3 ஜூன், 2020

அநுத்தமா நினைவுகள்!

தழையத் தழைய மடிசார் கட்டியபடி தி.ஜானகிராமனின் அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்று தொடர்ந்து 15 நிமிடங்கள் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார் அநுத்தமா... அதற்கு அவர் சொன்ன காரணம், இந்த அஞ்சலி கூட்டத்துக்கு இரு ஆங்கிலேயர்களும் வந்திருக்கிறார்கள்... 
 தமிழ் தெரியாத பிற மாநிலத்தவர்களும் வருகைப் புரிந்திருக்கிறார்கள்... அவர்கள் அனைவரும் தி.ஜானகிராமனை முழுமையாக படித்தவர்கள் அல்ல... என்றாலும் தாங்கள் படித்ததை வைத்து அவர் மீது மரியாதையும் அபிமானமும் கொண்டு இக்கூட்டத்துக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் அந்நியமாக உணரக் கூடாது என்பதற்காகத்தான் தி.ஜானகிராமன் குறித்து ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தி அஞ்சலி செலுத்தினேன்... 

அநுத்தமா குறித்து மனதில் ஆழமாக பதிந்த பிம்பம் இது. 

அதன் பிறகு தேடித் தேடி அநுத்தமாவின் படைப்புகளை வாசிக்கத் தொடங்கினேன். கிட்டத்தட்ட ‘அல்லயன்ஸ் பதிப்பகம்’ பதிப்பித்த இவரது படைப்புகள் அனைத்தும் அலமாரியில் இருக்கின்றன.

தினமும் அதிகாலையில் குளித்ததும் மனதளவில் தொழும் எழுத்தாளர்களில் அநுத்தமா முக்கியமானவர். 

என் பாட்டிகளின் ஒட்டுமொத்த வாழ்க்கையை,, என் அம்மாவின் அலைக்கழிக்கப்பட்ட பால்யத்தை எல்லாம் இவரது எழுத்துக்களின் வழியேதான் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்...

பத்து வயதில் திருமணமாகி மாமனார், கணவரின் ஆதரவுடன் ஆங்கிலம், ரஷ்யன், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம்... என 5க்கும் மேற்பட்ட மொழிகளை அறிந்தவராக, பேசப் படிக்கத் தெரிந்தவராக அநுத்தமா மாறியதெல்லாம் தமிழ் எழுத்து சமூகத்தின் முக்கியமான தருணங்கள் - விளைவுகளில் ஒன்று.

அப்படிப்பட்ட அநுத்தமா குறித்து மூன்று பகுதிகளாக மதிப்புக்குரிய திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் தன் முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கிறார். ஆர்வம் இருப்பவர்கள் Thiruppur Krishnan பக்கத்துக்குச் சென்று படியுங்கள்.

அதில், அநுத்தமாவின் 5க்கும் மேற்பட்ட மொழிப் புலமை... தி.ஜானகிராமனின் அஞ்சலி கூட்டத்தில் ஆங்கிலத்தில் அவர் நிகழ்த்திய உரை... ஆகிய பகுதிகள் எல்லாம் இல்லை.

என்றுமே, தான் சம்பந்தப்பட்ட... நடந்த நிகழ்வுகளுக்கு, தானும் சாட்சியாக இருந்த தருணங்களை மட்டுமே திருப்பூர் கிருஷ்ணன் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார் என்பதால், தான் கேள்விப்பட்ட பகுதிகளை குறித்து அவர் பதிவு செய்யாமல் தவிர்த்திருக்கலாம் என ஊகிக்கிறேன். 

அதனால் என்ன... அநுத்தமா குறித்த சித்திரத்தை அழகாகவே தீட்டியிருக்கிறார்.

எப்பொழுதும் போலவே பிரமிப்புதான் எழுகிறது...

ஏப்ரல் 16, 1922ம் ஆண்டு பிறந்த அநுத்தமா, டிசம்பர் 3, 2010ம் ஆண்டு மறைந்தார். கிட்டத்தட்ட 87 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். பத்து வயதில் திருமணம். 25 வயதுக்கு மேல் எழுத்துலகம்.  300 சிறுகதைகள்... 22 புதினங்கள்... 15க்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள். ராஜாஜி கேட்டுக் கொண்டதால் சிஸ்டர் சுப்புலட்சுமி பற்றி மோனிகா ஃபெல்டன் எழுதிய புத்தகத்தை தமிழாக்கம் செய்தார்... இது தவிர சிறுவர்களுக்காக நான்கு நாவல்களையும் எழுதியிருக்கிறார்.

யார் மீதும் எவ்வித புகாரும் இன்றி தன்னளவில் மகிழ்ச்சியாக வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

உண்மைதான், தமிழ் நாவல் உலகின் ஜேன் ஆஸ்டென் அநுத்தமாதான்...

நன்றி: திரு கே என் சிவராமன், திரு திருப்பூர் கிருஷ்ணன் மற்றும் முகநூல்.

கருத்துகள் இல்லை: