3 ஜூலை, 2020

நம் முன்னோர் நவின்றது!

*தீநுண்மி(virus)* 
------------------------------------------------------
கொன்று 
குவிப்பதாக 
சொல்லப்படும்
கிருமிகளையும்,
வென்று விடலாம்.

இன்று நேற்றல்ல
தொன்றுதொட்டு
நன்று இது என்று
நம் முன்னோர்
நவின்றதை
நயமாய் நாமும்
புரட்டுவோம்.
பயத்தை
புறந்தள்ளி
புறப்படுவோம்.

அதிகாலை எழுந்து
ஆழ்ந்த மூச்சிழுத்து...
அகத்தூய்மை
புறத்தூய்மை
முடித்து
அன்றைய நாளுக்குள்
நுழைவோம்.

அடுக்களையில்
அந்தறைப்பெட்டி
அவசியம் இருக்கட்டும்.
விருந்துக்கும்
மருந்துக்கும்
அதுவே பொறுப்பு!

விடுமுறையில்
பிள்ளைகள்...
விருப்ப உணவுக்கு
தடா போடாமல்
சமைக்கும் உணவை
கரிசனமாய் ஊட்டலாம்.

கருஞ்சீரகம்
கருமிளகு
வறுத்தெடுத்து
இந்துப்பு சேர்த்து
காற்றுக்கு
காட்டாமல்
பத்திரப்படுத்தி
தினமும்
கவளச்சோற்றில்
எள் எண்ணெய்
ஊற்றிப்
பிசைந்துண்ண
இரத்தம் சுத்தமாகும்.

பூண்டு பற்களை
உண்டு வர
நோய்க்கிருமிகள்
அண்டாது.

இஞ்சித்துவையல்...
பிரண்டைத்துவையல்...
மணக்கும் மல்லி,
புதினா
கருவேப்பிலை
துவையல்...
தினமும் உணவில்
இருக்கட்டும்.

தொண்டை
கோழைக்கும்
கொடிய 
இருமலுக்கும்
திப்பிலி ரசம்
தேவாமிர்தம்!  
கோழையை
அறுத்தெறியும்...
அண்டவிடாமல்
அரண் அமைக்கும்.

கால்கடுக்க
நடந்தேனும்
கல்யாண முருங்கையை
தேடலாம்.....
மிளகுத்தூள்
அரிசிமாவு 
சீரகம்
சேர்த்து
அடையாக்கி
உண்ண,
உள்ளிருக்கும்
கோழை
ஓடிவிடும்!

நோய் எதிர்ப்புக்கு
நெல்லிக்காய்...

சுண்டைக்காய்
துவையல்
பாகற்காய்
பச்சடி...
இரத்த சுத்திகரிப்பு...

தேனில் கலந்த
அதிமதுரம்
தொண்டைக்கு
அமுதம்...

சோர்வு நீக்கி
நோயை எதிர்க்கும்
எலுமிச்சை சாறு...

சளியை முறிக்கும்
துளசிச் சாறு...

எக்காலத்திலும்
சின்ன வெங்காயம்
பெரிய உதவி....
'அலிசன்' தருமே
அளவில்லா
நன்மை...

வெற்றிலை ரசம்
வீடே மணக்கும்!
'அமினோ அமிலங்களின்'
அற்புதக் கூட்டணி!

மணக்கும்
மஞ்சள்
மறவாமல்
இருக்கட்டும்.
'குர்குமின்'
கொடுக்கும்
குறைவில்லா
புற்று எதிர்ப்பு!

அன்னாசி பூ
அவசியம் இருக்கட்டும்.
நுண்கிருமிகளை
அது அழிக்கும்.

தாளிப்பில்
வெடிக்கும்
கடுகும்
முறிக்கும்
சளியை.

உணவே மருந்தாய்...
மருந்தும்
விருந்தாய்...
அனைத்தும்
நம் கையில்!

அன்பும்
அக்கறையும்
அடுப்பங்கரை
சூத்திரங்கள்!

பக்குவங்கள்
சொல்லி வைத்தேன்!
பாட்டியல்ல நான்
அன்றியும் இது
*பாட்டி வைத்தியம்!!*

*பெறுவோம் பல நன்மைகளை!!!*
*வெல்வோம் தீநுண்மிகளை!!!!*

கருத்துகள் இல்லை: