9 செப்., 2020

தினம் ஒரு திவ்யப் பிரபந்தம் -114 : பெரியாழ்வார் திருவாய்மொழி

தினம் ஒரு திவ்யப் பிரபந்தம் -114

பெரியாழ்வார் திருமொழி - (1-7-11) - தளர் நடைப் பருவம் 

முதற்பத்து - ஏழாம் திருமொழி -  பதினோராம்  பாசுரம்

நா.தி.பி. - 96  :

"ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன் தன்னை 
தாயர் மகிழ ஒன்னார் தளரத் தளர் நடை நடந்ததனை 
வேயர் புகழ் விட்டு சித்தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார்
மாயன் மணிவண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவர்களே".    ( 1- 7 - 11)

அஞ்சனம் - மை
தாயர் - யசோதையும், அவரனைய பிறரும்
விட்டு சித்தன் - விஷ்ணு சித்தன் - பெரியாழ்வார்

பொருள் :

இடையர் குலமாகிய ஆயர் குலத்தில் வந்து அவதரித்த, கறுப்பு நிற மை நிறமுள்ள கண்ணன், தன்னைக் கண்டு தாய்மார்கள் மகிழவும், பகைவர்கள் வருந்தி அஞ்சவும், தளர் நடை நடந்தது பற்றி வேயர் குடியில் தோன்றிய விஷ்ணு சித்தர் எனப்படும் பெரியாழ்வார் சிறப்பாக விவரித்துச் சொன்ன பாசுரங்களைச் சொல்ல வல்லவர்கள் எம்பெருமானது திருவடிகளை வணங்குகின்ற மக்களைப் பெறுவார்கள்.

சிறப்புப் பொருள்: 
கண்ணன் அரச குலத்தில் பிறந்திருந்தாலும் ஆயர்பாடியில் வளர்ந்த போது தெரிந்தது, ஆயர் குலத்தின் பிறப்பேயாதலால், "ஆயர் குலத்தில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன் ' என்றார்.

தாயர் என்று பன்மையில் கூறியது, பாராட்டும் தாய், ஊட்டும் தாய், பால் தரும் தாய், கைத்தாய் , செவிலித்தாய் எனத் தாய்மார் ஐவர் என்பதை உணர்த்துவதற்காக எனலாம்.

தொட்டில் பருவத்திலேயே கண்ணன், பூதனை , சகடாசரன் முதலிய அசுரர்களை அழித்ததால், இவன் அடியிட்டு நடக்கத் தொடங்கிய பொழுது, "இனி இவனால் நமக்கு என்ன தீங்கு நேருமோ ?' என்று கம்சன் முதலிய அசுரர் நடுங்கினர் என்பதை, 'ஒன்னார் தளர' என்று கூறினார்.

https://share.getcloudapp.com/E0un6Oee

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய ஜீயர் திருவடிகளே சரணம்.

பதிவு: ஸ்ரீநிவாஸ. வெங்கடேச ராமாநுஜ தாஸன், திருவரங்கம்.

நன்றி :
ஸ்ரீநிவாஸ. வெங்கடேச ராமாநுஜ தாஸன், திருவரங்கம்


கருத்துகள் இல்லை: