3 ஜூன், 2020

பிரமிள் நினைவுகள்!

பியானோ

இதயச் துடிப்புச்
சுவட்டின் தோல்கீறி
முள் தைக்க விடாத
கல்நாரினால் செய்த
காலணிகள் பூண்டு
தசை மினுக்கி
தசை பார்த்து
அறையில் அமர்ந்திருந்த
உள்வட்டக்  கூட்டத்தின்
இந்தியச் சலசலப்பினுள்
சிந்தித்தன மேற்றிசை
இசையின் கரங்கள்
நிலவின் நிலவெளிமேல்
சிறகெடுத்து விரல்நுனிகள்
மிதந்து தயங்கின

கைதொட  எட்டி
கண்தொட எட்டாத
தொலைதூரம் வரை
கட்டமிட்டு நின்றன
ஸ்ருதி பாறைகள்
இசையின் வெளியில்
வட்டமிட்டது ஒருநிழல்

திடீரிட்டு
வெளிநீத்து வெளியேறி
கையை நிழல்
கவ்விக் குதறிற்று
வேதனையில்
சிலிர்த்த விரல்கள்
நிலவில் ஒடுங்க்கின.
நிலவெளிமேல்
ஸ்ருதிப் பாறைகள்
தத்தளிக்க துவங்கின.
"அடடா!- ஆனாலும்
இண்டியன் கர்நாடிக்
மியூசிக்கிற்கு
அப்புறம்தான் இது -
நம்ப கல்ச்சர்
ஸ்பிரிச்சுவல் ஆச்சே"
என்று உருண்டன
உள்வட்டது
அசட்டுக் கற்கள்

இந்தக் கல்நார்
தோல் வட்டத்துக்கு அப்பால்
அரை இருளில்
காலணியற்று நின்ற
யாரோ ஒருவனின்
இதயச் சுவடுகளில்
குத்திய முட்கள்
சிறகுகளாயின

துடிப்புகள் கூடி
கழுகுகளாகி
நிலவில் ஒடுங்கின

நிசப்தத்தின் இமைதிறந்து
கவனித்துக் கொண்டது
இசையின் வெளியினுள்
குடிகொண்ட பெரு மௌனம்.

நன்றி: பிரமிளுக்குப் பிறகு பிரமிள் மற்றும் முகநூல்.

கருத்துகள் இல்லை: