என்னுடைய டயரியின் இன்றைய பக்கங்கள். ( 190 / 2020 )
தாமதமாய் ஒரு வலி !
குருபிரசாத்தின் கடைசி தினங்கள் என்று ஒரு
குறு நாவல்.
சுஜாதா எழுதியது !
கணையாழியில் முதலில் வெளிவந்ததாக நினைவு. வழக்கமான அவரது கதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு
இருந்த நாவல்.
பொதுவாக எந்தக் கதையுமே நம்மைப் பிறிதொரு சமயத்தில் நம் வாழ்வில் ஏதாவது ஒரு சம்பவத்தோடு சேர்த்துப் பார்க்க வைக்கும். அல்லது ஏதாவது ஒரு சம்பவம் நடக்கும் பொழுது அந்தக் கதையை ஞாபகப்படுத்திக் கொள்வோம் ,
அந்தக் கதை ஒரு நல்ல கதையாக அமையும் பட்சத்தில்.!
குருபிரசாத்தின் கடைசி தினம் என்ற கதையும் அப்படிப்பட்ட கதைதான். கதை சுருக்கமாக.
கூடியவரை அவரது வரிகளிலேயே...
குருப்பிரசாத் ஒரு இளம் தொழிலாளி. ஏதோ ஒரு பெரிய நிறுவனத்தில் ஆயிரம் தொழிலாளிகளில் ஒருவனாய் ,
ஒரு இயந்திரத்தின் முன்னர் அமர்ந்து தகடுகளை பஞ்ச் செய்யும் இயந்திர மனிதன். சம்பளம், ஓவர் டைம், இன்செண்டிவ் என்று வாழ்க்கையை சிக்கல் இல்லாமல் நடத்திக் கொண்டிருப்பான்.
சக ஊழியர்களைப் போல அவனுக்கும் அழகான குடும்பம் உண்டு. அதன் மீது காதல் உண்டு. எதிர்காலம் பற்றிய கனவுகள் உண்டு.
ஆனால் மற்றவர்களுக்கு இல்லாத ஒன்று அவனுக்கு உண்டு. தலைவலி. எல்லோருக்கும் வந்து போகும் தலைவலி அல்ல. பாக்டரியின் அத்தனை இயந்திரங்களும் சேர்ந்து தலையில் அமர்ந்து கொண்டதைப் போல அவனுக்கு வலி ஏற்படும்.
முதன் முதலில் இந்த வலி அவனுக்கு ஏற்பட்ட பொழுது அவன் சென்ற டாக்டர் வயதானவர்.
அவரிடம் இருந்த ரத்த அழுத்தம் பார்க்கும் கருவி பழுதடைந்திருந்த காரணத்தால்
அது குருபிரசாத்தின் அதிகப்படியான ரத்த அழுத்தத்தைக் காட்டத் தவறியது.
உலகில் எல்லா வியாதிகளுக்கும் மலச்சிக்கல் மட்டுமே காரணம் என்பது அவரது அசைக்க முடியாத அனுமானம். வயிற்றில் பூச்சி இருக்கு. பேதிக்கு சாப்பிடு. பளிச்சுன்னு ஆயிடும் என்ற அறிவுரை குருப்பிரசாத்துக்கு நிவாரணம் கொடுக்க , எப்பொழுது தலைவலி வந்தாலும் அந்த வைத்தியத்தை வேத வாக்காகக் கொண்டு தானே வைத்தியம் செய்து கொண்டு வருகின்றான் ,
தனது கடைசி தினம் வரை.
அந்தக் கடைசி தினத்தில் தாங்க முடியாத தலைவலி அவனுக்கு ! தொழிற்சாலை டிஸ்பென்சரிக்குப் போகிறான்.
பெயர் கேட்டார்கள்
குருபிரசாத்
ஸ்டாஃப் நம்பர் ? 176163
செக்ஷன் ? அசெம்ப்ளி
என்ன உனக்கு ?
தலை நோவு.
சொல்லி முடிப்பதற்குள் இளம் சிவப்பில் ஒரு மாத்திரையும் பிளாஸ்டிக் அவுன்ஸ் கிளாசில் தண்ணீரும் தந்தார்கள்.
மாத்திரையை விழுங்கிவிட்டு தாங்ஸ் சொல்லிவிட்டு செக்ஷனுக்குத் திரும்பினான். வழியில் யூனியன் ஆபிஸ் இருந்தது. ...பெஞ்ச் போட்டு எட்டு பேர் பேசிக் கொண்டு இருந்தார்கள். இவர்களுக்கெல்லாம் ஆபீஸ் கிடையாதா?
உள் தேச வெளி தேச தலைவர்களின் படங்கள் இருந்தன. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான்.
என்னய்யா ?
என் L.T.C பணம் வரணும். மூணு மாசமாச்சு. இன்னும் வரல.
நம்ம யூனியன் மெம்பரா? அல்லது அவுங்களுதா ? ( இவன் இரண்டிலும் இல்லை )
சந்தா கட்டினாயா ?
யாரும் கேட்கல.
வந்து கேட்பாங்களா ? கட்டணும்னு கடமை உணர்ச்சி இல்லை ? குருபிரசாத்துக்கு பதில் தெரியவில்லை.
அவனைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகின்றார்கள். உந்தித் தள்ளியவன்
உபதலைவன்.
பெயர் கிருஷ்ணய்யா. எல்லாக் கலகங்களிலும் முன் நிற்பவன்.
அடிதடி ஆள்.
ரத்த அழுத்தம் அதிகமாகி குருவின் மூளைப்
பிரதேசத்தில் பற்பல இடங்களில் ரத்தக் குழாய்கள் வெடித்தன.
ஹெமெரேஜ்.
சின்ன ரத்த ஓடைகள் மூளை மிதந்து கொண்டிருக்கும் திரவத்துடன் கலந்தன.
திசுக்கள் நாசமாயின. கொப்பளித்த ரத்தம் அவன் உணர்வைத் தாக்க அவன் நினைவிழந்தான்.
செக்ஷனில் இருந்து டிஸ்பென்சரிக்கு போன். ஆம்புலன்ஸ் வரத்
தாமதம்.
காரணம் ரிலீஃப்
ஆள் இல்லை. ஹாஸ்பிடலில் ட்யூட்டி டாக்டர் ராஜலக்ஷ்மி இல்லை. வீட்டில் நிதானமாக சமையல் செய்து கொண்டிருக்கும் அவள் ஆற அமரக் கிளம்பி வந்து பார்த்து புட் பாய்சனிங் என்று எழுதி இ.எஸ்.ஐ க்கு அனுப்ப இதற்கிடையில் குருப்பிரசாத்தின் மூளைக்குள் உற்சாகமாக ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.
மேலும் பற்பல சுவாதீனங்களை ஒவ்வொன்றாக நினைவின்றி இழந்து கொண்டிருந்தான். டாக்டர் ராஜி ஆம்புலன்சில் முன் சீட்டில் அமர்ந்து கொண்டு தன்னை வீட்டு வாசலில் டிராப் செய்யச் செய்தாள்.
இப்படி அலட்சியம் , தாமதம் , எல்லாமாகச் சேர்ந்து குருபிரசாத் இறந்து போக ,
இது தொழிற்சங்கப்
பிரச்சினையாக , குருபிரசாத் காம்ரேட் பிரசாத் ஆனார்.
வாழ்க ஒழிக கோஷங்கள்.
வி வாண்ட் ஜஸ்டிஸ் !
வி வாண்ட் ஜஸ்டிஸ்!
எனப் போராட்டம் வெடித்தது.
இ.எஸ்.ஐ, யில் நடந்தது என்ன ? உங்கள் சக தொழிலாளிக்கு நடந்தது என்ன ...
ஆஸ்பத்திரியில் தப்பு மருந்து கொடுத்து ஒரு ஆள் செத்துப் போயிட்டான் !
வெளியே வாங்க..!
பிற்பகல் இரண்டு பதினாறுக்கு குருபிரசாத் இறந்து போனான்.
அவன் இதயம் பிப்ரிலேஷன் என்று புறாவின் சிறகடிப்பு போல வேகமாக அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. அவன் உடம்பில் இணைத்திருந்த இஸிஜி மானிட்டரின் அலாரம் செயல்பட்டு கீங் என்று நீளமான குரல் கொடுக்க , ட்யூட்டி டாக்டர் வந்து மார்பைப் பிசைந்து , மார்பிலேயே இஞ்சக்ஷன் போட்டு தகிடுதத்தம் பண்ணியும் பயனின்றி இறந்து போனான். தொழிற்சாலைக்கு விடுமுறை.
ஆறு பஸ் நிறையத் தொழிலாளர்கள் ஏறிக் கொண்டனர். பஸ்கள் புறப்பட்டன. பாதிப் பேர் மல்லேஸ்வரத்தில் இறங்கிக் கொண்டார்கள்.
மீதிப் பேர் மெஜெஸ்டிக்கில் இறங்கிக் கொண்டார்கள். விக்டோரியா ஆஸ்பத்திரியை அடைந்த பொழுது ஐந்து ஆறு பேர்கள்தான்
இருந்தார்கள்.
அந்த ஆள் பேர் என்ன?
யாரு ?
செத்துப் போனானே?
மோகன் பிரசாத் !
இல்லை , முரளி பிரசாத் !
இல்லை , சத்திய மூர்த்தி ! என்று யாரோ சொன்னார்கள். ஶ்ரீனிவாச மூர்த்தியைக் கேட்டால் தெரியும்.
ஶ்ரீனிவாச மூர்த்தி எங்கே !
ஏதோ பேரு. போடா சீக்கிரம்...
இந்தக் கதை இங்கு முடிகின்றது.
அவனது இளம் மனைவி சரஸ்வதி என்ன ஆனாள்.? பூரண கர்ப்பமாக இருந்த அவளுக்கு என்ன குழந்தை பிறந்தது. ? அவர்களுக்கு யார் ஆதரவு ? மனது பாரமானது.
குருபிரசாத் இறப்புக்கு யார் காரணம் ? முதலில் பார்த்த டாக்டரா? அவரது பழுது பட்ட கருவியா? தொழிற்சாலை டிஸ்பென்சரியா? டாக்டர் ராஜலக்ஷ்மியா ? அவரது தவறான மருந்தா ?
தாமதமான ஆம்புலன்சா?
1970 களில் நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது இப்படி யாராவது ஒரு மாணவர் இறந்து போக கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டு கல்லூரியில் இருந்து சினிமா போனது ஞாபகம் வந்தது. அப்படி ஒரு முறை அல்ல . மூன்று முறை நடந்துள்ளது. அப்பொழுதெல்லாம் அந்த இறப்பின் வலி தெரியவில்லை. விடுமுறை என்ற மகிழ்ச்சி மட்டுமே மேலோங்கி இருந்தது.
1972 ல் என் கசின் அதே கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது இறந்து போனான்.
அவன் இறந்தது ஒரு சனிக்கிழமை.
திங்கள் கிழமை கல்லூரி விடுமுறை விட ,
பல மாணவர்கள் உற்சாகமாக சினிமா போக , என் மனது வலித்தது.
1983 ல் ,
குருபிரசாத்தின் கடைசி தினம் என்ற இந்த நாவலைப் படித்த பொழுது எனக்கு அந்த ஞாபகம் வந்தது.
சாரதி
03/08/2020
நன்றி : தரு சாரதி வேணுகோபாலன், சுஜாதாவின் கடைசிப் பக்க ரசிகர் குழு, முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக