24 ஏப்., 2020

குட்டிக்கதை

#சிறுகதை
#கறிக்கொழம்பு

கறிக்கொழம்பின் வாசனை நாசியில் வந்து வந்து மோதியது பொன்னம்மாவுக்கு . சாப்பிட்டு எத்தனை மாசம் ஆகி விட்டது. நினைக்கும் போதே நாக்கில் நீர் ஊறியது.
இன்று சாப்பிடலாம் என்ற நினைப்பே இனிப்பாய் இனித்தது.

"செல்வி..பசி குடலை பொரட்டுது..சீக்கிரம் சாப்பாடு கொண்டா" மருமகளிடம் கெஞ்சினாள்.

"கம்னு கிட .. அவசரப்படாதே.. சோறு ஆக்க வேண்டாமா" என்றாள் எரிச்சலுடன் செல்வி.

தன் முன் கொண்டு வைத்த சாப்பாட்டை பார்த்ததும் முகம் சுருங்கினாள் பொன்னம்மா.
"ஏண்டி கறிக்கொழம்பு ஆக்கவில்லையா, ரசம் கொண்டு வைக்கிறே" ஏமாற்றம் கொண்டு வினவினாள்.
"ஆமாம் கறி விக்கற விலையிலே கறிக் கொழும்பு கேக்குதாம் கெழவிக்கு, கூவாம சாப்பிடு, ஏதோ இதாவது போடறேன்னு சந்தோஷப்படு" சீறினாள் செல்வி.
கெழவிக்கு முதியோர் உதவித் தொகை மாசம் மாசம் வருது. ஒரு பைசா கொடுக்குமா? எல்லாவற்றையும் பெட்டியில் வைத்து பூட்டி வெச்சுருக்கு..பொண்ணுக்கு கொடுக்குமோ என்னவோ..இதுல கறிக்கொழம்பு கேக்குது. முணுமுணுத்தவாறே கொழம்பில் இருந்த கறியை எடுத்து தன் தட்டில் போட்டுக் கொண்டாள் செல்வி.
பொன்னம்மாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்தாள்..இனிமேல் தாங்காது வீட்டுக்கு கொண்டு செல்லுங்கள் என்று டாக்டர்கள் சொல்லி விட்டதால் வீட்டுக்கு வந்து ஹாலில் ஓரமாக படுக்க வைத்திருந்தனர்...நினைவு இல்லை..மூச்சு பெரிதாக விட்டு வயிறு மேலும் கீழும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று விக்கல் போல சத்தம் போட்டு கண்களை திறந்தாள் பொன்னம்மா.. மகன் அருகில் வந்து அம்மா என்று கைகளை பிடித்துக் கொண்டான். அவன் கையை பிடித்து சேலையின் முடிப்பை அவன் கையில் கொடுத்து அவிழ்க்குமாறு செய்கை செய்தாள். அவிழ்த்து அதில் உள்ள சாவியை எடுத்ததும் பெரும் சப்தம் போட்டு அவள் உடல் அடங்கி உயிர் பிரிந்தது.
கெழவி போகும் போதும் மகனுக்கு சிரமம் வைக்கக் கூடாது என்று பணம் வைத்திருந்த பெட்டியின் சாவியை கொடுத்து விட்டே போனது.

கருமாதி முடிந்து பதினாறாம் நாள் அன்று கறிக்கொழம்பு ஊற்றிக் கொண்டு சாப்பிடும் போது சாப்பிட முடியாமல் மாமியார் நினைவு வந்து கதறி கதறி அழுதாள் செல்வி.

நன்றி : திரு ஸ்ரீதர் கோபால்,  சுஜாதாவின் கடைசி பக்கம் ரசிகர் குழு, முகநூல். 

கருத்துகள் இல்லை: