15 ஜூலை, 2020

இலக்கிய நேரம் : கம்பனின் வார்த்தை ஜாலம்!

கம்பன் காட்டிய வார்த்தை ஜாலம் #1

கம்பராமாயணத்து கிட்கிந்தா காண்டத்துப் பாடல்

வாலி வதைக்குப் பின் சீதையை மீட்பதாக அளித்த வாக்கினை மறந்து சுக்ரிவன் சுக போகங்களில் காலத்தைக் களிக்கின்றான்.அதனால் சினந்த இராமன் இலக்குவனை அனுப்பி சுக்ரிவன் நெஞ்சில் பதியுமாறு தன் கருத்தினை தெரிவிக்க க் கூறுகிறான்.

“நஞ்சம் அன்னவரை நலிந்தால் அது

வஞ்சமன்று மனுவழக்கு ஆதலால்

அஞ்சில் அம்பதில் ஒன்றும் அறியாதவன்

நெஞ்சில் நின்று நிலாவ நிறுத்து வா “

விளக்கம்:

நெஞ்சில் நஞ்சுள்ளவரை தண்டித்தல் வஞ்சம் ஆகாது.அதுவே உலக நியதியாகும்.அஞ்சில் அம்பதில் ஒன்றும் அறியாதவனான சுக்ரிவன் நெஞ்சில் பதியுமாறு இதை நிலைநிறுத்தி வா

‘அஞ்சில் அம்பதில் ஒன்றும் அறியாதவன்’ இவ்வரிகளில் கம்பரின் திறத்தினைக் காணலாம்.ஒரே வரியில் ஐந்து வெவ்வேறு பொருட்களைப் பாடியுள்ளார்.

பொருள் 1:

சுக்ரிவன் ஐந்து வயதிலும் ஒன்றும் அறியாதவனாயிருந்தான் ,ஐம்பது வயதிலும் ஒன்றும் அறியாதவனாயிருக்கிறான்.

பொருள் 2:

அஞ்சு +இல் +அம்பு +அதில் +ஒன்றும் +அறியாதவன்

அச்சமிலா அம்புகள் பலவும் என்னிடமிருப்பதை அவன் அறியாதவனாயிருக்கின்றானே.

பொருள் 3:

அச்+சிலம்பு+அதில் +ஒன்றும் +அறியாதவன்

அந்தச் சிலம்பில்(மலை) வாழும் அவன் நட்பின் பண்பு ஒன்றும் அறியாதவன்.

பொருள் 4:

*அஞ்சிலம்+பதில்+ஒன்றும்+அறியாதவன்

*அஞ்சிலம்-பயம்

அவனிடம் தன் வாக்கினை மீறப்போகிறானே என்ற பயமும் இல்லை,எனக்கான பதிலும் இல்லை

பொருள் 5:

ஐந்து+ஐம்பது+ஒன்று=56

56வது வருடம் துந்துபி வருடத்தைக் குறிக்கும்.

வாலியை வெல்வதற்கு முன் இராமன் தன் தமயனை வெல்வதற்கு ஏற்றவனா என ஐயுற, அதை உணர்ந்த இராமன் தன் சகோதரன் இலக்குவனை வாலியால் கொல்லப்பட்ட துந்துபி அரக்கனின் எலும்பினை காலினால் இடறச் செய்து தான் தகுதியானவன் என்பதை உணர்த்துகிறான்.அத்தகைய பலமிகு இலக்குவன் என்னிடமிருப்பதை அறியாதவனாயிருக்கிறானே!

இவ்வாறு ஒரே வரியில் ஐந்து எச்சரிக்கைச் செய்திகளை விளக்குகிறார் கம்பர்

கருத்துகள் இல்லை: