23 செப்., 2020

இன்று ஒரு தகவல் : ரோன்ட்ஜென் என்றால் என்ன

ஜெர்மனிக்கு வந்த ஆரம்ப காலங்களில் ஒருதடவை மருத்துவரிடம் சென்றபோது, அவர் பரிசோதனை செய்துவிட்டு, உடனடியாக 'ரோன்ட்ஜென்' செய்ய வேண்டும், எடுத்தபின்னர் மீண்டும் வாருங்கள்  என்று சொல்லிவிட்டு, அதற்கான சீட்டையும் எழுதித் தந்தார். அதுவரை மருத்துவருடன் பேசியதெல்லாமே புரிந்தாலும், இந்த ரோன்ட்ஜென் என்றால் என்னவென்று மட்டும் புரியவில்லை. ஏனோ அவரிடம் அது என்னவென்று கேட்க தன்மானம் தடுத்துவிட்டது. 'சரி, வரவேற்பிலிருக்கும் பெண்ணிடம் கேட்டுக் கொள்ளலாம்' என்று அவரிடம் ரோன்ட்ஜென் என்றால் என்னவென்று கேட்டேன். அப்போதுதான் அறிவியலின் முக்கிய தகவலொன்று எனக்குக் கிடைத்தது.

நாம்  'X ray' என்று சொல்வதையே ஜெர்மனியில் ரோன்ட்ஜன் (Röntgen) என்று சொல்கிறார்கள் (ஜெர்மனியில் மட்டுமல்ல, ஐரோப்பாவின் பல நாடுகளில் அப்படித்தான் சொல்கிறார்கள்). காரணம், 1895ஆம் ஆண்டு வில்ஹெல்ம் கொண்ட்ராட் ரோன்ட்ஜென் (Wilhelm Contrad Röntgen) என்பவர் தற்செயலாகக் கண்டுபிடித்ததே, 'X ray' ஆகும். இவர் நோபல் பரிசு வென்றவர். ஜெர்மனியைச் சேர்ந்த இயற்பியலாளர். அதனால்தான் அவர் பெயர் கொண்டே அந்த எக்ஸ் கதிர்ப் படப்பிடிப்பு முறை அழைக்கப்படுகிறது. 

ஆண்டுக்கு 135 மில்லியன் ரோன்ட்ஜென் படப்பிடிப்புகள் ஜெர்மனியில் மட்டும் சராசரியாக எடுக்கப்படுகிறது. உலகம் முழுவதும் எவ்வளவு என்று நீங்களே கணித்துக் கொள்ளுங்கள்.

அந்த ரோன்ட்ஜென் என்னும் அற்புதக் கண்டுபிடிப்புப் பிறந்து, இன்றோடு  125 ஆண்டுகளாகின்றன. 
Raj Siva

நன்றி :

திரு ராஜ் சிவா 
முகநூல் 

கருத்துகள் இல்லை: