4 நவ., 2010

சூரியின் டைரி-43: அதிர்ஷ்டமும், துரதிருஷ்டமும்

சில நாட்களுக்கு முன் விஜய் டிவியில்  திரு கோபிநாத் அவர்கள் நடத்தும்  நீயா, நானா நிகழ்ச்சியில் அதிர்ஷ்டம் பற்றிய கலந்துரையாடலில் ஒரு பகுதியைப்  பார்த்தேன்.  வீட்டில் ஆளுக்கு ஆள்  சானல்  மாற்றிக்கொண்டே இருந்ததாலும், நான் இடை இடையே வெளியே செல்ல நேர்ந்ததாலும், நிகழ்ச்சியை முழுமையாகப் பார்க்க முடியவில்லை.  பார்த்தது மிகக் கொஞ்சம்தான்.  (உங்களில் யாருக்காவது இந்த டிவி ரிமோட்டைக் கண்டுபிடித்தவரை கழுத்தை நேரிக்கவேண்டும்போல் எப்போதாவது தோன்றியிருக்கிறதா?  அப்படித் தோன்றியிருந்தால்  நீங்கள்  தனியில்லை)  இருப்பினும், உறக்கம் வராத அன்று இரவில்  என்   மனதில் அதிர்ஷ்டம் பற்றிய சிந்தனை ஓடியது.

அதிர்ஷ்டம் என்றால் என்ன?  உண்மையில் அப்படி ஒன்று இருக்கிறதா?

இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.   அதிர்ஷ்டம் மட்டுமல்ல, துரதிருஷ்டமும் இருக்கிறது.  நாம் எதிர்பாராமல் ஏதாவது நல்லது நடந்தால், அதிலும் பெரிய அளவில் நடந்தால், அதிர்ஷ்டம் என்று மகிழ்கிறோம்.  இது சமயத்தில் நம் திறமைக்கும், உழைப்பிற்கும் மீறியதாக இருக்கலாம்.  துரதிருஷ்டம்?  திறமை, தகுதி, ஈடுபாடு, கடும் உழைப்பு இருந்தும் பலரால் எதையும் சாதிக்க முடிவதில்லை, வாழ்வில் முன்னேற முடிவதில்லை;  அல்லல் படுகிறார்கள், அவதிப்படுகிறார்கள்,  துன்பப் படுகிறார்கள், துயரப்படுகிறார்கள், வேதனைப்படுகிறார்கள்.  ஏன்?  அவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை அல்லது அது அவர்களின் துரதிருஷ்டம்.

இருக்கட்டும்.  அது ஏன் ஒரு சிலருக்கு மட்டும் அதிருஷ்டமும், பலருக்கு துரதிருஷ்டமும் நேருகிறது?  கடவுள் தனக்கு வேண்டியவர்களுக்கு அதிர்ஷ்டத்தையும்,  வேண்டாதவர்களுக்கு துரதிருஷ்டத்தையும் தருகிறாரா?  நான்  அப்படி  நினைக்கவில்லை.

இன்னும் சற்று ஆழமாகச் சிந்தித்தேன்.  ஒருவருடைய முன்வினைப்பயன் - முந்திய பிறவிகளிலோ அல்லது இந்தப் பிறவியிலோ - செய்த வினைகளின் பயனாக, அதிர்ஷ்டமும், துரதிருஷ்டமும் (நல்லதும், கெட்டதும்) நேர்கிறது.  இவ்வுலகில் எதுவுமே தற்செயலாக நிகழ்வதில்லை.  நாம்  முன்னர் செய்த நல்வினைகளின் பலனாக அதிர்ஷ்டங்களையும், தீவினைகள் அல்லது தவறுகளின்  பயனாக துரதிருஷ்டங்களையும் எதிர்கொள்ள நேரிடுகிறது.  எல்லாமே  Cause and Effect.  There is nothing arbitrary or accidental about it.  இது என்னைப்போல் உங்களுக்கும் மறுபிறவித் தத்துவம்,  கர்மா தத்துவம் போன்றவற்றில் நம்பிக்கை  இருந்தால்  ஏற்புடையதாக இருக்கும்.  

இது எனது முதல் பிறவியோ அல்லது கடைசிப் பிறவியோ அல்ல என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.  அதுபோல்  என்  வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளுக்கு நானே காரணம்;  அறிந்தோ அறியாமலோ நான் செய்த முன்வினைகள் - இபபிறவியிலோ அல்லது  முந்திய பிறவிகளிலோ செய்த முன்வினைகளே காரணம்.  ஆகவே நான் கடவுளையோ அல்லது வேறு யாரையோ குறைசொல்வதில் அர்த்தமில்லை.  சுவாமி விவேகானந்தர் கூறியதன் பொருள் தற்போது நன்றாகப் புரிகிறது:  You are the maker of your own destiny.

அதிருஷ்டம், துரதிருஷ்டம், அல்லது விதி என்பதெல்லாம் முன்வினைப்பயனே.  விதி, விதி என்று வீணாகிப் போய்விட்டோம் என்பர் சிலர்.  இந்தக் கண்ணோட்டம் Fatalistic என்று சிலர் சொல்லலாம். ஆனால் இதில் ஒரு Positive Side இருக்கிறது.  நல்வினைகளால் நற்பயன்களும் (அதிருஷ்டங்களும்),  தீவினைகளால் தீய பயன்களும் (துரதிருஷ்டங்களும்)  நேருமென்றால், நாம் ஏன் தீயவற்றைச் செய்யவேண்டும்.  நாம் நல்லதை மட்டுமே ஏன் செய்யக்கூடாது?  தற்போது நாம் நல்லதையே செய்தால்  பின்னர் நமக்கு  விளைவதெல்லாம் நல்லதாகவே இருக்குமல்லவா? நல்லதையே செய்ய  இது  ஒரு  INCENTIVE  என்று நாம் ஏன் கொள்ளக்கூடாது?  இதுதான் என்னுடைய கருத்து.  ஆனால்  அதிருஷ்டத்திற்காக பச்சைக்கல் மோதிரம் அணிதல்,  பெயரை மாற்றிக் கொள்ளுதல், பெயரில் சில எழுத்துக்களை சேர்த்துக் கொள்ளுதல்  அல்லது வேறு எதையாவது செய்யவேண்டும் என்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை.  இதில் மாற்றுக் கருத்து இருந்தால் முன்வைக்கலாம்; கேட்க நான் தயாராக இருக்கிறேன்.       

கருத்துகள் இல்லை: