2 மார்., 2009

நெல்லையப்பன் கவிதைகள்-58: "தொப்புள்கொடி உறவு "

நாற்பதாண்டு கால
பகுத்தறிவுப் பாரம்பரியத்தில்
ஒன்று கொளுத்துகிறார்கள்
அல்லது கொளுத்திக் கொள்கிறார்கள்.

சட்டக் கல்லூரியே ஆனாலும்
சாதிக் கட்டையால்
அடித்துக் கொள்கிறார்கள்
நீதி மன்றமே ஆனாலும்
காக்கி சட்டையும் கறுப்புச் சட்டையும்
அடித்துக்கொண்டு அநீதி காக்கிறார்கள்.

மொழியை வாயில் குதப்பி மென்று

புளிச்சென்று அடுத்தவன்மேல்
துப்பித் தொலைக்கிறார்கள்
வன்முறைக்கு தினமும்
வந்தனம் செய்கிறார்கள்.

அகதியாக வந்தவர்களை

வசதியற்ற முகாம்களில் தவிக்கவிட்டு
அயல்நாட்டில் அவர்களுக்கு
தனிநாடு கேட்கிறார்கள்.

தனிமனித கோபதாபங்களுக்காக

ஒரு இனத்தையே காவு கொடுக்கிறார்கள்
கடலளவு மாற்றம் வேண்டும்
வன்முறையைக் கைவிட வேண்டும்
"தலை"யைக் கொடுத்தாவது
மிஞ்சிய மக்களை காக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: