18 ஜூலை, 2020

பாரதி கிருஷ்ணகுமார், தமிழகத்தை வலம் வரும் ஒரு ஆளுமை!


      பாரதி கிருஷ்ணகுமார் 

...தமிழ்நாட்டு மேடைகளில் ...ஒரு இளைஞர் பட்டாளத்தை ...இல்லை இல்லை ...ஒரு
தலைமுறையையே தன் பேச்சுத் திறமையில் கட்டிப்போட்டு, நண்பர்கள்,
தோழர்கள் , மக்கள் "பி.கே "என அன்பாக
அழைக்கப்படுபவர். 1986இல் வேலூர்
பெல்லியப்பா கட்டிடத்தின் வெளியில்,
அரசு ஊழியர் சங்க மூன்று நாள் மாநாட்டில் , ஒருநாள் மேடைப் பேச்சால்
அரசு ஊழியர்களை , மக்களை பேச்சால்
உறைய வைத்து வசீகரித்து கொண்டவர்.

        அவர் உயரமும் , பேச்சின் உயரங்களும் எல்லோரையும் பிரமிக்க வைத்தது. அவருக்கு எதிராக பேசுபவர் மதுரை பாலன் என நினைக்கிறேன். பிகே வை விட இரண்டரை அடி உயரம் குறைந்தவர். பிகே  மைக் பிடித்து பேசும்
போது, மைக் சரசரவென உயரமாக ஏற்றப்படுகிறது. பாலனுக்கோ சரசரவென இறக்கப்படுகிறது. இதுவே இவர்களின் பேச்சின் ஏற்ற இறக்க
அளவுகளை மதிப்பீடு செய்கிறது. போதாக்குறைக்கு பாரதிகிருஷ்ணகுமார்
பாலனைப் பார்த்து , ஆளும் வளரனும் அறிவும் வளரனும் என பட்டுக்கோட்டையின் பாட்டை உதாரணத்துக்குச் சொல்ல., கூட்டத்தில்
கைதட்டல் விண்ணைப் பிளக்கிறது.

    நான் பேச்சை கேட்டுக்கொண்டே , ஒருபுறம் பாரதியாரின் படத்தை , வேகமாக வரைந்து கொண்டிருக்கிறேன்.
கூட்டத்தை முடித்து வந்த பாரதி கிருஷ்ணகுமார் என் கைகளைப் பற்றி
வரைந்த விரல்களுக்கு முத்தமிடுகிறார்.
அதன் ஈரம் இன்றுவரை என் விரல்களில்
நெஞ்சினில் , காயாமல் அப்படியே இருக்கிறது. அந்தப் பசுமை நினைவுகள்
கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் , நட்பாக., தோழமையாக., குடும்ப உறவாக., அன்பின் வெளிப்பாடாக,வாழ்க்கை எங்களையும் இணைத்துக் கொண்டே நகர்கிறது. திருவண்ணாமலை கலை இலக்கிய மேடைகள் , அரசு ஊழியர் சங்க கருத்தரங்கங்கள் , பல நிகழ்வுகள்
டேனிஷ் மிஷின் பள்ளியின் நூற்றாண்டு விழா ...என அவரின் அனுபவங்களையும்
பகிர்ந்து கொண்டுள்ளார்.

     இவர் எழுத்தாளராக., திரைப்பட இயக்குனராக., நாவன்மையால் மக்களை ஈர்ப்பவராக தமிழகத்தை வலம் வந்து கொண்டுதான் இருக்கிறார். நம்பிக்கையோடு பேசுவதற்கான ஒரு வாயும் , ஒரு ஜோடி காதுகளும் , இருக்கும் வரை , உரையாடலுக்கான தேவையும் , மனிதனுக்கு இருந்துகொண்டே இருக்கும் என்பவர்.

   மாபெரும் பள்ளத்தாக்குகளை , துயரங்களை கடந்துபோக., இலக்கியங்கள் தான் உதவும் என்று
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய., "துன்பக் கடலை தாண்டிப் போக
தோணியாவது கீதம் "என்பார். இருள்
எல்லா திசைகளிலும் இருந்து வருகிறது.
ஆனால் ஒளியோ ஒரு திசையில் இருந்து மட்டுமே வருகிறது. ஒற்றை திசையில்
இருந்து வரும் ஒளிதான் இலக்கியம் என்கிறார்! இலக்கிய அறிவை , அரசியல் கட்சிகள் பயன்படுத்தி கட்சியில் உள்ளவர்களை , வாசிப்புத் தன்மையில் ஈடுபடுத்தினால் , மக்களை நல்வழிப்படுத்தலாம். நல்ல சமுதாயம் உருவாக்கலாம். 

      ஆவணப்படுத்துவதில் மிகவும் பின்தங்கி இருக்கிறது நமது சமூகம். உலகப் பொதுமறையான திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர் ! அவர் யார் எந்த ஊர் , ஒருவரா? பலரா? என குழப்பம் இன்று வரை நீடிக்கிறது. சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் எந்த ராஜாவின் தம்பி ? கம்பர் போன்றவர்களின் பிறப்பு இறப்பு செய்திகள் , அவர்கள் வாழ்ந்த ஊர்கள் பற்றின தகவல்கள் ஆவணப்படுத்தா
மல் போனது இவைகளையெல்லாம் கூறுகிறார். உ.வே .சா இல்லையெனில் இன்று தமிழின் பெருமைகளை சொல்லும் பல நூல்கள் நமக்கு , கிடைக்காமலேயே போய் இருக்கும் என்கிறார்.

    பாரதிராஜாவிடம் வேலை பார்த்துவிட்டு வந்து , திரைப்பட முயற்சியில் இறங்கினார். பல போராட்டங்களுக்குப் பின் "என்று தணியும்  "என்ற படம் வெளிவந்தது."ராமையாவின் குடிசை  ",உண்மையின் போர்க்குரல் , எனக்கு இல்லையா கல்வி ? என ஆவணப்படங்கள் எடுத்தார். 
சமூகத்திற்கு பயன் தரும் , மேன்மை
யான படங்களை மட்டுமே எடுக்க உறுதி கூறியிருக்கிறார். பரந்த வாசிப்பும் , அதன் தொடர்ச்சியான பேச்சின் அனுபவமும் இவருக்கே உரித்தானது.
காந்தி பேசாத ஊர்கள் இல்லை. பாரதி
திருவல்லிக்கேணி கடற்கரையில் தினமும் பேசினான். வ உ சி யும் , சுப்ரமணிய சிவாவும் பேசிய பேச்சால் தான் தூத்துக்குடியில் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. அம்பேத்கர் வாழ்நாள் முழுக்க
மக்களை சந்தித்து பேசியிருக்கிறார். நல்ல இலக்கியங்களை , புத்தகங்களை
தேடிப்போய் வாசிக்க இயலாத மக்கள் உள்ள நாடு என வருத்தப்படுகிறார். ஆகவே மக்களோடு , உரையாடியே
 தீரவேண்டுமென., தன் பேச்சை தொடர்கிறார் பாரதி கிருஷ்ணகுமார் !

  வழக்கம் போல இதுவும் வாட்டர் கலர் பெயிண்ட் !


நன்றி : திரு.பல்லவன், முகநூல்.

கருத்துகள் இல்லை: