18 மார்., 2009

நெல்லையப்பன் கவிதைகள்-65: "கூலி"

கரும்பை அல்ல
கரும்புச் சாற்றை,
இஞ்சி எலுமிச்சை சேர்த்து
நுரையுடன் நீட்ட,
அருந்தி முடித்தவுடன்
வெள்ளித்தட்டில் வைத்து
பணம் கொடுத்தார்கள்,
காரணம் புரியாவிட்டாலும்
பெற்றுக்கொண்டான் மகிழ்வுடன்.

தலை வாழை இலை போட்டு
ஒவ்வொரு வேளையும்,
எப்படித்தான் துப்பு கிடைத்ததோ!
அவனுக்கு பிடித்த உணவுகளாய்
அன்புடன் உபசரித்து,
ஒவ்வொரு உணவுக்கு பின்னும்
வெள்ளித் தட்டில் வைத்து
கொடுத்தார்கள் பணமாக.

மகிழ்வுடன் பெற்றுக் கொண்டாலும்
காரணம் கேட்க வெட்கப்பட்டு,
மூன்றாம் நாள் விருந்து முடித்து
தயங்கித் தயங்கி அந்த புது மாப்பிள்ளை
கேட்டேவிட்டான் உறவுக்காரச் சிறுவனிடம்-
"எதற்கு தம்பி சாப்பாடும் போட்டு
சாப்பிட வேளாவேளைக்கு
பணமும் கொடுக்கிறீர்கள்?"

தெளிவாய் சிறுவன் சொன்ன பதில்-
"அப்படித்தானே மாமா
அக்காவைக் கட்டிக்கிட்டீங்க!"

கருத்துகள் இல்லை: