19 பிப்., 2020

நூல் நயம் : எஸ்ராவின், "துயில்"

மனிதத்தை உய்த்துணரும் அன்பின் வலி "துயில்"நாவல்

நோய்மை பற்றிய புனைகதை என்று ஒற்றை வரியில் இதனை புறந்தள்ள முடியாது .

மனித இனம் தோன்றிய காலம் தொட்டே கடவுள் பற்றிய கற்பனைகளும், வழிபாட்டு மரபுகளும் தொடர்ந்து வரும் சூழலில் நோய்மை கடவுளின் தண்டனையாக வழங்கப்படுகிறது என்ற சராசரியான மனிதத் தன்மையில் தொடங்கி, தமிழ்ச்சூழலில் மதம் நோயை எவ்வாறு அணுகுகிறது என்பதையும் மனிதனின் உணர்வுகள் நோய் வந்தபிறகு எவ்வாறு அஞ்சுகிறது என்பதையும் மிக நுட்பமாக தத்துவ விசாரணையுடன் அணுகுகிறது இந்நாவல். 

வழக்கமான தமிழ்ப் புனைகதை மரபில் இருந்து வேறுபட்டு முதன்மை கதாபாத்திரங்களில் நாவலின் மைய நீரோட்டத்தில் மெல்லிய இடைவெளி விட்டு கதையோடு விவாதத்தையும், படிக்கும்போதே ஏற்படுத்தும் தன்மையில் நாவல் செல்கிறது.

தமிழ் கவிதைகளில் மட்டுமே சொல்லப்பட்டு வந்த அரூபமான கதைசொல்லல் மரபை இந்நாவலை வாசிக்கும்போது உணர முடிகிறது.

மனித சமூகம் நோயை கண்டு அஞ்சுவது தான் இதுவரை நாம் பார்த்தது ஆனால் இந்நாவலில் வரும் கதை மாந்தர்கள் வாழ்க்கை பற்றிய எந்தவித பயமுமின்றி நோய் வந்தாலும் அதற்கான மருத்துவத்தை நோக்கியோ அல்லது வாழ்க்கை பற்றிய வேதனையையோ அடைவதில்லை மாறாக தாகம் ,பசி ,கோபம் போலவே நோய்மையையும் கடந்து செல்கின்றனர் .

நோய்க்கும் சமயத்திற்கும் ஆன தொடர்பு மிகச் செறிவாக இந்நாவல் கையாளப்பட்டிருக்கிறது.

நோய் வந்தபின் சமய வழிபாடுகள் மூலம் அதனை தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையும் ,குற்றத்தின் தண்டனையே நோய்மை எனும் சுய ஆறுதலும் இயல்பாகவே மக்களுக்கு வந்துள்ள நிலையில் கிறிஸ்தவ பெண் மருத்துவரின் உரையாடல்களும் செயல்பாடுகளும் நாவலில் முக்கியமான பகுதிகளாகும்.

கிறித்தவ மிஷனரிகள் இருந்து ஊழியம் செய்ய வந்த மருத்துவரை கிராம மக்கள் அணுகுமுறையும், பாதிரியாரே கூட ஆங்கில மருத்துவத்தை ஏற்றுக்கொள்ளாத நிலையும் தமிழ் சமூகத்தின் வாழ்வியலை தெளிவாக சுட்டுகிறது.

தமிழ் மருத்துவ முறைகளை மரபான தமிழ் வைத்தியர்கள் அறியாமையின் காரணமாக யாருக்கும் சொல்லாத சூழலும் தமிழ் வைத்தியரும் ஆங்கில மருத்துவரும் மருத்துவ முறை பற்றி விவாதிப்பதும், நிறைவாக ஆங்கில மருத்துவம் தமிழ் சமூகத்தில் நுழைந்ததும் நுட்பமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அழகர் சின்ன ராணி கதாபாத்திரங்கள் கதையின் மையம் என்றாலும் கொண்டலு அக்கா வரும் பகுதிகள் நாவலை வாசிக்கும் வாசகன் தன்னை மறந்து சுய பரிசோதனை செய்யும் பகுதிகளாக அமைகின்றன.

அழகர் சின்னராணி, மருத்துவர், மிஷனரி தந்தை என மூன்று பகுதிகளாக கதை சொல்லப்பட்டாலும் அழகர் வரும் பகுதி புனைவின் தொடர்ச்சியையும் ,மருத்துவரின் பகுதி கவித்துவமான உரைநடையும் ,கொண்டலு அக்காவின் பகுதி பல சிறுகதைகளை உள்ளடக்கியதாகவும் சொல்லப்பட்டுள்ளது .

துயில் நாவலைப் பொறுத்தவரை புனைகதை என்பதைத் தாண்டி நோய்மை குறித்த உரையாடலும் அதவழி சமூகம் கட்டமைத்திருக்கும் வரலாறும் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டுள்ள முக்கியமான பிரதியாகும்.

மீள் 2016

நன்றி: திரு கிருஷ்ண மூர்த்தி, முகநூல்

கருத்துகள் இல்லை: