகளைப் பாடப்புத்தகங்களில் ஏன் சேர்க்க மறுக்கிறார்களோ தெரியவில்லை!

வெளிர்ந்த உன் பூக்களுக்கு

வண்ணம் அடி.
அலுத்துச் சலித்த நாட்களின் மேல்
ஆனந்தம் தெளி.
பிளவுண்ட பிரதேசங்களுக்கு
தண்ணீர் பாய்ச்சு.
புல்லாங்குழல் போரடிக்கிறதா,
பறையோசை கேள்.
திரையிசையால் திணறுகிறாயா,
பாரதி பாடல்களில்
ஆறுதல் தேடு.
அநீதியை எரிக்கும் நெருப்பை
அவியாமல் காப்பாற்று.
யுகத்தை ஜெயிக்கும் வீரியத்தை
விரல்களில் ஏற்று.

கையைச் சுட்டுக்கொண்டபின்
இந்த முறையும்
விதை தேடும் உழவன்.
சொட்டும் இல்லையென்று
தெரிந்த பின்னும்
தாய்மடி முட்டும் கன்று.
இலைகள் உதிர்ந்த பின்னும்
பச்சையாய்ச் சிரித்து
துளிர்க்கும் செடி.
வழக்கமான கோலம் தவிர்த்து
விழா நாட்களில்
பெரிதாய்க் கோலமிடும் அம்மா -
அவர்களிடம் பாடம் படி.
எழு, நட... தூரத்தில் பார்...
அகண்ட புதிய பாதை!

 

கலாரசிகனின் "இந்த வாரம்", 'தமிழ்மணி', தினமணி, 15.2.2009.
நன்றி: திரு.கலாரசிகன் & தினமணி.

2 கருத்துகள்:

nellaiappan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
nellaiappan சொன்னது…

'சாணை பிடித்தல்' கவிதை Superb.
Congrats to the Author.
-nellai.