காந்தி எந்த ஒரு பெரிய விஷயத்தையும் நிரூபிக்கவோ நிறுவவோ முயலவில்லை, கண்டடையவே முயல்கிறார். கருத்தியல் ரீதியான இறுக்கமான முன்முடிவுகள் கொண்டவராக இல்லை. பரிசோதனை செய்கிறேன் என்று சொல்வதன் மூலமே இது தெரியவருகிறது. எந்த ஒரு பரிசோதனையையும் நடைமுறைதளத்தில் செய்து பார்க்கிறார் அதன் மூலம் ஒரு முடிவுக்கு வந்தடைகிறார். அப்பொழுது அம்முடிவே சரியானது சத்தியமானது என்று எண்ணுகிறார். அதன் அடிப்படையில் செயல்படுகிறார். அச்செயல் எங்கு தன்னை எடுத்துச்செல்கிறதோ அங்கு செல்லத் தயாராக இருக்கிறார். தான் கண்டடைந்தது ஒரு சார்பு/பகுதி உண்மை என்றும் அது இறுதியானதோ முழுமுற்றானதோ அல்ல என்றும் அவர் அறிகிறார், அறிவிக்கிறார்.
தான் எவ்வளவு தூரம் உண்மையைக் கண்டடைந்துள்ளாரோ அவ்வளவு தூரம் மட்டுமே பதிவு செய்கிறார். படைத்தவனுக்கும் ஆன்மாவுக்குமான சில நுண்ணிய விஷயங்கள் அந்த ஆன்மாவுக்கு மட்டுமே தெரியவரும் என்றும் அதனை எழுதிப் புரியவைத்துவிட முடியாது என்றும் அதனை எழுதவில்லை என்றும் முன்னுரையில் கூறுகிறார். இந்த அணுகுமுறை மிக முக்கியமானது.
சொல்வதைப்போலன்றிப் பின்பற்ற மிகவும் சிரமமானது. எதையும் தொடங்கும்போதே நிறுவ முயலாதவனிடம் சுமைகள் ஏதும் இருப்பதில்லை. அவனிடம் அபாரமான ஒரு நேர்மை கைகூடிவிடுகிறது. அதுவே அவனை உண்மையின் அருகில் அழைத்துச் செல்கிறது.
நன்றி: விஜயராகவன் சுந்தரவரதன், முகனூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக