25 ஏப்., 2020

ஆரோக்கியம் சிறப்புத் திட்டம்

முதல்வர் நேற்று துவக்கி வைத்த, 'ஆரோக்கியம்' சிறப்பு திட்டத்தில், இந்திய மருத்துவ முறையில், கொரோனாவை தடுக்க, பயன்படுத்த வேண்டிய மருந்துகளின் விபரங்களை, தமிழக அரசு, அரசாணையாக வெளியிட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்துகள்:

சித்த மருத்துவம்:
இம்மருத்துவ முறையில், கபசுர குடிநீர் அல்லது நிலவேம்பு கஷாயத்தை, பெரியவர்கள், 60 - 90 மி.லி., வரை; சிறியவர்களுக்கு, 35 - 45 மி.லி., வரை, உணவுக்கு முன், தினமும் ஒரு வேளை என, ஒரு மாதம் அருந்தலாம். குழந்தைகளுக்கு டாக்டர் அறிவுரை கேட்டு, அதற்கேற்ப வழங்க வேண்டும்.

ஆயுர்வேத மருத்துவம்:
நன்கு காய்ச்சி, ஆற வைக்கப்பட்ட, 60 மி.லி குடிநீரில், 15 மி.லி., இந்து காந்த கஷாயம் கலந்து, தினமும் இரண்டு வேளை, உணவுக்கு முன் அருந்தலாம். 10 கிராம் கூஷ்பந்த ரசாயனம் அல்லது அகஸ்த்ய ரசாயனத்தை, டாக்டரின் அறிவுரைக்கேற்ப, உணவுக்குப் பின், தினமும் இருவேளை சாப்பிடலாம்.

யோகா மற்றும் இயற்கை மருத்துவம்:
இம்முறையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், பெரிய நெல்லிக்காய், துளசி, இஞ்சி, எலுமிச்சை, மஞ்சள் கலந்த ஜூஸ், ஒரு நாளைக்கு இரு முறை, 250 மி.லி., அருந்தலாம்; குழந்தைகள், 100 மி.லி., பருகலாம். தோல் நீக்கி இடிக்கப்பட்ட இஞ்சி, துளசி, கருப்பு மிளகு, அதிமதுரம், மஞ்சள் ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து, பெரியவர்கள் ஒரு நாளைக்கு, இரு முறை, 50 மி.லி., - சிறியவர்கள், 20 மி.லி., பருகலாம்யோகா சிகிச்சை முறையில், வஜ்ஜிராசனம், பாஸ்த்ரிக பிராணாயாமம், பிராமரி பிராணாயாமம் மற்றும் கிரியா செய்யலாம். சூரிய குளியல், நீர் சிகிச்சை, அரோமா சிகிச்சை போன்றவற்றை, இயற்கை மருத்துவர்கள் அறிவுரையின்படி மேற்கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை: