27 ஆக., 2018

இன்று ஒரு தகவல்-76: ஆயுஷ்மான் பாரத்

ஆயுஷ்மான் பாரத்

'நாட்டில், வறுமை கோட்டுக்கு கீழ் வாழும், 10 கோடிக்கும் அதிகமான குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், ஆயுஷ்மான் பாரத் எனப்படும், தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும்' என, சமீபத்தில், மத்திய அரசு தாக்கல் செய்த,2018 - 19ம் நிதியாண்டு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. 

இத்திட்டத்துக்கு, மத்திய அமைச்சரவை, சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், குடும்பம் ஒன்றுக்கு, ஆண்டுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் வரை, மருத்துவ காப்பீடு பெற முடியும். பணம் செலுத்தாமலேயே, நாட்டின் எந்த பகுதியிலும் உள்ள, தனியார் மற்றும் அரசு மருத்துவமனை களில் சிகிச்சை பெறலாம். வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள் பற்றிய ஆவணங்களில் இருந்து, பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ், 100 நோய்களுக்கு மேல் சிகிச்சையளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 
தடுக்கக் கூடிய, 70 நோய்களுக்கும், புற்றுநோய், இதய நோய் போன்ற, ஆபத்து மிக்க,30 நோய்களுக்கும் சிகிச்சையளிக்க திட்டமிடப் பட்டு உள்ளது.

எதிர்பார்ப்பு

இந்த நோய்களின் எண்ணிக்கையை, ஆண்டு தோறும் அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.இத்திட்டத்தில் சேர, பயனாளிகளுக்கு எந்த வரம்பும் விதிக்கப்பட மாட்டாது. ஆக., 15 முதல், திட்டம் அமலுக்கு வரும் என, எதிர்பார்க் கப்படுகிறது.இத்திட்டம் குறித்து, காப்பீடுதுறையில் ஈடுபட்டுள்ள முகவர்கள் சிலர் கூறிய தாவது:மத்திய அரசின், ஆயுஷ் பாரத் திட்டம் செயல் படுத்தப்பட்டால், உலகளவில், இது மிகப் பெரும் காப்பீடு திட்டமாக இருக்கும். இத் திட்டத்தில், பிரீமியம் தொகையில், 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசுகளும் செலுத்த வேண்டும்.

நாடு முழுவதும், இத்திட்டம் செயல் படுத்தப்பட உள்ளது. அத்துடன், இத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படும் நோய்களின் எண்ணிக்கை யும் அதிகரிக்கப்பட உள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்த, முதல் ஆண்டு பிரீமியம் தொகை, குறைந்தபட்சம், 20 ஆயிரம் 
கோடி ரூபாய் தேவை. இது, இரண்டாவது ஆண்டில், 50 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.அதனால், ஒரு குடும்பத்துக்கு, முதல் கட்டமாக, பிரீமியம் தொகை, 2,000ரூபாயாக இருக்கும்; அடுத்து வரும் ஆண்டுகளில், 5,000 ரூபாயாக உயர வாய்ப்பு உள்ளது.

எந்த நோய் பாதிப்பும் இல்லாத காப்பீடுதாரர்களுக்கு, மருத்துவ காப்பீடுபிரீமியம் தொகையை, காப்பீடு நிறுவனங்கள், குறைவாக வசூலிக்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டங்களில், குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டுமே சிகிச்சை பெற முடியும்.

வேறுபடும்

ஆனால், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், 100 நோய்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதால், பிரீமியம் தொகை அதிகமாகவே இருக்கும்.மேலும், அரசுகள் செலுத்த வேண்டிய 
பிரீமியம் தொகை, மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்களின் எண்ணிக்கை, நோய்களின் தன்மை ஆகியவற்றை பொறுத்து, பிரீமியம் தொகை, மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்.

பல மாநிலங்களில், வெவ்வேறு காப்பீடு திட்டங்களை, அரசுகள் அமல்படுத்தி வருகின்றன. 
ஆந்திராவில், ஆரோக்ய ஸ்ரீ, ஜார்க்கண்ட், உத்தரகண்ட் மாநிலங்களில், முக்கிய மந்திரி ஸ்வஷ்ட் பீமா யோஜனா, ஒடிசாவில், பிஜு கிருஷக் கல்யாண் யோஜனா போன்ற திட்டங்கள் செயல் படுத்தப்படுகின்றன. இத்திட்டங்களை, ஆயுஷ்மான் பாரத்திட்டத்துடன், மாநில அரசுகள் இணைக்குமா அல்லது தனியாக நடத்துமா என, தெரியவில்லை.

மத்திய அரசு சார்பில் நடத்தப்படும், மருத்துவ காப்பீடு திட்டங்கள், ஆயுஷ் மான் பாரத் திட்டத் துடன் இணைக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனால், இத்திட்டம் நடைமுறைக்கு வந்த பின் தான், தெளிவு பிறக்கும்.'ஆதார்' மூலம் தகவல்களை சரிபார்க்க, இப்போது வாய்ப்பு உள்ளது.அதனால், இத்திட்டத்தை வெளிப்படையாக செயல்படுத்த முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

வறுமையை ஒழிக்கும்!

மத்திய அரசின், 'ஆயுஷ்மான் பாரத்' திட்டம், மக்களின் உடல் நலத்தை மேம்படுத்துவதுடன், 
வறுமையிலிருந்து அவர்களை மீட்கவும் பயன்படும் என, உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.இது பற்றி, உலக சுகாதார மைய தலைமை இயக்குனர், கப்ரீஷியஸ் கூறியதாவது:ஆயுஷ்மான் பாரத் திட்டம், மக்களின் உடல் நலத்தை மேம்படுத்துவதுடன், அவர்களை வறுமையிலிருந்து மீட்கவும் உதவும். இத்திட்டத்தை செயல்படுத்துவதில், அரசு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக, மூன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, அரசு எடுக்க வேண்டும்.

இத்திட்டத்தில், மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தரமிக்கதாக இருக்க வேண்டும். குறிப்பாக, ஆரம்ப சுகாதார நிலையங்கள் தான், இத்திட்டத்தில் முக்கிய பங்காற்ற உள்ளன. 
அதனால், ஆரம்ப சுகாதார நிலையங்களில், அடிப்படை வசதிகளுக்கு, எந்த குறைபாடும் இருக்கக் கூடாது.மேலும், மக்களுக்கு மருத்துவ சேவை செய்வதில், நர்சுகளும், சுகாதாரத் துறை ஊழியர்களும், பெரும் பங்கு வகிக்கின்றனர். அதனால், அவர்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

இந்தியாவில், மருத்துவத் துறையில், தனியார் மருத்துவமனைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. நாட்டில், 70சதவீத மக்கள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். அதனால், இங்கு வழங்கப்படும் சிகிச்சை, தரமிக்கதாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், செலவையும் அதிகரிக்கக் கூடாது. அப்போது, இத்திட்டத்தின் பயனை, மக்கள் முழுமையாக அனுபவிக்க முடியும்; திட்டமும் வெற்றி பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தினமலர் நாளிதழ்
மார்ச் 26, 2018

1 கருத்து:

Unknown சொன்னது…

ஆயுஷ்மான் பாரத் எனப்படும் தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை துவக்கி வைத்த 24 மணி நேரத்திற்குள் 1000 பேர் பயனடைந்துள்ளதாக