12 ஏப்., 2010

சூரியின் டைரி-8:

குறிப்பெழுதி நாளாகி விட்டது. நேற்று தினமணி நாளிதழ் வாங்கினேன். பெரும்பாலும் நான் ஞாயிரென்று கிடைக்கும் அனைத்து தமிழ் மற்றும் ஆங்கில இதழ்களை வாங்கிவிடுவேன். காரணம் ஞாயிறு மலரில் பல பயனுள்ள செய்திகள், கட்டுரைகள் கிடைக்கும். நேற்றைய தினமணியில் என் கவனத்தை ஈர்த்த சிலவற்றை இங்கே பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன்.

முதல் பக்கத்தில் விமான விபத்தில் போலந்து அதிபர், அவர் மனைவி உட்பட 132 பேர் பலியான செய்தி. பொதுவாக நான் விபத்துக்கள், கொலைகள், குற்றங்கள் பற்றிய செய்திகளை ஒதுக்கிவிடுவேன். காலையில் மனத்தை வேதனைப்படுத்தி, உற்சாகத்தைக் குறைக்கும் செய்திகளைத் தவிர்த்துவிடலாமே என்று. ஆனால் பொதுவாக பத்திரிக்கையாளர்கள் இது போன்ற செய்திகளுக்குத்தான் முதலிடம் தருகின்றனர். அதே நேரம் ஆங்கிலக் கவிஞன் ஜான் டன் (John Donne) கூறியது நினைவிற்கு வருகிறது: "யார் மரணமடைந்தாலும் அது என்னைப் பாதிக்கிறது. ஏனெனில் நான் மனித சமுதாயத்துடன் ஒன்றாகக் கலந்தவன்." ("Everyman's death diminishes me; for, I am involved in mankind."). பெரும்பாலான விபத்துக்கள் மனிதத் தவறுகளாலேயே நிகழ்கின்றன. தொடர்ந்து வேலை பார்ப்பவர்கள் பெரும்பாலோருக்கு, தங்கள் நீண்ட அனுபவத்தால் ஒரு அலட்சிய மனப்பான்மை வருவதுதான் முக்கிய காரணம். எப்போதும் விழிப்புணர்வுடன், இன்னும் சொன்னால், பய பக்தியுடன் செயல்படும்போது, இம்மாதிரியான விபத்துக்கள் குறையலாம்.

அடுத்த செய்தி. "சீனா பற்றிய அச்சம் தேவையில்லை" என்பது. இது எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போன்றது. பிரதமருடன் அமெரிக்கா மற்றும் பிரேசில் செல்லும் பத்திரிக்கையாளர்களிடம் உரையாடிய வெளிவுறவுத்துரை அதிகாரிகள் கூறியதாக வெளியான செய்தி இது. சீனா நம்மைச் சுற்றியுள்ள நாடுகள் அனைத்துடனும் நட்புறவை வளர்த்துக்கொண்டு, அங்கெல்லாம் உதவுகிறது. ஆனால் நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் உரிமை கொண்டாடுகிறது, நமக்கு எப்போதும் ஏதாவது தலைவலியைத் தந்துகொண்டே இருக்கிறது. பழைய அனுபவத்திலிருந்து நாம் கற்ற பாடம், அவர்களை நம்ப முடியாது என்பதுதான். சொல் ஒன்று, செயல் வேறு என்பது அவர்களுக்கு இயல்பான ஒன்று. எனவே அச்சம் தேவையில்லை என்றாலும், அலட்சியம் கூடாது; விழிப்புணர்வு மிக அவசியம் என்பதுதான் சரியான நிலைப்பாடு.

அடுத்து மதியின் கார்ட்டூன். நான் தினமணி எப்போது வாங்கினாலும் மதியின் கார்ட்டூனை பார்க்கத் தவறுவதில்லை. அவரது கேலியும், கிண்டலும் மிகவும் ரசிக்கத் தக்கவை. மின்வெட்டு மற்றும் மின்கட்டண உயர்வு பற்றிய இந்தக் கார்ட்டூனும் அந்த ரகம். மிகவும் ரசித்தேன்.

இரண்டாம் பக்கத்தில் ஆன்மிக சிந்தனையில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிந்தனை. அகங்காரம் உள்ளவரை ஞானமும், முக்தியும் கைகூடாது. அனைவரும், குறிப்பாக ஆன்மிக சாதகர்கள், அடிக்கடி நினைவு படுத்திக் கொள்ளவேண்டிய ஒன்று.

அடுத்து, சிவகங்கை அரசு கல்லூரியில் மனித உரிமை பற்றிய இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கம் - ஏப்ரல் 12-13. இதைச் சாக்கிட்டாவது அங்கே செல்லலாமா என்றொரு ஆசை. ஏனெனில் நான் படித்த கல்லூரி அது. கடைசியாகச் சென்று நாற்பது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. என் கல்லூரி நாட்களில் அப்படியொன்றும் நினைத்து மகிழும் சம்பவங்கள் இல்லைதான் என்றாலும், செல்லவேண்டும்-பார்க்கவேண்டும் என்ற எண்ணம் ஏனோ இருக்கிறது.

அடுத்து நான்காம் பக்கத்தில் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா சிகிச்சை முகாம் பற்றிய தகவல். எங்கள் ஊர், காரைக்குடி, சுப்பிரமணியபுரத்திலே நடக்கிறது என்பதால்தான் ஆர்வம். மனித மேம்பாட்டு அறிவியல் அமைப்பின் சார்பாக நாங்கள் நேமத்தில் நடத்திய இயற்கை மருத்துவ முகாமும், அதில் கலந்துகொண்டு பெற்ற அனுபவங்களும் நினைவிற்கு வருகின்றன. அன்னை சகுந்தலா நேச்சுரோபதி மருத்துவமனையும், புனேயில் உள்ள தேசிய இயற்கை மருத்துவம் மற்றும் யோகாவிற்கான அமைப்பும் இணைந்து ஏப்ரல் 12 முதல் ஒரு வாரம் இந்த முகாமை நடத்துகின்றன. இலவச பயிற்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது இன்னொரு கவனத்தை ஈர்த்த விஷயம். யோகா, இயற்கை உணவு முறை மற்றும் இயற்கை முறையில் நோய்களிலிருந்து குணப்படுத்திக் கொள்ளுதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

அடுத்து, ஏழாம் பக்கத்தில் மகிழ்ச்சியான செய்தி. க்ரையோஜெனிக் எஞ்சினைத் (Cryogenic Engine) தயாரித்து இஸ்ரோ சாதனை. கிட்டத்தட்ட பத்தொன்பது ஆண்டுகள் கடுமையாக உழைத்து நம் நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது ஒரு மகத்தான சாதனை, விண்வெளி தொழில்நுட்பத்தில் ஒரு பெரிய மைல்கல். உலகில் இத்தொழில் நுட்பம் வைத்துள்ள ஆறாவது நாடு என்ற பெருமையையும் இந்தியா பெறுகிறது.

அடுத்தது அனைவரையும் அப்பாடா என்று சொல்லவைக்கும் ஒன்று: "பருப்பு விலை சரிவு"
சென்னைச் சந்தையில் துவரம் பருப்பின் விலை குவிண்டாலுக்கு ரூபாய் இரு நூறும், உளுத்தம் பருப்பு ரூபாய் முன்னூறும், பாசிப்பருப்பு ரூபாய் நூறும், சர்க்கரை ரூபாய் நூறும், கோதுமை மைதா ரூபாய் ஐம்பதும் குறைந்துள்ளது. இன்னும் குறையட்டும்!

எட்டாம் பக்கம், தமிழ்மணி. இதற்கென்று தனியாகவே ஒரு பதிவு செய்யலாம். அவ்வளவு நல்ல, பயனுள்ள, இனிமையான செய்திகள். நன்னெறியிலிருந்து ஒரு பாடல், விளக்கத்துடன். கலாரசிகனின், "இந்த வாரம்". அதில் "அர்ஜுனன் தபசு" என்ற நூல், வட அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் மாத இதழ் "தென்றல்", மற்றும் பா.சேதுமாதவன் அவர்களது "புலன் விழிப்பு" என்ற கவிதைத் தொகுப்பு பற்றி படித்து, ரசிக்கும்படி, சுவையாக எழுதியுள்ளார். அதிலும் குறிப்பாக "வார்த்தைகளுக்கு அப்பால்", "தலைமுறை மாற்றம்" என்ற இரண்டு கவிதைகளை அப்படியே தந்துள்ளார். நான் அவற்றை மிகவும் ரசித்தேன்.

தமிழ்மணியில் மற்றவை: "மனம் கவரும் மனோன்மணீயம்" என்ற கவிஞர் மா.உலகநாதனின் கட்டுரை. அதிலும் நான்கு அருமையான கவிதைகள். ஒன்றை மட்டும் கீழே தருகிறேன்:

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன்இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதிரத்து உதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்
ஆரியம்போல் உலகவழக்கொழிந்து சிதையா உன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதமே.

தேசியக்கவி முகவை முருகனார் பற்றிய லா.சு.ரங்கராஜனின் கட்டுரை. தேசியச் சிந்தனை செறிந்த மகாகவிராயர் என்று போற்றப்பட்ட முருகனார் காந்திஜியைப் போற்றி எழுதிய பாடல்:

தானந் தழைத்திடுமே தன்மஞ் செழித்திடுமே
ஞானம் பழுத்திடுமே ஞானமெலாம் ஊனமிலாச்
சாந்தி யுபதேசித்த சன்மார்க்க சற்குருவாம்
காந்தி நன்னெறி நடக்குங்கால்.

புற வாழ்வைத் துறந்து, ரமண மகரிஷியைச் சரணடைந்து, அவரது நிழலாகவே வலம்வந்து, அவரது உரைகளை உள்வாங்கி, முருகனார் எழுதிய குருவாசகக் கோவை, ஸ்ரீ ரமண சந்நிதி முறை, ஸ்ரீ ரமண தேவமாலை, ஸ்ரீ ரமண சரணப்பல்லாண்டு, ஸ்ரீ ரமணானுபூதி, ரமண ஞான போதம் பற்றியும், அவர் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தீந்தமிழ் பாக்களை எழுதியது பற்றியும், மேலும் அவரது மற்றைய மேன்மைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். படிப்பதற்கு பிரமிப்பாக இருக்கிறது. உண்மையைச்சொன்னால் இப்படியொருவர் இருந்ததே என் முதல் அநேகருக்குத் தெரியாது என்பதுதான் வேதனை. முருகனாரின் படைப்புகளைத் தொகுத்து யாரேனும் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது. மேலும் 'தமிழ் விக்கிப்பீடியாவில்' முருகனார் பற்றி யாரேனும் எழுதவேண்டும் என்பது என் ஆவல். இந்த மகான் பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பளித்தமைக்கு திரு ரங்கராஜன் அவர்களுக்கும், தினமணி நாளிதழுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

ஒன்பதாம் பக்கத்தில் ஒரு வருத்தம் தரும், அச்சுறுத்தும் செய்தி: "தமிழகத்தில் நெல் உற்பத்தி கடும் சரிவு". 2000-2001 ஆண்டில் 73,66,320 டன்னாக இருந்த நெல் உற்பத்தி, 2008-2009 ஆண்டு 51,83,385 டன்னாகக் குறைந்துள்ளது. இந்த அதிர்ச்சி தரும் புள்ளி விபரங்கள் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் கண்ணில் படுமா? உடனே அவர்கள் முன்னெச்சரிக்கையாக தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்களா?

பத்தாம் பக்கத்தில் "பயங்கரவாதிகளிடம் அணு ஆயுதம்: மன்மோகன் கவலை". பயங்கரவாதம் உலகளவில் விரிந்துகொண்டே போகிறது. உலகத் தலைவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை; தெளிவான சிந்தனை இல்லை. ஒற்றுமை இல்லை. 'எதிரியின் எதிரி நண்பன்' போன்ற தவறான கருத்துக்களால் பயங்கரவாதத்தை வளர்த்துவிட்டு தற்போது அல்லலுறுவது அனைவரும் அறிந்ததே. பழிவாங்கும் வெறி, கொடூர குணம், சரி-தவறு என்றெல்லாம் பிரித்துப் பார்க்கும் விவேகமின்மை, இரக்கமின்மை போன்ற தன்மைகள் மேலோங்கியிருக்கும் பயங்கரவாதிகள் அவர்கள் குறிக்கோளை அடைய என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று எண்ணுபவர்கள். அணு ஆயுதங்கள் அவர்கள் கையில் சிக்கினால் என்னென்ன கொடூரங்கள் நிகழுமோ? வெறும் கவலைப்படுவதோடு விட்டுவிடாமல், உலகத் தலைவர்கள் ஒருங்கிணைந்து, தங்கள் வேறுபாடுகளை மறந்து, உடனே செயல் பட்டால் ஒழிய, வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை.

பதினான்காம் பக்கத்தில் 'துரும்பு' எழுதிய "அது இருந்தா, இது இல்லே..". இதிலிருந்து என் மனதைத் தைத்த சில வரிகள்: "வெள்ளிக்கிழமை காலை பொதிகையில், காந்திய சிந்தனைகளை நினைவூட்ட முயன்று கொண்டிருந்தார் தமிழருவி மணியனார். பொதுவாழ்விற்கு வருபவர்கள் தன்னலம் துறந்து, பொதுநலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருக்கவேண்டும் என்கிற காந்தியின் சிந்தனையை அவர் எடுத்துரைத்தபோது ஏக்கப் பெருமூச்சு மட்டுமே விடமுடிந்தது."

அடுத்து ஞாயிறு இணைப்பு, "கொண்டாட்டம்". ஒரு கிராமத்தில், ஏழைக் குடும்பத்தில், பிறந்து படிப்பின் மூலமாக சாதனைகள் படைத்துள்ள சாதனைப் பெண்மணி பேராசிரியை காஞ்சனா பற்றிய கட்டுரை. குறிப்பாக மாணவிகள் படித்து அவரை முன்மாதிரியாகக் கொள்ளலாம்.

கொண்டாட்டத்தில் சாருகேசியின் "நகர்வலம்". பாரதி அன்பர் கே.ரவி அவர்கள் பற்றி எழுதியதை மிகவும் ரசித்தேன். ரவி அவர்களின் "சொற்களுக்குள் ஏறிக்கொள்" என்ற கட்டுரைநூலையும், "உன்னோடு நான்" என்ற கவிதைத்தொகுப்பையும் வெளியிட்டுப் பேசிய திரு அரங்க.ராமலிங்கம் அவர்கள் கூறியதை இங்கே பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன்: "திருவள்ளுவருக்கு சிலை வைப்போம், வள்ளுவர் கோட்டம் கட்டுவோம். ஆனால் அவருடைய திருக்குறள் முதல் அதிகாரத்தை ஏற்கமாட்டோம் என்பது விந்தையாக இருக்கிறது. அதேபோல், செம்மொழி மாநாட்டுக்கு 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற வரியை மட்டும் எடுத்துக் கொள்வோம். ஆனால், அதைத் தொடர்ந்து வரும் வரிகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொல்வதும் புதிராக இருக்கிறது"

கொண்டாட்டத்தில் வி.ரவிச்சந்திரன் அவர்களின் "படக்காட்சியும், பாடமும்!". eLearning என்ற Smart Class System பற்றி அவர் எழுதியிருப்பதில் சிலவரிகளை இங்கே பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன்: "மனிதமூளைக்கு தனியான ஒரு விசேஷ குணம் உள்ளது. அதற்கு எழுத்துக்களைவிட, படங்களை அதிகம் பிடிக்கும். இதனால்தான் என்றோ பார்த்த திரைப்படம் நம் நினைவில் நிற்பதும், நேற்று படித்த பாடப் புத்தகம் மறப்பதும். குழந்தைகள் கூட APPLE என்ற எழுத்துக்களையும், ஆப்பிள் படத்தையும் ஒன்றுசேர்த்து வைக்கும்போது எளிமையாக ஆப்பிள் எனப் படித்துவிடுவதும்."

அடுத்து திருப்பட்டினம் .ஜரினா பானு அவர்களின் "கோடையில் குளிர". கோடையின் வெக்கையிலிருந்து காத்துக்கொள்ளவும், சூட்டால் ஏற்படும் நோய்களிலிருந்து விடுபடவும் பழச்சாறுகள் பற்றிய பயனுள்ள குறிப்புகள். குறிப்பாகக் கவர்ந்தது: "இரண்டு மூன்று பழச்சாறுகள் கலந்து ஜூஸ் செய்யும்போது, இரண்டு ஸ்பூன் இஞ்சிச்சாறு விட்டுப் பருகுங்கள். சுவை சூப்பராக இருக்கும்."

அடுத்த இணைப்பு: தினமணி கதிர். அட்டையில் நோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்களது படம். "சாதனையில்" அவரைச் சந்தித்தது பற்றி தமிழ்மகனின் கட்டுரை. மார்ச் 31 அன்று தினமணியும், தில்லித் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய பத்ம விருது பெற்றவர்களுக்கான பாராட்டுவிழாவில் திடீர் விருந்தாளியாக அவர் வந்து கலந்து கொண்டதைப் பற்றியும், அவரது எளிமை பற்றியும் எழுதியிருந்தார்.

"ஆரோக்கியம்" பகுதியில் .ஜீவா அவர்கள் வேர்க்கடலை பற்றி பல பயனுள்ள, சிறந்த தகவல்களை வழங்கியிருந்தார். குறிப்பாக என்னைப்போன்ற சர்க்கரை நோயாளிகளுக்கு பயனுள்ள தகவல். வேர்க்கடலையில் க்ளைசெமிக் இன்டெக்ஸ் (Glycemic Index) குறைவு, எனவே அதைச் சாப்பிடுவதால் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவு மிகக் குறைவு. மேலும் வேர்க்கடலையில் உள்ள மக்னீசியம் இன்சுலின் சுரப்பதை ஊக்குவிக்கும். அனைவரும் கவனிக்க வேண்டிய இன்னுமொரு முக்கிய தகவல் ஒன்றை இங்கே சொல்ல விரும்புகிறேன்: சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் (Refined oils) பற்றியது. பல எண்ணெய் பாட்டில்களில் double refined என்று பெருமையாகப் போட்டிருப்பார்கள். சுத்திகரிக்கும் முறையில் கெட்ட கொலஸ்ட்ரால் கூடுகிறது, வேறு பல வேண்டாத ரசாயன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதுதான். நம்ப முடியவில்லையா? கீழே தந்துள்ள இணைப்பிற்குச் சென்று கார்சன் டிங் (Carson Ding) என்பார் எழுதிய "HEALTH MYTH EXPOSED: HEALTHIEST AND BEST COOKING OIL" என்ற கட்டுரையை அவசியம் படியுங்கள்:
http://www.health-myth-exposed.com/2008/10/healthiest-and-best-cooking-oil.html.

"முரண்சுவை" பகுதியில் நடிகர் ராஜேஷ் அவர்கள் சின்ன அண்ணாமலை பற்றி எழுதியிருந்தது சிறப்பாக இருந்தது. ஆங்கிலேய ஆட்சியின்போது சிறையிடப்பட்ட சின்ன அண்ணாமலை அவர்களை, மக்கள் திரண்டெழுந்து வந்து சிறையை உடைத்து விடுதலை செய்தது பற்றியும், அவர் பிறந்த நேரமும், நாளும், இறந்த நேரமும், நாளும் ஒன்றே என்ற தகவலையும் தெரிந்து கொள்ள முடிந்தது. (18.6.1920 காலை 10.45 - 18.6.1980 காலை 10.45 மணி)

தினமணி நாளிதழுக்கும், அதன் வழியே பல பயனுள்ள, சுவையான தகவல்களை வழங்கிய எழுத்தாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

Grateful thanks to:
Carson Ding and HEALTH MYTH EXPOSED.com:

http://www.health-myth-exposed.com/

கருத்துகள் இல்லை: