இன்றைய தத்துவ மேதை :
மகான் இராமானுசர் (இராமானுஜர், 1017-1137)
இந்து தத்துவப் பிரிவுகளில் ஒன்றான வேதாந்தத்தின் விளக்கங்களில் ஒன்றான விசிஷ்டாத்துவைதத்தின் முன்னோடியாக விளங்கினவர். இவர் விசிட்டாத்துவைத தத்துவ இயலை நாடளாவிய முறையில் பரப்பிய மெய்யியலாளர். பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் என்ற ஓர் உயர்தர உரையை இயற்றி, ஆதி சங்கரரின் அத்வைதத் தத்துவத்திற்கு மாற்றுச்சொன்ன ஆன்மீகவாதி. பாரததேசத்தின், சரித்திரப்பிரசித்தி பெற்று உலகளவில் புகழடைந்த, மூன்று முக்கிய குருமார்களில் ஒருவர். மற்ற இருவரில் ஒருவர் ஆதி சங்கரர். மற்றவர் துவைத சமயப்பிரிவை நிலைநாட்டிய மத்வர். இராமானுசரைப் பின்பற்றியவர்கள் வைஷ்ணவர் அல்லது வைணவர் எனப்படுவர்.
இராமானுசர் பாரததேசம் முழுவதும் யாத்திரை செய்து வைணவத்தின் பெருமையை எங்கும் பறை சாற்றினார். எதிர்வாதங்கள் புரிந்தவர்களை வென்று வைணவ மடங்களை நிறுவினார். சில இடங்களில், ஆன்மீகத்தில் பிடிப்பு இருந்தும் இல்லறத்திலேயே இருக்க விரும்பியவர்களையும் தன் மடங்களின் ஆன்மீகத் தலைவர்களாக்கினார். திருவரங்கத்திலுள்ள தலைமை மடத்திற்கு மடாதிபதியாக வரவேண்டிய விதி முறைகளை வழிப்படுத்தினார். ஒவ்வொருவரிடமும், முக்கியமாக தாழ்த்தப்பட்ட இன மக்களிடையேயும், இரக்கம், கருணை, பரிவு முதலிய நற்குணங்களைச் சொரிந்ததோடு "திருக்குலத்தார்" என்றும் அவர்களை அழைக்கலானார் (இக்குணத்தால் கவரப்பட்டே, பின்னர் வந்த காந்திமகானும் "ஹரிஜன்" என்றார்). தமிழ் பிரபந்தங்களை ஓதவும் வைணவச் சின்னங்களை தரிக்கவும் எந்தச் சாதியினரோ ஆணோ பெண்ணோ எல்லோருக்கும் வைணவத்தில் இடம் இருக்கச் செய்தார்.
வடமொழியில் இராமானுசர் இயற்றிய ஸ்ரீபாஷ்யம் அவருடைய தலைசிறந்த படைப்பு. வேதாந்தத்தில் விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை காலத்திற்கும் நிலைநாட்டிய நூல். அதைத்தவிர அவர் இயற்றியவை:
• வேதாந்த சங்கிரகம். இது உபநிடத தத்துவங்களை விவரித்துச்சொல்கிறது.
• வேதாந்த சாரம், மற்றும், வேதாந்த தீபம் : இவை பிரம்ம சூத்திரத்தைப்பற்றிய சுருக்கமான உரைகள்.
• கீதா பாஷ்யம். இது கீதைக்கு விசிட்டாத்துவைதத்தையொட்டி எழுதப்பட்ட உரை.
• நித்யக்கிரந்தங்கள். அன்றாட வைதீகச்சடங்குகளும், பூசை முறைகளும்.
• கத்யத்ரயம். இவை மூன்று உரைநடை நூல்கள். சரணாகதி கத்யம் பிரபத்தி என்ற சரண்புகுதலைப் பற்றியது. ஸ்ரீரங்க கத்யம் ரங்கநாதப் பெருமானை தன்னை தாசனாக்கிக் கொள்ளும்படி வேண்டுவது. வைகுண்ட கத்யம் மகாவிட்டுணுவின் இருப்பிடமான வைகுண்டத்தை நேரில் பார்ப்பதுபோல் விவரிப்பது.
நன்றி : திரு நேயம் சத்யா, தத்துவங்களத் தேடி, வாட்ஸ்அப் குழு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக