2 ஜூன், 2020

சுஜாதா நினைவுகள்!


நன்றி: அறிவுஜீவி சுஜாதா வாசகர்கள் குழு

24 ரூபாய் தீவு....சுஜாதா
நாவல் பற்றி ஒரு பார்வை
(குமுதத்தில் தொடராக வந்தது)

உண்மையைத் தேடும் ஒரு நிருபர். அதனால் ஏற்படும் பல்வேறு சங்கடங்கள். மிகவும் லேட் எண்ட்ரியாக கணேஷ் / வசந்த்....அட்டகாசமான / வித்தியாசமான கதைக் களம் ....

இனி கதையிலிருந்து  சுஜாதா எழுதிய சில சுவாரசியமான எழுத்துக்கள்.........

"இந்தச் செய்தியை எழுதியது? நான்.

நான் யார் ? ஒரு நிருபன். என் பெயர் விசுவநாத். கிரிக்கெட் என்றால் வெறுப்பு. அதற்காகவே என் பெயரை விசுவநாதேஸ்வர் என்று மாற்றிக் கொள்ளலாமா என யோசிக்கிறேன்........

எனக்கு இருபத்தி ஐந்தாகிறது. கல்யாணம் ஆகவில்லை. மூன்று தங்கைகள் இருக்கிறார்கள். அவர்கள் கல்யாணத்துக்குப் பிறகுதான் எனக்கு என்று அம்மா ஜாதகம் கேட்கிறவர்களிடம் எல்லாம் கோடி காட்டுகிறார்கள். என் தலைமயிர் எல்லாம் அதற்குள் உதிர்ந்துவிடப்போகிறது. ........

...........இந்தப் பற்றற்ற (எவ்வளவு 'ற') தன்மை ஒரு நிருபனுக்கு அவசியம் தேவை என்று நம்புகிறவன் நான்.

........."ஸோ ஸாரி. யாரும் இல்லையோ என்று...."

என் ரத்தம் உறைந்தது. கழுத்தில் இரண்டு, மூன்று தடவை சுற்றப்பட்டு இறுக்கப்பட்டதனால், நீலம் பாரித்து அந்தப் பெண் மிகவும் இறந்திருந்தாள் .......

.........."ஹலோ! சார்" என்றான் அந்தப் பையன் முருகன். "மீட் மை ஃபிரெண்ட் கணேஷ். இவர் லாயர். அவர் வஸந்த். அவருடைய அஸிஸ்டண்ட் ."

"ஹலோ ! உங்களை போலீஸ் ரொம்ப தொந்தரவு பண்ணுகிறார்கள் போல இருக்கிறதே!" கணேஷ் என்பவனைப் பார்த்ததும் எனக்குத் தெம்பு வந்தது. நல்ல உயரமான ஆசாமி. தீர்க்கமான நாசி. கண்களில் ஏகப்பட்ட தன்னம்பிக்கை. அந்த வசந்த் என்கிற இளைஞன் துறுதுறு என்றிருந்தான். சுமதியையே பார்த்துக் கொண்டிருந்தான்.

கணேஷ் என் கையைக் குலுக்கி, "யார்யா இன்ஸ்பெக்டர்! கொஞ்சம் அவரைக் கூப்பிடுங்க...நான் இவரை வீட்டுக்கு அழைச்சுட்டுப் போக வந்திருக்கேன்" என்றார். அந்த கான்ஸ்டபிளிடம். அவன் உள்ளே ஓடினான்."

கொலை செய்யப்பட்ட பெண் ஒருத்தியின் டைரி ஒரு நிருபரிடம் கிடைக்கின்றது.அதனை சற்று நேரத்தில் தொலைத்துவிட்ட நிருபருக்கும் அந்த டைரியைத் தேடி அலையும் கும்பலிற்குமிடயையேயான போராட்டத்தை சுவாரசியமாகச் சொல்லியிருப்பார் சுஜாதா.

இடையிலேயே குற்றவாளி யார் என்று ஊகிக்க கூடியதாக இருப்பதனால் ஏற்படும் தொய்வை கணேஷ்-வசந்தின் வருகை தவிர்த்து விடுகின்றது.

கண்ணுக்குத் தெரியாத எதிரிகளால் பந்தாடப்படும் நிருபரின் அவஸ்தைகள், வலிகள், வேதனைகள் நடுவே உண்மைகளை சளைக்காமல் தேடும் அவனது விடாப்பிடியான போராட்டத்தை விவரிக்கும் '24 ரூபாய் தீவு ' ஒரு ஜெட் வேகக்கதை......

பிற்பகுதியில் கணேஷ்-வசந்த் கதையைப் புரட்டிப் போடுவார்கள் என்று எதிர்பார்த்தால், தலைவர் அவர்களுக்கு அதிகம் வேலை இல்லாமல் செய்துவிடுகிறார் .பெரும்பாலான சுஜாதாவின் கதைகளைப் போல இந்நாவலின் கிளைமாக்சும் poetic justice என்று சொல்லக்கூடிய வகையில் இருக்கும்.

நன்றி : திரு ஆர் சி நடராஜன், சுஜாதாவின் கடைசிப் பக்க ரசிகர் குழு & முகநூல்.

கருத்துகள் இல்லை: