26 மே, 2020

குட்டிக்கதை : 'பச்சைத்தண்ணி' பத்மநாபன்

குட்டிக்கதை


பொதுப்பணித்துறை ஊழியராயிருந்து ஓய்வுபெற்றவர் #பச்சைத்தண்ணி பத்மநாபன்!

ஊழல் புரையோடிப்போன ஒரு துறையில் பச்சைத் தண்ணீர் கூட அடுத்தவரிடம் கேட்டு வாங்கி குடிக்க மாட்டாராம் பத்மநாபன்!

அதனால் அவருக்கு சக ஊழியர்களால் கிண்டலாக சூட்டப்பட்ட பட்டப்பெயர் தான் ‘பச்சைத்தண்ணி’ பத்மநாபன்!

ஒரு நாள் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்தவர், தனது உயிர் பிரியப்போகிறது என்பதை அறிந்து தனது பிள்ளைகளை அழைத்தார்.

“இறைவா, என் பிள்ளைகளை அனாதையாக விட்டுவிட்டுப் போகிறேன்; 
நீ தான் அவர்களை காக்கவேண்டும்!” 
என்று பிரார்த்தித்தவர்...
பிள்ளைகளிடம் 
“நான் எப்படி வாழ்ந்தேன் என்று 
உங்களுக்கு தெரியும்!
நீங்களும் எந்த சூழலிலும் நீதி தவறாமல் தேவைகளை சுருக்கிக்கொண்டு நேர்மையாய் வாழ்ந்து என் பெயரைக் காப்பாற்றவேண்டும்!”
என்று #நா தழுதழுக்க சொன்னார்.

இரண்டு மகன்களும் அமைதியுடன் கேட்டுக்கொண்டிருக்க...
கடைசி மகள் ப்ரியா மட்டும் கோபத்தில் வெடித்தாள்!
ப்ரியா கல்லூரி முதலாமாண்டு படித்துவருகிறாள். 
அவள் விரும்பிய கல்லூரியில் கூட 
அவளை சேர்க்க வழியின்றி...
ஏதோ அரசு உதவி பெறும் கல்லூரியில் 
தான் பத்மநாபனால் சேர்க்க முடிந்தது. 
அதுவே அவளது கோபத்திற்கு காரணம்!

“அப்பா…. உங்க பேங்க் அக்கவுண்ட்டில் நையா பைசா கூட இல்லாமல் நீங்கள் எங்களைவிட்டு போவது எங்கள் துரதிர்ஷ்டம்!

உங்களை என்னால் பின்பற்றமுடியாது!
உங்கள் அறிவுரைகளையும் கேட்க முடியாது!
ஊழல் பேர்வழிகள், ஊழல் பெருச்சாளிகள் என்று நீங்கள் கூறியவர்கள் எல்லோரும் அவர்களது குழந்தைகளுக்கு பல தலைமுறைகள் சொத்து சேர்த்துவிட்டு சென்றிருக்கிறார்கள்!

ஆனால் நாம் இருக்கும் இந்த வீடு கூட வாடகை வீடு தான்!
ஸாரி…. நேர்மையாயிருந்து நாங்கள் பட்டதெல்லாம் போதும்!
உங்களை என்னால் பின்பற்ற முடியாது! நாங்கள் எங்கள் வழியை பார்த்துக் கொள்கிறோம்!” என்றாள்.

அவளை உற்றுநோக்கியபடி பரிதாபமாக பார்த்த அந்த ஜீவனின் உயிர் அடுத்த சில நிமிடங்களில் பிரிந்தது..

காலங்கள் உருண்டன...

கல்லூரி படிப்பை தட்டுத் தடுமாறி 
ஒருவழியாக முடித்த ப்ரியா,
ஒரு புகழ் பெற்ற கட்டுமான நிறுவனப் பணிக்கு apply செய்து நேர்முகத் தேர்வுக்கு சென்றாள். 

அந்த பணிக்கு தேவையான தகுதியுடைய நபரை ஏற்கனவே panel உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துவிட்டாலும், 
ஒரு ஃபார்மாலிட்டிக்காக இண்டர்வ்யூவை நடத்திக்கொண்டிருந்தனர். 
Panel மெம்பர்களுக்கு நடுவே அந்நிறுவனத்தின் M.D.யும் அமர்ந்திருந்தார்.

ப்ரியாவின் முறை வந்ததும் உள்ளே அழைக்கப்பட்டாள்.

அவளது resume-ஐப் பார்த்த panel member ஒருவர்,
“உன் அப்பா மிஸ்டர் பத்மநாபன் பொதுப் பணித்துறையிலிருந்து ஒய்வு பெற்றவரா?” என்றார்.

“ஆமாம்… சார்”

உடனே M.D. நிமிர்ந்து உட்கார்ந்தார். 
ப்ரியாவை நோக்கி கேள்வியை வீசினார்.
“உங்கப்பாவுக்கு ‘பச்சைத்தண்ணி பத்மநாபன்’ ங்குற பேர் உண்டா?”

“ஆமாம்… சார்” என்றாள் சற்று நெளிந்தபடி.

“ஓ… நீங்க அவரோட மகளா?... 
இந்தக் காலத்துல அவரை மாதிரி மனுஷங்களைப் பார்க்க முடியாதும்மா!

இந்தக் கம்பெனி இன்னைக்கு இந்தளவு வளர்ந்திருக்குதுன்னா...
அதுக்கு அவரும் ஒரு காரணம்!
கடலூர்ல இருக்கும்போது 15 வருஷத்துக்கு முன்பு நான் கவர்மென்ட் காண்ட்ராக்ட் ஒன்னுக்கு டெண்டர் apply பண்ணியிருந்தேன். 
என்னைவிட அதிகமாக கோட் பண்ணின நிறையபேர் எவ்வளவோ லஞ்சம் தர்றதா சொன்னாலும் உங்கப்பா அதுக்கெல்லாம் ஆசைப்படாமல்...
அவங்க மிரட்டலுக்கெல்லாம் மசியாமல் அந்த காண்ட்ராக்ட்டை முறைப்படி எனக்கு ஒதுக்கினார்!

அன்னைக்கு மட்டும் அவர் அந்த காண்ட்ராக்ட்டை எனக்கு ஒதுக்கலன்னா இன்னைக்கு நான் இல்லை!
இந்த கம்பெனியும் இல்லை!
ஏன்னா… என் சொத்தையெல்லாம் 
அடமானம் வெச்சு கம்பெனி ஆரம்பிச்ச நேரம் அது!
அந்த ஒரு காண்ட்ராக்ட் மூலமாகத் தான் எனக்கு நல்ல பேர் கிடைச்சி, இந்த துறையில ஒரு பெரிய என்ட்ரி கிடைச்சது!

ஆனால் அதுக்கு பிறகு உங்கப்பா வேற ஊருக்கு transfer ஆகி போய்ட்டார்.”

“அவருக்கு என்னோட நன்றிக்கடனை செலுத்த, இதைவிட பெரிய வாய்ப்பு கிடைக்காதும்மா… You are selected. 
நாளைக்கே நீ dutyல join பண்ணிக்கலாம்” என்றார்.

அந்நிறுவனத்தின் எச்.ஆர். பிரிவில் தலைமை அதிகாரியாக ப்ரியாவுக்கு வேலை கிடைத்தது!

அலுவலகம் வந்து செல்ல ஒரு டூ-வீலர் வாங்கித் தந்தார்கள். 
P.F., Incentive, Rent Allowance என 
பலப்பல சலுகைகள்! கனவிலும் 
ப்ரியா எதிர்பார்க்காத ஒரு வேலை!

இரண்டு ஆண்டுகள் சென்றன… 
ப்ரியா பணியிடத்தில் நல்ல பெயர் எடுத்தாள்!

இதற்கிடையே அவர்களின் சிங்கப்பூர் கிளை அலுவலகத்தின் தலைமை பொறுப்பில் இருந்தவர் வேலையை திடீரென ராஜினாமா செய்துவிட, 
அங்கு தலைமை பொறுப்புக்கு தகுதியான ஆள் தேவைப்பட்டார். 
BOARD OF DIRECTORS ஒன்று கூடி விவாதித்து ப்ரியாவையே சிங்கப்பூர் பிரிவுக்கு தலைமைப் பொறுப்பில் நியமிப்பது என முடிவானது!

மாதம் 10 லட்ச ரூபாய் சம்பளம்!
கம்பெனி சார்பாக ஒரு கார், Apartment என அத்தனை வசதிகளும் கிடைத்தன! 

கடுமையாக உழைத்து சிங்கப்பூர் நிறுவனத்தின் லாபத்தை பன்மடங்கு அதிகரிக்கச் செய்தாள் ப்ரியா!

அவளை லோக்கல் பிஸினஸ் பத்திரிகை ஒன்று பேட்டி கண்டது.

“உங்கள் வெற்றிக்கு காரணம் என்ன என்று கருதுகிறீர்கள்?”

கேள்வி கேட்கப்பட்டதுமே ப்ரியா உடைந்து அழலானாள்!

“இதெல்லாம் எங்க அப்பா எனக்கு போட்ட பிச்சை!
அவர் மறைந்த பிறகு தான் அதை நான் உணர்ந்தேன்!
பொருளாதார ரீதியாக அவர் ஏழையாக மறைந்தாலும் ஒழுக்கத்திலும், 
நேர்மையிலும் நாணயத்திலும் அவர் கோடீஸ்வரராக மறைந்தார்!”

“அதுக்கு ஏன் இப்போ இவ்வளவு நாள் கழிச்சு அழுறீங்க?”

“என் அப்பா இறக்கும் தறுவாயில் அவரது நேர்மைக்காக அவரை நான் அவமதித்தேன்!
என் அப்பாவின் ஆன்மா என்னை மன்னிக்கும் என்று நம்புகிறேன். 

இன்று நானிருக்கும் நிலைக்கு வர நான் எதுவும் செய்யவில்லை. 
அவர் கஷ்டப்பட்டு அல்லும்பகலும் பலவித தியாகங்களுக்கு இடையே போட்ட பாதையில் நான் சுலபமாக நடந்து வந்துவிட்டேன்!”

நீங்கள் எப்படி பத்மநாபனை போலவா?

உண்மையான நல்லபெயரை சம்பாதிப்பது என்பது மிக மிகக் கடினம்!
அதன் வெகுமதி உடனே வருவதில்லை, 
ஆனால் அது எவ்வளவு தாமதமாக 
வருகிறதோ அந்தளவு நீடித்து நிலைத்து நிற்கும்!

நேர்மை, நாணயம், ஒழுக்கம், சுய-கட்டுப்பாடு, தீயவற்றுக்கு அஞ்சுவது, கடவுளின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை  இவையெல்லாம் தான்...
ஒரு மனிதனை முழுமையாக்குகின்றன;
கோடீஸ்வரனாகவும் ஆக்குகின்றன. 
வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் அல்ல!

உங்கள் குழந்தைகளுக்கு நல்லவற்றை விட்டுச் செல்லுங்கள். 
இதைத்தான் அக்காலங்களில் சொன்னார்கள்!

“பிள்ளைகளுக்கு பணம் சேர்ப்பதைவிட புண்ணியத்தை சேர்க்கவேண்டும்” என்று.

நேர்மையாக இருப்பதால் கண்ணீர் தான் பரிசு! என்று மனம் கலங்காதீர்கள்.

உங்கள் நேர்மை தான் உங்கள் குடும்பத்தை நிஜமாகக் காப்பாற்றும்!

நமது நாட்டையும் நேர்மை தான் காப்பாற்ற வேண்டும்!

ஆகவே மகிழ்ச்சியாக, நேர்மையாக சமுதாயப்பணி ஆற்றுவோம்!

Latha Ravishankar அவர்கள் 
பதிவிலிருந்து.....  #சிவலூர்ஜெயராஜ்

இருவருக்கும் நன்றி!

கருத்துகள் இல்லை: