12 செப்., 2018

குட்டிக்கதை-12: என்னால் வாழ முடிகிறதே!

என்னால் வாழ முடிகிறதே!
- சாக்ரடீஸ்

கிரேக்க நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் நகரம் ஏதென்ஸ் என்றவுடனே நம் நினைவுக்கு வருபவர் தத்துவ மேதை சாக்ரடீஸ் !
சாக்ரடீஸ் ஒருமுறை ஏதென்ஸ் நகரின் அங்காடித் தெருக்களில் சுற்றிக்கொண்டே வந்தார்.
நாலைந்து தெருக்களின் உள்ளே நுழைந்து கடைகளில் உள்ள பொருட்களையெல்லாம் கூர்ந்து கவனித்துக்கொண்டே வந்தாராம்.
மறுநாளும் அங்காடித் தெருவில் நுழைந்து கடைகளில் உள்ள பொருட்களைக் கூர்ந்து
நோக்கியவண்ணம் நடந்து சென்று விட்டார்.

இப்படியே ஒரு வாரமாக அங்காடித் தெருக்களில் சுற்றிப் பார்த்துவிட்டுச் சென்றுவிடுவார்.

ஏழாம் நாள் -சாக்ரடீஸ் அங்காடித் தெருவில் உலா வருவதைக்கண்ட ஒரு கடைக்காரர்: "அய்யா நானும் கடந்த ஆறு நாட்களாகப் பார்த்துக் கொண்டே வருகிறேன், கடைத்தெரு வழியே வருகிறீர்கள் ,கடையில் உள்ள
பொருட்களைப் பார்க்கிறீர்கள், ஆனால் இது நாள் வரையிலும் எந்தப் பொருளையும் வாங்கவே இல்லை! உங்களுக்கு வேறு பொருள் வேண்டும் என்றால் நான் அந்தப் பொருளை
வரவழைத்துத் தருவேனே?" என்று கேட்டார்.

அதற்கு சாக்ரடீஸ்: "அன்புள்ளம் கொண்ட கடைக்காரரே இங்குள்ள பல கடைகளில் உள்ள பொருட்கள் எவையும் என் வீட்டில் இல்லை! இந்தப் பொருட்கள் எவையும் இல்லாமல் என்னால் வாழமுடிகிறதே! என்று எண்ணிப் பார்த்து
ஒவ்வொருநாளும் மகிழ்கிறேன்",
எனக் கூறினாராம்.

கடைக்காரர் வியந்துபோய் விக்கித்து நின்று விட்டாராம்!

ஆம்! தேவையில்லாத நேரத்தில் தேவைப்படாத பொருட்களை வாங்குவதால் மற்றவரை நாம் பணக்காரர் ஆக்குகிறோம்; நாம் அதனால் ஏழையாகிறோம். தேவைப்படும் போது அதை வாங்க முடியாமல் கவலைப்படுகிறோம்!

கருத்துகள் இல்லை: