இந்த வாரம் கலாரசிகன்: பனுவல் போற்றுதும்
கலாரசிகன்
இந்த வாரம்’ பகுதியை நீங்கள் ஏன் எழுதத் துணிந்தீர்கள்? அதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?’ என்று என்னிடம் யாராவது கேட்டால், அதற்கு நான் என்ன பதில் சொல்லியிருப்பேன் என்று நினைக்கிறீர்கள்?
“”பனுவல் எனில் புத்தகம் என்பது பொருள். பாயிரம் இன்றேல் பனுவல் அன்று என்பது தொன்தமிழ் வழக்கு. பாயிரம் என்றால் சாற்று கவி. முன்னுரை, அறிமுகம், நூன்முகம் என்பவை போல. பனுவல் எனும் சொல் பழைய பஞ்சாங்கம் என்றும் பிரதி என்பதே பின் நவீனத்துவச் சொல்லாடல் என்றும் நீங்கள் கருதக்கூடும். எமக்கதில் வழக்கில்லை.
சிலப்பதிகாரத்தில், புகார்காண்டத்தில், மங்கல வாழ்த்துப் பாடலில், இளங்கோவடிகள் ஓதுகிறார். திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும், ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும், மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என. அந்தப் பாணியில் புத்தகங்களைப் போற்றுவோம் எனும் குறிக்கோளுடன் “பனுவல் போற்றுதும்’.
முன்புபோல் புத்தக அறிமுகக் கட்டுரைகள், மதிப்புரைகள் தகுதி ஓர்ந்து தன்னியல்பாய் எழுதப்படுவதில்லை. அதற்குள்ளும் பதிப்பக அளவில் குழாம் அரசியல் செயல்படுகிறது. பருவ இதழ் ஆதரவும், எழுத்துலக நண்பர் குழாம் ஆதரவும் இல்லா இளைய படைப்பாளிகளின் நிலை இரங்கத் தக்கது.
தமிழில் தகுதியான எத்தனையோ நூல்கள் வெளியாகி, வாசிப்புக் கவனம் பெறாமற் போய்விடுகின்றன. பல்கலைக்கழக வளாகங்கள் பலவும் தாம் வெளியிடும் பல முக்கியமான ஆய்வு நூல்களைக் கோவணத்தினுள் பதுக்கிக் கொள்கின்றன. ஒன்றில் இருளும், தூசியும் மண்டிய கிட்டங்கிகளில், அல்லது பொது நூலக அடுக்குகளில் தேடிக் கண்டடைய இயலா வரிசைகளில். நவீன இலக்கியவாதிகளுக்கும், இலக்கிய வாசகருக்கும் தேடி வாசிக்கும் வழக்கமும் சென்று தேய்ந்து இறுதலில் உள்ளது”.
மேலே நான் குறிப்பிட்டிருப்பது “பனுவல் போற்றுதும்’ என்கிற கட்டுரைத் தொகுப்பில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதி இருப்பது. தகுதியான நூல்கள் வாசிப்புக் கவனம் பெறாமல் போய்விடக்கூடாதே என்கிற அதே அக்கறைதான் என்னையும் “இந்த வாரம்’ பகுதியை எழுதத் தூண்டிய அடிப்படைக் காரணம்.
இனி, “பனுவல் போற்றுதும்’ புத்தகத்துக்கு வருவோம். பெரும்பாலான புதினம் எழுதும் படைப்பாளிகள் இலக்கியவாதிகளாக இருப்பதில்லை. விதிவிலக்கான சிலரில் நாஞ்சில் நாடன் ஒருவர் என்பதைப் “பனுவல் போற்றுதும்’ வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இந்த அளவுக்கு ஆழ்ந்த புலமையும், தமிழிலக்கியத்தில் ஆழங்கால்பட்ட தேர்ச்சியும் நாஞ்சில் நாடனுக்கு இருப்பது பிரமிப்பாக இருக்கிறது.
டிசம்பர் 2010-இல் தில்லித் தமிழ்ச் சங்கம் நடத்திய “நவீனத் தமிழ் இலக்கியம்’ என்கிற கருத்தரங்கில் நாஞ்சில் நாடன் வாசித்த “ஐம்பதாண்டுத் தமிழ் நாவல்’ என்கிற கட்டுரையைப் பல தடவை திரும்பத் திரும்பப் படித்துத் தேர்ந்தேன் என்று நான் பதிவு செய்ய விரும்புகிறேன். விருப்பு வெறுப்பில்லாமல், தனது முன்னோடிகளையும், சமகால இலக்கியவாதிகளையும் அவர்களது படைப்புகளையும் நாஞ்சில் நாடன் ஆய்வு செய்திருக்கும் நேர்த்தி பாராட்டுக்குரியது. அந்தக் கட்டுரையின் கடைசி வரிகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.
“”நாவலாசிரியர் என்பவர் மொழியும், கவிதையும் சமூகவியலும், வரலாறும், அரசியலும், தத்துவமும், தொல்லிலக்கியமும், உளவியலும், மரபும், நாட்டார் கலைகளும் அறிந்த ஆகிருதியாக இருத்தல் வேண்டும்.
பணத்துக்கும் அரசியலுக்கும் அதிகாரத்துக்கும் வணிகம் போகாதவனாக இருத்தல் வேண்டும். குப்பை நாவல் ஒன்றினை, இந்த ஆண்டின் சிறந்த நாவல் என்று அரசியல் சட்டத் திருத்தத்துடன் குத்தி இறக்கும் காலம்கூட வந்துவிடுமோ என அச்சமும் ஏற்படுகிறது. இந்தச் சூழலில் புதிதாக நாவல் எழுத வருகிறவன் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்வானா? சுய சிந்தனையுடன் சுதந்திரத்துடன் இயங்குவானா? இயங்க அனுமதிக்கப்படுவானா? பிரபலங்களின் ஜன நெரிசலில் சிக்கி மூச்சு முட்டிச் செத்துப் போகாதிருப்பானா?” என்கிற நாஞ்சில் நாடனின் கருத்து என்னையும் அடிக்கடி அலட்டுகிறது.
“செந்தமிழ்க் காப்பியங்கள்’ பற்றி அவர் “தமிழினி’யில் எழுதிய கட்டுரை நாஞ்சில் நாடனை எனது மனதில் இமாலய உயரத்துக்கு ஏற்றி அமர்த்திவிட்டது.
“இந்த வாரம்’ வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள். நாஞ்சில் நாடனின் “பனுவல் போற்றுதும்’ புத்தகத்தைப் படிக்கத் தவறாதீர்கள்.
*****
http://dinamani.com/edition/story.aspx?SectionName=Tamil%20Mani&artid=575414&SectionID=179&MainSectionID=179&SEO=&Title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D
நன்றி: கலாரசிகன் மற்றும் தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக